29 ஜனவரி, 2011

சிவாஜிலிங்கத்தை த.தே.கூ சேர்ப்பதற்கான பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை:த.தே.கூ
வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தமிழரசுக் கட்சியின் தனித்த முடிவே தவிர அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி எடுத்த முடிவு அல்ல என்று கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் ஈ.பி.ஆர்.எல். எவ். கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ பொதுச் செயலாளர் அ.செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை விடுத்துள்ளனர். அதன் முழு விபரத்தை இங்கு தருகிறோம்.

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் பொருளாளர் திரு.குலநாயகம் அவர்களுக்கும் திரு.சிவாஜிலிங்கம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கூட்டும், ஒப்பந்தமும் அவர்களுக்கிடையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கூட்டாகவே, தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு.மாவை சேனாதிராசா அவர்களால் கூறப்படுகின்றது.

திரு.சிவாஜிலிங்கம் அவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சு வார்த்தைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஓரிரு அமைப்புகள் உள்வாங்கப்பட்டதற்கு பெரும்பான்மையான த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இருந்த பொழுதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்கள் கேட்டதற்கிணங்க அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டுப் பின்னர் அதனைப் பற்றி முடிவெடுப்பதாயிருந்தது.

ஆனால், அந்த முடிவுக்கு முரணாக, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் அவர் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக திரு.மாவை சேனாதிராசா அவர்கள் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்.

திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் கிளிநொச்சியிலும், வன்னியின் ஏனைய மாவட்டங்களிலும் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத்னா அவர்களின் தலைமையிலான கட்சியில் வேட்பு மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார். அது மாத்திரமல்லாமல் யாழ்ப்பாணத்தில் தமிழத்; தேசிய கூட்டமைப்புக்கும் ஓர் பாடம் படிப்பிக்க இருப்பதாக இரு தினங்களுக்கு முன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையின் நகர சபைக்கு திரு.குலநாயகம் அவர்கள் 2 வருடமும் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் 2 வருடம் தலைவராக இருப்பது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியில் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மேலும், திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறை நகரசபைக்குத் தானே முதன்மை வேட்பாளர் என ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்பின் எந்த ஓர் பட்டியலிலும் யாரும் முதன்மை வேட்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், திரு.சிவாஜலிங்கம் அவர்கள் தன்னைத்தானே முதன்மை வேட்பாளராக அறிவித்தது தவறானது என்பதையும், யார் விருப்பு வாக்குகள் அதிகம் பெற்றுக் கொள்கின்றார்களோ அவர்களே பிரதேச, நகர சபைகளின் முதல்வர்களாகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும்; தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்படாததால் தமிழரசுக்கட்சி சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டியிருக்கின்றது. இதனைத் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்து பேசாமல் முடிவுகள் எடுப்பது தமிழ் மக்களின் உரிமைகளுக்கான காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வறிக்கை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புள் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைக் களைந்து, அதனை வலுவான ஒரு கட்சியாக மாற்றுவதற்கான ஓரு முயற்சியும் ஆகும். இதனைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தமிழ் மக்களை ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

நூற்றுக்கும் மேற்ப்பட்ட இலங்கையர்கள் சவூதியில் நிர்கதிசவூதி அரேபியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நிர்கதி நிலைகுள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலமொன்றின் கீழ் இவர்கள் சரியான உணவோ மற்றும் அடிப்படை வசதிகளோ இன்றி இருக்கின்றனர். தம்மை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும் படியும் சிலர் தமது உறவினர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பெரும்பாலான மக்கள் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்கின்றனர்: ஜே.வி.பி.


யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் வடபகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்துகொண்டிருப்பதாக ஜே.வி.பி., பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். வடபகுதி மக்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் வாழவில்லை எனவும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையில் நேற்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில், சுதந்திரமான வாழ்க்கையே 30 வருடகால யுத்தத்திற்கு பின்னரான வடபகுதி மக்களின் முதலாவது எதிர்பார்ப்பாக இருந்தது. தமது பொருளாதார பிரச்சினை மற்றும் ஏனைய சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதனைப் போன்று சுதந்திரமாக நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய நிலைமையை உருவாக்குவதே அவர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் இன்னமும் சிவில் நிர்வாகத்தின் கீழ் வடபகுதி மக்கள் வாழவில்லை. பெரும் அச்சத்துடனேயே வடக்கிலுள்ள பெரும் பாலான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போதும் பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இந்த தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகளில் குறிப்பாக ஜே.வி.பி.யில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையின்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்த சவால்களுக்கு மத்தியிலேயே வடபகுதியில் நாம் இந்த தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இந்த வகையில் வடபகுதி மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமும் வடக்கு, தெற்கு, கிழக்கு என்ற பேதமின்றி தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்ற செய்தியை வடக்கு, கிழக்கு மக்களுக்கு சொல்ல தயாராகவுள்ளோம். அதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் ஆயத்தமாகவுள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்து உரையாடியுள்ளார்.

கூட்டமைப்பு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி இச் சந்திப்பின்போது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

உயர் நீதிமன்றை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரை அது தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி விளக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஜே.ஆர்.ஜயவர்த்தன தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதாக கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் உறுதியளித்ததாக அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த உறுதியை மீறி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் தன்னை மீண்டும் பணிநிறுத்தம் செய்துள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொலிஸ்மக்ஷி அதிபர் நீதிமன்றிற்கு வழங்கிய வாக்குறுதியை மீறிச் செயற்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த உயர் நீதி மன்றம் இது குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தூதரகம் நோக்கி பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சென்னையில் இலங்கை தூதரகம் நோக்கி நேற்று பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அவர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்மை தொடர்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவும், தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கக் கோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை இலங்கை தூதரகம் நோக்கி பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உட்பட 100 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

2047 வேட்புமனுக்களில் 1597 ஏற்பு மன்னாரை தவிர 300 சபைகளில் 450 நிராகரிப்பு


மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள 301 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதுமாக 1597 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 1282 வேட்பு மனுக்களில் 1134 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த 765 வேட்பு மனுக்களில் 463 ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல்கள் தலைமையகம் தெரிவித்தது.

அரசியல் கட்சிகளின் 148 மனுக்களும் சுயேச்சைக் குழுக்களின் 302 வேட்பு மனுக்களுமாக 450 வேட்பு மனுக்கள் நிரா கரிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 301 உள்ளூ ராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டதுடன் அவற்றுள் 300 சபைகளி லும் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மன்னாரில் மாத்திரம் எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், கூடுதலானவை நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இங்கு 92 சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததுடன் அரசியல் கட்சிகள் 72 மனுக்களையும் தாக்கல் செய்தன. சுயேச்சைக் குழுக்களின் 43 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சிகளின் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆகக் குறைந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசியல் கட்சிகள் மாத்திரம் 15 மனுக்களைத் தாக்கல் செய்ததுடன் ஏழு நிராகரிக்கப்பட்டன.

எம்பிலிபிட்டி நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் யாழ்ப்பாணத்தில் 13 மனுக்களும் கிளிநொச்சியில் மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தவிரவும், நுவரெலியா, யட்டிநுவர, மொனறாகலை, சியம்பலாண்டுவ, ஹக்மீமன, பள்ளேவில, வில்கம, பொல்கஹவெல ஆகிய பிரதேச சபைகளினதும் லிந்துலை - தலவாக்கலை நகர சபைகளினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுக்களில் ஹோமாகம, வெலிகேபொல, வெலிக்கந்தை, பத்தேகம, ஹெலஹர பிரதேச சபைகளினதும் வரகாபொல நகர சபையினது வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மினுவாங்கொடை, உக்குவளை, மாவத்தகம, அத்தனகல்ல ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

சிறு சிறு தவறுகள் காரணமாகவே தமது கட்சியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அதனால், நீதிமன்றத்தை அணுகி தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ஐ.ம.சு.மு.வின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கும் போது ஏற்பட்டுள்ள சொல் வித்தியாசமாகும். எனவே, அது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

சிறு சிறு தவறுகளால் இந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையால், அடுத்த வாரம் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

காலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களுக்கு கனத்த மழை


இலங்கைக்கு அருகில் வீசும் காற்றின் சீரற்ற தன்மையால் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானி லையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இம்மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கனத்த மழை பெய்யும் என்னும் அவர் கூறினார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி ரன்டம்பே நீரேந்து பகுதியில் 100.5 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது வடகீழ் பருவபெயர்ச்சி மழைக்கால நிலையே நிலவுகின்றது. என்றாலும் வடகிழக்காக நாட்டுக்குள் வருகின்ற காற்றில் சீரற்ற தன்மை திடீரென ஏற்பட்டிருகின்றது. இதன் விளைவாக கிழக்கு, தெற்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் இடையிடையே கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம் பிற்பக லிலோ, மாலைவேளையிலோ சப்ர கமுவ, மேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும்

இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேவேளை கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்கள் சிறிதளவில் கொந்தளிப்பாகக் காணப்படும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பதுளை, ஹந்தகெட்டியவில் 93.3 மி. மீ. மகியங்கனையில் 77.9 மி. மீ., ரந்தெனிகலயில் 74.5 மி. மீ. என்ற படி மழை பெய்துள்ளது என்றார்.

பட்டிப்பளை நிருபர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடி முழக்கத்துடன் கூடிய மழை பெய்து வருகினறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற கடந்த 45 மணி நேரத்தில் 68.5 மில்லி மீற்றர்மழை பெய்துள்ளதாகவும் இவ்வருடம் 2011 ஜனவரி மாதம் கடந்த 27 நாட்களில் 1342.1 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதகாவும் மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.

தற்போதைய மழையின் காரணமாக வெள்ளம் வடிந்து சூரிய ஒளியில் நிமிர்ந்த மரங்கள், மீண்டும் நீர் ஊற்றுக் காரணமாக நிலத்தில் சாய்கின்றன. ஈரலிப்பான மண் வீடுகள் விழுவதுடன், நுளம்புப் பெருக்கமும் அதிகமாயுள்ளது. எஞ்சிய மேட்டில் இருந்த வேளாண்மை அறுவடை முற்றாகப் பாதிப்படைந்துள்ளன.

கிராமங்களினுள் பாம்புகள், முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளன. பல கால்நடைகள் இறந்து வரும் நிலையில் நோய்களும் அதிகரித்து வருகின்றது.

தொடர்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளதுடன் கடும் குளிரும் உணரப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் 219 பேர் மீட்பு 6 இலங்கையரும் இருப்பதாக மெக்ஸிகோ தகவல்
இலங்கையர்கள் அறுவர் உட்பட சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் 219 பேரை மெக்ஸிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ‘ட்ரக்’ வண்டியொன்றில் ரகசியமான முறையில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். 177 ஆண்கள், 33 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அடங்கலாக இந்த 219 பேரில், குவாத்தமாலாவைச் சேர்ந்த 169 பேரும், எல்சல்வடோரைச் சேர்ந்த 22 பேரும், ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவதுடன் ஆறு இலங்கையர்களும் இருந்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனைச் சாவடியொ ன்றில் ‘ட்ரக்’ வண்டியை நிறுத்துமாறு விடுத்த அறி வித்தலை மீறி சாரதி சென் றதால், அதனைத் துரத்திச் சென்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதன்போதே 219 பேர் மிகவும் மோசமான முறையில் ஈவிரக்கமின்றி கொண்டு செல்லப்பட் டமை தெரியவந்துள்ளது.

பின்னர் இவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை துறைமுகங்களுக்கு 500 கப்பல்களை வரவழைக்கும் திட்டம் கப்பல்களை திருத்துவதற்கும் விசேட பிரிவுகள்ஆசியாவின் கொள்கலன் கப்பல் போக்குவரத்து சேவையின் கேந்திர ஸ்தானமாக விளங்கி வரும் இலங்கையின் கப்பல் சேவைகளை வலுவூட்டும் எண்ணத்துடன் அரசாங்கம் மனித வளங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்பொழுது மேற்கொண்டு வருகிறது.

வணிக சட்டம் மற்றும் நடை முறையை அபிவிருத்தி செய்வதற்கான ஸ்தாபனம் (ஐஇகட) இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து கப்பல் போக்குவரத்து சட்டம் மற்றும் அதன் நடைமுறை பற்றிய பயிற்சி பாசறையை கடந்த 23 ஆம் திகதியன்று கொழும்பில் ஆரம்பித்து வைத்தது.

தெற்காசிய பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து துறையில் முன்னணி நாடாக இலங்கையை மாற்றுவதற்கு இத்தகைய பயிற்சிகள் பேருதவியாக அமையும். திருகோணமலை, ஒலுவில், அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு வளர்ச்சி அடைய செய்வதன் மூலம் மாதமொன்றுக்கு இலங்கை துறைமுகங்களில் தரித்து செல்லும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உலகிலுள்ள மிகப் பெரிய துறைமுகங்களான, ஜெர்மனியின் ஹெம்பர்க் துறைமுகம், ஹொங் கொங் துறைமுகம், சிங்கப்பூர் துறைமுகங்களை போன்று நவீன வசதிகளைக் கொண்ட பாரிய துறைமுகங்கள் போன்று கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறை முகங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் இப்பொழுது நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. இவ் விரு துறைமுகங்களில் பழுதடைந்த கப்பல்களை திருத்துவதற்காக விசேட பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

சென்னை மகாபோதி தாக்குதலுக்கு சர்வ மதத் தலைவர்கள் கண்டனம் பாதுகாப்பு வழங்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு நன்றி; பாராட்டு


சென்னை மகாபோதி விகாரை மீது நடத்தப்பட்ட தாக்குதலை பெளத்த, ஹிந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதலை கட்டுப்படுத்தவும் மத ஸ்தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்து அவர்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மகாபோதி விகாரை மீதான தாக்குதலை கண்டித்து தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மத அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளரும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் தலைவருமான வணபிதா சரத் ஹெட்டியாரச்சி கூறியதாவது:-

இந்தத் தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறு குழுவொன்றே இதனை செய்துள்ளது. இதன் பின்னணியில் பயங்கரவாத குழுக்கள் எதுவும் இல்லை. இந்தியாவுக்கு யாத்திரை செல்வதற்கு இலங்கை மக்கள் அஞ்சத் தேவையில்லை.

இந்திய அரசு உரிய பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்துள்ளது. மகாபோதி விகாரைக்கருகில் காவலரண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தம் முடிவடைந்து நாடு அமைதியாகவுள்ளது. இந்த நிலை தொடர வேண்டும். இவ்வாறான சதிகளை ஒழிக்க இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தம்மாஷ்மி மத்திய நிலையத் தலைவர் கலகம தர்ம ரஷ்மி தேரர் கூறியதாவது:-

இந்தத் தாக்குதலை இன, மத, பேதமின்றி கண்டிக்கிறோம். இதனால், இரு நாட்டுக்குமிடையிலான உறவில் பாதிப்பு ஏற்படவில்லை. இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச ஹிந்து மத அமைப்பின் செயலாளரும் ஜனாதிபதியின் மத விவகார இணைப்பாளருமான இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கூறியதாவது:-

இந்தத் தாக்குதலினால் பெளத்த மக்களின் மட்டுமன்றி முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களின் மனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாதிகள் யாரும் கிடையாது. இனி மேல் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாதிருக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

தெவட்டகஹ ஜுஆ பள்ளி பிரதம பேஷ் இமாமும், தேசிய ஐக்கியத்துக்கான சர்வ மத கூட்டமைப்பின் இணைத் தலைவருமான ஸெய்யித் ஹஷன் மெளலானா கூறியதாவது:-

30 வருட யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை நாட்டில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் மகா போதி மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனை கண்டிக்கிறோம்.

இதன் பின்னணியில் தீவிரவாதிகள் கிடையாது. இனங்களுக்கிடையில் நல்லுறவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை கண்டிக்கிறோம். இன உறவை குழப்ப எடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.

மேலும் பலரும் கருத்துக் கூறினர்.
மேலும் இங்கே தொடர்க...

சுவரொட்டிகள் ஒட்டுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்ய உத்தரவு


தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுபவர்களை கட்சி பேதமின்றி கைது செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு ஆரம்பிக்க முன்னரே பல வேட்பாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் அபேட்சகர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்க தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கூடுதலான தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சுவரொட்டிகள் ஒட்டுவது சட்ட விரோதமானது என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்தந்த பொலிஸ் நிலையங்களினூடாக சுவரொட்டி ஒட்டுவோரை கைது செய்ய உள்ளதாக கூறினார்.

போஸ்டர்கள் ஒட்டப்பட்ட உடன் அவற்றை அகற்ற பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரணில் கட்சித் தலைவராக இருப்பதே ஐ.தே.க ஆதரவாளர்களின் விருப்பம்


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்பதே அதிக மான கட்சி ஆதரவா ளர்களின் விருப்பமாகு மென, ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார்.

ரணில் விக்கிரம சிங்க கட்சிக்கு பாரிய வளமாகக் காணப் படுவதாகவும், அவர் தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டுமெனவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச செயற்குழுக் கூட்டத்திலே ஏற்றுக் கொண்டதாகவும் அத்தநாயக்க கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது ரணில் அணி, சஜித் அணி என இரண்டாகப் பிரிந்துள் ளதாகவும் அதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல் லையெனவும் அவர் மேலும் கூறினார்.

கட்சி ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலின் போது அனை வரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடு படுவதாகவும் அவர் கூறினார்.

கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பா ட்டிற்குத் தீர்வுகாண்பதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பதுளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் போட்டி


பதுளை மாவட்டத்தின் இரு நகர சபைகளினதும் 15 பிரதேச சபைகளினதும் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 346 தமிழர்களும் 98 முஸ்லிம்களும் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் ஒரு இலட்சத்து பதினாறாயிரம் தமிழ் வாக்காளர்களையும் 38 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களையும் மையப்படுத்தியே, மேற்கண்ட வேட் பாளர்கள், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளிலேயே, அதிகளவு தமிழ் வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிட மக்கள் விடுதலை முன்னணியும் கூடுதலான தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கட்சியும் கணி சமான தமிழ் வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பசறை, வெலிமடை, பண்டாரவளை பிரதேச சபைகளுக்கு கூடுதலான முஸ்லிம்களை களம் இறங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக் கட்சியும் கணிசமான முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறத்தியிருக்கின்றது. லுனுகலையில் முஸ்லிம்களைக் கொண்ட சுயேச்சைக் குழுவொன்றும், லுனகலை பிரதேச சபைக்கு போட்டியிடுகின்றது.

இரு அரசியல் கட்சிகளினதும் 12 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பது, பதுளை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அத்தோடு 36 சுயேச்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருப்பதும் இதுவே முதல் தடவையாகும்.

பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை பிரதேச சபைகளுக்கு போட்டியிடவே கூடுதலான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. லுனுகலை பிரதேச சபை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபையென்பதும், குறிப்பிடத்தக்கது.

நடைபெறப் போகும் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பசறை, லுனுகலை, அப்புத்தளை, ஹாலி- எலை, ஊவாபரணகம, அல்துமுள்ளை, எல்ல அகிய பிரதேசங்களிலேயே தமிழ் வாக்காளர்கள் ஆகக் கூடுதலாக இருந்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

எதிராக நீதிமன்றம் செல்கிறது ஈ.பி.டி.பி


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஈ.டி.பி.பி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈ.பி.டி.பி.யின் முக்கிய பிரமுகரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டிருந்தவருமான சட்டத்தரணி ரங்கன் தேவராஜன் தகவல் வெளியிடுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறிய தவறு காரணமாகவே எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின பெயர் ஆங்கிலத்தில் சரியாக எழுதப்பட்டிருந்த போதும் தமிழில் தவறாக எழுதப்பட்டுள்ளதாகக் காரணம் காட்டியே யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அந்த வேட்புமனுவை ஏற்க மறுத்துள்ளார்.
தேர்தல் சட்டத்தின் படி இதுபோன்ற காரணங்களைக் காட்டி உதவித் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுவை நிராகரிக்க முடியாது. விரைவில் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுக்களில் இதுபோன்ற சிறிய தவறுகள் காணப்பட்டன.
ஆனால் அந்த மனுக்கள் இன்னமும் நிராகரிக்கப்படவில்லை. நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆனால் எமது எதிர்ப்பை தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்து விட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வேட்புமனுவில் ‘ஐக்கிய‘ என்ற சொல் விடுபட்டிருந்தது.
அதை நாம் சுட்டிக் காட்டியிருந்தோம். அதுபோலவே நாமும் சிறியதொரு தவறைத் தான் செய்துள்ளோம். அவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை. எமது வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவும் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


யாழில் ஈபிடிபின் வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்தது கூட்டமைப்பு!
யாழ்.மாவட்டத் தேர்தல் தொகுதியில் யாழ்ப்பாணத்தில் 13 பிரதேசசபைகள் 3 நகரசபைக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 16 வேட்புப் பத்திரங்களின்படி 63 வேட்புப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 20 நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுயேட்சைக்குழு உள்ளிட்ட 20 வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களுக்கான 19வேட்புமனுத் தாக்கல்கள் உதவித் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 3 நகரசபை, மற்றும் 13 பிரதேச சபைகளுக்கும், கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தேர்தல்த் திணைக்களத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட போதும் வேட்புமனுவில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என விண்ணப்பிக்கப்பட்டமையினால் இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனைச் சுட்டிக்காட்டியதையடுத்து யாழ் மாவட்ட உதவித் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் வேட்புமனுக்களை நிராகரித்தார்.
இதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னத்தில் யாழ்மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபையிலும் ஐ.தே.க. யானை சின்னத்தில் 16 சபைகளிலும் போட்டியிடுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பருத்தித்துறை நகரசபை, காரைநகர் பிரதேசசபை, வலிகிழக்கு பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை உள்ளிட்ட 4 சபைகளில் மணிச்சின்னத்திலும் போட்டியிடுகின்றது.
ஐக்கிய சோசலிச கட்சி சாவகச்சேரி நகரசபையில் ஓட்டோ சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தவிர 6 சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...