16 மார்ச், 2010

தமிழில் பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதி






இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றை செயற்படுத்தும் நோக்கில் நேற்று (15) வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மேல் மாகாண வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சியின் தலைமையில் ஒரு நடவடிக்கை இடம்பெற்றது. இலங்கையில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் தனது முறைப்பாட்டை தெரிவிக்கும் இந்த நடவடிக்கை ஏற்கனவே மேல் மாகாணத்தில் வெலிக்கடை, கொஹரூவலை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையங்களில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. படிப்படியே நாட்டில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்படும்.
மேல் மாகாண வடக்கு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நேற்று தமிழில் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை பரீட்சித்தார். நுகேகொடை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக்கோன், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அதி காரி (நுகேகொடை பிரிவு) நிஷாந்த சொய்சா மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி சரத் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(படம்- சுதத் நிஷாந்த)
மேலும் இங்கே தொடர்க...

இதுவரை தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கை 65 ஆகப் பதிவு : ஹஜ்மீர்




எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி நடை பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று வரை 65 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் குறித்து அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே எமது இணையத்தளத்திற்கு இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இதுவரை 65 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாரியளவில் 48 வன்முறைச் சம்பவங்களும் சிறியளவில் 17 சம்பவங்களும் பதிவாகியுள்ள அதேவேளை, 12 ஆயுதப் பிரயோகங்களும் பதிவாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக 47 சம்பவங்களும், ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக 2 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக 3 சம்பவங்களும் கட்சி அடையாளம் காணப்படாத 10 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மத்திய மாகாணத்தில் 8, வடக்கு மாகாணத்தில் 5 , கிழக்கு மாகாணத்தில் 7, வடமத்திய மாகாணத்தில் 2, வடமேல் மாகாணத்தில் 7, சப்பிரகமுவ மாகாணத்தில் 17, ஊவா மாகாணத்தில் 5, மேல் மாகாணத்தில் 3 என்றவாறு இவை பதிவாகியுள்ளன.

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் மொத்தம் 185 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வேட்பாளர்களின் 'கட் அவுட்'கள் குறித்தும் தபால் மூல வாக்களிப்பு தொடர்பிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவை தொடர்பிலான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார். _
மேலும் இங்கே தொடர்க...

கண்டியில் ஐ.ம.சு.மு. பிரசார வாகனம் விபத்து : ஒருவர் பலி; மூவர் படுகாயம்




ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவிலுள்ள ஹேந்தெனிய, கண்டி - குருநாகல் நெடுஞ்சாலையில் இவ்விபத்து நேற்று ஏற்பட்டது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்துடன் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்ட மேற்படி வாகனம் மோதியதில், சாரதி ஸ்தலத்தில் பலியானார். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பிரசன்ன வீரவர்தனவின் வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும்:கீதாஞ்சலி




வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது என வடக்கு மக்கள் முன்னணியின் தலைவியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளரும் வேட்பாளருமான என்.கீதாஞ்சலி தெரிவித்தார்.

விரகேசரி இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு,

நீங்கள் அரசியலுக்கு புதிதாக நுழைந்துள்ளவர் என்ற வகையில், உங்களது அரசியல் நோக்கு எவ்வாறு உள்ளது?
சுதந்திரத்துக்குப் பின் 30 வருடங்களாக அகிம்சை போராட்டம் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் என வன்னி மண் தொடர்ச்சியான அவலங்களையே சந்தித்தது.நான் கையிலெடுத்திருப்பது அபிவிருத்தி போராட்டம்.இதனை சுயநலன்களுக்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக நின்று வன்னி மண்ணை பொன் விளையும் பூமியாக மாற்ற வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை ஆளும் கட்சியுடன் இணைந்து நின்றே செயற்படுத்த வேண்டியுள்ளது.

இன்று வடக்கு கிழக்கில் என்றுமில்லாத வகையில் தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.இது தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதிக்குமா?
நிச்சயமாக இல்லை.எமது மக்கள் மிகவும் புத்திசாலிகள். எத்தனையோ சங்குகள் உருவாகினாலும் அவை எல்லாவற்றிலும் முத்து இருப்பதில்லையே.முத்துள்ள சங்கை நிச்சயம் இனம் காண்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

வடக்கு மக்களின் முன்னனி என்ற கட்சியின் உருவாக்கம் மற்றும் செயற்பாட்டு தன்மை தொடர்பாக கூறமுடியுமா?
நிச்சயமாக.எமது கட்சியின் சின்னம் திசைகாட்டி.சிதறி வாழ்கின்ற தமிழ் இனத்தை ஒரு குடையின் கீழ் சேர்த்தலே எனது இலக்கு.

நீங்கள் எவ்வகையான கொள்கைத் திட்டங்களை முன்வைத்து மக்களிடம் செல்கிறீர்கள்?
பசியால் அழுகின்ற பிள்ளைக்கு பாலூட்டுவதே தாயின் முதற் கடமை.இந்த தாயின் கடமையும் அதுவே.
இன்று அவசரமான மனிதாபிமான தேவைகளான மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தல், அவர்களது கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்தல், தடுத்து வைக்கப்பட்டுள்ள சகோதர சகோதரிகளின் விடுதலையினை துரிதப்படுத்தல்,மறுவாழ்வு, வேலை வாய்பினை பெற்றுக் கொடுத்தல், சகல பீடங்களும் கொண்ட வன்னிக்கான தனிப் பல்கலைக்கழகம், பாடசாலைக்கான அபிவிருத்தி, விதவைகளுக்கான விசேட செயற்திட்டம், காணாமல் போனோர்களின் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்தல், கைத்தொழில் பேட்டைகளின் உருவாக்கம் வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் போன்றவற்றை இம்மண்ணில் உடனடியாக செயற்படுத்துவேன்.

இன்று சர்வதேச ரீதியாக பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.இது எமது நாட்டுக்கும் பொருத்தமானதா?
ஆம். பெண்களது உரிமைகள் பாதுகாக்கபட வேண்டும். ஒரு பெண்ணுடைய பிரச்சினையை இன்னொரு பெண்ணாலேயே புரிந்து கொள்ள முடியும். இன்று பல துறைகளில் பெண் தலைமைத்துவம் காணப்பட்டாலும் அரசியலில் அவர்கள் ஈடுபடுவது குறைவாகவே உள்ளது.
ஆனாலும் எதிர்காலத்தில் இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.இதன் மூலமே பெண்களினுடைய நாடாளுமன்ற பிரதிநித்துவம் அதிகரிக்க முடியும்.இதற்கு முன்னுதாரணமாக நான் செயற்படுவேன்.

புனர் வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடினீர்களா?
ஆம். அவர்கள் அனைவரும் நன்னடத்தை அடிப்படையில் நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார்கள்.இதனை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவதற்காகவும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஊடனமுற்றோர் பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனது தனிப்பட்ட அடிப்படையில் இவர்கள் புனர் வாழ்வுக்குப் பின் கருணை மனு ஊடாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.

இறுதியாக மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
யுத்தத்தின் கோரத்தால் சின்னாபின்னமான வன்னி மண்ணை ஆளும் கட்சியுடனும் ,மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க்ளது பலமான கரங்களை பற்றியவாறு வசந்த பூமியாக மாற்றுவோம்.
20 பிள்ளைகளோடும் பாழடைந்த வீட்டோடும் பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் பொறுப்பேற்ற வவுனியா சர்வதேச பாடசாலை இன்று 1500 மாணவர்களோடும் பல மாடி கட்டிடங்களோடும் நிமிர்ந்து நிற்பதை நிஜமாக இன்று மக்கள் பார்க்கின்றார்கள்.
எனவே வன்னி மண்ணின் நம்பிக்கை மிக்க எதிர்காலத்திற்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள். அத்தோடு நான் ஒரு வியாபாரியோ, ஆயுததாரியோ அல்ல உங்களில் ஒருத்தி.போரின் கோரப்பிடியினால் எனது இரத்த உறவுகளை இழந்து எனது அன்பான கணவனை இழந்து நிர்கதியான நிலையிலும் உங்களுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.
மேலும் இங்கே தொடர்க...

மெக்ஸிக்கோவில் அமெ. தூதரகத்துடன் தொடர்புடைய மூவர் சுட்டுக் கொலை





மெக்ஸிக்கோவின் எல்லைப்புற நகரான சியுடாட் ஜூவாரெஸில் அமெரிக்க தூதரகத்துடன் தொடர்புடைய மூவர், போதைவஸ்து கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதரகப் பெண் ஊழியரும் அவரது கணவரும் பிறிதொரு மெக்ஸிக்கோ பெண் ஊழியரின் கணவருமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேற்படி படுகொலைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிக்கோவில் தலைவிரித்தாடும் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்முறைகளை நசுக்க அந்நாட்டு அரசாங்கத்திற்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் என வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்படி அமெரிக்கத் தூதரகத்துடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்துத் தான் நடத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெக்ஸிக்கோவின் எல்லைப் பகுதி நகர்களான திஜுவானா, நொகலெஸ், சியுடர்ட் ஜூவாரெஸ், நுயவோ லாரெடோ, மொன்டெறி மற்றும் மடமோரொஸ் ஆகிய நகர்களில் 6 அமெரிக்க பிரதிநிதி அலுவலகங்கள் இயங்குகின்றன.

மெக்ஸிக்கோவில் போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்முறைகளில் 2006ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 18,000 பேர் பலியானார்கள். மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்குப் போதைவஸ்து கடத்தல், விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரதான கேந்திர நகர்களில் ஒன்றான சியுடாட் ஜூவாரெஸ் விளங்குகிறது.

கடந்த வருடத்தில் மட்டும் அங்கு போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய வன்முறைகளில் 2600 பேருக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளையடுத்து சில அமெரிக்க பிரதிநிதி அலுவலகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் தமது குடும்ப அங்கத்தவர்களைப் பிரதேசத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் பெயர் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும் அமெரிக்க தம்பதியின் உறவினர் ஒருவர், 35 வயதான லெஸ்லி என்றிகுயஸ், அவரது கணவர் ஆர்தா ரெடெல்ப் (வயது 34) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களது ஒரு வயது குழந்தை இந்த துப்பாக்கிச் சூட்டில் எதுவித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளது.

மெக்ஸிக்கோ ஊழியரின் கணவர் பயணம் செய்த கார் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் பலியானதுடன் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மெக்ஸிக்கோவுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அமெரிக்க ராஜாங்க திணைக்களம், அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜி.எஸ்.பி. பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை





இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழு ஒன்று கடந்த வார இறுதியில் பிரஸல்ஸுக்குப் புறப்பட்டு அங்கு முக்கிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவது பற்றி மீள் பரிசீலனை செய்வதற்கான சாத்தியம் குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

"இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையின் முக்கியத்துவம் பற்றி நாம் உணர்ந்துள்ளோம். .இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் எமக்குக் கிடையாது" என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் பேர்ணார்ட் சவேஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில் சிவில் உரிமைகள், சிறுவர் உரிமைகள், தொழில் உரிமைகள் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக இலங்கையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சாசனங்களுக்கு முற்றாக உட்பட்டு நடப்பதில் மேலும் முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது என்று சவேஜ் தெரிவித்தார்.

வரிச்சலுகையை நீடிப்பது இந்த விடயங்களுடன் தொடர்புபட்டதே என்று தெரிவித்த சவேஜ் அதனை நீடிக்க வழி ஏற்படுத்தும் வகையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆறு மாதங்களுக்குள் வரிச்சலுகை நிறுத்தப்பட்டுவிடும் என்று கடந்த மாதம் ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்திருந்ததை அடுத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட இலங்கைத் தூதுக்குழு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தற்போது பிரஸல்ஸில் தங்கியுள்ளது.

திறைசேரி செயலாளர் பி.பி.ஜயசுந்தர, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஷ் ஜயசிங்க, நீதியமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் ஆகியோரையே அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு அனுப்பிவைத்துள்ளது. _
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி, முல்லைத்தீவு; தேங்காய் எண்ணெய் ஆலைகள்





கிளிநொச்சி, முல்லைத்தீவு, அளம்பில் மற்றும் பளை ஆகிய இடங்களில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இதற்காக 30 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அரச - தனியார் துறையினரின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல் உருப்பெறுவதாக அமைச்சர் டீ. எம். ஜயரத்ன தெரிவித்திருக்கிறார்.

தேசிய தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இது தொடர்பான திட்டத்தை மேற்கொள்ளும்.

10 பாரிய அளவிலான எண்ணெய் உற்பத்தி தொகுதிகள் அமைக்கப்படும். 20 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் நாளாந்தம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 30,000 குடும்பங்கள் நேரடியாகவும், மறை முகமாகவும் தொழில் வாய்ப்புக்களையும் பெறுவர்.
மேலும் இங்கே தொடர்க...