27 ஜனவரி, 2011

யாழ். மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு







யாழ். மாவட்டத்தில் ஐ.ம.சு. முன்னணியின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சற்று முன்னர் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

மார்ச் 17இல் உள்ளூராட்சி சபைத்தேர்தல்




உள்ளூராட்சி சபைத்தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத்தாக்கல் இன்று நண்பகல் 12மணியுடன் முடிவடைந்த பின்னேரே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் நாட்டின் பிரதான கட்சிகளான ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பன தமது வேட்புமனுக்களை மாவட்ட காரியாலயங்களில் இன்று தாக்கல் செய்தன.

நாடுமுழுவதும் உள்ள 301 பிரதேச சபைகள் அனைத்துக்கும் ஓரே நாளில் தேர்தல் இடம் பெறவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லைத்தீவில் அரசாங்கம் போட்டியிடாமை கூட்டமைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி: சிவசக்தி ஆனந்தன்




முல்லைத்தீவில் அரசாங்கம் தனது வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடாமல் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் ஒளிந்துகொண்டு போட்டியிடுவதே எமக்குக் கிடைத்த முதல் வெற்றியென்றும் இதன் மூலம் வடக்கு-கிழக்கில் அனைத்து இடங்களையும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது என்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நேற்று வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெருங்கல் செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தபின்னர் வேட்பாளர்களின் மத்தியில் உரையாற்றிய போதே இவர் இதனைத் தெரிவித்தார்.

நாம் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து அதற்கான அங்கீகாரத்தைக் கேட்டிருந்தோம். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு எமக்கு வாக்களித்தனர். அதனைப்போன்று இத்தேர்தலிலும் நாம் எமக்கு என்ன தேவை என்பதையும் எமது அரசியல் தீர்வு தொடர்பான யோசனைகளையும் முன்வைத்து மக்களிடம் கேட்கப்போகின்றோம். அதற்கும் எமது மக்கள் தமது பூரண ஆதரவினைத் தருவார்கள் என்று நம்புகின்றோம் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாம் இழந்தவைகளுக்கு ஈடாக எமக்கு ஓர் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இத்தேர்தல் எமக்கு ஒரு கருவியாகப் பயன்படவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் நாம் கட்சிகளை மறந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு உழைத்து எமது இலட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் தீவிரமாகக் கடமையாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழில் தேர்தல் ஜனநாயக முறையில் இடம்பெறுமா?: சந்திரசேகரன்



யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலைக் முன்னணியின் உறுப்பினர் சந்திரசேகரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஜே.வி.பி இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது. இது தொடர்பில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் தற்போது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. எனவே ஜனநாயக முறையிலான தேர்தல் இடம்பெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் ஒரு மாற்றம் ஏற்பட தற்போது நடைபெறும் இந்த சிறிய தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்


வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெங்கல செட்டிகுளம் ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்களை நேற்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்டத்திற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியுமான சிவசக்தி ஆனந்தன்; வவுனியா மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் கையளித்தார்.

இவருடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முன்னாள் நகரபிதாவும் தற்போதைய நகரசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் டேவிட் நாதன் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவு

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் முன்னாள்

எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கத்தை செயலாளராகவும் கொண்டு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு இயங்கிவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபை தலைமைவேட்பாளராக எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளார். ஏனைய சபைகளிலும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் நவசமாஜயக்கட்சியுடன் இணைந்து மேசை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்தது. இந்த நிலையிலேயே கூட்டமைப்பின் தலைவரகளுடன் பேச்சவார்த்தை இடம்பெற்றது.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...