30 மார்ச், 2010

வடக்கு மக்களின் நீர்தட்டுப்பாட்டை நீக்க தெற்கிலிருந்து நதி திசை திருப்பும் திட்டம்
ஜனாதிபதி


வட பகுதி மக்கள் முகம் கொடுத்துள்ள தண்ணீரிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வரையும் நதி திசை திருப்பும் திட்டம் முன்னெடுக்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முல்கிரிகலவில் தெரிவித்தார். அதேநேரம் அடுத்த வருடம் முதல் பாடசாலை பாடத் திட்டத்தில் இலங்கையின் வரலாறு உள்ளடக்கப்பட்டு, பாடசாலைகள் தோறும் போதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

‘வேர்ல்ட் விஷன்’ நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் ‘முத்துகா’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முல்கிரிகல, பாலங்கட வெவயில் நிர்மாணித்துள்ள பொது நூலகத்தைத் திறந்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில்,

எமக்கு 2500 வருட கால கெளரவமான வரலாறு உள்ளது. கடந்த மூன்று தசாப் தங்களாக துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தியுள்ளோம். இவ் வாறு சிறப்புமிக்க வரலாற்றை இந்நாடு கொண்டிருக்கின்றது. இருந்தும் அதனைப் பாடசாலைகளில் போதிப்பது ஏற்கனவே சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அடுத்த வருடம் முதல் இலங்கை வரலாறு பாடசாலைப் பாடத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு போதிக் கப்படும்.

நில்வள கங்கை ஹம்பாந்தோட்டைக்குத் திசை திருப்பப்பட்டு இங்கு வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதே நேரம் வட பகுதியிலுள்ள நீர் நிலைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் வரையும் புதிதாக கங்கை யொன்று அமைக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.மு 65% வாக்குகளால் வெற்றியீட்டும்; களனி பல்கலை கருத்துக்கணிப்பில் தகவல்

களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு, நாடளாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பின் பிரகாரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 65 வீத வாக்குகளையும் ஐக்கிய தேசிய முன்னணி 28 வீத வாக்குகளையும் பெறும் என அறிவிக்கப்படுகிறது.

கருத்துக்கணிப்பின் பிரகாரம் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எந்தவித ஆசனங்களையும் பெறாது என களனி பல்கலைக்கழக தொடர்பாடல் ஆய்வுப் பிரிவு கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,வடக்கு, கிழக்கு உட்பட சகல தேர்தல் தொகுதிகளிலும் நடத்திய சுயாதீனமான கருத்துக் கணிப்பில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த 16 ஆயிரம் பேர் உட்படுத்தப்பட்டனர். நாடு முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினை வெற்றிபெறும் கட்சி எது என்பது உட்பட 12 கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடத்திய கருத்துக்கணிப்பை விட இம்முறை தேர்தலில் மக்களின் ஆர்வம் குறைவாகக் காணப்பட்டது. நாடு முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பில் மக்கள் திருப்தி தெரிவித்தனர்.

நாம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி ஐ.ம.சு.முன்னணி 129 ஆசனங்களையும் ஐ.தே. முன்னணி 55 ஆசனங்களையும் வடக்கு, கிழக்கில் போட்டியிடும் கட்சிகள் 12 ஆசனங்களையும் பெறும். இதன்படி ஐ.ம.சு.முன்னணி 16 அல்லது 17 தேசியப் பட்டியல் ஆசனங்களை பெறலாம். இந்தக் கணிப்பு தேர்தல் தினமாகும் போது 1-5 வீதங்களினால் கூடிக் குறையலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் நடத்திய கணிப்பீடுகள் பெருமளவு ஒத்ததாக அமைந்தன.

இந்தப் பெறுபேறுகளின்படி ஐ.ம.சு. முன்னணி சுமார் 145 ஆசனங்களைப் பெற்று 2/3 பெரும்பான்மை பலத்திற்கு நெருக்கமான அதிகாரத்தை பெறும்.

ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறும் தேர்தல் முடிவுகளின் சரியான பிரதியாக இந்த முடிவு அமையாது. 95 வீதம் இதனை ஒத்ததாகவே முடிவு அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பாதுகாப்பில் பொலிஸ், முப்படை: 6ம் திகதி முதல் 78,000பேர் கடமையில்
* 58,700 பொலிஸ்

*19,500 முப்படைகள் + அதிரடிப்படை

* 7584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவு

* 5ம் திகதி நள்ளிரவுடன் பிரசாரம் நிறைவுபொதுத் தேர்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழுவதும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், மற்றும் முப்படையைச் சேர்ந்த 78,200 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தலா 5 பேர் கொண்ட 7584 நடமாடும் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவும் இயங்கும் என பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சகல பிரசார நடவடிக்கைகளும் 5 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாமாகவே முன்வந்து தமது கட்அவுட்டுகள், பெனர்கள், போஸ்டர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் பொலிஸார் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் 413 பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் நிறுவப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதுடன் தேர்தலின் போது 58,700 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவு ள்ளனர்.

பொலிஸாருக்கு மேலதிகமாக எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் 19,500 முப்படையினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாடு முழுவதும் நீதியும், நியாயமுமான ஒரு தேர்தலை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளதுடன் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்துடன் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றர் தொலைவிற்குள் வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள், அலுவலகங்கள் அமைக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் வேட்பாளரின் பிரதான அலுவலகம் ஒன்றில் மட்டுமே கட்டவுட், போஸ்டர், பெனர் வைக்க அனுமதி உண்டு. வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் போது தேவையேற்படும் வாக்குச் சாவடி களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படும்.

வேட்பாளர்கள் அனைவரும் ஏப்ரல் 6 ஆம் திகதி நள்ளிரவுடன் தமது பிரதான கட்சி அலுவலகத்தை தவிர ஏனைய கட்சி அலுவலகங்களை முடிவிடவேண்டும்.

நடமாடும் பாதுகாப்புப் பிரிவில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும், இரண்டு முப்படை அல்லது விசேட அதிரடிப்படை வீரர்கள் கடமையிலீடு படுத்தப்படுவர்.

நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்க ளிக்குமாறும், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாமல் நீதியான, நியா யமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

17 இந்தியருக்கு தூக்கு

துபாய் : பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்ததற்காக 17 இந்தியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கி துபாய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சார்ஜாவில் அல்&ஜாஜா என்ற பகுதியில் பல்வேறு நாட்டினர் தங்கும் தொழிலாளர் முகாம் ஒன்று உள்ளது. இங்கு சட்டத்திற்கு மாறாக மதுபானம் விற்பனை செய்ததில் இந்தியர்களுக்கும் & பாகிஸ்தானியர்களுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில் இந்தியாவை சேர்ந்த 50 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தானை சேர்ந்த 4 பேரை சுற்றிவளைத்து தாக்கியுள்ளது. இதில் ஒருவர் பயங்கர காயங்களுடன் மயங்கி விழுந்து இறந்துள்ளார். மற்ற மூவரும் காயங்களுடன் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட 17 முக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். ஆனால் போதுமான ஆதரங்கள் இல்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக போலீசார் ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபற்றிய வழக்கு சார்ஜாவின் ஷரியா நீதிமன்றத்தில் நீதிபதி யூசும் அல் ஹமாதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். பின்னர் கொலை குற்றவாளிகளான 17 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் துபாயில் ஒரு கொலைக்காக 17 பேர் தூக்குத் தண்டனை பெறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

புறநானூற்றில் மனித நேயக் கொள்கைகள்...... தயவு செய்து ஒரு தடவை படியுங்கள் இப்படி நடப்பதற்கு முயற்சியாவது செய்யுங்கள்முனைவர் துரை மணிகண்டன்

உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலாகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத் தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் என்பவர் ‘நானும் உலக இலக்கியங்களில் பல வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். இருந்தாலும் புறநானூற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் போல வேறு எந்த நாட்டு இலக்கியங்களிலும் காண முடியவில்லை’ என்று கூறுகிறார். அத்தகைய சிறப்புப் பொருந்திய இப்புறநானூற்றில் பல்வகை இலக்கிய வரலாற்று கூறுகள் இடம்பெற்றிருந்தாலும் மனித நேய கொள்கைகளும் இவற்றில் பொதிந்துள்ளதை இக்கட்டுரையில் காணலாம்.

மனித நேயம்

மனித நேயம் என்பது பிறர் துயர்கொண்ட போது உதவுதலும் பிறருக்காக வாழ்தலுமாகும். நாடு, இனம், மொழி வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனித நேய வாழ்வாகும்.

‘மனித நேயம்’ என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். ‘நேயம்’ என்று சொல் ‘நேசம்’ என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு அன்பு என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது.

‘அன்பு’ என்பதற்கு ‘ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு’ என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.

இரா. சக்குபாய் ‘உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்’ என விளக்கம் தருகிறார்.

மனித நேயக் கொள்கைகள்

உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்க அமைப்பு உண்டு. இதனை நிறுவியவர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இது.

இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும் பூகம்பமாக இருந்தாலும் ஆழிப் பேரலையாக இருப்பினும் எரிமலை வெடிப்பாக இருப்பினும் தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை தங்குவதற்குத் தேவையான குழல்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் உதவி புரிகிறது.

இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணி தொடர்கிறது. இச்செயலை சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளார். இவர் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம். பாரதப் போர் நடைபெற்றதோ வட இந்தியாவில் குருஷேத்திரம். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளான் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

அலங்குனைப் புரவி ஐவரோடு சினைவி நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை ஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’

உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையில் இச்செயலாகப் பார்க்க முடிகின்றது.

போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புறும் மனித நேயமே என்று கொள்ளலாம்.

ஒன்றுமைக் கொள்கைகள்

உலக இனம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழத்தான் விரும்புகிறது. ஆனால் இடையில் மதம், இனம், நாடு, மொழி என்ற பிரிவினைவாத நோய் மக்களை ஆட்கொண்டுவிட்டது. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் சமூகம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டுதானோ என்னவோ பழந்தமிழ்ப் புலவன், உலக ஒற்றுமைக்கு முதன் முதலில் வித்திட்ட உலகப் புலவன் கணியன் பூங்குன்றன்,

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா’ (புறம் – 192)

என்ற பொன்னெழுத்துக்களால் இன்று உலக மனித நேய ஒற்றுமைக்கு வித்திட்ட ஒப்பற்றவன் என்பது புலனாகிறது. அனைவரும் நம் உறவினர். நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர் என்று மக்களிடத்தே எடுத்தியம்பியுள்ள கொள்கைகள் ஆகும். இதனை அடியொற்றியே வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ‘ஓர் உலகம்’ எனும் நூலில் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருத்தல் வேண்டும் என்ற கருத்தை யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியிலிருந்து எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

அறக்கொள்கைகள்

ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் பலர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ. நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலக மக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரொ என்ற வினா எழும்புகிறது.

வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறார். அவர் குடும்பச் சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.

நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாடி நின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும் இன்னோர்க் கென்னது என்னேடுஞ் சூடியது வல்லாங்கு வாழ்து மென்னது நீயும் கொடுமதி மனைகிழ

வோயே...’ (புறம், 173)

என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார், உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும், கொடுமையான கொடும் பசி தீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லப்பட்டவையாக அமைந்துள்ளது.

மன்னர்களும் பிறருக்குக் கொடுத்த உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய இறைவனே வந்து கொடுத்த சிறப்பு பொருந்திய உணவாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்ணாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுத்து உண்ணுவேன் என்று கூறிய அறக்கொள்கையைக் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே

(புறம் 182-1- 3)

என்ற பாடல் அடிகளின் மூலம் அமிழ்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்ற செய்தியைப் புறநானூறு பதிவுசெய்துள்ளது.

பிற உயிர்களைப் பேணும் கொள்கைகள்

மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறறிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள். கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி போன்றவர்களில் ஒரு சிலர் பிற உயிர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்துள்ளனர்.

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன், பற்றிப் படர்வதற்கு ஒரு கொழுகொம்பு இல்லையென்பதை பார்த்த பாரியின் மனம் துணுக்குற்று உடனே தான் ஏறிவந்த தேரைக் கொடி படர்வதற்கு விட்டுவிட்டு வந்துள்ளான். மன்னன் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. முல்லைக்கொடியின் பரிதவிப்பு மன்னனை எந்த அளவிற்கு மனம் மாற்றியுள்ளது! இதைவிட மனித நேயத்திற்கு உலகில் எங்கும் எடுத்துக் காட்டு இல்லை. மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி அதற்குப் போர்வை தந்த மன்னன் பேகன். என்ன ஒரு நிகழ்ச்சி, பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனித நேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டியுள்ளது.

உலக இனம் தழைக்க, மனித நேயம் வளர்ந்து அனைவரும் மனித நேயத்தோடு வாழவேண்டும். இல்லையென்றால் உலகம் போரிலும், இனச் சண்டையாலும் மாய்ந்துவிடும். இல்லை அழிந்து போகும்.

இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உலக மக்களுக்கு மனிதநேயக் கொள்கைகளாகவும், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் வாழவேண்டும் என்றும், பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கைப் பெற்று வளர அறக்கொள்கைகளைப் பின்பற்றி வாழவேண்டும். இவை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பேணுதல், பாதுகாத்தல் மனித இனத்தின் தலையாய கடமைகளாக இருக்கின்றன. இவையாவும் புராதன நூலான, திராவிட இலக்கியமான புறநானூற்றில் காணப்படும் கருத்துச் செய்திகளாகும்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவி: இந்தியா கவலை

புதுதில்லி, மார்ச்.30: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்குவது கவலைக்குரிய விவகாரம் என இந்திய விமானப்படைத் தளபதி பி.வி.நாயக் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை அளிப்பது கவலைக்குரியது என்பதை இந்தியா அறிந்துவைத்திருப்பதாகவும், இந்தியாவின் கவலையை ஒபாமா நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நாயக் தெரிவித்தார்.

தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக பாகிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பிலான எஃப்ட்16 போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட போர்க் கருவிகளை அமெரிக்கா வழங்க உள்ளது.

அமெரிக்கா வழங்கும் இத்தகைய போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அறிவிப்பின்றி நீர் விநியோகம் நிறுத்தம் : மன்னார் மக்கள் சிரமம்
மன்னாரில் கடந்த மூன்று தினங்களாக குடிநீர் விநியோகம், எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்படுகிறது.

இதனால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் வாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னார் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பணத்தைச் செலவிட்டு வீடுகளுக்கு இணைப்புப் பெற்றிருக்கின்றனர். எனினும் கடந்த 03 தினங்களாக, நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மன்னார் வாழ் மக்கள், நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் குடி நீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

21 குழந்தைகளின் உடல்கள் மீட்பு : கிழக்குச் சீனாவில் சம்பவம்
கிழக்குச் சீனாவின் ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து 21குழந்தைகளின் உடல்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்டெடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தைகளின் உடல்கள் பைகளுக்குள் போடப்பட்டுக் கட்டப்பட்டிருந்ததாகவும் அச்செய்தி தெரிவித்தது.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் ஷென்டொங் மாகாண வைத்தியசாலையிலுள்ள எட்டு குழந்தைகளின் உடல்கள் அந்தப் பையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத வைத்தியசாலை உயர் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அங்குள்ள செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

ஆற்றங்கரையை அண்டிய கிராமப்பகுதி மக்களிடம் சீனத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நேர்காணல்களை நடத்தி வருகின்றன.

தனியார் வைத்தியசாலை ஒன்றைச் சேர்ந்த குழந்தைகளே இவ்வாறு ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டுள்ளன என்று பிரத்தியேகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் பயணம்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக எதிரிவரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் செல்ல உள்ளார்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக தனது விஜயத்தை ஒத்திவைத்திருந்தார். எனவே யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவிருக்கின்றார் என்றும் ஜனாதிபதி பங்குபற்றவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பான விவரம் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.மு. வாகனங்கள் மீது இனந்தெரியாதோரினால் தாக்குதல்
நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான திகாம்பரம், உதயகுமார் மற்றும் எஸ். சதாசிவம் ஆகியோர் பயணித்த வாகனங்கள் மீது கொத்மலை பகுதியில் வைத்து இனந்தெரியாதோரினால் நேற்று திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொத்மலை எல்பொடை கீழ்ப் பிரிவில் வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நளினி விடுதலை மனு: அரசு ஏற்கவில்லை பின்வரும் காரணங்களினால் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினியின் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்பாக தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி நளினி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சிறை ஆலோசனைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நளினியை விடுதலை செய்வது உகந்ததல்ல என்ற சிறை ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காரணங்கள்

பின்வரும் காரணங்களினால் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

* நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
* நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
*
* நளினியின் தாய், தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம். நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
* தன்னுடைய குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கைய ஏற்க முடியாது.
* 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
* இதற்கு முன்னாள் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.
* அவரை பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாக கூறவில்லை.

பொதுவாக 14 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நன்னடைத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர் விடுதலை செய்யப்படலாம்.

தன்னை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னர் நிராகரித்த ஆலோசனைக் குழு சரிவர உருவாக்கப்படவில்லை என்ற நளினி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த மார்ச் 11ஆம் நாள் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான அரசின் முடிவுதான் தற்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கடந்த 2006ஆம் ஆண்டில் திமுக நிறுவனர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 472 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதே தன்னையும் விடுதலை செய்திருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாதது தவறு" என்று கூறி நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள்

நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் அவ்வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

ஆனால் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்த வழக்கில் தண்டனை பெற்றோர் பொதுமன்னிப்பிற்கு தகுதி உடையவர அல்ல என்று தமிழக அரசு கூறியது.

இது ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கமல்ல என்று நளினியின் வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

பின்னர் ஒரு நாள் வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும்.

ராஜீவ் காந்தி கொலைச் சதிக்கு உதவினார் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

பிரதேச, நகர சபைகளை இணைத்து மாநகர சபையாக தரமுயர்த்த திட்டம்


களனி பிரதேச சபையையும், பேலியாகொடை நகர சபையையும் இணைத்து மாநகர சபையாக அமை க்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டு ள்ளது.

இவ்விடயமாக பரிசீலனை செய்து மேற்பார்வையை முன்மொழிவதற் காக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச். பீ. ஹேரத் குழுவொன்றை அமைத்துள்ளார்.

மாநகர சபையின் எல்லை விபரம், அதற்கு உட்படும் கிராம சேவகர் பிரிவுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்றவையும் முன் மொழியப்படும்.

இவ்விடயமாக பொதுமக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள பிரஸ்தாப குழு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இது பற்றிய கருத்துக்களையும் ஆலோச னைகளையும் ஒப்படைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. சங்கங்கள், நிறுவனங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மழையினால் டெங்கு மீண்டும் தீவிரமடையுமென அச்சம்
டெங்கு நோயினால் இறப்போர் தொகை கடந்த 6 வார காலத்தில் பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது. மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் இதற்காக டெங்கு நோய் தடுப்பு செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

டெங்கு நோய் காரணமாக கடந்த 3 மாதத்தில் 63 பேர் இறந்ததோடு 10999 பேருக்கு நோய் தொற்றியிருந்தது. முதல் நான்கு வாரத்தில் டெங்கு நோயினால் 48 பேர் இறந்ததோடு கடைசி 6 வாரத்தில் 15 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து டெங்கு நோயினால் இறப்போர் தொகை பெரிதும் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் டெங்கு நோயை தடுப்ப தற்காக சுகாதார அமைச்சு, மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமை ச்சு, சுற்றாடல் அமைச்சு, ஊடக அமைச்சு அடங்கலாக பல அமை ச்சுக்கள் உள்ளடங்கிய செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக டெங்கு நோய் பரவு வதை தடுப்பது குறித்து பாடசாலை மாணவர்கள் உட்பட சகல மக்க ளையும் அறிவூட்டவும் டெங்கு பரவும் இடங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளது.

டெங்கு அபாயம் அதிகமுள்ள 15 மாவட்டங்கள் அடையாளங் காணப் பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகள், மாகாண சபைகள் ஊடாக டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதோடு தமது சுற்றுச் சூழலில் டெங்கு பரவும் இடங்களை வைத்துள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை உள்ளதாகவும் அமைச்சு கூறியது.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, திருகோண மலை ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த மக்கள் சொந்தக் காணிகளில் மீளக்குடியேற்றம்


யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவின் வழிகாட்டலில் 680 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இவற்றில் 437 வீடுகளே முதற் கட்டமாக கையளிக்கப்பட வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்துவரும் திட்டத்திற்கு உதவியாகவே இராணுவம் இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இராணுவத்தின் 51வது 52வது, 55வது படைப் பிரிவுகளும் இராணுவத்தின் ஏழாவது செயலணியினரும் இந்த வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 437 வீடுகளை கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், எஞ்சியுள்ள வீடுகள் இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

220 சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீட்டில் இரு அறைகள், ஒரு சமையலறை மற்றும் மலசல கூடமும் உள்ளடக்கப்படவுள்ளன.

நிரந்தர வீடுகள் இல்லாத நிலையிலுள்ள இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு சட்டபூர்வமாக உள்ள சொந்த காணிகளிலேயே இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

யாழ். அரசாங்க அதிபர் ஒவ்வொரு வீடுகளுக்கும் 12 கூரைத் தகடுகளை வழங்கியுள் ளதுடன் இந்த மக்களின் ஜீவனோபாயத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, வடக்கிலுள்ள பாதுகாப்புப் படையினர் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பல்வேறு சமூக உதவித் திட்டங்களை நாளாந்தம் மேற்கொண்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க குறிப்பிட் டார்.
மேலும் இங்கே தொடர்க...