8 ஏப்ரல், 2011

மகாவம்சத்தில் ஜனாதிபதிக்காக மூன்று அத்தியாயங்கள்

இலங்கை ஆட்சியாளர்களின் சரிதத்தைக் குறிப்பதாகக் கூறப்படும் மகாவம்சத்தின் புதிய வெளியீட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்படவுள்ளன என கலாசார விவகார அமைச்சு நேற்று அறிவித்துள்ளதாக பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது. கி.மு. 543 இல் விஜயன் இலங்கைக்கு வந்தது முதல் மகாசேனன் மன்னனின் ஆட்சிக்காலம் வரை மகாவம்சம் விபரிக்கிறது.

அதனுடன் இணைக்கப்பட்ட குலவம்சம் மற்றும் சூலவம்சம் ஆகியவை நான்காம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர்கள் 1815இல் இலங்கையை கைப்பற்றும் காலம் வரையிலான சரிதத்தை விபரிக்கிறது என்று இலங்கை கலாசார அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கூறியுள்ளார்.

அதனையடுத்து முன்னணி எழுத்தாளர்களால், அதனது 6ஆவது பாகத்தில் 1978, 2010 வரையிலான காலப்பகுதி குறித்து எழுதப்பட்டுவருவதாகவும், அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது காலப்பகுதிக்காக மூன்று அத்தியாயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

உலகக் கிண்ணத்தை வென்றிருந்தால் சங்கக்கார சிறை சென்றிருப்பார்: தயாசிறி



உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது ஒருவேளை சங்கக்காரவுக்கு நன்மையாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் வெற்றிக் கெப்டன்களை சிறையில் தள்ளுகின்ற இந்நாட்டில், சங்கக்கார வெற்றிக்கிண்ணத்துடன் வந்திருந்தால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார் என்று ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்று சபையில் தெரிவித்தார்.

இந்திய அணி தோல்வியடைய வேண்டுமென்று திருப்பதியில் பூஜை செய்வதை எமது நாட்டில் செய்திருந்தால் பலன் கிட்டியிருக்கும். எது எவ்வாறிருப்பினும் இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்கார சிறைக்கு செல்லாது தப்பிப்பிழைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தயாசிறி எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்லவேண்டும் என்றே நாம் அனைவரும் பிரார்த்தித்தோம். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.

இலங்கை அணி வெற்றி பெறவேண்டும் என்று திருப்பதியில் வேண்டி பூஜை செய்தது பலனளிக்கவில்லை. ஏனெனில் அந்தநாட்டு அணி தோற்கவேண்டும் என்று அந்த நாட்டு தெய்வத்திடம் வேண்டினால் அதற்கு அந்த தெய்வம் இடம்கொடுக்குமா? கொடுக்காது. எனவே எமது நாட்டில் பூஜை செய்து இந்திய அணி தோற்கவேண்டும் என்று வேண்டியிருந்தால் ஒருவேளை தெய்வம் கேட்டுக்கொண்டிருக்கும்.

தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரா, உபதலைவராக இருந்த மஹேல ஜயவர்தன ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அதேபோல் அரவிந்த டி சில்வாவும் தேர்வுக்குழுவில் இருந்து விலகியுள்ளார். இலங்கை அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது குமார் சங்கக்காரவுக்கு நன்மையாகவே முடிந்துள்ளது.

ஏனெனில் வெற்றிகளைக் குவிக்கின்ற தலைவர்கள் இந்நாட்டின் அரசியல் தன்மையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எத்தகைய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுவர்.

அந்த வகையில் குமார் சங்கக்கார கிண்ணத்துடன் வந்திருப்பாரேயானால் அவரும் இன்று சிறைக்குள் தான் இருந்திருப்பார். எனவே, குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி தோல்வியைத் தழுவிக் கொண்டதுடன் பதவியிலிருந்தும் விலகியமையானது அவரது சிறைவாசத்தை தடுத்திருக்கின்றது. இதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

சோனியாவின் கருத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது: யாப்பா

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து ஆராயும் என்பதுடன் உரிய பதிலை வழங்கும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

சர்வதேசமட்டத்தில் சில தரப்பினர் கூறுவது போன்று இலங்கையில் எந்தவிதமான மனித உரிமை மீறலும் இடம்பெறவில்லை. அதாவது சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் எந்த உரிமை மீறலும் இடம்பெறவில்லை. அத்துடன் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் கூற்றுக் குறித்தும் வெளிவிவகார அமைச்சு உரிய பதிலளிக்கும்.

எமது சட்டத்துக்கு உட்பட்டு நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்களுக்கு புதிய சுதந்திரத்தையும் சமாதானத்தையும் நிம்மதியையும் பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கல்நதுகொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தென்புலத்தாருக்காக குரல் கொடுத்தவர் அரசனானார் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த எம்மீது துரோகி பட்டம்





தென்புலத்து சிங்களவர்களுக்காக ஜெனீவா சென்ற தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று அரசனாக போற்றப்பட்டார். ஆனால் இன்று தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஜெனீவா செல்கின்ற எம்மை துரோகிகள் என்று அரசாங்கம் கூறுகின்றது.

தமிழர் பிரச்சினை என்பதால் தான் இந்த நிலைமையா என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று சபையில் கேள்வியெழுப்பியது.

இன்றைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டத்தின் பேரில் முழு நாடும் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. வெளிநாட்டுக் கொள்கை சரியாக அமையாததால் சர்வதேசத்தின் அழுத்தமும் அதிகரித்து வருகின்றது என்றும் அக்கட்சி விசனம் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பு எம்.பி.க்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படின் அது இராணுவத்தினரே

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் அது இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்டதாகவே இருக்கும் என்பதுடன் எமது உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு சபாநாயகரே உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சுரேஷ் எம்.பி. இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அவசரகாலச் சட்டத்தை மாதா மாதம் நீடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் கீழ் இருந்து கொண்டுதான் ஜனநாயகம் குறித்தும் தேர்தல்கள் தொடர்பிலும் பேசிக் கொண்டிருக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் எட்டப்படுகின்ற இன்றைய நிலையிலும் இயல்பு நிலை இன்னும் வழமைக்கு திரும்பாதிருக்கின்றது.

வடக்கு கிழக்கில் இன்றும் எத்தனையோ பாடசாலைகள், கல்லூரிகள் இராணுவத்தின் பிடியில் இருக்கின்றன. ஆனாலும் பாடசாலைகளை, கல்லூரிகளை கொடுத்துவிட்டதாகவும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. இது பிச்சை போடுவது போன்ற கதையாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சமூகமும் இணைந்து இங்கு மீண்டும் ஒரு யுத்தத்துக்கு வழி வகுத்து வருவதாக அல்லது முயற்சிப்பதாக யாழ். மாவட்டத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இடம்பெயர்ந்துள்ள எமது மக்கள் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகிறோம். மக்களுக்கு சொந்தமான இடங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கேட்கிறோம். மேலும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். இத்தகைய செயற்பாடுகள் இராணுவத்துக்கு எதிரானவையாக கூறப்படுகின்றது.

இவ்வாறு எப்படி கூற முடியும்?

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களின் பிரதிநிதிகளான எனது பெயரையும் மாவை சேனாதிராஜாவின் பெயரையும் குறிப்பிட்டு மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது எம்மீதான அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகிய எமது பாதுகாப்புக்கும் பேச்சு உரிமைக்கும் இந்த பாராளுமன்றமும் சபாநாயகரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

எமது உயிர்களுக்கு எந்தவிதத்திலாவது ஆபத்துக்கள் ஏற்பட்டால் அது இராணுவத்தினராலேயே ஏற்பட்டதாக அமைந்திருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்த பாராளுமன்றம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இன்று வடக்கில் இராணுவ ஆட்சிதான் இடம்பெற்று வருகின்றது. அங்கு இடம்பெறுகின்ற கலை, கலாசார நிகழ்வுகளுக்கு அரச நிகழ்வுகளுக்கு இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டமென்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. அழைப்புக்கள் விடுக்கப்படாதுவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்திருக்கின்றது.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

அதனடிப்படையிலேயே பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதால் இங்கு பிரச்சினைகளும் தீர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தற்போது முன்னரிலும் பார்க்க பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. எமது மக்கள் இம்சிக்கப்படுகின்றனர். எமது மக்களின் சுதந்திரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இராணுவ ஆட்சியின் கீழேயே தமிழ் மக்கள் ஆளப்படுகின்றனர். எனவே இந்த இராணுவ ஆட்சி முறைமை மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மாந்திரீகத்தில் உலகக் கோப்பையை கைப்பற்ற ஜனாதிபதி முயன்றமை வேடிக்கை


உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பின்னடைவை சந்திக்க அரசியல் தலையீடும், ஊழல் மோசடிகளுமே காரணம். எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்தார்.

இந்திய கடவுளிடம் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுவது நடக்க கூடியதொன்றா? திறமைக்கு மதிப்பளிக்காது மாந்திரீகத்தில் கோப்பையை கைப்பற்றிக் கொள்ள ஜனாதிபதி முயன்றமை வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மங்கள சமரவீர எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பின்னடைவை சந்தித்தது. இது அனைத்து வாழ் இலங்கையருக்கும் பாரிய கவலையான விடயமாகவே காணப்பட்டது. 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தபின்னர் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் திறமையான அணியாகவே காணப்பட்டது.

ஆனால் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு மேலோங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கிரிக்கெட் சபையில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாமல் ராஜபக்ஷ எம்.பி. நேரடியாகவே தலையிட்டு கிரிக்கெட் சபையை ஆட்டம் காண வைத்துள்ளார்.

அதே போன்று கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் போது பெரும் தொகையான நிதிகள் கைமாறுகின்றன. இதற்கு பேராசைப்பட்டு எமது வீரர்களின் திறமைகளை சீரழிக்கின்றனர். மேலும் வீரர்களின் திறமைகள் தொடர்பாக சிந்திக்காமல் மாந்திரீக சிந்தனையுடன் விளையாட வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

எனவே 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முகங்கொடுக்க வேண்டும் என்றால் பிழைகளை திருத்தியமைக்க வேண்டும். அரசியல் தலையீட்டை முழு அளவில் இல்லாதொழிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

மனித உரிமை குற்றச்சாட்டு: இலங்கை முற்றாக நிராகரிப்பு

மனிதாபிமான நடவடிக்கையின் போது எதுவிதமான மனித உரிமை மீறலுமே இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பதில் பேச்சாளரும் சுற்றாடல் அமைச் சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா நேற் றுத் தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக சில வெளிநாட்டுச் சக்தி கள் தெரிவித்திருப்பதையும் அமைச் சர் அநுர பிரியதர்ஷன யாப்பா முற் றாக நிராகரித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில்:- சில வெளிநாட்டினர் கூறுவது போல் இங்கு எதுவிதமான மனித உரிமை மீறலுமே இடம்பெறவில்லை. புலிகள்தான் மிக மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இருந்தும் அவர்களது மனித உரிமை மீறலுக்கு எதிராக எவரும் அன்று வாய்திறக்கவில்லை.

நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டி நாட்டில் அச்சம், பீதியி ன்றி வாழக்கூடிய சூழலை ஏற்படுத் தியுள்ளோம். நாட்டில் அமைதியான நிலைமை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் எவரும் சுதந்திரமாக நடமாடக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டு ள்ளது. பிளவுபட்டிருந்த நாட்டை நாம் ஐக்கியப்படுத்தியுள்ளோம்.

இலங்கை இறைமையும், தன்னா திக்கமும் உள்ள ஒரு நாடு. பயங்கர வாதம்எமக்கும், எமது மக்களுக்கும் பெரும் தலையிடியாகவே இருந்தது. அதனை ஒழித்தே நாம் நாட்டில் அமைதிச் சூழலை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

எமது நாட்டின் சட்ட திட்டங்களு க்கு ஏற்பவே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந் நடவடிக்கை சர்வதேச சட்டங் களை மீறும் வகையில் ஒருபோதும் இடம்பெறவில்லை.

அதனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

அப்படியான ஒன்று இங்கு இடம்பெறவில்லை. நாட்டில் புதிய சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்கின் றார்கள். இதன் மகிமையை எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தா ண்டின் போதும் தெளி வாக உணர் ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ. தே. க, ஜே. வி. பி., தமிழ்க் கூட்டமைப்பு எதிர்த்தும் 81 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்





அவசரகாலச் சட்டம் நேற்று பாராளுமன்ற த்தில் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. பிரேரணைக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

ஐ. தே. க., ஜே. வி. பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை பிரதமர் டி. எம். ஜயரட்ண சமர்ப்பித்துப் பேசினார்.

எதிர்க் கட்சியின் சார்பில் ஐ. தே. க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசினார். வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஐ. தே. கவும், ஜே. வி. பி. எம்.பிக்களும் எதிராக வாக்களித்தபோது 81 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேறியது.

அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியது இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஐ. தே. க. உறுப்பினர்கள் இருவரும் ஜே. வி. பி. உறுப்பினர்கள் இருவரும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுமே சபையில் இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பகவான் சாய் பாபாவின் உடல் நிலையில் முன்னேற்றம் டாக்டர்கள் தெரிவிப்பு




சத்ய சாய்பாபாவின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்மீக குரு சத்ய சாய்பாபாவின் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 28ம் திகதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு ஆஸ்பத்திரி குழுவினர் மற்றும் ஆந்திர அரசு சிறப்பு மருத்துவ குழுவினர் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை குறித்து நேற்று மாலை 6 மணியளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது, சத்ய சாய் பாபாவின் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

இரத்த அழுத்தம், சுவாசம் போன்றவை திருப்திகரமாக உள்ளது.

முன்பை விட தற்போது எளிதாக அவர் சுவாசிக்கிறார். அவருக்கு நினைவு திரும்பி வருகிறது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரச ஊழியர்கள் தமிழ், சிங்கள மொழிகளில் சேவையாற்ற தயாராக வேண்டும் - ஜனாதிபதி




மக்களின் வரிப்பணத்தில் சம்பளம், சலுகை பெறும் ஊழியர்கள் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாத

நம்பிவரும் மக்களின் கண்ணீரை துடைக்க அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்



வடக்கு கிழக்கு என்றில்லாமல் ஒரே நாடு என்ற ரீதியில் தமிழிலும் சிங்களத்திலும் மக்களுக்கான சேவைகளை வழங்க அரசாங்க ஊழியர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

தம்மை நம்பி வரும் மக்களின் கண்ணீரைத்துடைப்பதில் அரச ஊழியர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் அவர்களுக்கு சம்பளவுயர்வு, வீட்டுக்கடன் உட்பட பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டு மக்களின் நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்கள் மக்களுக்கு சுமையாக அல்லாது சேவையாளர்களாக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 2333 பேருக்கான நியமனக்கடிதம் வழங்கும் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக்கடிதங்களை கையளித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, நவீன் திசாநாயக்க உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:- அரசாங்க ஊழியர்கள் என்பவர்கள் சிறப்பான தொழிலை செய்பவர்கள்.

சமூகத்தில் அவர்களுக்கு சிறந்த இடம் உள்ளது. அதேபோன்று முன்பு எழுதுவினைஞர்களாக இத்துறையில் இணைபவர்கள் சிவில் சேவையில் உயர் அதிகாரிகளாகவே ஓய்வு பெற்றுச் செல்கின்றனர். இந்த வகையில் அநாகரிக தர்மபால, டி. பி. இலங்கரத்ன போன்றோர் குறிப்பிடக் கூடியவர்கள்.

தற்போது அரச சேவையில் 13 இலட்சம் பேர் சேவையாற்றுகின்றனர். அரச நியமனங்களை ரத்துச் செய்திருந்த யுகமொன்று இந்த நாட்டில் இருந்தது. தற்போது அரச துறை முன்னேற்றம் கண்டுள்ளதுடன் அத்துறையிலுள்ளோர் இரு மொழித் தேர்ச்சி, கணனி அறிவுடனும் திகழ்கின்றமையைக் குறிப்பிட வேண்டும்.

அரசாங்க ஊழியர்கள் இந்த நாட்டு மக்களின் பணத்திலேயே கல்வி கற்கின்றனர் என்பதை மறக்கக் கூடாது. அதனைக் கருத்திற்கொண்டு சேவைக்காக வரும் மக்களை அன்புடன் அணுகி அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தம்மிடம் சேவைகளைப் பெற வருவோரை தமது தாய், தகப்பன் உறவினர் என்று கருதி அவர்களின் தேவைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நாட்டின் சில பகுதிகளில் அரச ஊழியர்கள் சுதந்திமாக பணியாற்ற முடியாத காலம் ஒன்று இருந்தது. தற்போது நாட்டில் எங்கும் எவரும் சுதந்திரமாக பணிசெய்ய முடியும்.

எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை அதேபோன்று கஷ்டப்பிரதேசம் என்ற பெயரையும் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கை யைக் கட்டியெழுப்புவதில் அரச ஊழியர் களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவர்கள் நாட்டுக்காக தமது எட்டு மணித்தியால பணியை முறையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...