21 மே, 2010

மீள்குடியேற்ற மக்களை 3 நாட்கள் சந்தித்த பின்னரே அறிக்கை வெளியீடு : ததேகூ

முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுடன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடியுள்ளனர். எனினும் மூன்று நாள் தொடர் சந்திப்பின் பின்னரே அது தொடர்பான முழுமையான அறிக்கையினை வெளியிட முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் கொண்ட குழு தற்போது முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் நோக்கிச் செல்வதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

மன்னார், முல்லைத்தீவு , வவுனியா மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்குழுவில் ஏனைய அரச, தனியார் நிறுவனங்கள் எதுவும் உடன் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்றத்தில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னணியில் நிற்கிறோம்: அமைச்சர் கெஹலிய

நாம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தமையினால் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றும் செயற்பாடுகளில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முன்னணியிலேயே இருக்கின்றோம் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பல்வேறு பிரச்சினைகளுடன் 72 மணிநேரத்திற்குள் மூன்றரை இலட்ச மக்கள் இடம்பெயர்ந்தமையினால் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்தோம். எனினும் குறுகிய காலத்திற்குள் அவர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனை பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் உரிமைகள் குழு தருணம் பார்த்து செயற்படுகின்றது என்றும் அவர் சொன்னார்.

தேசியப்பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில் நிறுவனத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஞுஹலுகல்ல இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடமாகியுள்ள நிலையில் 65 ஆயிரம் மக்கள் இன்றும் மீள் குடியமர்த்தப்படாத நிலையில் இருக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமையும் சொல்லக்கூடிய வகையில் இல்லை. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளித்து தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 365 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. மூன்று இலட்சத்திற்கு அதிகமானோர் இடம்பெயர்ந்திருந்தனர். ஒருவருக்கு ஒருநாள் என எடுத்துக்கொண்டாலும் எத்தனை நாட்கள் தேவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

பாதுகாப்பான பிரதேசங்களுக்குள் நாம் ஒரு இலட்சம் மக்களையே எதிர்பார்த்திருந்தோம், எனினும் 72 மணித்தியாலங்களுக்குள் சுமார் மூன்று இலட்சம் பேர் வருகைதந்தனர். இதனால் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவான பிரச்சினைக்கு நாம் முகம்கொடுக்க நேர்ந்தது.

அப்பாவி மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கே எங்களுக்கு நான்கு ஐந்து மாதங்கள் சென்றன. குழந்தைகள்,பெண்கள் முதியவர்கள் அடங்கலாக மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் 72 மணி நேரத்திற்குள் தமது வாழ்விடத்திலிருந்து பாதுகாப்பு தேடிவந்தனர்.

பாதுகாப்பு வழங்கும் போது அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. இவ்வாறான நடைமுறை ரீதியிலான அசௌகரியங்கள் ஏற்படும் என்பதனை சகலரும் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். குறுகிய காலத்திற்குள் அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதை இட்டு அரசாங்கம் பெருமை கொள்கின்றது.

கல்வியை எடுத்துக்கொண்டால் குறுகிய காலத்திற்குள் முகாம்களில் பாடசாலைகள் நடத்தப்பட்டன. அவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. மீளக்குடியேற்றப்படாமல் இன்னும் 65 ஆயிரம் மக்கள் இருக்கின்றனர். மறுபக்கத்தில் இரண்டரை இலட்சம் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர்.

யுத்தம் இல்லாத பிரதேசங்களில் கூட சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பாகவும் சட்டவிரோத குடியேற்றங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆண்டாண்டு காலமாக பேசி வருகின்றோம். அவ்வாறானதொரு நிலைமையில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டியிருக்கின்றது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களிலிருந்து நாளாந்தம் ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்தியிலேயே சர்வதேச ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமக்கு எதிராக பெரும் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் தீர்வு கண்டுகொண்டிருப்பது தொடர்பில் பலர் மகிழ்ச்சியடைய வில்லை. அதனால் தான் அவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். அவற்றுக்கும் பதிலளிக்க வேண்டும்.

மீள் குடியேற்ற விடயத்தில் முடிந்தளவு அதிகபட்சமான பலத்தை பிரயோகித்து உலகில் வேறெந்த நாட்டிலும் முன்னெடுக்கப்படாத வகையில் மீள்குடியேற்றத்தை மேற்கொண்டு முன்னிலையில் நிற்கின்றோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் சொந்த விடயத்தை அரசாங்கமே மேற்கொள்வதை விரும்பாத உரிமைகள் குழுக்கள் தருணம் பார்த்து செயற்படுகின்றன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையின் பின்னர் யாழ்.மேயரும் கணவரும் விடுதலை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர மேயர் பற்குணராசா யோகேஸ்வரி மற்றும் அவரது கணவரும் செயலாளருமான பற்குணராசா ஆகிய இருவரையும் யாழ் நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து இன்று விடுதலை செய்தது.

நீதிமன்ற செயற்பாடுகளை அவமதிக்கும் வகையில் பத்திரிகையில் தகவல்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் வழங்கியிருந்ததுடன் இன்றைய தினம் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

அதன்பிரகாரம் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தது
மேலும் இங்கே தொடர்க...

முழு நிலத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த தினமே "வெற்றி நாள்" – அரசாங்கம்

முன்னாள் இராணுவ தளபதி இறுதிகட்ட யுத்தத்தின் போது நாட்டில் இருக்கவில்லை என்பதுடன் முழு நிலத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நாளே இராணுவ வெற்றி நாளாகும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெளிநாட்டிற்கு சென்றிருந்த முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா 17 ஆம் திகதி அல்லது 18 ஆம்திகதி அதிகாலையில் இலங்கைக்கு வருகைதந்தமையினால் வெற்றி நாள் தொடர்பில் அவரிடத்தில் குழப்பம் நிலவுகின்றது.

இறுதிக்கட்ட யுத்தம் அன்றிருந்த படைகளின் பிரதானியின் உத்தரவிற்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் பயங்கரவாதிகளிடமிருந்து முழு நிலப்பரப்பையும் கைப்பற்றிய தினமே இராணுவ வெள்ளி நாளாகும். இராணுவ படையணிக்கு கட்டளையிட்ட தளபதி மேஜர் ஜெனரல் சவிந்திர சில்வா முழு நிலமும் 18 ஆம் திகதி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவித்தார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பீகாரில் தண்டவாளத்தில் நாசவேலை: சரக்கு ரெயிலின் 14 டீசல் "டேங்கர்''கள் வெடித்து எரிந்தன



கண்ணிவெடிகளை வெடிக்கச்செய்து 200 மாவோயிஸ்டுகள் அட்டகாசம்ரெயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டு 200 பேர் கூடி, கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அந்த வழியாக வந்த சரக்கு ரெயிலின் 14 டீசல் `டேங்கர்"கள் வெடித்து எரிந்தன.

இந்த பயங்கர நாசவேலையை பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் செய்து இருக்கிறார்கள். அங்குள்ள சம்பரான் மாவட்டத்தில், முசாபர்பூர்-மோதிகாரி டிவிசனில் இந்த நாசவேலை நடந்து இருக்கிறது. அசாம் மாநிலம் பரூனியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கொண்டா என்ற இடத்துக்கு டீசல் நிரப்பப்பட்ட 48 "டேங்கர்''களை இணைத்துக்கொண்டு, ஒரு சரக்கு ரெயில் நேற்று அதிகாலையில் சென்றது.

அந்த ரெயில் பீகார் மாநிலம் மோதிகாரி என்ற ரெயில் நிலையத்தை தாண்டி பிப்ரா என்ற ரெயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தில் 200 மாவோயிஸ்டுகள் கூடி, கண்ணிவெடிகளையும், வெடிகுண்டுகளையும் தண்டவாளத்தின் கீழ் மறைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் அருகே சென்று புதர்களில் பதுங்கி கொண்டனர்.

இந்த நிலையில் அந்த தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்தது. உடனே மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் ரிமோட் மூலம் கண்ணிவெடிகளை வெடிக்கச்செய்தனர். இதனால் சரக்கு ரெயிலில் இணைக்கப்பட்டு இருந்த பெட்டிகளில் 14 டீசல் வேகன்கள் வெடித்து சிதறி எரிந்தன.

இதை நேரில் பார்த்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ரெயில்வே அதிகாரிகளும், தீ அணைக்கும் படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பாதிக்கப்படாமல் இருந்த 35 "டேங்கர்''களை, மீட்பு குழுவினர் தனியாக பிரித்து விட்டனர். எனவே அந்த டேங்கர்கள் எரியாமல் தப்பின. இந்த பயங்கர நாசவேலை பற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாவோயிஸ்டுகளின் நாசவேலை காரணமாக 40 அடிக்கு தண்டவாளம் வெடித்து சிதறி விட்டது. ஒவ்வொரு டேங்கரிலும் தலா 65 ஆயிரம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தில் 8 லட்சத்து 45 ஆயிரம் லிட்டர் டீசல் எரிந்து நாசமாகி விட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடி.

சோனாப்பூர், கோரக்பூர் ஆகிய இடங்களில் இருந்து ரெயில்வே கிரேன்களை கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட டேங்கர்களை அப்புறப்படுத்தினார்கள். தீ அணைக்கும் படையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த நாசவேலை காரணமாக அந்த வழியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. சம்பவ இடத்தில் இருந்து மாவோயிஸ்டுகளின் துண்டு பிரசுரங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.

இவ்வாறு ரெயில்வே அதிகாரி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி செலுத்தலாம் சகலருக்கும் உரிமை இருக்கிறது -கெஹலிய


யுத்தத்தின்போது இறந்தவர்களுக்காக தனிப்பட்ட ரீதியில் அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்களுக்கு சகல உரிமையும் உள்ளது.

அதற்கு அரசாங்கம் தடைபோடாது அரசியல் நோக்கங்களுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ அணிதிரண்டு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது,

யுத்தத்தினால் இறந்தவர்களுக்காக ஒரு வார காலம் சோக தினமாக அனுஷ்டிக்குமாறு சம்பந்தன் கோரியிரு ந்தார். இவர் ஆரம்ப முதலே பிரபாக ரனுக்காக குரல்கொடுத்து வந்தார். இந்த நிலையில் இறந்தவர்களுக்காக அணி திரண்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்துவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் காணப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு மாகாணம்: உள்ளூராட்சி சபை அபிவிருத்தி, வீதி புனரமைப்புக்கு 109.2 மில். டொலர்


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 65 உள்ளூராட்சி சபைகளையும் துரித அபிவிருத்தி செய்யவும் அப்பகுதியிலுள்ள வீதிகளை புனரமைக்கவும் 109.2 மில்லியன் டொலரை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான இலகு கடனை ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலக வங்கியும் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இதன்படி உள்ளூராட்சி சபை மட்ட த்திலுள்ள கிராமங்கள் துரிதமாக அபிவி ருத்தி செய்யப்படும். 65 உள்ளூராட்சி சபைகளையும் அபிவிருத்தி செய்வதற்காக 50 மில்லியன் டொலரை வட்டியில்லா கடனாக வழங்க உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள வீதிகள் புனரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இதன்படி மாங்குளத்தில் இருந்து வெள்ளங்குளம் வரையான 38 கிலோ மீட்டர் வீதியும் பரந்தனில் இருந்து பூநகரி வரையிலான 25.3 கிலோ மீட்டர் வீதியும் 33.7 மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்படும்.

இது தவிர தம்புள்ளையில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையான 70 கிலோ மீட்டர் தூர வீதியையும் கந்தளையிலிருந்து திருகோணமலை வரையான 43 கிலோ மீட்டர் தூர வீதியையும் புனரமைக்க உலக வங்கி 100 மில்லியன் அமெரிக்க டொல ர்களை கடனாக வழங்க உள்ளது. இந்த திட்டத்தை கையளிக்க ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது.
மேலும் இங்கே தொடர்க...

திடீர் அனர்த்த மாவட்டமாக நுவரெலியா பிரகடனம் பிரதேச செயலர்கள், கிராமசேவர்களின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து



மலை யகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாகவும், மண்சரிவு அபாயம் உள்ளதனாலும் நுவரெலியா மாவட்டம் திடீர் அனர்த்தம் ஏற்படும் மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும் வானிலை அவதான நிலையமும் விடுத்துள்ள எச்சரிக்கைகளை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ பீ. ஜி. குமாரசிறி ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். அதேவேளை, பிரதேச செயலாளர்கள், கிராமசேவை அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சாமிமலை, கவுரகலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரமாகவுள்ள கவுரகலையில் 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்காலிகமாக பொதுக் கட்டடமொன்றில் தங்க வைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படு கின்றது.

இதேநேரம், கினிஸ்தன்னை பிளக் வோட்டர் பகுதியில் மண்சரிவு ஏற் பட்டுள்ளது. இதனால், அந்தப் பகு தியிலிருந்து சில குடும்பங்கள் அப்பு றப்படுத்தப்பட்டுள்ளன.

கொத்மலை, பூண்டுலோயா - தவலந்தன்னை வீதியிலும் மண்சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியிலிருந்து ஒரு குடும்பம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழைபெய்தால் நுவரெலியாவுக்கான புதிய வீதியின் 52ஆம் மைல்கல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்தார்.

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித் தார். பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகலரையும் நுவரெலியா மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துள்ள தாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக இந்தப் பகு திகளில் உள்ள நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கத வுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப் பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதா னமாக இருக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நீண்டகால செயற்றிட்டம்


நீர்வழிந்தோட தடையாகவுள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை: நிவாரணம் இரட்டிப்பு அதிகரிப்புஎந்தவொரு வெள்ள நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீண்டகாலத் திட்டமொன்று மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது :-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவதோடு எதிர்வரும் நாட்களில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆறுகள், கால்வாய்கள் என்பவற்றுக்கு அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டுள்ள ‘லைலா’ சூறாவளியினால் இலங்கைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் சூறாவளி நிலைமை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்பொழுது இரத்தினபுரி, நில்வளா கங்கை, களுகங்கை என்பவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழை பெய்யத் தொடங்கியதும் ஆறுகள் பெருக்கெடுத்து, வெள்ள அபாயம் அதிகரிக்கலாம்.

வெள்ளநீர் வடிந்து செல்வதற்காக வடிகால் கட்டமைப்புகளை சுத்திகரிக்கவும் நீர் வடிந்து செல்வதற்கு தடையாக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிகால்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒக்டோபர் மாதத்தில் அடுத்த மழை தொடங்குவதற்கு முன்னர் கால்வாய்களை திருத்தவும் அவற்றை நிர்வகிக்கவும் உள்ளோம். கால்வாய்களுக்கு அருகில் உள்ளவர்களை தற்காலிக இடங்களுக்கு அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. கால்வாய்களைத் திருத்த பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டாலும் அவை நிர்வகிக்கப்படாததால் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 80 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 25 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களி னூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் நிதி தேவைப்பட்டால் திறைசேரியினூடாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பாபர் மசூதி-முக்கிய தீர்ப்பு





சர்ச்சைகுரிய பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளிக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது தொடர்பாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உள்பட 21 பேர் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது.

பாரதீய ஜனதா உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புக்களைச் சேர்ந்த கரசேவகர்கள் கூடியிருந்த நேரத்தில், பாபர் மசூதியை இடிக்க அவர்களைத் தூண்டினார்கள் என்பது உள்பட அந்தத் தலைவர்கள் மீது சிபிஐ எனப்படு்ம மத்திய புலனாய்வுத்துறை பல வழக்குகளைத் தொடர்ந்தது.

ஆனால், அவர்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடர ஆதாரம் இல்லை என்று கூறி சிபிஐ மனுவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, சிபிஐ சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு மீது, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பு வழங்கியது.

குற்றத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

சிறப்பு நீதிமன்றம் பின்பற்றிய சட்ட நடைமுறைகள் உள்பட எந்த அம்சத்தின் மீதும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீதிபதி அலோக் குமார் தெரிவித்தார்.

விசாரணை முறைகள் தொடர்பாக எந்தக்குறையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், 2001-ம் ஆண்டு மே 4-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிடுவதற்கு உயர்நீதிமன்றத்துக்கு எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல், சிவசேனா தலைவர் பால்தாக்கரே உள்பட 21 பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

முறிகண்டியில் இராணுவ முகாம்?





இலங்கை இராணுவத்தினர்
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பகுதியில் மீள்குடியேற்றத்துக்காக அனுப்பப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படவில்லை என்றும் அந்தப் பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு முறைப்பாடு வந்துள்ளதாக இலங்கை அரசின் மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். முறிகண்டிப் பகுதியில் சாந்தபுரம் என்கிற பிரதேசத்திலேயே இப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பகுதியில் "அரச காணிகள் இருக்கும் நிலையில், இராணுவத்தின் தேவைகளுக்கு தனியார் காணிகளை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தான் கருதுவதாகவும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் தான் பேசவிருப்பதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் இதுவரை சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில், இராணுவத்துக்கு காணிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"முகாம்களுக்கே காணிகள்"

முறிகண்டிப் பகுதியில் இராணுவ முகாம்கள் அமைபப்தற்காகவே இந்தக் காணிகள் எடுக்கப்படுகின்ற என்று தனக்கு வந்த தகவல்களின் ஊடாக அறிந்து கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.


தனியார் காணிகளை அபகரிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது

அமைச்சர் முரளிதரன்

இந்த விடயம் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று கூறும் துணை அமைச்சர், எதிர் வரும் திங்கட்கிழமை தானும் மூத்த அமைச்சரான மில்ராய் ஃபெர்ணாண்டோவும் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

"அபிவிருத்திகளுக்காக தனியார் காணிகளை எடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது" என்றாலும், இராணுவத் தேவைகளுக்காக அவ்வாறு எடுப்பது ஏற்றுக் கொள்ள் முடியாதது என்றும் அமைச்சர் முரளிதரன் கூறுகிறார்.

அரசின் இப்படியான நடவடிக்கைகளுடன் தான் உடன்படவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்னும் 40 ஆண்டுகளில் சீனாவுக்கு புது பிரச்னை


பீஜிங்:"சீனாவில் வரும் 2050ம் ஆண்டில், 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். அதாவது நான்கு பேரில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்' என, ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சீன மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜியாங் வீபிங் கூறியதாவது:சீனாவில் தற்போது, 133 கோடி மக்கள் உள்ளனர். ஆனாலும், 2050ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கை 150 கோடியைத் தாண்டாது. அதற்கு காரணம், "ஒரு குடும்பம் ஒரு குழந்தை' கொள்கையை சீனா தீவிரமாக பின்பற்றி வருவதே.அதே நேரத்தில், 2050ம் ஆண்டில் 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். நான்கு சீனர்களில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார். அந்த நேரத்தில், உலக மக்கள் தொகையில் சீனாவின் பங்கு 15 சதவீதமாக இருக்கும். சீனாவில் தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18 கோடி பேர் உள்ளனர்.இவ்வாறு ஜியாங் வீபிங் கூறினார்.

இதற்கிடையில், சீனாவின் ரென்மின் பல்கலைக் கழக பேராசிரியர் வூ கேங்பிங் கூறுகையில், ""குழந்தை பிறப்பு குறைந்து, வயதானோர் எண்ணிக்கை அதிகரித்தால், உற்பத்தி குறையும். மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும்,'' எனக் கூறியுள்ளார்.ஜியாங் வீபிங் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கூறுகையில், ""சீனாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படாது. 2015ம் ஆண்டில், தொழிலாளர்கள் எண்ணிக்கை 100 கோடியாக இருக்கும். அதன்பின் 2050ம் ஆண்டு வரை 85 கோடியாக தொடரும்,'' என்றார்
மேலும் இங்கே தொடர்க...

2,000 மாஜி விடுதலை புலிகள்: இதுவரை ஒப்படைப்பு

கொழும்பு:"இதுவரை 2,000 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்' என, இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்தாண்டு மே மாதம், இறுதிக்கட்ட போர் நடந்தபோது மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தனர். இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சிறப்பு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டன. புலிகள் அமைப்பில் இருந்த சிறுவர்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பயிற்சி முகாம் முடிந்து, இதுவரை 2,000 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், யாழ்ப்பாணத்தில் நடந்த விழாவில் 400 முன்னாள் விடுதலைப் புலிகள், அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: வோர்ட் பிளேஸில் சம்பவம்

கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று பிற்பகல் முதல் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு கருதி பொலிசார் பலர் குவிக்கப்பட்ட போதும் மாணவர்கள் அத்துமீறி மானியத்துக்குள் நுழைய முற்பட்ட போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவானதுடன் பொலிசாரால் மோதலை கட்டுப்படுத்த தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு தொடர்ந்து அப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...