12 செப்டம்பர், 2010

கொழும்பு வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் இன்று திருவிழா

வருடந்தோறும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியை நம் தாய்த் திருச்சபையானது புனித கன்னிமரியாளின் பிறப்பு விழாவாகப் பிரகடனப்படுத்தியது. இந்தப் பிறப்புத் திருவிழாவே இன்று கொழும்பு செக்கடித் தெரு வேளாங்கண்ணி ஆலயத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இறை மகனை ஈன்றெடுத்த புனிதவதியான மரியாளை நாம் பல்வேறு நாமங்களால் அழைத்து வருடந்தோறும் விழாவெடுத்து மகிமைப்படுத்துகின்றோம்.

அந்தவகையில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழாவை இத்தினத்தில் கொண்டாடி பேருவகை கொள்கின்றோம்.

உலக மக்களுக்கு சிறப்பாகப் பாவப் பிணியாலும், உடற் பிணியாலும் வாடும் மக்களுக்கு ஆரோக்கியத்தைப் பெற்று தரும் இந்த அன்னையைத் தான், ஆரோக்கிய மாதா என அழைத்து சிறப்பாகத் திருவிழாவெடுக்கின்றோம்.

இம்மாதம் 3ஆம் திகதி வேளாங்கண்ணி அன்னையின் ஆலயத்தில் கொடியேற்றப்பட்டு, 9 நாட்கள் நவநாள் வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள், இன்று கோலாகலமாக திருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இன்று காலை 5.30 மணி, 7.30 மணி, மாலை 5.00 மணிக்குத் தமிழிலும், நண்பகல் 12.00 ஆங்கிலத்திலும், மாலை 4.00 மணிக்கு சிங்களத்திலும் திருப்பலிப் பூசைகள் நடைபெறுகின்றன.

மாலை 5.00 மணி திருப்பலியையடுத்து அன்னையின் திருச்சுரூப பவனி ஆரம்பமாகும். பவனியைத் தொடர்ந்து, திவ்விய நற்கருணை, திருச்சுரூப ஆசீர்வாதங்களுடன் திருவிழா இனிதே நிறைவுபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றம் ஜனநாயகக் கொள்கையை பாதிக்கும்-அமெரிக்கா

இலங்கையில் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரான பி.ஜே. குரோவ்லி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் :

""நல்ல அரசாங்கத்தின் கொள்கைகளையும் ஜனநாயகத்தையும் மற்றும் சுயாதீன அரச நிறுவகங்களையும் விருத்தி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது.

சுயாதீன நிறுவகங்களுக்கு தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரிகளை நியமித்தல், அதிகாரப் பகிர்வை அதிகப்படுத்துதல், பேச்சுவார்த்தை மற்றும் தேசிய நல்லிணக்கத்தை விருத்தி செய்தல் உட்பட ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என பி.ஜே. குரோவ்லி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் மீண்டும் கைது



சரணடைந்து படையினரால் தடுக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் பத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள் படையினரின் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டபின்னர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அரசாங்கத்தினால் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் புலனாய்வுப் பிரிவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளோரில் ஆண், பெண் முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் களாகச் செயற்பட்டதாகக் கருதப்படுவோரும் அடங்குகின்றனர்.

நெடுந்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இந்தக் கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சிரமங்களைத் தாம் எதிர்நோக்கியுள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் கைது செய்யப்படும்போது சட்டரீதியான முறைப்படி தகுந்த ஆதாரங்களுடனும் பொலிஸ் தரப்பினருடனும் வந்தே படையினர் மேற்படி சந்தேக நபர்கள் மேலதிக விசாணைக்காக அழைத்துச் சென்றனர் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் கைது செய்து கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாகவும் கைது செய்யப்பட்டோரின் நிலையைப் பற்றியும் யாரிடம் முறைப்பாடு தெரிவிப்பது என்று தமக்குத் தெரியவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் என்போரும் உள்ளனர். இவ்வாறு மேற்கொள்ளப்படும் கைதுகளால் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படும் முன்னக்ஷிள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் குடும்பத்தினரிடையே பதற்றமும் கவலையும் தோன்றியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவால் சஜித் எதிர்க்கட்சித் தலைவராகலாம்?

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் சுயமாக இயங்குவது குறித்து ஆராயும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்யப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்துள்ளன. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை ஆளுந்தரப்புக்கும் சங் கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 உறுப்பினர்களுடன் இரண்டாவது சக்தியாகத் தாம் திகழப்போவதாகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டவர்கள் என்ற ரீதியில் தமது தரப்பிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கும் அதற்கான அங்கீகாரத்தைச் சபாநாயகரிடம் பெற்றுக் கொள்வதற்குமாக அனைவரது ஒப்பங்களையும் கொண்ட இணக்கக் கடிதமொன்று தயாரிக்கும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரி வித்தன. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பது குறித்து அவரது விருப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவருடன் முக்கியஸ்தர்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதேவேளை, 18 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஆளும்தரப்புடன் இணைந்து கொண்ட ஆறுபேரையும் தமது அணியில் இணைத்துக்கொள்வது குறித்தும் அதிருப்தியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் இணையும்போது அதிருப்தியாளர் அணியின் எண்ணிக்கைக 31 ஆக அமையும்.

காமினி ஜெயவிக்ரம பெரேரா

இது இவ்வாறிருக்க, 18 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசிய கட்டசிக்குள் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதனை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா ஏற்றுக் கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் ஒரு சில ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேச்சையாக அமரவிருப்பதை தன்னால் முடிந்தவரை நிறுத்துவதற்கான பிரயத்தனங் களைத் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கபீர் ஹாஸிம்

இது தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முக்கியஸ்தருமான கபீர்“ ஹாஸிம், கட்சிக்குள் நிறையவே பிரச்சினைகள் உள்ளன. இப்போது அவை கூடிவிட்டன. பிரச்சினைகளை பேசித் தீர்த்து கட்சியைப் பிளவடையச் செய்யாமல் பாதுகாக்கவே முயல்கிறோம். ஆனால், கட்சித்தலைமை தொடர்பில் நிறையவே அதிருப்தியுள்ளன. இதில் மாற்றம் வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் கருத்தாகவுள்ளது. இந்த விடயத்துக்குத் தீர்வு காணாவிடின் பிளவு தவிர்க்கமுடியாது போய்விடும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவேண்டு மென்றே பலரும் விரும்புகின்றனர். இதுவே எமது கட்சியின் பெரும்பாலானோரின் இன்றைய நிலை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 25 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம் கேட்டிருந்ததனை அவர் நிராகரித்ததனையடுத்தே கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

சட்டவல்லுநர்கள் கருத்து

குறிப்பிட்ட ஒரு கட்சி மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அவர்களில் பெரும்பகுதியினர் சுயமாக இயங்கும்போது தமது தரப்பிலிருந்தே ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவேண்டுமென்று கோரிக்கை விடுக்கும் பட்சத் தில் இறுதித் தீர்மானம் எடுப்பவராக சபாநாய கரே விளங்குவாரென இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்த சட்ட வல்லுநனர்கள் தெரி வித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்படும் ஒருவரை நியமிக்கலாம் அல் லது அதனை நிராகரித்தும் விடலாம். ஆனால், இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.

அரசுக்கும் சங்கடமான நிலை

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு ஒரு சங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஆளும்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய பலவீனமான தலைமைத்துவம் தொடரும் வரை தேர்தல்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் தமது தரப்பு இலகுவாக வெற்றி பெற முடியுமென்ற நிலை இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டு மக்கள் ஆதரவுமிக்க ஒருவர் தலைவராகத் தெரிவானால் அது ஒரு சவாலாக அமையலாமென ஆளும்தரப்பு நோக்குகிறது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சிறைச்சாலையிலிருந்து 24 கைதிகள் இன்று விடுதலை

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் 24 கைதி கள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ். சிறைச்சாலை அத்திய ட்சகர் சந்தன ஏக்கநாயக்கா தெரி வித்தார்.

20 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இவர்களில் சிங்களக் கைதிகள் பலாலியில் உள்ள வேலைத் தளத் தில் இருந்தும் விடுதலையா வார்கள் எனவும் அத்தியட்சகர் சந்தன ஏக்கநாயக்கா கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். வடமராட்சியில் 11,000 பேரை மீள்குடியமர்த்தும் பணி ஆரம்பம்



யாழ். வடமராட்சியில் இடம்பெயர்ந் துள்ள சுமார் 11,000 பேரை மீளக் குடியமர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளன.

யாழ். இராமாவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 365 குடும்பங்களைச் சேர்ந்த 1092 பேர் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட ஆறு கிராமசேவகர் பிரிவுகளில் மீளக் குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்களுக்குத் தேவையான தகரங்கள், சீமெந்து, உலர் உணவுகள், சமையல் உபகரணங்கள் என்பன நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மூலமாக இவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டதுடன், உடுத்துறை, சம்பியன்பற்று வடக்கு, சம்பியன்பற்று தெற்கு, ஆழிவளை, வத்துராயன், மருதங்கேணி கிராம சேவகர் பிரிவுகளுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எண் 8

இலங்கையின் அரசியல் வெற்றியுடன் சோதிட ரீதியாகவும் எண் சோதிடத்தின்படி எட்டாம் இலக்கத்திற்கும் விசேடமான தொடர்புகள் இருப்பதாக முன்னணி சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜாதகத்தின்படி இலங்கை கும்ப ராசியில் அமைந்துள்ளமை எட்டாம் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகள் பெரும் பாக்கியங்களுக்கு வழி வகுக்குமென்றும் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி இலக்கமாகுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பதினெட்டாவது திருத்தத்திற்குப் பாராளுமன்றத்தில் எட்டாந் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாகக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 161. எதிராக 17. இரண்டினதும் கூட்டுத்தொகையும் எட்டு! ஆதரவாகவோ, எதிராகவோ அளிக்கப்படும் வாக்குகளை முன்கூட்டியே தயார்செய்துகொள்ள முடியாது. எனவே இதில் சோதிடமும் எண் சோதிட விஞ்ஞானமும் புதுமையான தொடர்புகளை கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறதென்றும் சோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலட்சக்கணக்கான ஆதரவாளரை இழக்கும் நிலையில் ஐ. தே. க ரணிலின் எதிர்க் கட்சி ஆசனமும் பறிபோகலாம்




ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டி ருக்கின்ற உட்பூசல் மேலும் உக்கிரமடைந்திருக்கின்ற நிலையில் கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மேலும் சிக்கல்களை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஐ. தே. கவின் 25 எம்.பிக்கள் பாராளு மன்றத்திற்குள் தனியாகச் (சுதந்திரமாக) செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர். ஐ. தே. கவினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தலைமை ஒரு வாரத்தினுள் தீர்வுகாண வேண்டுமென 25 எம். பிக்களும் கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த நிலையை ரணில் விக்கிரமசிங்கவால் சமாளிக்க முடியாமல் போனால் கட்சி சின்னாபின்னமாகப் போவதைத் தடுக்க முடியாது என கட்சி முக்கியஸ்தர்கள் தலைமைக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரணில் இதனைப் பொருட்படுத்தாமல் இருப்பது ஐ. தே. கவின் ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது-

இதனால் ஐ. தே. கவின் இலட்சக் கணக்கான ஆதரவாளர்கள் கட்சியைவிட்டு ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கிறது என ஐ. தே. கவின் இரத்தினபுரி மாவட்ட எம்.பியும், மாவட்ட அமைப்பாளருமான திருமதி தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஐ. தே. க இன்று சின்னாபின்னமாகிக் கிடப்பதற்கு தலைமையின் போக்கே காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

25 எம்.பிக்கள் சுதந்திரமாக செயற் படுவதற்கு எடுத்துள்ள முடிவு ரணில் விக்கிரமசிங்வை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவ தற்கான ஒரு நகர்வாகவே இருக்கி றதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐ. தே. க. பாராளுமன்றத்தில் தனது ஆசனங்களை இழக்கும் நிலை ஏற்பட்டால் எதிர்க் கட்சி தலைவர் ஆசனத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருக்கிறதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் ஒரு இலட்சத்து 25,000 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை






ஆரம்பமாகவுள்ள பெரும்போக செய்கையின் போது வன்னியிலுள்ள ஒரு இலட்சத்து 25,000 ஏக்கர் விளை நிலத்தில் விதைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.

வடமாகாண மீள்குடியேற்ற அபிவிருத்தி க்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த சிறுபோகத்தின் போது வன்னியில் 45 ஏக்கர் வயற் காணிகளில் மட்டுமே செய்கை பண்ணப்பட்டது. அடுத்த பெரும் போகத்தில் நாட்டிலுள்ள அனை த்து விளைநிலங்களிலும் செய்கைபண் ணப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கைக்கமைய வன்னியில் எஞ்சியுள்ள 80,000 ஏக்கர் விளைநிலங்களும் செய்கை பண்ண ஏற்பாடுகள்
மேலும் இங்கே தொடர்க...

வன்னியில் 10,000 வீடுகள் கட்டும் பணிகள் இருவாரங்களில்


வடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கென இந்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளை கட்டும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து 10,000 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் நாளை 13ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் வன்னி மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளனர். 10,000 வீடுகளில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவ துடன் அங்கவீனமானவர்கள் இரண்டாவதாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்துக்கு 5000 வீடுகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 5000 வீடுகள் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

பயனாளிகளை தெரிவு செய்த பின்னர் ஜனாதிபதி செயலணி முழுமையான அறிக்கையை இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கும். அதனைத் தொடர்ந்து துரிதகதியில் வேலைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

வட மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். மேலும் வன்னி மாவட்டம் உட்பட வட மாகாண அரச அதிபர்கள் உட்பட வட மாகாண அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ஃராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் ஒக்டோபரில் புதிய முறையில் பெப்ரவரியில் தேர்தல்


முற்றிலும் தொகுதி வாரி முறையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

இதற்கு ஏற்றவாறு உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமென்று தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதிய உறுப்பினர்கள் தெரிவாகியிருக்க வேண்டும். அதற்கமைய இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி வாரி முறையிலான திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

அடுத்ததாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருக் கிறது. புதிய சட்ட திருத்தத்தின்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியாக நடத்தப்படும். 70% உறுப்பினர்கள் தொகுதிவாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

30% விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகளிலிருந்து இந்த 30% உறுப்பினர்கள் தெரிவாகுவார்கள். சில தொகுதிகளில் இரட்டை அல்லது மூன்று அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். உள்ளூராட்சி மன்றமொன்றுக்கு ஒரு பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தொகுதிக்குத் தொகுதி ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் வெவ்வேறான வேட்பாளர் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

வாக்குகள் கட்சியின் சின்னத்திற்கே அளிக்கப்படும். 50%இற்கும் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சியின் செயலாளர் குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கான தலைவரையோ அல்லது பிரதித் தலைவரையோ அதே போன்று நகர முதல்வரையும் பிரதி முதல்வரையும் தெரிவு செய்ய முடியும்.

50%இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றால் சபை கூடிய பின்னர் இவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். குறித்த உள்ளூராட்சி மன்றமொன்றின் வரவு - செலவுத் திட்டம் தோல்வியுறும் பட்சத்தில் அதன் தலைவரோ அல்லது முதல்வரோ இராஜினாமாச் செய்ய வேண்டும்.

இந்தத் திருத்தங்களுடனான முதலாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டதும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமென்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, அடுத்த வருட நடுப்பகுதியில் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென்றும் அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். மீள்குடியேற்றம் இன்னும் சில மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்படுமென்றும் அமைச்சர் சொன்னார்.
மேலும் இங்கே தொடர்க...