26 ஏப்ரல், 2011

தனியார்துறை, அரச கூட்டுத்தாபனங்கள் ஓய்வ+தியத் திட்டத்தை அமுல்படுத்த மூன்று நிதியங்கள் உருவாக்கம் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதியுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் மஹிந்த சிந்தனையின் எண்ணக்கருவில் தெரிவிக்கப்பட்டிருந்த அனைவருக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.

தனியார்துறை மற்றும் அரசாங்ககூட்டுத் தாபன ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்படும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்காக மூன்று நிதியங்கள் அமைக்கப்படவுள்ளன.

தனியார் துறை ஊழியர்களுக்கு நன்மையடையக்கூடிய வகையில் ஓய்வூதியத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவ தென்ற அரசாங்கத்தின் யோசனை குறித்து நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களை சந்தித்த போதே இவ்வாக்குறுதியை அளித்தார்.

இந்த சந்திப்பின் போது தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களையும், யோசனைகளையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை உள்ளடக்கக்கூடிய வகையில் அரசாங்கம் விரைவில் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து மென்று கூறினார்.

நிதி அமைச்சு, தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகள் இந்த ஓய்வூதிய திட்டம் குறித்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட வேண்டுமென்றும், இந்த சந்திப்பிற்கான திகதியை கூடிய சீக்கிரத்தில் நிர்ணயித்த பின்னர் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் முன்வைத்து பேசலாம் என்று ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தனியார் துறையினரையும் உள்ளடக்கும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத் துவதென்று அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த ஓய்வூதியத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தாங்கள் பூரண ஆதரவை நல்குவோம் என்று ஜனாதிபதிக்கு உறுதி மொழி அளித்தனர்.

வலுவான நிலைத்திருக்கக்கூடிய தனி யார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்வதே தனது நோக்கமென்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்தத் திட்டம் இடை நடுவில் கைவிடப்படாதென்றும் உறுதியளித்தார்.

தனியார்துறையினருக்கும் ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பேன் என்று மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் அளிக்கப்பட்ட இன்னுமொரு வாக்குறுதியை ஜனாதிபதி அவர்கள் இதன்மூலம் நிறைவேற்ற உள்ளார். இந்த ஓய்வூதியத் திட்டத்தினால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை யர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுபவர் களும் நன்மையடைய முடியும்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் தனியார் ஊழியர்களுக்கான இந்த ஓய்வூதியம் பற்றிய கருத்துகள் மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டர். இந்த ஓய்வூதியத்திட்டம் உழைக்கும் வர்க்கத்தின் வலுவை அதிகரித்து அவர் களுக்கு நல்வாழ்வைப் பெற்றுக் கொடுக்கு மென்றும் கூறினார்.

எனவே, எங்கள் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினர் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தங்களின் பூரண ஆதரவையும், ஒத்துழைப் பையும் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

2020ம் ஆண்டளவில் எங்கள் நாட்டில் 60 வயதைக் கடந்த வயோதிபர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரிக்கும் என்றும், அன்றைய காலகட்டத்தில் வயோதிபர்களுக்கு இத்தகைய ஓய்வூதியத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையு மென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமது அரசாங்கம் சமீபகாலமாக தனியார் துறையை வலுப்படுத்துவதற்கு பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அவர்களுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர இந்த உத்தேச ஓய்வூதிய திட்டம் பற்றிய விபரங்களையும், ->யி!ஞ் ஏற்படக்கூடிய நன்மைகளையும், எங்கிருந்து இந்த நிதி பெறப்படும் என்பது பற்றியும் விளக்கிக் கூறினார்.

சுமார் 150 தொழிற்சங்கப் பிரதிதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அமைச்சர்களான காமினி லொக்குகே, கலாநிதி சரத் அமுனுகம, டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன, விமல் வீரவங்ச, பசில் ராஜபக்ஷ மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சகல சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அரசுக்கு இருக்கிறது பான் கீ மூனின் அறிக்கையையும் தோல்வியடையச் செய்வோம்
புலிப் பயங்கரவா தத்தை ஒழித்ததைப் போன்றே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிக்கையையும் தோல்வியடையச் செய்வதற்காக அரசாங்கம் பலமிக்க முறையில் முகம் கொடுப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.

இல்லாதொழித்த பயங்கரவாதத்திற்கு உயிர் கொடுக்க ஒரு சிலர் முயச்சித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அமைதியான சூழலிற்கு இட்டுச் சென்ற தைப் போன்றே அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுத்து அவற்றினை வெற்றிகொள் வதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு இருப்பதாக அமைச்சர் மேலும் வலி யுறுத்தினார்.

மஹிந்த ராஜபக்ஷ யுகமானது, பொரு ளாதாரம், அரசியல் ரீதியாக வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலகின் பலமிக்க நாடொன்றாக நாட்டு மக்களை கட்டி யெழுப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்து வதற்கு முயற்சிப்பதானது இறந்த பயங்கர வாதிகளின் கனவுகளை நனவாக்குவதாகு மென அமைச்சர் மேலும் கூறினார்.

எமக்கு இன்று சிறந்ததொரு நாட்டுத் தலைவர் உள்ளார். நாம் எமது எதிர்கால சந்ததியினருக்காகவே இந்த அனைத்து அபிவிருத்தி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அமைச்சர் விளக்கிக் கூறினார்.

450 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கோமரன்கடவல வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் மைத்திரிபால மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இராணுவத்தின் உயிரை தியாகம் செய்து பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையே இன்று அனைவரும் அனுபவித்து வருகின்றனர். எனக் கூறிய அவர், தாம் கொழும்புக்குச் செல்வது மீண்டும் வீடு திரும்பும் நோக்கில் அல்லவெனவும் அன்று அந்தளவு பயங்கரவாதம் தலைவிரித்தாடியதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும் இன்று அந்நிலை முழுமையாக மாறியுள்ளதாகவும், அனைவரும் மனநிம்மதியுடன் வாழ்க்கை நடத்துவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுநீரக நோய்க்கான மருந்து தட்டுப்பாடின்றி விநியோகம்

சிறுநீரக நோயாளர்களுக்கு இரண்டு மாதங்களாகத் தட்டுப்பாடாகக் காணப் பட்டுவரும் மருந்தினை இன்று முதல் (26) தட்டுப்பாடின்றி வைத்திய சாலைகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுநீரக நோயாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் அத்தியாவசிய மருந்து வகைகளில் ஒன்றான விஞிணீங்ச்ஙூஙீச்ஙுடுடூலீ எனும் மருந்தின் சுமார் மூன்று இலட்சம் மாத்திரைகள் நேற்று (25) மருந்து இறக்குமதி செய்யும் கம்பனிகளால் பெற்றுக் கொடுத்ததை அடுத்து இது வரையில் நிலவிவந்த தட்டுப் பாட்டிற்கு தீர்வுகாண முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறுநீரக சிகிச்சைகளை மேற்கொண்டுவரும் வைத்தியசாலைகளுக்கு தேவையான அளவு மருந்தினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு நேற்று (25) உத்தரவிட்டதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த மருந்தினை விநியோகிப்பதற்கான கேள்வியினைப் பெற்றிருந்த சிட்டி ஹெல்த் மற்றும் பாமா அசோசியேட்டட் எனும் இந்திய கம்பனிகள் உரிய நேரத்திற்கு மருந்தினை வழங்காமையால் இந்நிலை உருவானதாகவும், சிட்டி ஹெல்த் நிறுவனம் 250,000 மாத்திரைகளையும், பாமா நிறுவனம் 50,000 மாத்திரைகளையும் நேற்று (25) பெற்றுத் தந்ததாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பகவானின் சரீரத்தை தரிசிக்க பெங்களூருக்கு விசேட விமான சேவை
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா வின் ஸ்தூல சரீரத்தை தரிசிக்கச் செல்ல விரும்பும் பக்தர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானங்களை சேவையில் ஈடுபடுத்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

ட்டுநாயக்காவுக்கும் பெங்களூருக்கும் இடையில் ஏப்ரல் 26 ஆம் திகதியிலிருந்து மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமையவும், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்கவுமே பெங்களூருக்கு மேலதிக விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட விருப்பதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் விசேட விமானங்களை வாட கைக்கு அமர்த்தி பெங்களூர் செல்ல விரும்பினால் அதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலதிக விமானங்கள், தனிப்பட்ட விமானங்களை வாடகைக்கு அமர்த்துவது மற்றும் விமான டிக்கட்டுக்கள் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்வ தாயின் 0197335500 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ள முடியுமென்றும் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பகவானின் ஸ்தூல சரீரம் நாளை சமாதியில் வைப்பு இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஸ்தூல சரீரம் நாளை சமாதியில் வைக்கப்படவுள்ளது. பகவானை தரிசிப்பதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்த்தியைச் சென்றடைந்தவண்ண முள்ளனர். அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் பகவானின் ஸ்தூல சரீரத்தைத் தரிசித்து வருவதுடன், இலட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம், வெகுதூரத்திற்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புட்டபர்த்தி பிரஷாந்தி நிலையத்தின் குல்வந்த் மண்டபத்தில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் பகவானின் ஸ்தூல சரீரம் நாளை அந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் வைக்கப்படவுள்ளது. ஆந்திர மாநிலத்தில் நான்கு நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதுடன், பக்தர்கள் பலர் தரிசனம் செய்வதற்கு முண்டியடித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மனைவியுடன் சென்று கண்ணீர் மல்க பகவானைத் தரிசித் திருந்தார்.

இதனைவிடப் பல முக்கிய பிரமுகர்கள் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை தரிசித்திருப்பதுடன். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் எனப் பலர் புட்டபர்த்திக்குச் செல்வதால் புட்டபர்த்தியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புட்டபர்த்திக்கு வரும் பக்தர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் ஆந்திர மாநில அரச அதிகாரிகளும், சத்ய சாயி அறக்கட் டளை நிர்வாகிகளும் ஏற்படுத்திக் கொடுத் துள்ளனர்.

இது மாத்திரமன்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பகவானின் பக்தர்கள் பலர் புட்டபர்த்தியை நோக்கிப் புறப் பட்டுள்ளனர். பகவான் சத்ய சாயி பாபா மகா சமாதியடைந்த செய்தியைக் கேட்டு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியா வின் கோதாவரி மாவட்டம், பிரகாசம் மாவட்டம், புட்டபர்த்தி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய பகுதிகளில் நான்கு சாயி பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

த.தே. கூட்டமைப்பை அரசாங்கம் 3ஆவது தடவையாகவும் ஏமாற்றிவிட்டது: சுரேஷ்

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மூன்றாவது தடவையாகவும் சூட்சுமமாக ஏமாற்றி விட்டது என்று அக்கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருந்த அரசாங்கம், இறுதி நேரத்தில் அந்த உறுதிமொழியை அப்பட்டமாக மீறியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்வதையும் தவிர்த்துக் கொண்டமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெற்றேக்ஷிர் மற்றும் உறவினர்களையும் மிகுந்த ஏமாற்றத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் விபரங்களை அறிந்த கொள்வதற்கென நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை வவுனியாவிலுள்ள தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்வதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது பின்னர் ரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பில் கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் இதுவரையில் அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. இது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் அளித்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்ததுடன் கைது செய்யப்பட்டுள்ளவர்களது விபரங்களை வெளியிடுமாறும் வலியுறுத்தி வந்திருந்தது. இதனையடுத்து அவர்களது விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் எமது தரப்பிலிருந்து உறுப்பினர்களை வவுனியா தடுப்பு முகாம்களுக்கு (25) நேற்று திங்கட்கிழமை அழைத்துச் செல்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

எனினும் அங்கு எம்மை அழைத்துச் செல்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாத காரணத்தினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்கத் தரப்பினருடன் பலதரப்பட்ட வகையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை. அதன் பின்னர் இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தெரிந்து கொள்வதற்கென தகவல்களை அனுப்பப்பட்டன. அதற்கும் பதில் கிடைக்கவில்லை.

எந்த வகையிலும் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. இவ்வாறு பதிலளிக்காது சூட்சுமமாக இந்த விஜயத்தை அரசு தரப்பு ரத்துச் செய்திருக்கின்றது. தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றக்ஷிவது தடவையாகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. இது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உகந்ததாக அமையவில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகால சட்டவிதிகளை எதிர்காலத்தில் முற்றாக நீக்கும் சாத்தியம்

அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டில் அவசரகால சட்டவிதிகளை முழுமையாக அகற்றும் தீர்மானத்துக்கு செல்லும் சாத்தியங்கள் உள்ளன. இதேவேளை எதிர்காலத்தில் அவசரகால சட்டவிதிகளில் அதிகமானவற்றை தளர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். பல்வேறு காரணிகளை ஆராய்ந்துவிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

அவசரகால சட்டவிதிகளை எதிர்காலத்தில் தளர்த்துவது குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில் :

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அரசாங்கம் அவசரகால சட்ட விதிகளின் கணிசமான ஒழுங்குகளை நீக்கியது. ஒரு சில காரணங்களுக்காக அவசரகால சட்டத்தின் சில விதிகளை மட்டும் அரசாங்கம் பேணிவருகின்றது.

இந்நிலையில் விரைவில் அவசரால சட்டத்தின் எஞ்சியுள்ள விதிகளில் அதிகமானவற்றை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. அதாவது விரைவில் சில ஒழுங்கு விதிகள் அகற்றப்படலாம்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பல்வேறு விடயங்களை ஆராய்ந்துவிட்டு அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளை முழுமையாக அகற்றவும் சாத்தியம் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றோம். இந்நிலையில் மக்களுக்கு எந்தளவு வசதிகளை வழங்க முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்வோம் என்றார்.

இதேவேளை அவசரகால விதிகள் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரட்ண கூறியுள்ளதாவது

அவசரகால விதிகளை அரசாங்கம் விரைவில் தளர்த்தவுள்ளது. நீதித்துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தியதன் பின்னர் இது குறித்து ஆராயப்படும்.

அதாவது பொது மக்களின் சாதாரண வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விதிகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொது மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் விதிகளை நாம் ஏற்கனவே தளர்த்தியுள்ளோம். மேலும் பல விதிகளை விரைவில் நீக்கிவிடுவோம். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான விதிகள் மட்டும் நீடித்திருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழப்பு

ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்தினால் நாடளாவிய ரீதியில் 16 பேர் பலியாகியுள்ள தாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி ஆனந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இம்மாதத்திலேயே மின்னல் தாக்கத்தினால் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரையில் ஒன்பது பேர் மின்னல் தாக்கத்தினால் பலியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடி மற்றும் மின்னலுடன் கூடிய கடும் மழைவேளைகளில் பொதுமக்கள் கூடுமானவரை வெளியில் இருப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அத்தோடு அவ்வாறான சந்தர்ப்பங்களில் தொலைபேசி பாவனையினை மேற்கொள்ளாமல் இருப்பதுவும் சிறந்ததாகும்.

அத்தோடு இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டிலும் அவதானமாக இருக்க வேண்டும். கூடுமான வரை மின்சாதனப் பொருட்களை மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பது பாதுகாப்பானது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...