20 அக்டோபர், 2010

வடக்கில் றப்பர் உற்பத்தி : அமைச்சர் மஹிந்த சமரசிங்க நடவடிக்கை

பிரித்தானியர் காலத்து மலையக றப்பர் உற்பத்தி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் வெப்ப வலயங்களுக்கும் விருத்தி செய்யப்படவுள்ளது.

வடக்கில் றப்பர் உற்பத்தியை ஊக்குவிக்க பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

முன்னர் மலைநாட்டுப் பகுதியில் மட்டும் என வரையறுக்கப்பட்டடிருந்த றப்பர் மரக்கன்றுகளை வவுனியா, முல்லைத்தீவு போன்ற இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதற்குத் தேவையான வழிகாட்டல்களை றப்பர் ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் தமிழக இளைஞர் கொலை : 4 மாதங்களின் பின் உடல் ஒப்படைப்பு


இலங்கையில் கொலை செய்யப்பட்ட தமிழக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழமானாங்கரையை சேர்ந்த செல்வராஜ் என்பவரது உடல் நான்கு மாதங்களுக்கு பின், அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமையல்துறையில் கல்வி கற்ற செல்வராஜ் (24) இலங்கைக்கு வீட்டு வேலைக்காகச் சென்றார்.

அங்குள்ள ஒரு ஹோட்டலில் வேலை என்றதும் மறுப்பு தெரிவித்த இவர், வேறு வழியின்றி அங்கு பணியாற்றினார். எனினும் ஹோட்டல் முகாமையாளர் தொடர்ந்து தொந்தரவு கொடுக்கவே, மீண்டும் தன்னை இந்தியா அனுப்பி விடுமாறு செல்வராஜ் கோரினார்.

ஆத்திரமடைந்த ஹோட்டல் முகாமையாளர், தனது மனைவி மற்றும் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ஒருவரின் உதவியுடன், செல்வராஜைக் கொலை செய்து, கடலில் வீசினார்.

தகவலறிந்த பொலிசார் குற்றவாளிகளைக் கைது செய்தனர். இத்தகவல், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் செல்வராஜின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

செல்வராஜின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, திருச்சியில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

செல்வராஜின் தந்தை தென்னரசு இது குறித்துத் தெரிவிக்கையில்,

"குடும்பம் வறுமையில் வாடியபோதும், கடன் வாங்கி மகனை படிக்க வைத்தேன். குடும்ப கஷ்டம் தீரும் என்ற கனவில் இருந்த எங்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.

மகன் உடலைக் கொண்டு வரக்கோரியும், இலங்கை அரசிடமிருந்து இழப்பீட்டு தொகை வாங்கி தருமாறும், கடந்த ஆகஸ்டில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்டு கொண்டோம்.

ஆனால் எவ்வித பலனுமில்லை. இந்திய தூதரக அதிகாரியின் தனிப்பட்ட முயற்சியாலேயே மகன் உடல் கிடைத்தது. நிவாரண நிதி கேட்டு அரசு அலுவலகம் முன் சாகும் வரை போராட்டம் நடத்த உள்ளோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி திருத்தச் சட்டம்; சிறுபான்மையோருக்கு உரிமை தேவை :

உள்ளூராட்சி மன்ற திருத்தச்சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையில் உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"உள்ளூராட்சி திருத்தச்சட்ட மூலத்தில் சிறுபான்மை மக்கள் நலன் தொடர்பாக குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். அடிமட்ட மக்களின் பணிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாகவே நிறைவேற்றப்படுகின்றன.

அந்த வகையில் சகல இனமக்களும் நன்மை பெறும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவேண்டும்.

இந்நிலையில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நடைமுறையில் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களே அதிகமாகவுள்ளன.

குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்மொழி அமுலாக்கம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலைமை உள்ளூராட்சி திருத்தச்சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக்கூடாது" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வாகனங்களின் வரிக்குறைப்பால் செப்டம்பர் மாதம் வரை 10,601 மில். ரூபா வருமானம்

வாகனங்களுக்கான வரி குறைக்க ப்பட்டதால் வாகன இறக்குமதி அதிகரித்துள்ளதோடு கடந்த செப்டம்பர் வரை 10,601 மில். ரூபா வருமானம் கிடைத்ததாக பிரதி நிதி அமைச்சர் சந்தரசிரி கஜதீர கூறினார்.

வாய்மூல விடைக்காக தயாசிரி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் மேலும் கூறிய தாவது,

2010 ஜூன் மாதம் முதல் வாகன இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டது. கடந்த வருடங் களில் குறைவாகவே வகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

ஆனால் வரிக்குறைப்பை அடுத்து வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொசீடன் லீடர் கப்பலின் மூலம் 280 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த வருடத்தில் அரசாங்க செலவினமாக 1,08,096 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டு சட்டமூலப் பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு






அரசாங்கத்தின் அடுத்தாண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலப் பிரேரணை பிரதமர் டி. எம். ஜயரத்னவினால் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.

அரசாங்க செலவுகளுக்காக அடுத்தவருடம் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 96 கோடி 77 இலட்சத்து 66 ஆயிரம் (10,80,967,766,000) ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்நிதியொதுக்கீட்டு சட்டமூலப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இப்பிரேரணையில் அடுத்த வருடம் நாட்டுக்கு உள்ளேயோ, வெளியிலோ 99700 கோடி ரூபாவுக்கு மேற்படாதவகையில் கடன் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இப்பிரேரணையின்படி அடுத்தாண்டுக் கான நிதியொதுக்கீட்டு சட்ட மூலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரதமர் டி. எம். ஜயரட்ன 2011ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்ட முலப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். இப்பிரேரணையின்படி பாதுகாப்பு அமைச்சுக்கு 21521 கோடி 96 இலட்சத்து 40 ஆயிரம் (215,219,640, 000) ரூபாவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 7524 கோடியே 65 இலட்சத்து 85 ஆயிரம் (75,246,585,000) ரூபாவும், சுகாதார அமைச்சுக்கு 6225 கோடியே 94 இலட்சத்துக்கு 6 ஆயிரம் (62,259,406,000) ரூபாவும், கல்வி அமைச்சுக்கு 307 கோடியே 60 இலட்சத்து 90 ஆயிரம் (30,726,090,000) ரூபாவும், பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு நூறு கோடியே 5 இலட்சத்து 50 ஆயிரம் (1,000,550,000) ரூபாவும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு 12082 கோடி 44 இலட்சத்து 10 ஆயிரம் (120,824,410,000) ரூபாவும், கால்நடை வளர்ப்பு, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுக்கு 222 கோடி 22 இலட்சத்து 12 ஆயிரம் (2,222,212,000) ரூபாவும், மீள்குடியேற்ற அமைச்சுக்கு 174 கோடியே 86 இலட்சத்து 5 ஆயிரம் (1,748,605,000) ரூபாவும், கைத்தொழில், வாணிப அபிவிருத்தி அமைச்சுக்கு 146 கோடி 36 இலட்சத்து 85 ஆயிரம் (1,463,685,000) ரூபாவும், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு 414 கோடி 93 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும் (4,149,330,000) விவசாய அமைச்சுக்கு 290 கோடி 27 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாவும் (29,027,890,000), தகவல், ஊடகத்துறை அமைச்சுக்கு 195 கோடி 44 இலட்சத்து 97 ஆயிரம் (1,954,497,000) ரூபாவும் ஜனாதிபதி அலுவலகத்தி (4,335,230,000) ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட மூலம்; மத்திய மாகாண சபையில், ஏகமனதான இணக்கம்



உள்ளூராட்சி நிறுவனங்கள் சட்ட மூலம் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்ட மூலங்களுக்கு மத்திய மாகாண சபை நேற்று ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளேகல மாகாண சபை மண்டபத்தில் சபைத் தலைவர் சாலிய திசாநயாக்க தலைமையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்துக்கு மத்திய மாகாண சபையின் இணக்கத்தைப் பெறுவதற்காக பாராளுமன்றத்திலிருந்து முதலமைச்சருக்கு சட்ட மூலப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அவசரமாக இச்சபையில் அதனை சமர்ப்பிப்பது பற்றி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்த போதும் இறுதியில் விவாதத்துக்கு எடுக்கப்பட்டு ஒரு மணியளவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பின்னர் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை. விவசாயிகள் 150 பேருக்கு இரு சக்கர உழவு இயந்திரம்



முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நலன்கருதி 150 இரு சக்கர உழவு இயந்திரங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தின் விவசாயத் துறையை மேம்படு த்தும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்கள் இந்த விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட வுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கரடியனாறு பகுதியில் வெடிமருந்து, மிதிவெடிகள் மீட்பு



மட்டக்களப்பு மாவட்டத்தில் நரகமுல்லை பிரதேசத்திலிருந்து ஒன்பது கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்து மற்றும் பெருந்தொகையான பல்வேறு வகை துப்பாக்கி ரவைகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கரடியனாறு பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய பாரிய தேடுதலின் போதே இவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இரு ஆண்டுகளில் ரூ. 5457.15 மில். செலவு வட மாகாண பிரதம செயலாளர்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப் படும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 5457.15 மில்லியன் ரூபா செலவில் 3263 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்த 3,43,466 மக்கள் தொகையில் 2010 ஒக்டோபர் வரை 3,20,156 பேரை மீளக் குடியமர்த்தியுள்ளதுடன், எஞ்சியுள்ள 23,310 பேரை மீள் குடியமர்த்துவதற்கான துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் சிவசாமி தெரிவித்தார். வடமாகாண அபிவிருத்தி செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று வவுனியா இராணுவத் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண அபிவிருத்தி மீளாய்வு அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே மாகாண பிரதம செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது :-

ல்வேறு சவால்களுக்கு மத்தியில் வட மாகாணத்தில் துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம், விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மின் விநியோகத் திட்டங்கள் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கம், உள்ளூராட்சி சபைகள், உலக வங்கி ஆகிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணி என்பவற்றினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறை ப்படுத்தப்பட்டு வருவதுடன், பெரும் பாலான திட்டங்கள் நிறைவு செய் யப்பட்டும் உள்ளன.

குறிப்பாக யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களில் பெருமளவிலானோர் மீள்குடியேற்றப்பட்டு, அவர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்வித் துறையில் மேற்கொள்ளப் பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் 2010ம் ஆண்டில் 97 பாடசாலைகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கென 458.21 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மேலும் 243 பாடசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 226 மில்லியன் ரூபா செலவில் பாடசாலை உபகரணங்கள், சீருடைகள், கணனி இயந்திரங்கள் ஆகியன பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் உட்பட ஏனைய செயற்திட்டங்களுக்காக 260 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் பாதிக் கப்பட்டுள்ள பாடசாலைகளை புனர மைத்தல், கணனி கற்கை நிலையங்களை ஆரம்பித்தல் மற்றும் மன்னார், வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில் ஆங்கில மொழிப் பயிற்சி நிலையங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதாரத் துறை அபிவிருத்தித் திட்டங்களில் புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், கட்டடங்களைத் திருத்துதல், வைத்திய உபகரணங்கள், மருத்துவப் பிரிவுகள், வாகனங்கள் மற்றும் விடுதிகள் புனரமைப்பு போன்ற திட்டங்களுக்காக 1132 மில்லியன் ரூபா கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

அத்துடன் 2010 – 2012 வரையிலான அபிவிருத்தித் திட்டங்களில் மீள் குடியேற்றப் பகுதியிலுள்ள வைத்திய சாலைகளை நிர்மாணித்தல், புனரமைத்தல் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளுக்கான மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள், பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கென 1691 மில்லியன் ரூபாவும் செலவி டப்படவுள்ளது.

உள்ளூராட்சி சபை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 437 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதற்கென 293.55 மில்லியன் ரூபா செல விடப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2009, 2010 ஆம் ஆண்டுகளில் 1838 மில் லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 9399 கிலோ மீற்றர் உள்ளூராட்சிச் சபை வீதிகள், நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நீர் விநியோகத் திட்டங்களுக்கென 16,400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், மாகாண மின் விநியோகத் திட்டத்திற்கென 120.56 மில்லியன் ரூபாவை செல விட்டுள் ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வரவேற்புரையை வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி நிகழ்த்தினார். வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கள் தமது மாவட்டங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள், எதிர் காலத் திட்டங்கள் தொடர்பான அறிக் கைகளை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

99 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேறியது

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை 99 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் தரப்பினர் வாக்களித்தனர்.

வாக்கெடுப்பு வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம். பிக்கள் எவரும் சபையில் இருக்கவில்லை.

அதேநேரம் வாக்கெடுப்பு வேளையில் ஐ. தே. கவின் முன்னணி தலைவர்கள் உட்பட பல எம். பிக்கள் சபையில் இருக்கவில்லை.

இப்பிரேரணைக்கு எதிராக தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தேசிய கூட்டமைப்பு எம். பிக்களும், ஐ. தே. கவின் எம். பிக்கள் மூவரும் வாக்களித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிதறிக் கிடக்கும் புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுகளில் முயற்சி ‘எல். ரி. ரி. ஈ. தலைதூக்குவது தடுக்கப்படும்’ - அவசரகால நீடிப்பு பிரேரணை மீது பி



தலைமைத்துவமின்றி சிதறிக் கிடக்கும் புலிகளின் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு உறுப்பினர்களை பலப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சி செய்யப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறுந்தகவல் (எஸ். எம். எஸ்) ஊடாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார்.

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-30 வருட கால யுத்தம் முடிவடைந் துள்ள நிலையில் நாட்டில் அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும்.

மனிதாபிமான நடவடிக்கை மூலம் புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. மக்களின் உள்ளங்களை மாற்றவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும் மற்றொரு மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியுள்ளது. மீண்டுமொரு யுத்தம் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை 4485 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஈழ நாடொன்றை அமைக்க உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் மீண்டும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளு க்குச் சென்று மீண்டும் இலங்கைக்கு வரும் புலிகளையும் யுத்த காலத்தில் தென்பகுதியில் மறைந்திருந்து மீண்டும் வடக்கிற்கு வரும் நபர்கள் குறித்தும் விசாரணை செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமைத்துவமின்றி மறைந்து இருக்கும் புலனாய்வு மற்றும் ஆயுதப் பிரிவு புலி உறுப்பினர்களை பலப்படுத்த வெளிநாடுக ளில் உள்ள புலிகளின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எஸ். எம். எஸ். குறுந்தகவலினூடாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புலிகளுக்கு சார்பாக வெப் தளங்களினூடாகவும் சிதறியுள்ள புலிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்யப்படுகிறது-

நோர்வேயில் உள்ள நெடியவனும் அமெரிக்காவில் உள்ள வி. ருத்ரகுமாரனும் புலிகளை பலப்படுத்த வெளிநாட்டில் இருந்து முயற்சி செய்கின்றனர். இது தவிர கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளின் இரு தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட் கப்பட்டன. சர்வதேச மட்டத்தில் புலிகள் தலைதூக்குவதை தடுக்கவும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

வடபகுதி மக்களுக்கு முழுமையான அரசபணி வடமாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை


வெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பது சகலரினதும் தலையாய கடமையெனவும் அதனைக் காட்டிக் கொடுக்க இடமளிக்கக் கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்றுத் தெரிவித்தார்.

நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 20 வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்ட மக்களுக்கு மன நிறைவான சேவையை வழங்க வேண்டுமெனவும் சேவை வழங்குவதில் இன, மத பேதங்கள், பாரபட்சங்கள் இருக்கக் கூடாதெனவும் வலியுறுத்திக் கூறினார்.

தம்மிடம்வரும் மக்கள் மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்லும் வகையில் அதிகாரிகள் செயற்படுவது அவசியமெனவும் கருணையுடனும் அன்புடனும் அவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கொண்டு மக்களுக்கான எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடக்கில் சில அதிகாரிகள் தம்மிடம் வரும் மக்களிடம் இன, குல பாகுபாடு காட்டி பாரபட்சமான வகையில் செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய பேதம், பாரபட்சத்துக்கும் இடமின்றி சிநேகபூர்வமான சேவையை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

வட மாகாண அபிவிருத்திச் செயற்பாட்டு மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன், குமார வெல்கம உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்கள், மாவட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

வட மாகாண மக்களுக்கான சகல குறைபாடுகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.

இது விடயத்தில் அதிகாரிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் தமது மக்களுக்கு சேவை செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் மக்களுக்கான சேவையை செய்வதற்காக கடமைப்பட்டுள்ழர்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

வடக்கில் பாதை, பாடசாலை அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என சகல அடிப்படை வசதிகளையும் துரிதமாகப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அதற்கான பணிப்புரைகளையும் வழங்கினார்.

தாமதத்தினை தவிர்த்து சேவைகளை திருப்திகரமானதாக வழங்க சகலரும் அர்ப்பணிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...