24 செப்டம்பர், 2009

புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய ஆளும்கட்சியின் சிலாபம் மாநகரசபை உறுப்பினர் கைது-

புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின்பேரில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக் கட்சியின் சிலாபம் மாநகரசபை உறுப்பினர் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். சிலாபம் மாநகரசபை உறுப்பினரான வர்ணகுலசூரிய ஜோசப் அன்ரனி ரொட்ரிகோ என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். புலிகளுடன் தொடர்புகளை பேணியமை, மற்றும் சட்டவிரோதமான முறையில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. சிலாபம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து பலரை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுவோரில் புலி உறுப்பினர்களும் அடங்குவதாக குற்றம் சுமத்தியுள்ள பொலிசார், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
வவுனியாவில் சயனைட் அருந்தி தற்கொலை செய்த யுவதி அடையாளம் காணப்பட்டார்-

வவுனியா உக்குலாங்குளம் பிரதேசத்தில் படையினரால் கைது செய்யப்பட்டபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் பெண் சாவகச்சேரியைச் சேர்ந்த 29வயதான பாக்கியநாதன் கௌரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இவருடன் தங்கியிருந்ததாக கைதுசெய்யப்பட்ட யுவதி 26வயதுடைய கண்ணகி என்றும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 2006ம் ஆண்டுமுதல் இவர்கள் இருவரும் இங்கு வீடொன்றில் தங்கிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். சயனைட் அருந்தி தற்கொலை செய்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்த பெண்ணும் கைதான பெண்ணும் புலிகளின் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
நிலவில் தண்ணீர்: தடயங்களை "சந்திரயான்-1' கண்டுபிடித்தது பெரும் சாதனை- இஸ்ரோ



நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை "சந்திரயான்-1' செயற்கைக்கோள் கண்டுபிடித்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும்; எந்தநாட்டு செயற்கைக்கோள்களும் இதுபோன்ற ஆதாரங்களைத் திரட்டியதில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் ஜி.மாதவன் நாயர் தெரிவித்தார். நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா தயாரித்து கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. அந்த புகைப்படங்கள், தகவல்களை "நாசா' விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது: இதுவரை நிலவை ஆராய்ந்த மற்றும் ஆராய்ந்து வரும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் சந்திரயான் முதன்முதலாக நிலவில் தண்ணீர் இருப்பதற்கான உறுதியான தடயங்களை கண்டுபிடித்து அனுப்பிவைத்துள்ளது. இது நிலவு தொடர்பான உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மிகப்பெரும் சாதனையாகும். நிலவு ஆராய்ச்சி வரலாற்றில் மைல்கல் ஆகும். சந்திரயான் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த நாசாவின் கனிம வளங்களை ஆராயும் முக்கிய கருவி நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தகவல்கள், தடயங்களை சேகரித்து அனுப்பியுள்ளது. இவற்றை அமெரிக்காவில் உள்ள ஜெட் ஆய்வகத்திலும் ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி ஆய்வகத்திலும் ஆராய்ந்தபோது இது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்தும் சந்திரயான் அனுப்பிய முக்கிய தகவல்களையும் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு இஸ்ரோ அறிவிக்கும். நாசா விஞ்ஞானிகளும் அறிவிப்பார்கள் என்றார் மாதவன் நாயர்.
மேலும் இங்கே தொடர்க...
இந்திய மீனவர்கள் 21 பேரும் இன்று விடுதலை

கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 16ஆம் திகதி இவர்கள தலைமன்னார் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த 21 மீனவர்களையும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை 21 மீனவர்களும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மாஸா ஜபருள்ளாஹ் ஆஜராகியிருந்தார்.

விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி ஏ. யூட்சன், 21 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ததோடு அவர்களை இந்தியக் கடலோரக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும்படியும் அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் இலங்கைக் கடற்படையினருக்கு உத்தரவிட்டார்
மேலும் இங்கே தொடர்க...
மிலிபாண்ட்- கொச்னர் இணைந்து போகொல்லகமவுடன் நாளை சந்திப்பு


இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், அவரது பிரான்ஸ் இணைப்பாளர் பெர்னாட் கொச்னருடன் கூட்டாக இணைந்து நாளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகமவைச் சந்திக்கவுள்ளார்.

இன்றைய ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றும் போது இதனை அவர் தெரிவித்தார் என 'இன்னர் சிட்டி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

"நான் நிச்சயமாக இலங்கை வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கவேண்டும். நானும் பெர்னாட் கோச்னரும் இணைந்து இலங்கை வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கவுள்ளோம" என்று அவர் தெரிவித்திருக்கின்றார்
மேலும் இங்கே தொடர்க...
தமவிபு கட்சியிலிருந்து விலகியவருக்கு பிரதேச சபைத் தலைவர் பதவி இழப்பு



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத் தலைவர் சீனித்தம்பி பாக்கியராசா தனது பதவியை இழந்துள்ளார்.

தனது பதவி நீக்கத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதையடுத்தே தனது பதவியை இவர் இழந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடை பெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு தெரிவான இவர் 10.03.2009 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளரினால் அவரிடம் விளக்கம் கோரப்பட்ட போதிலும் உரிய காலத்தில், உரிய முறையில் விளக்கமளிக்கத் தவறியதையடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டது.

தனது பதவி இடை நிறுத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரினால் வர்த்தமானி அறிவித்தல் பிறப்பிக்கப்படுவதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் தனது ஆட்சேபனை மனுவில் நீதிமன்றததைக் கேட்டிருந்தார்.

இதன் பிரகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இடைக்கால தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையாளர், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர், தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இம்மனு மீதான விசாரணை மாவட்ட நீதிபதி எம்.சகாப்தீன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட போது, தேர்தல் சட்டப்படி உத்தியோகத்தர்கள் தடை வழங்க முடியாது, மற்றும் மனுதாரர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளமை போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

இவ்வழக்கு மீதான விசாரணை நடைபெற்ற போது மனுதாரர் சீனித்தம்பி பாக்கியராசா மன்றில் சமூகமளிக்கவில்லை.

பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அக்கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.கிருஸ்ணானந்தலிங்கம் ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள்.

அதேவேளை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"கட்சிக் கொள்கைகளை விட்டுக் கட்சி மாறுபவர்களுக்கு சிறந்த ஒரு முன் உதாரணமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. ஒரு கட்சி சார்பில் தெரிவாகி இன்னுமொரு கட்சியில் இணைவது என்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்று குறிப்பிட்டார்.

அதற்கிடையில் களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத்தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தற்போதைய உப தலைவரான காத்தமுத்து சிவகுணத்தின் பெயரை தமது கட்சி, தேர்தல் ஆணையாளரிடம் சிபாரிசு செய்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளரான எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சிசாலைகளல்ல - அரசாங்கம் தெரிவிப்பு



இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. அது மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களாகும்.

எதிர்க்கட்சியினருக்கு கண்டுகளிப்பதற்கு இடம் தேவைப்படின் நாட்டில் உள்ள மிருகக்காட்சிச்சாலை மற்றும் உடவளவை போன்ற இடங்களுக்கு செல்லலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன தெரிவித்தார்.

முறையாக கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு அங்குசெல்ல ஆர்வம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
முகாமிலிருந்து ஒரு சிறு தொகையினர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்




வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திறகு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் ஒரு சிறு தொகையினர் இன்று தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் இடைத் தங்கல் முகாமில் தங்கியிருந்த 45 குடும்பங்களில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும் ,

அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த 42 குடும்பங்களில் பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் இன்று விடுவிக்கப்பட்டு பிரதேச செயலக அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு இராணுவ பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

அதிகாரிகளின் தகவல்களின் படி கட்டம் கட்டமாக இக் குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிய வருகின்றது.

கடந்த 11 ம் திகதி வவுனியா இடை தங்கல் முகாமிலிருந்து மூன்றாவது தொகுதியாக விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணததைச் சேர்ந்த குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டததைச் சேர்ந்த 123 குடும்பங்களைக் கொண்ட 365 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர் .

இவர்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் சிங்கள மகா வித்தியாலயத்திலும் ,45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மட்ம் கலைவானி வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்

அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேரும் அக்கரைப்பற்றிலுள்ள இடை த்ஙகல் முகாமொன்றில் தங்க வைக்கப்டப்டிருந்தனர்.

கடந்த 13 நாட்களாக இடை தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்களை இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்களுக்கு பாதுகாப்பு தரப்பினரால் விபரங்களை பதிவு செய்தல் ,சில படிவங்களைப் +ர்த்தி செய்தல் ஆகியனவே காரணம் என அப்போது அதிகாரிகளினாலும் ,பாதுகாப்பு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது
மேலும் இங்கே தொடர்க...
மட்டகளப்பு நகரில் நகரசபைக்கு சமீபமாக புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்பு



மட்டக்களப்பு மாநகரசபைக்குச் சமீபமான மாநகரசபை காணியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று 23-09-2009 காலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மீட்டெடுத்தனர்.

நகரசபை தொழிலாளிகள் இக்க்காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளை இந்த வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதில் 8 கிளைமோர் குண்டுகளும், மோட்டார் குண்டுகள் 31ம் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் தெரிவித்தது.

இக்குண்டுகல் புதைக்கப்பட்டிருந்தது பற்றி மாகாண தென்பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலகவின் பணிப்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன
மேலும் இங்கே தொடர்க...
இராணுவத் தாக்குதல் ஏதாவது நடத்தப்படும் பட்சத்தில் ஈரான் பதிலடி கொடுக்கும் - ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத்
இராணுவ தாக்குதல் ஏதாவது நடத்தப்படும் பட்சத்தில், ஈரான் அதற்கு எதிராக பதிலடி கொடுக்கும் என ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் ஈரான் போர் ஆரம்பமான ஞாபகார்த்த தினத்தையொட்டி தெஹ்ரானில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற விமானமொன்று தென் தெஹ்ரானில் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள்.

எனினும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கையிடப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் ஈரானில் வர்த்தக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 180 பேர் பலியானார்கள்.

""ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க எந்தவொரு அதிகாரமும் நினைக்க முடியாது'' எனத் தெரிவித்த அஹ்மடி நஜாத், ""இன்று ஈரான் அதிகாரத்துவம் பொருந்தியதாக உள்ளது'' என்று கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...