23 ஜூன், 2011

அரசு - த. தே. கூ . இன்று பேச்சு

அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்ப டையில் பேச்சுக்களைத் தொடர்வ தாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை யென்றும் இன்றைய பேச்சுவார்த்தை அதற் கான களத்தை உருவாக்குமென்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்று காண்பதற்காகப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவொன்றை அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயலாகுமென்பதே கூட்டமைப்பின் தற்போதைய கருத்தாகுமென்று தெரிவித்த அவர் அது பற்றி இன்னமும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லையென்றும் அறிவிக்கும் போது அதுபற்றிச் சிந்திக்கலாமென்றும் கூறினார்.அதே நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று ஒரு போதும் கூறவில்லை என்று வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தீர்வொன்றை எட்ட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். இதனையே சம்பந்தன் எம்.பி. தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சூரிய சக்தி இன்று விமானங்களையும் இயங்கச் செய்கிறது

சூரிய சக்தி மூலம் இயங்கும் முதலாவது சர்வதேச விமானம் தனது பயணத்தை மே 13 ஆம் திகதி ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த விமானம் தனது பயணத்தை சுவிற்சர்லாந்தின் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மேலாக 12,400 அடி உயரத்தில் 12 மணி 59 நிமிடங்கள் பறந்து பெல்ஜியத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

200 அடி நீளமான இந்த விமானத்தில் 12,000 சூரிய கலங்கள் பொருத்தப்பட்டு விமானத்துக்கு தேவையான சக்தி வழங்கப்பட்டது. இதில் பொருத்தப்பட்டுள்ள சூரிய கலங்களில் சேமிக்கப்படும் சக்தியைக் கொண்டு இந்த விமானம் 26 மணித்தியாலங்கள் பறக்கும் வல்லமை கொண்டது.

இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 50றிசீ/கீ இதனது வேகத்தை அதிகரிக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விமானம் சுவிற்சர்லாந்தின் தயாரிப்பு என்பதுடன் இதற்காக 88 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

சூரிய சக்தியின் மூலம் இயக்கப்படும் இவ்விமானம் சுற்றாடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. அத்துடன் இன்னும் பல நூற்றாண்டுகளில் எண்ணெய் கிணறுகள் வற்றிவிடும் அபாயம் தோன்றுவதனால் எதிர்காலத்தில் சூரிய சக்தியின் மூலமான விமானத்தின் தேவை தற்போது உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறதெனலாம். அதற்கான ஒரு முன்மாதிரியே இந்த சூரிய சக்தி விமானமாகுமென சுவிற்சர்லாந்தின் தயாரிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய உறவில் தமிழக அரசு தலையிட முடியாது

இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் தமிழக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணும் என குறிப்பிட்ட அமைச்சர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல மைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்ற போது தாம் இலங்கை அரசின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மா நாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத் துடனேயே முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் நாட்டுக்கு க்கிடையாது. தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடன் இலங்கை சம்பந்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் துறைக்கு நிகரானதாக இ. போ. சபை தரமுயர்த்தப்படும்


இலங்கை போக்குவரத்து சபை தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையை விட, தரமான சேவையை வழங்கும் நிறுவனமாகவும் தனியார் போக்குவரத்துடன் போட்டியிடக்கூடிய வகையில் எதிர்காலத்தில் புதிய நடைமுறைகள் வகுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் கடந்த கால ஆட்சியில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்தும் இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களை பாதுகாத்தல், பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்தல் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பான, அதனுடன் தொடர்புடைய நிர்வாகத்தினருக்கும் ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். இந்தச் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்னாயக்க, பிரதி அமைச்சர் ரோஹண குமார திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக் கட்டத்தில் தமிழர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர் தமிழர்கள் புலிகளால் பணயம் வைப்பு

அமைதியை ஏற்படுத்தியதற்கு தமிழ் மக்கள் பாராட்டு

‘கார்டியன்’ கட்டுரைக்கு இலண்டனில்
வசிக்கும் இலங்கைத் தமிழர் பதிலடி

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ தமிழ் மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாகவும் பிரிட்டனில் வாழும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட எஸ். வாசுதேவன் என்பவர் அங்கிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கார்டியன் பத்திரிகை இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவம் யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி அண்மையில் விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக எஸ். வாசுதேவன் என்பவர் அந்த பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

‘உங்களது பத்திரிகையில் கடந்த 13.06.2011ஆம் திகதியில் பிரசுரித்திருந்த கட்டுரைக்கு அதிருப்தி அடைந்தே நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அந்த கட்டுரையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் நான் இலங்கைக்கு நான்கு முறை சென்றுள்ளேன். அதன்போது யுத்தத்துக்கு முகம் கொடுத்த பலருடன் கலந்துரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர்களின் கருத்துக்கு முற்றும் முரணான செய்தியே உங்களது பத்திரிகையிலிருந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

நான் சந்தித்த மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தப்பி வந்தவர்களாவர். அவர்களை இலங்கை இராணுவம் தியாகத்துடன் இன்னும் பாராமரித்து வருகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது தியாகத்தால் 6,000 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதில் எல்.ரி.ரி.ஈ யினால் தமிழ் மக்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.

மேற்படி கட்டுரையில் கூறப்பட்டிருந்த 40 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்தனர் என்ற தகவல் தவறானது என்பதை குறிப்பிடுகின்றேன். இது பிரிட்டன் தமிழ் போரம் அழைப்பினால் வெளியிடப் பட்டது. இது குறித்து நீங்கள் உண்மையான விசாரணை செய்வதாக இருந்தால் 2009ம் ஆண்டு காயமடைந்தோர் பற்றிய தகவலை பெற்றிருக்க வேண்டும்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது யுத்த சூன்ய பிரதேசத்திற்குள் எல்.ரி.ரி.ஈ தனது கனரக ஆயுதங்களுடன் போரிட்டது. இந்த பகுதிக்குள் அவர்கள் தமது கனரக ஆயுதங்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது மருத்துவமனை வளாகத்திற் குள்ளும் ஆயுதங்களை கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையால் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களையே யூடியூப் இணையத்தளத்தில் உங்களால் காண முடிகிறது. இதனை தமிழர்களும் உறுதிப்படுத்துவார்கள். எல்.ரி.ரி.ஈ அப்பாவி தமிழ் மக்களை கொன்றது மட்டுமல்லாது அவர்களது உடைமைகளையும் கொள்ளையிட்டனர்.

எல்.ரி.ரி.ஈக்கு சமாதான வழியில் அரசியல் தீர்வை பெற பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் புறக்கணித்தனர். இதனால் எல்.ரி.ரி.ஈயை முடிவுக்கு கொண்டு வருவதை விட இலங்கை அரசுக்கு வேறு வழி இல்லாமல் போனது. ஆம், எல்.ரி.ரி.ஈக்கு எதிராக இலங்கை அரசு கடுமையான யுத்தத்தை முன்னெடுத்தது. ஆனால் அவர்கள் இப்போது இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். இலங்கை அரசு யுத்தத்தின் போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இதன் மூலம் நல்ல தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை தமிழ் மக்கள் ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கையில் அமைதியாக வாழ்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனவே, பழைய கசப்பான சம்பவங்களை கிளரி அமைதியை குலைக்க வேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த கடிதத்தில் எஸ்.வாசுதேவன் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...