*காலை 7 முதல் மாலை 4 மணிவரை வாக்களிப்பு
* 196 பேரை தெரிவு செய்ய 7620 பேர் களத்தில்
*மோசடி, குழப்பம் நிரூபணமானால் வாக்கெடுப்பு இரத்து
*58,700 பொலிஸ், அதிரடிப்படையினர் கடமையில்
ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் நாளை மறுதினம் (08) நடைபெறவுள்ளது. வாக்களிப்பு காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை இடம்பெற உள்ளதோடு நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சகல வாக்காளர்களையும் கேட்டுள்ளார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 196 உறுப்பினர்களை நேரடியாக தெரிவு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
கடந்த பெப்ரவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவைகளின் சார்பாக 7620 பேர் போட்டியிடுகின்றனர். 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெறுவதால் இம்முறை ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாடு பூராவும் அமைக்கப்பட்டுள்ள 11,875 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வாக்குகளை எண்ணுவதற்காக 1,130 வாக்குகள் எண்ணும் நிலையங்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
இடம்பெயர்ந்தோர்
இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக 48 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவர்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 55 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் தினத்தன்று காலை 6 மணிக்கு காமினி மகா வித்தியாலயத்தில் இருந்து மேற்படி பஸ்கள் புறப்படும் என்று அறிவிக்க ப்படுகிறது. தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இம்முறை கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 50 ஆயிரம் பேர் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தேர்தல் கடமையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று (6) முதல் தமது வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது.
தபால் மூல வாக்களிப்புகள் கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நடைபெற்றன. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 4 இலட்சத்து 77,110 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 61,678 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால் 4 இலட்சத்து 15432 பேருக்கே தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தபால் மூல வாக்களிப்பு தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக மார்ச் 30, 31 ஆம் திகதிகளில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
கடும் பாதுகாப்பு
தேர்தலை முன்னிட்டு 58,700 பொலிஸாரும் மற்றும் அதிரடிப்படையினரும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 19,500 முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். இது தவிர நாடு முழுவதும் உள்ள 413 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சாவடிகள், வாக்குகள் எண்ணும் நிலையங்கள், வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லும் பஸ்கள் என்பவற்றுக்கு பாதுகாப்பு வழங்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளில் வீதித் தடைகள், இடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளதோடு ரோந்து நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன கூறினார். தீவிர கண்காணிப்புக்கென நியமிக்கப்பட்டுள்ள 2584 நடமாடும் பாதுகாப்புப் பிரிவுகளும் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களில் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அதனை முறியடிப்பதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் தேர்தலுக்கு மறுதினம் வரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடு பூராவும், சகல சட்டவிரோத கட்அவுட்கள், சுவரொட்டிகள் கொடிகள் என்பன அகற்றப்பட்டு வருவதாகவும் இதற்காக சிற்றூழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காமினி நவரத்ன தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் முடிவடைந்ததையடுத்து பிரதான கட்சிக் காரியாலயங்கள் தவிர்ந்த கட்சி காரியாலயங்கள் அகற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்பங்களோ முறைகேடுகளோ இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்கெடுப்பை நிறுத்துமாறு தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தேர்தல் தினத்தில் முறைகேடுகள் நடந்தால் அதனை கவனிப்பதற்காக சகல பிரதேசங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு இவை இன்று (7) முதல் இயங்கும் என்றும் தேர்தல் திணைக்களம் கூறியது.
இந்த பிரதேச கண்காணிப்புப் பிரிவுகளுக்கு ஒரு உதவித் தெரிவத்தாட்சி அதிகாரி இரு பொலிஸார் மற்றும் மூன்று தேர்தல் அதிகாரிகள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. சுதந்திரமாக தேர்தல்களை நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு சகல அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார்.
வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னர் வாக்குப் பெட்டிகளுக்குள் ஸ்ரிக்கர்கள் ஒட்டுவதற்கு கட்சி பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்படும் எனத் தேர்தல் திணைக்களம் கூறுகிறது. இம்முறை தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சில பகுதிகளுக்கு கூடுதலான வாக்குப் பெட்டிகள் அனுப்பப்பட உள்ளன. அத்தகைய வாக்குச் சாவடிகளில் கூடுதலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவும் உள்ளதாக ‘>சூ>ஞ் திணைக்களம் தெரிவித்தது.
திகாமடுல்ல மாவட்டத்தில் 18 கட்சிகளும் 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதால் மிக நீளமான வாக்குச் சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலை முன்னிட்டு 19 ஆயிரம் கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் முடிவு செய்துள்ளன. பெப்ரல் அமைப்பு 9 ஆயிரம் கண்காணிப்பாளர்களையும் கெபே அமைப்பு 6,500 கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த உள்ளன. இது தவிர நடமாடும் கண்காணிப்புக் குழுக்களையும் ஈடுபடுத்த அவை முடிவு செய்துள்ளன.
இதேவேளை முதலாவது பொதுத் தேர்தல் முடிவு நாளை (8) நள்ளிரவு 12 மணியளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9ஆம் திகதி சகல முடிவுகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பாராளுமன்றம் ஏப்ரல் 22 ஆம் திகதி கூடும்.
மேலும் இங்கே தொடர்க...