15 செப்டம்பர், 2010

தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: சந்திரகாந்தன்.

கிழக்கில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தேவைகளுடைய மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல் கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர வேறொன்றுமில்லை. என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

மட்டு, வாகனேரி கோகுலம் வித்தியாலத்தில் விஞ்ஞான ஆய்வுகூட கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், எமது மக்களை இலகுவாக அரசியல் வாதிகள் ஏமாற்றுவதற்கு காரணம், எம் மக்கள் உணர்வுள்ளவர்களாக இருக்கும் அதேவேளை தெளிவில்லாதவர்களாக இருப்பதே ஆகும்.

ஆனால் இனிவருகின்ற காலங்கள் நாம் அவ்வாறு இருந்திட முடியாது. ஏனெனில் காலம் மிகவும் விரைவாகவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களையும் நோக்கி நகர்கின்றது.

அதற்கேற்றாப் போல் நாமும் நுகர வேண்டிய கடமை இருக்கின்றது. எனவே உணர்வுள்ளவர்களாக இருக்கின்ற நேரம் தெளிவுள்ளவர்களாக நாமும் இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்க கூடியதாக இருக்கும் எனவும் கேட்டுக்கொன்டார்
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம் தொடர்பில் நீல் புனே ஆயராய்வு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் புனே உட்பட ஐரோப்பி ஒன்றிய பிரதி நிதிகள் அடங்கிய குழு இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்ற பிரதேசங்களில் செய்யப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், மீள்குடியேறிய பகுதி மக்களின் நிலைமைகள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் விளக்கி கூறியதுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் செயற்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது இக்குழவிடம் விளக்கி கூறினார்.

இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வதிவிடப்பிரதி நிதி அஸதுர் றஹ்மான் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

உயர் பாதுகாப்பு பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி

உயர் பாதுகாப்பு பகுதியான வலிகாமத்தில் மீள்குடியேற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

யாழில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உயர் பாதுகாப்புப் பகுதியான வலிகாமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் அனுமதி வழங்கியதோடு, 3000 ஏக்கர் காணி பிரதேசத்தில் மிதி வெடிகளை அகற்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விளம்பரத் தூண் மீதேறி போராடிய நபருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை




விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்திய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் வரை போராடப்போவதாகக் கூறிய அந்நபர் 18 மணிநேரத்தின் பின்னர் நேற்றிரவு தரையிறக்கப்பட்டார். நீர்,ஆகாராம் எதுவுமின்மையால் உடல்நிலை பாதிப்புற்ற அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

காலியைச் சேர்ந்த மகேஷ் சொய்சா (வயது 31) என்பவரே திடீரென இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்களின் பொருட்கள் பறிமுதல்?

இலங்கை கடற்படையினர் இராமேஷ்வரம் மீனவர்களிடம் காணப்பட்ட ஜிபிஎஸ் கருவி, செல்போன், இறால் மீன்களைப் பறித்து கொண்டு அவர்களை மீன் பிடிக்க விடாது செய்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 500 விசைப்படகுகளுடன் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்ற போது இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்து விட்டு கரை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பல்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகை முற்றுகை இட்டதுடன் அவர்களிடம் காணப்பட்ட செல்போன், போன்ற பொருட்களை பறித்து சென்றதாக மீனவர்கள் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

இரத்தினபுரி நிவத்திகலை தோட்டத்தில் பதற்ற நிலை தொடர்கிறது

இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அங்கு பதற்றநிலை தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையின தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து கரவிட்ட திமியாவ பகுதியில் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன.அங்கு பதற்ற நிலை தொடர்வதன் காரணமாக தோட்டங்களைச்சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

18ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்து: அமெரிக்கா - இலங்கை ஆராய்வு


இலங்கையின் 18ஆவது அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பில் ஊடக அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெலவை நேற்று சந்தித்த அமெரிக்க தூதுவர் புட்டெனிஸ், அமைச்சரின் அறிக்கை மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆகிய இரண்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இலங்கையில், ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்களை கொடுக்கும் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும் அது ஜனநாயகத்தை அலட்சியம் செய்யும் என தெரிவித்தும் அமெரிக்கா கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழு பான்கி மூனை சந்திக்கவுள்ளது

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்தை அனுபவிக்கவில்லை அப்பாவிகளே பாதிப்புற்றனர்; கிளிநொச்சியில் ரங்கா எம்.பி.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

அப்பாவித் தமிழ் மக்களின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பங்களை அனுபவிக்கையில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கல்வி பெற்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் வந்து விடுகின்றனர். தம்பிள்ளைகளைப் போன்று அடுத்தவரின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய பண்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வரவேண் டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக அழிவுற்று ள்ள கிளிநொச்சி உட்பட்ட வட பகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் மீளக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுத்திருக்கின்றனரே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர் என்றும் அவர் கூறினார். ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள புதிய இளம் எம்.பி.க்கள் குழுவில் எம்.பி.ஜே. ஸ்ரீரங்காவும் இடம்பெற்றுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

‘30 வருடகாலம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தென் பகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்று இந்த மக்களின் தேவைகளை கண்டறிவது மிகவும் சிறப்பான உதாரணம் ஆகும். எப்போதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கிய தேவைகளை பூரணப்படுத்தும் செயற்பாடுகள் அவசியமானவை.

யுத்தத்தால் சீரழிந்து போன பிரதேசங்களில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தித் திட்டங்களில் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றும் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களே. அவர்களுக்கு உதவவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் அப்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வந்தனர். தமது பிள்ளைகளைப் போலவே மற்றோரின் பிள்ளைகளையும் கருதுவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

30 வருட காலம் துன்பங்களை அனுபவித்த மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் மக்களின் கஷ்டங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது கடமையாகும். அக்கஷ்டங்களை அப்பிரதிநிதிகள் நேரில் கண்டறியவும் வேண்டும்.

முப்பது வருட கால பயங்கரவாதத்தினால் இழந்தவற்றை மீண்டும் ஒரே நாளிலோ 24 மணி நேரத்திலோ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பெற்றுக்கொள்ள குறிப்பிடத்தக்க காலம் செல்லும். எனினும் அதற்கான ஆரம்பம் இப்போது ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

நாமல் ராஜபக்ஷ மற்றும் இங்கு வருகை தந்துள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. எனினும், முப்பது வருடங்கள் துன்பமுற்ற மக்களுக்கான தமது கடமைகளை நிறைவேற்றவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் இதனை உண்மையிலேயே செய்ய வேண்டியவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளே.

ஆனால் அவர்கள் இதனைச் செய்ய முன்வரவில்லை. ஐந்து வருடங்களுக்கொருமுறை மக்களை ஞாபகப்படுத்தும் முறைமையை நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீரங்கா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சந்திரகுமார, உதித லொகுபண்டார, கணக ஹேரத், செஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சணச அபிவிருத்தி வங்கி கிளிநொச்சியில் திறப்பு

சணச அபிவிருத்தி வங்கியின் புதிய கிளையொன்று நேற்று 14ம் திகதி கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வங்கியின் கிளையை இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நேற்றுக் காலை 8.30 மணிக்குத் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, குறிப்பாக விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கடன் வசதி என்பன இக்கிளை ஊடாகச் செய்து கொடுக்க எதிர்பார்ப்பதாக வங்கியின் தலைவர் கலாநிதி பி. ஏ. கிரிவந்தெனிய கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

18வது அரசியலமைப்புத் திருத்தம்; அமெரிக்காவின் கருத்து உள்விவகார தலையீடாகுமென இலங்கை அதிருப்தி





“18 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகும். இது தொடர்பிலான எமது அதிருப்தியை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளோம்” என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீசியா படனிஸ் நேற்று ஊடகத்துறை அமைச்சரை ஊடக அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்க ளுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்ட வாறு கூறினார்.

ஊடக சுதந்திரம், ஊடக அபிவிருத்தி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.

18ஆவது திருத்தம் தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நேரடியாக வெளியிட்டதாக கூறிய அவர், இலங்கை இறைமையுள்ள நாடு எனவும் அதன் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பிலான எமது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தோம். எமது நிலைப்பாட்டை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். ஒரு நாட்டின் உள்விவகாரம் தொடர்பில் செயற்படுகையில் இதனைவிட கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.

ஊடக அதிகார சபை குறித்தும் இரு தரப்பிடையே பேசப்பட்டது. ஊடவியலாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு உதவி அளிப்பதற்கு அமெரிக்கா முன்வந்தது. அதனை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். பிரதேச மட்டத்தில் ஊடக மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாம் அமெரிக்காவைக் கோரினோம்.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பி ஒரே நேரத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்தனர். அவர்களை நாம் பட்டினி போடவில்லை. மீள்குடியேற் றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. தற்பொழுது 28 ஆயிரம் பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை குறித்து ஆராயப்படுவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதற்கு முன்னரும் இலங்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வாடகை நிலுவைகளை அறவிடுவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை மும்முரம் கோடிக்கணக்கான ரூபா பாக்கி; சட்டத்தை திருத்த குழு




நட்டத்தில் இயங்கி வரும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதற்கு நிலுவையாக உள்ள வாடகை மற்றும் திட்டக் கொடுப்பனவுகளை சேகரிப்பதில் தற்போது மும்முரம் காட்டி வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபை (மஈஅ) 2500 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிகார சபையின் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய வாடகை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய திட்ட கொடுப்பனவு ஆகியவற்றை துரிதமாக சேகரிப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அத்துடன் மேற்படி வாடகை மற்றும் கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள கஷ்டங்களை நீக்கும் வகையில் அதிகார சபையின் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு அதிகார சபை நேரடியாக தலையிடும் வகையிலும் மேற்படி சட்டத்தில் சில சரத்துகள் சீரமைக்கப்படவுள்ளன. சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு நீதிமன்ற அங்கிகாரத்துக்காக மேலதிகமாக செலவிடப்படும் நிதியை இதனால் அதிகார சபைக்கு குறைத்துக்கொள்ள வழியேற்படும் என அதிகார சபை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபா வாடகைப் பணம் நிலுவையில் இருப்பதாக அதிகார சபையின் அமுல்படுத்தும் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. சிறிவர்தன கூறினார்.

பீபள்ஸ் பார்க், புறக்கோட்டை, சென் ஜோன் மீன்கடை புறக்கோட்டை, கொழும்பு சென்ட்ரல் சுப்பர் மார்க்கட் தொகுதி புறக்கோட்டை, சார்மர்ஸ் கிரனரி, கோட்டை ஆகியவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெருமளவு வாடகையை நிலுவையாக வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறைக்குள் குற்றங்களை ஒழிக்க கடும் நடவடிக்கை சிறைக்கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் ஜனாதிபதி






சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கடுமையான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

பாரிய குற்றச் செயல்களுக்குத் திட்டம் தீட்டும் இடமாக சிறைக் கூடங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் முன்னெடு க்கப்படுமெனவும் தெரிவித்தார்.

குற்றச் செயல்களுக்கு துணைபோகக் கூடாதென சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, புதிய சிறைச்சாலைகளை திறப்பதற்குப் பதிலாக சிறைச்சாலைகளை மூடிவிடும் நிலையை உருவாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் சிறைக் கூடங்களில் இடம்பெறும் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

சிறைக்கைதிகள் நலன்புரி தினம் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ.ஆர்.த சில்வா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

“சிறைக்கைதிகளின் அனுபவம் எனக்குப் புதியதல்ல. நானும் சிறையிலிருந்திருக் கின்றேன். எனினும் சிறு சிறு குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். குற்றங்களுக்குத் தீர்வாக சிறைத்தண்டனையளிக்கும் மன நிலை இல்லா தொழிய வேண்டும்.

சிறைச்சாலை தொடர்பான பல சட்டமூலங்கள் உள்ளன. சிறைக்கைதிகளின் நலன்புரி விடயங்கள் தொடர்பான சட்டமூலங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இவற்றில் மாற்றம் கொண்டுவர முடியும். உதாரணமாக ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்த முடியாத ஒருவருக்கு ஓரிரண்டு வாரங்களுக்கு ஏதாவது வேலையொன்றைத் தண்டனையாகக் கொடுக்கலாம். அது சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

தற்போது குற்றச் செயல்களுக்கான வழக்குகளை விட விவாகரத்து தொடர்பான வழக்குகளே அதிகமுள்ளன. குடும்பங்களில் அவ்வாறான பிரச்சினைகள் உள்ளமையே அதற்குக் காரணம். இது விடயத்தில் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படும் யுகம் இன்று உருவாகியுள்ளது.

பெரும் குற்றச்செயல்களுக்கு மூல காரணமாக சிறைச்சாலைகள் உள்ளன. இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். இன்று காலை கூட எனக்கு அவ்வாறு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அதை நிராகரித்துவிட்டேன். சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி பாவனையை முற்றாக நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிப்போரும் உள்ளனர். மகனுக்காக தந்தையொருவர் சிறைத்தண்டனையை அனுபவித்ததையும் நான் அறிவேன். மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். அத்தகைய கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்றும் பொறுப்பு சிறை அதிகாரிகளுடையது. தேங்காய் திருடிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை வழங்கி பின் அவன் கொலைக்குற்றவாளியாக உருவாகிய சம்பவமொன்றும் உள்ளது.

கடந்த காலங்களில் எனக்கு அவதூறுகளை விளைவிக்க சிலர் சில பத்திரிகைகளை உபயோகப்படுத்தினர். அப்போது நான் மெளனமாக இருந்தேன். இன்று அதே பத்திரிகைகள் அவர்கள் தொடர்பான அவதூறுகளை பிரசுரிக்கின்றபோது தான் அதன் தாக்கம் அவர்களுக்குப் புரிகிறது.

தவறிழைத்து விட்டு சிறைத்தண்டனை அனுபவிப்போர் மட்டுமன்றி, அவர்களின் முழுக் குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டவர்களாக துன்பங்களை அனுபவிக்கின்றனர். தண்டனையிலிருந்து விடுதலை பெறுவோர் மீண்டும் தவறிழைக்காமல் நாட்டையும், குடும்பத்தையும் சமூகத்தையும் நேசிப்பவர்களாக மாறவேண்டும். 30 வருடங்களுக்குப் பின் சுதந்திரமடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புள்ள பிரஜைகளாக அவர்களும் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள்






கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால்; படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இந்தவாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில்.புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் சில கருத்துகள் இப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் உறவுகளைக் குழப்பும் நோக்கில் சிலரால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் இன்றைய திகதியில் இலங்கையிலுள்ள யதார்த்தமான சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை. இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதைச் சமீபகாலமாக இலங்கைக்கு வந்து திரும்பிய புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் நேரில் கண்டிருக்க முடியும்.
தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அநேகர் தாமாக விரும்பியோ. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ கடந்த வருடம்வரை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்கள். தற்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான். அப்படியான நிலையில் இந்த முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது.
அதை எவ்வளவு விரைவில் சாத்தியமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் புலம்பெயர் உறவுகள் மத்தியில் சிலரால் வெளியிடப்படும் உண்மைக்கு மாறான அல்லது உசுப்பேற்றி விடும் கருத்துக்கள் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு உலை வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் வெளிப்பட்டு படையுடன் வருவார் என்று ஒரு கதை. இந்தக் காட்டில் இத்தனை ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள், அல்லது அந்த நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் பயிற்சி எடுத்தபின் காத்திருக்கிறார்கள் என்று மற்றொரு கதை. இந்த ரீதியில் கூறப்படும் உசுப்பேற்றிவிடும் கதைகள் எவையும் உண்மைக்கு அருகில்கூட இல்லை.
இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்புவது புலம்பெயர் உறவுகளில் மிகச் சிலரை சிறிது காலத்துக்கு ஒருவித மாயையில் வைத்திருக்க வேண்டுமானால் உதவலாமே தவிர நீண்ட காலத்துக்கு இதேபோல கனவுக் காட்சியைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது.
ஆனால் அதேநேரத்தில் இப்படியான கதைகள் வெளியே உலாவிக் கொண்டிருப்பது தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளின் நிலைமையைத்தான் மேலும் சிக்கலாக்கி விடுகின்றது என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாளைக்கே மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்று வெளியே கதை விட்டுக் கொண்டிருப்பது தடை முகாமிலுள்ள போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகத் தாமதங்களை ஏற்படுத்தும். சில வேளைகளில் நிரந்தரமாகத் தடையைக்கூட ஏற்படுத்திவிடக்கூடும்.
இந்த விஷயம் இப்படியான அம்புலிமாமாக் கதைகளை வெளிநாடுகளில் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். ஆயுதப் போராட்டம் இனியும் சாத்தியமில்லை என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இப்படியான கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கும் புண்ணியவான்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் தமது சுய அரசியல் விளையாட்டுக்களுக்காக இந்தக் கதைகள் அவர்களால் பரப்பப்படுகின்றன.
அப்படியானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் சுய லாபத்துக்கான நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் தடை முகாம்களில் விடுதலைக்காக்க் காத்திருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.
அவர்களில் பலர் இனித்தான் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதுகளில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இனித்தான் பூச்சியத்திலிருந்து தமது வாழ்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது விடுதலையில் உங்களால் ஏற்படுத்தப்படும் தாமதம் எவ்வளது கேவலமானது என்பதைப் பற்றி நீங்கள் வெளியே யாரிடமும் கேட்க வேண்டாம், உங்கள் மனச்சாட்சியையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்களை விடுவிப்பதற்கு நீங்கள் உதவிதான் செய்யவில்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரபமாவது செய்யாமல் இருந்தால் போதும். இதுவே இந்த முன்னாள் போராளிகளுக்கு உங்களால் செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

விளம்பரத் தூண் மீதேறியிருந்து அச்சுறுத்திய நபர் கீழே இறக்கப்பட்டார்



இன்று காலையிலிருந்து உயரமான விளம்பரத் தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த நபர் சற்று முன் தீயணைப்பு துறையினரால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில், விளம்பர தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்தல் விடுத்துவந்த நபர் இன்று மாலை வரை தரையிறங்கவில்லை. இதேவேளை குறித்த நபரை பார்வையிட பெருந்திரளான பொதுமக்கள் ஒன்று கூடினர்.

இந்நிலையில் குறித்த நபரை தீயணைப்பு துறையினர் சற்று முன்னர் கீழே இறக்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவ்விடத்தில் இருந்த தூண் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...