18 ஜனவரி, 2011

பாக். இராணுவ தளபதி நாளை இலங்கை வருகை






மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி நாளை (19) இலங்கை வரவுள்ளார்.

விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க - கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் விரவேற்கவுள்ளார்.

மூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் முக்கியஸ்தர்கள், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு அங்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வட, கிழக்கில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு அனுமதிக்கமாட்டோம்: ஜனாதிபதி



வடக்கில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது அதனை சிலர் குழப்ப முயற்சிக்கின்றனர். சர்வதேசத்துக்கு வேறு கதையை கூற முற்படுகின்றனர். பாதாள உலகம் என்பது வட பகுதியிலோ தென் பகுதியிலோ எங்கிருந்தாலும் விடமாட்டோம். அவ்வாறான மாபியாவை எங்கும் இயங்க விடமாட்டோம். மாபியாக்களினால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அப்பாவி மக்களை பாதுகாப்போம். இந்த அழகிய தேசத்தை ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த நாட்டில் யாரும் பிரிந்து தனியாகவோ விலகியோ வாழ முடியாது. நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். சிங்களம் தமிழ் முஸ்லிம் பறங்கியர் என யாராக இருந்தாலும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகளேயாவர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த நிகழ்வில் அதிகளவில் மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த நாட்டை அபிவிருத்திசெய்கின்ற அதேவேளை எமது கலை கலாசரங்களையும் நாம் பேணி பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். கலை கலாசக்ஷிரங்களை பேணி பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நாம் சிறந்த இனமாக தேசியமாக வளர முடியும். மிளிர முடியும்.

மேற்கு நாடுகளின் கலாசாரத்தில் எமது இளம் சந்ததியினர் சிக்கி எமது நாட்டின் கலாசாரத்தை மறந்துபோயிருந்தனர். எனவே நாட்டை அபிவிருத்தி செய்கின்ற அதேவேளை எமது கலாசாரத்தை பாதுகாக்க நாடு என்ற ரீதியிலும் இனம் என்ற வகையிலும் நாம் தயாராகவேண்டும். இந்த நாட்டில் நாம் 30 வருடங்கள் பின்னோக்கி சென்ற வரலாறு இருந்தது. தற்போது அந்தப் பயணத்துக்கான முடிவைக் கண்டு முன்னோக்கி செல்கின்றோம். அபிவிருத்தி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்




அதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த இறுவட்டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பாளர்கள் பற்றிய தகவல்களே அவ்விறுவட்டுக்களில் அடங்கியுள்ளதாகவும், அவற்றில் 40 பேர் அரசியல் பிரமுகர்கள் எனவும் எல்மாரே தெரிவித்துள்ளார்.

இத்தகவல்களானது உறுதிப்படுத்தப்பட்ட பின் இணையத்தில் வெளியாகும் என அசாஞ்சே தெரிவுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவமானது உலகளாவிய ரீதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நாமல் ராஜபக்ஷ- லிபிய ஜனாதிபதி சந்திப்பு




லிபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லிபிய நாட்டின் ஜனாதிபதி கேர்ணல் முஹமர் அல் கடாபியை நேற்று சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடாளுமன்ற உறுப்பினர்களான சஜின் டி வாஸ் குணவர்தன மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் இச் சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் உதவி





வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க தீர்மாணித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் தொண்டு நிறுவனங்களான அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியன கிழக்கு மக்களிற்கான உதவிப் பணியில் தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளன.

இந்த உதவித் திட்டங்கள் சம்பந்தமாக அந்நிறுவனங்களின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான ஊடக அறிக்கையிலையே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

போரினாலும் சுனாமியாலும் பெரும் அழிவுகளை சந்தித்த இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் இப்போது வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களால் உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், இலங்கையில் செயற்படும் தர்ம ஸ்தாபனங்களின் ஊடாக, 16 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வீட்டு வாசலில் நின்ற பெண் மீது துப்பாக்கிச் சூடு: மானிப்பாயில் சம்பவம்



மானிப்பாய் பகுதியில் வீட்டு வாசலில் நின்ற பெண் மீது இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

31 வயதுடைய ஸ்ரீ.நினோசா என்ற பெண் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பெண் இரு கால்களிலும் சுடப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள் கனடா நோக்கி பயணம்



சட்டவிரோதமாகக் குடியேறவிரும்பும் இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரு கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா நாடொன்றிலிருந்து கனடா நோக்கி பயணிக்கவுள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

ஆசிய நாடுகளிலுள்ள இனங்காணப்படாத துறைமுகங்கள் இரண்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்திவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புலி ஆதரவாளர்கள் உட்பட 400 இலங்கை தமிழர்கள் இந்தக் கப்பலில் பயணிக்க தயாராகுவதாகவும் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இரு வேறுபட்ட தரப்பினரால் இந்த ஆட்கடத்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவர்கள் இதற்கு பயன்படுத்தவென இரண்டு கப்பல்களை தேடிவருகின்றனர். இவ்விரு கப்பல்களும் 200 தொடக்கம் 300 வரையான பயணிகளை சுமந்து செல்லக்கூடியதாகயிருக்கும். இந்த கப்பல்கள் பெயரிடப்படாத அல்லது இனங்காணப்படாத தென்னாசியா துறைமுகங்களிலிருந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய கரைநோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது கப்பலேறும் இடங்களை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் அகதிகளுள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கியிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. காலநிலை சீரடைந்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இவ்விரு கப்பல்களும் தத்தமது இலக்குகள் நோக்கி பயணிக்கலாமென புலனாய்வு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறிருந்த போதும் தமக்கு இரு கப்பல்கள் புறப்படவுள்ளமை தொடர்பாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. ஒருவேளை இவற்றைவிட அதிகமான கப்பல்களும் பயணிக்க வாய்ப்புள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்தக்கப்பல்களின் வருகையை தடுக்க முற்பட்டால் அதில் பயணிக்கும் அகதிகளின் உயிருக்கு ஆபத்து நேரலாம். அது தொடர்பில் கடத்தல்காரர்கள் கவலைப்படப்போவதில்லையென்பதால் மிக கவனமாக செயற்பட வேண்டியுள்ளது என கனடா தெரிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவில் தாய்லாந்துக்குவந்த இலங்கைத் தமிழர்கள் உல்லாசப் பயணிகளைப் போல அங்கு தங்கியிருப்பதாகவும் உண்மையில் அவர்கள் அடுத்துவரும் கப்பலில் கனடா செல்லக் காத்திருக்கின்றனர் என்றும் குளோப் அன்ட் மெயில் செய்திச் சேவை அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இதுபோன்றதொரு தகவல் புலனாய்வுப் பிரிவுக்கும் முன்பு கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் இடம்பெற்ற ஐஃபாவில் கலந்து கொள்ளாமைக்கு ஏற்பாட்டுக் குழுவே காரணம்: அமிதாப்

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட அக்கடமி (ஐஃபா) நிகழ்வில் தான் கலந்துகொள்ளாமைக்கு ஏற்பாட்டுக் குழுவினரே காரணமென பொலிவூட் நடிகர் அமி தாப் பச்சன் தெரிவித்துள்ளதாக இணையத்தளமொன்றினை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்ற ஐஃபா நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்ற தேவை ஏற்பாட்டுக்கு குழுவினருக்கு இருக்கவில்லை. அதனாலே தான் இலங்கைக்குச் செல்லவில்லை என அமிதாப் தெரிவித்துள்ளார். அதாவது, அவரது சேவைகள் மேலும் தேவையில்லை என ஏற்பாட்டுக்குழு அமிதாப்புக்குத் தெரிவித்திருந்தது.

அதேநேரம், இவ்வருடம் ரொறன்ரோவில் நடைபெறவுள்ள ஐஃபா விழாவுக்கு நான் வரமாட்டேன். ஏனென்றால், எனது சேவை தேவையற்றுப் போயுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதுதான் இலங்கை விடயத்திலும் நடந்தது என டிவிட்டர் சமூக இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி இந்தியாவில் நெடும் பயணம்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றவேண்டும் என்று இருகோரிக்கைகளை முன்வைத்து ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஸ்ரீ பெரும் பதூரில் அமைந்துள்ள அமரர் ராஜிவ் காந்தியின் நினைவு மண்டபத்திலிருந்து 2,500 கிலோமீற்றர் நெடும் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மங்களராஜா தலைமையில் இந்த பயணம் ஆரம்பித்துள்ளதாக ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியஇலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால்நடையாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். இந்திய நாடு உலகுக்குப் போதித்த அஹிம்சை வழியில் எங்களை வருத்தி நிரந்தரத் தீர்வுக்காக மேற்கொள்ளும் இந்த விடுதலைக்கான நெடும் பயணத்துக்கு ஆறுபேர் கொண்ட குழு தலைமை ஏற்று வழிநடத்துகிறது.

மங்களராஜா தலைமையில் தயாபரன், ஞானராஜா, வசீகரன், அகதா, கிறேசியன் ஆகியோர் இதில் பங்குகொள்கின்றனர்.

இந்தியாவின் எட்டு மாநிலங்களின் ஊடாக மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் 2500 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.

இந்த நெடும் பயணத்தில் கலந்துகொள்பவர்களது உடல் தகுதிகள் ஞாயிறு அன்றுமருத்துவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்பவர்களில் தமிழகம் ஒரிசா மாநிலங்களில் அகதிமுகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களும் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசித்துவரும் ஈழத் தமிழர்களும் அடங்குவர். இந்த நெடுந்தூர நடைப் பயணத்துக்கு தலைமையேற்றிருக்கும் குழுவின் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறுபேர் கொண்ட தலைமைக்குழு தினமும் கூடிக் கதைப்பார்கள். அங்கத்தினர் நோய்வாய்ப்பட்டால் அவர்களைக் கவனிப்பது மருத்துவ உதவிகள் வழங்குவது போன்றவற்றுக்கு மருத்துவக்குழு ஒன்று பயணம் செய்கிறது.

சமைப்பது பரிமாறுவது குடிநீர் வழங்குவது சிற்றுண்டி தேநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதன் பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்து முடிப்பார்கள். ஒவ்வொரு மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டும்போது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நாங்கள் தகவல் கொடுக்கவேண்டும்.

தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் நடைப்பயணம் ஆந்திரா, மகாராஷ்டிரா மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ராஜஸ்தான், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்ளின் ஊடாக நடைபயணம் மேற்கொள்ளவேண்டும்.

டில்லியைச் சென்றடைந்ததும் எங்களுடைய கோரிக்கைகளை இந்திய ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ் தலைவர் பி.ஜே.பி.தலைவர் இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கையளிக்கவுள்ளோம்.

எங்களது இனம் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுவது மட்டும் அல்லாமல் அவற்றுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும். எங்கள் இன மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...