2 நவம்பர், 2010

ஹொண்டாரஸ் நாட்டில் சிறிய ரக விமானம் திருட்டு!

ஹொண்டாரஸ் நாட்டின் ' லா மெஸா' சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று விடியற்காலை 3.00 மணியளவில் சிறியரக விமானமொன்று திருடப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய 5 பேரைக்கொண்ட குழுவொன்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.

திருடப்பட்ட இவ்விமானமானது ஹொண்டாரஸ் அதிகாரிகளால் கடந்தவருடம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகும்.

இதனை அரச நிறுவனமொன்றுக்கு கையளிக்க அந்நாட்டு அரசாங்கம் உத்தேசித்திருந்தது.

விமானத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஹொண்டாரஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஒஸ்கார் அல்வாரெஸ், இது நன்கு திட்டமிடப்பட்டதும் கைதேர்ந்ததுமான ஒரு திருட்டுச் சம்பவம் என வர்ணித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பூட்டான் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

பூட்டான் நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஐவரைக் கொண்ட குழு நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இலங்கை நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரிலேயே மேற்படி குழு இலங்கை வரவுள்ளது.

பூட்டான் தேசிய கவுன்சிலின் தலைவர் நம்கி பென்ஜோவை தலைமையாகக் கொண்ட இக்குழு நாளை மறுதினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளது.

தனது வருகையின் போது பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆகியோரை குழு சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சிறைச்சாலை சீருடையில் மாற்றம் : அதிகாரிகள் எதிர்ப்பு

சிறைச்சாலை மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் புதிய தீர்மானத்திற்கு அமைய சிறைச்சாலை அதிகாரிகள் தொடக்கம் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் அனைவரதும் உடைகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளமைக்கு சிறை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகாரிகளின் உடை காக்கி நிறத்தில் அமையவில்லையெனினும் அங்குள்ள மக்களின் கல்வி நிலை உயர்ந்தளவில் உள்ளது. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. தற்போதுள்ள இந்த உடைக்கே மக்கள் பயப்படுகின்றனர்.

அவ்வாறு உடைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமானால் அதற்கு பலமான எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ அதிகாரிகளின் தொப்பிகளில் நிறமாற்றம் :

தலைமையகம் தெரிவிப்பு இராணுவ உயரதிகாரிகளின் தொப்பிகளின் நிறத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய காக்கி நிறத்திலிருந்து இளம் பச்சை நிறத்திற்கு தொப்பி மாற்றப்படவுள்ளது. இவ்வாறான மாற்றம் 61 வருடங்களின் பின்னர் முதன் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பட்டதாரிகள் நாட்டுக்குச் சுமையாக இருக்கக் கூடாது : எஸ்.பி.

இளம் தலைமுறையினரான பட்டதாரிகள் பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் சுமையாக இராமல் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது அவர்களது பொறுப்பாகும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

உயர் கல்வி அமைச்சில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர் மேலும்,

"வெளிநாடுகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் ஹோட்டல்களில் சேவகர்களாகவும், சமையற்காரர்களாகவும், மற்றும் கூலித் தொழிலாளிகளாகவும் பணி புரிகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விடயமல்ல.

இது குறித்துப் பெருமைப்பட வேண்டும். ஆனால் எமது நாட்டை நினைத்தால் நாம் வெட்கப்பட வேண்டியிருக்கிறது. நம் நாட்டில் பட்டதாரிகள் எந்தத் தொழிலிலும் ஈடுபடுவதில்லை.

ஆனால் இங்கிருந்து வெளிவாரிப் பட்டப் படிப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அங்கு பாதை துப்புரவு செய்பவராகவும் பத்திரிகை விநியோகிப்பவர்களாகவும் இரவு பகல் பாராது வேலை செய்து பணம் சம்பாதித்து கொள்வர். இதே தொழிலை அவர்கள் இங்கு செய்ய வெட்கப்படுகின்றனர். " எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா மன்னிப்பு கோரவேண்டும் எனும் கோஷமானது பதவியை பாதுகாக்கும் துதிப்பாடல் : ஐ.தே.க

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்தும் அதேநேரம் இருக்கின்ற பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவுமே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்று அமைச்சர்களும் எம்.பி.க்களும் துதி பாடிக்கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக்க நேற்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கயந்த எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இந் நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த சிறந்ததொரு இராணுவ வீரராவார். இவ்வாறான வெற்றி வீரனை சிறைக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் செயற்பட்டது.

இருந்த போதிலும் அவரை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பௌத்தபீடம் உட்பட மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி. க்களும் தமது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு துதி பாடுகின்றனர்.

இதற்காக சிறையில் அடைபட்டுள்ள சரத் பொன்சேகா செய்யாத குற்றத்துக்காக ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென கோஷமிடுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூட பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா) மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியிருக்கின்றார். ஆனால் அமைச்சர்கள் எவரும் பிரதியமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று இதுவரையில் கூறவில்லை.

சரத் பொன்சேகா மன்னிப்புக் கோருமளவில் அவர் எந்த குற்றத்தையும் புரியவில்லை.

அவர் இந்நாட்டுக்கு ஆற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு அரசாங்கமே அவரை விடுதலை செய்ய வேண்டும். அதனை விடுத்து அர்த்தமற்ற கதைகளை கூறிக் கொண்டிருப்பது அவசியமற்றதாகும்.

பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கே இருக்கின்றது. இதனை இன்று மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரித்தானியாவில் தமிழர்களின் நடைபயணம் நேற்று ஆரம்பம் : பலர் பங்கேற்பு

பிரித்தானியாவில் 'வேர்க்சொப்' எனும் இடத்திலுள்ள படைவீரர்களை நினைவுகூரும் இடமான 'வோர் மெமோறியலு' க்கு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு தமிழர்களின் நடைபயணம் ஆரம்பமானது.

இந்த நடைபயணத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மான் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அப்பிரதேச நகரசபை உறுப்பினர்கள் மூவர் உட்பட பல்லின மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடைபயணத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்கள் இதில் கலந்துகொண்டதோடு 500 பவுண்ஸ் காசோலையையும் வழங்கி தமது ஆதரவை நல்கியிருந்தனர்.

நேற்றுக் காலை ஆரம்பமான நடைபயணத்தில் நிக்சன், லோகேஸ்வரன், சுதா ஆகியோர் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளனர். மாலை 3:30 மணிவரையான ஆறு மணித்தியாலங்களில் 18 மைல்கள் தூரத்தை இவர்கள் கடந்துள்ளனர்.

நாளை பேர்மிங்காமில் ஆரம்பமாகும் நடைபயணத்துடன் இணையும் இவர்களுடன் மேலும் சில தமிழர்கள் நடக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் ஐ.தே.க : ரணில்

ஊடக அடக்கு முறையை விஸ்தரித்து மக்கள் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ள தற்போதைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக பொது மக்களை ஓரணியில் திரட்டும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியுள்ளது. இதற்காக 1977களில் ஜே. ஆர். ஜெயவர்த்தன கையாண்ட யுக்தியை யே தற்போது எமது கட்சி பின்பற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதற் கடமை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதே ஆகும். எனவே இந்த கடமையை நாட்டு மக்களுக்காக மிகவும் பொறுப்புடன் செய்து முடிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கிராமத்திற்கான பயணம்' என்ற தொனிப் பொருளில் ஐ.தே.க. முன்னெடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று முன்தினம் ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்றது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள வாழ்வாதார பிரச்சினை மற்றும் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிராக கடந்த ஜுலை மாதத்தின் பின் இதுவரையில் 82 ஆர்ப்பாட்டங்களும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதேபோன்று 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை சிறை வைக்கப்பட்டமைக்கு எதிராகவும் நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுத்தோம். 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகவும் இராணுவ நீதிமன்றத்தின் தண்டனை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் நாம் எழுப்பிய குரல்கள் இன்று நாட்டில் முக்கிய இடம்பிடித்துள்ளன. இது தொடர்பில் ஐ.தே.க. வின் இளைஞர் அணி நாடு பூராகவும் செயற்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை இலக்கு வைத்து பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில் குறுகிய காலத்தில் ஐ.தே.க.தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் பல அரசியல் முன் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை விடுதலை செய்து கொள்வதற்காக பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக போராட்டத்தையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

பிரதி தலைவர் கரு ஜயசூரியவின் தலைமையிலான "கிராமத்திற்கான பயணம்' தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விருப்பு வாக்கு அரசியலினால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பொது மக்களிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஐ.தே.க. விற்கு மட்டுமல்ல அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் உள்ளது.

எனவே இதனை மாற்றியமைக்கவும் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் 1977 களில் ஜே.ஆர். ஜயவர்தன கிராமிய மட்டத்திற்கு சென்று செயற்பட்டது போல் செயற்பட வேண்டும். இதன் மூலம் நாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி வளமான இலங்கை ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.தே.க.வின் கிராமிய மட்டத்திலாக செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தற்போது பயந்துள்ளது. அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கும் சவால் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாண சபை: சகல அலுவலகங்களும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம்


வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகங்கள் உட்பட அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் ஜனவரி முதல் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.

இதற்கமைய திருகோணமலை வரோதயர் நகரிலிருந்து முன்னெடுக்கப்பட்ட வட மாகாணத்தின் சகல செயற்பாடுகளும் ஜனவரி முதல் வட மாகாணத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண மக்களின் நலனை கருத்திற் கொண்டும் அவர்களுக்கான சேவைகளை மேலும் துரிதப்படுத்தும் வகையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வட மாகாண ஆளுநரின் உப அலுவலகம் ஒன்று கிளிநொச்சி நகரில் திறப்பதற்கும் திட்டமிடப்பட்டுள் ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகம், பிரதம செயலாளர் காரியாலயம் மற்றும் அதன் கீழுள்ள சகல திணைக்களங்களும் மாங்குளத்தில் நிரந்தரமாக அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், தற்காலிகமாகவே யாழ்ப்பாணத்திற்கு அதன் செயற்பாடுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வட மாகாண ஆளுநர் அலுவலகம் உட்பட சகல திணைக்களங்களும் அதன் செயற்பாடுகளை திருமலை, வரோதயர் நகரிலிருந்து முன்னெடுத்து வருகின்றன. வட மாகாணத்திற்கான செயற்பாடுகளை திருமலையிலிருந்து முன்னெடுத்து வருவதால் மக்களுக்கான பணிகளில் தாமதங்கள் காணப்படுவதுடன் அங்கு சேவையாற்றும் அதிகாரிகளும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

ஆளுநர் அலுவலகம் யாழ். நகரில் அமைக் கப்படவுள்ளதுடன் ஏனைய திணைக்களங்கள் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திற்குள் அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் சகல செயற்பாடுகளும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் திருமலை அலுவலகமும், கட்டடங்களும் ஜனவரியில் கிழக்கு மாகாண சபைக்கு கையளிக்கவுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நூலகம் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை ஜனாதிபதி செயலகம் முற்றாக மறுப்பு

யாழ். பொதுநூலகம் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படவில்லையென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. “யாழ். நூலகம் மீண்டும் தாக்குதலுக்குள்ளா னது” என சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியையும் ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் யாழ். நூலகம் மீண்டும் தாக்குதலுக்குள் ளானது என 31 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இச்செய்தியானது அடிப்படையற்றதுடன் எந்தவொரு ஆதாரமும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸாரும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடத்திய விசாரணைகளில் அவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் நடைபெறவோ, அதில் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் தொடர்புபடவோ இல்லையென்பதும் தெளிவாகியுள்ளது.

யாழ். பொது நூலகத்துக்குள் நுழைந்த குழு புத்தகங்களை அலுமாரிகளிலிருந்து எடுத்து நிலத்தில் வீசியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் சமரசம் செய்ததாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் நடைபெறவில்லையென்பதை பொலிஸாரும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரும் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

எந்தவொரு அதிகாரம் வாய்ந்த தரப்பின் உறுதிப்படுத்தலின்றி வெளியிடப்பட்டிருக்கும் இச் செய்தி தொடர்பாக நாம் வருத்தமடைகிறோம். உறுதிப்படுத்தப்படாத தரப்புத் தகவல்களையும், இனந்தெரியாத நபர்களின் தகவல்களையும் கொண்டே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் காலத்தில் இருந்த சூழ்நிலை மீண்டும் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கொள்கையுடனே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் செழுமை மிகு நாடுகளில் 59வது இடத்தில் இலங்கை இந்தியா 88வது இடத்தில்

உலகில் செழுமை மிகுந்த நாடுகளின் 2010ம் வருட பட்டியலில் பெயரிடப் பட்டுள்ள 110 நாடுகளில் இலங்கை 59வது இடத்தில் உள்ளது.

2009ம் வருட பட்டியலில் இலங்கை 68 ஆவது இடத்தில் இருந்தது. இவ்வருட பட்டிய லில் 9 இடங்கள் முன்னேறி யுள்ளது. தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை இலங்கை முதலாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவை பொறுத்தவரை சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது. சீனா பட்டியலில் 58 வது இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியா 88 வது இடத்திலும் நேபாளம் 91வது இடத்திலும் பங்களாதேஷ் 96 வது இடத்திலும் பாகிஸ்தான் 109 வது இடத்திலும் உள்ளன.

உலகில் 90 சதவீத சனத்தொகையை கொண்ட 110 நாடுகள் இந்த பட்டியலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம், தொழில் முயற்சிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆளுமை, கல்வி, சுகாதாரம், ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் சமூக மூலதனம் ஆகிய 8 உப பிரிவுகளில் நாடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த பொருளாதார தரவரிசையில் இலங்கை 84 வது இடத்தில் உள்ளது. எனினும் உலக நாடுகளின் பொருளாதார தோற்றத்தின் சாதகமான அம்சங்களைக் கொண்டு நோக்கியதில் இலங்கை 10வது இடத்தில் உள்ளது.

அத்துடன் உலகளாவிய ரீதியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை இலங்கை 24 இடத்தில் உள்ளது.

ஆளுமை உப பிரிவில் இலங்கை 43 இடத்தில் உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கத்தில் அல்லது வர்த்தகத்தில் ஊழல் பெருமளவில் இடம்பெறவில்லை அன்று மக்கள் நம்புவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்படுகிறது. இந்த நோக்கத்தின் கீழ் உலகில் சிறந்த 25 நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.

2009ம் வருட ஆய்வின்படி இலங்கை இராணுவத்தின் மீது 97 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அத்துடன் 87 சதவீதத்தினர் நீதித்துறையிலும் நம்பிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி இரு பிரிவுகளிலும் உலகில் முன்னணி 10 நாடுகளில் இலங்கையும் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்
மேலும் இங்கே தொடர்க...

சீன “எக்ஸ்போ” கண்காட்சி நிறைவு விழாவில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த


சீனாவின் ஷங்ஹாய் நகரில் ஆறு மாதகாலமாக நடைபெற்று வந்த “எக்போ 2010” உலக கண்காட்சி நேற்று முன்தினம் (31) நிறைவுபெற்றது. இந்த எக்ஸ்போ உலக கண்காட்சியின் நிறைவு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட விருந்தினராக கலந்து கொண்டார்.

கைத்தொழில் புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய ஆக்கங்களை உலகிற்கு அறிமுகம் செய்வதற்காக 1858 ஆம் ஆண்டிலே “எக்ஸ்போ” கண்காட்சி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் பல்வேறு அபிவிருத்தித் தொனிப்பொருள்களின் கீழ் இந்த கண்காட்சியானது சில வருடங்களுக்கொரு முறை நடைபெறுவது வழக்கம். இந்த உலகக் கண்காட்சியானது ஒரு வர்த்தக கண்காட்சியாக மிளிர்வது மட்டுமன்றி அதன் மூலம் அபிவிருத்தியின் பிரதிரூபம் வெளிக்காட்டப்படுகிறது.

இம்முறை சீனாவின் ஷங்ஹாய் நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2010” கண்காட்சியை 74 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர்.

1970ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியை 68 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர். இம்முறை அதன் வரலாற்றிலே அதிக மக்கள் பார்வையிட்ட சாதனையை ஷங்காய் கண்காட்சி படைத்துள்ளது. “எக்ஸ்போ 2010” கண்காட்சியின் தொனிப்பொருள் “நல்லதொரு வாழ்க்கை சிறந்ததொரு நகரம்” என்பதாகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கண்காட்சியானது அடுத்த முறை இத்தாலியின் மிலானோ நகரில் நடைபெறவுள்ளது.

31 ஆம் திகதி இரவு நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இருபதுக்கும் அதிகமான நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் நிறைவு விழாவில் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.

இதில் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் வெளிநாட்டலுவல்கள் ஒருங்கிணைப்புச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஷ்குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாதிலக்க அமுனுகம, ஷங் ஹாயின் இலங்கை கொள்சியுலர் மஹிந்த ஜயசிங்க கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் 1177 அபிவிருத்தி திட்டங்கள்; ரூ. 1028 மில். ஒதுக்கீடு


கமநெகும திட்டத்தின் கீழ் இவ்வருடம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 1528 கிராம சேவகர் பிரிவுகளில் 1177 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டன. இதற்காக 1028 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க கூறினார்.

‘கம நெகும’ திட்டம் தொடர்பான அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் அமைச்சில் நடைபெற்றது.

இதன் போது கருத்துத் தெரிவித்த அவர், 2010 ஆம் ஆண்டில் கமநெகும திட்டத்திற்கு 15,523 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் உள்ள 10,483 கிராம சேவகர் பிரிவுகளில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

24,641 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதோடு 12,291 திட்டங்கள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளன. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட 232 திட்டங்களில் 84 வீதமான திட்டங்கள் நிறைவடைந்துள் ளன.

யாழ். மாவட்டத்தில் 94 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதற்காக 83.37 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 19.75 மில்லியன் ரூபா செலவில் 77 திட்டங்களும், முலலைத்தீவு மாவட்டத்தில் 23.23 மில்லியன் ரூபா செலவில் 19 திட்டங்களும், மன்னார் மாவட்டத்தில் 98.13 மில்லியன் ரூபா செலவில் 42 திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 808 கிராம சேவகர் பிரிவுகளில் 945 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு 821 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 835.63 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 87 வீதமான திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளதோடு எஞ்சிய திட்டங்கள் இந்த வருட முடிவுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதில் கொங்கிரீட் வீதிகள் அமைக்கவே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதோடு கிராமிய மின்சார வசதி, நீர்ப்பாசனம், குடிநீர் வசதி, பொதுவசதி என்பவற்றுக்காகவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் இறக்குமதி வரிகள் உடன் குறைப்பு

பண்டிகைக் காலத்தையிட்டு அரசு அவசர ஏற்பாடு

உருளை கிழங்கு - ரூ.20
பெரிய வெங்காயம் - ரூ.15
பண்டிகை காலத்தின் நிமித்தம் சகல அத்தியாவசியப் பொருட்களையும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் (ச. தொ. ச) ஊடாக குறைந்த விலையில் சந்தைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஒரு அம்சமாக நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உருளைக் கிழங்கினதும், பெரிய வெங்காயத்தினதும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமிற்கான இறக்குமதி வரியை 20 ரூபாவாலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமிற்கான இறக்குமதி வரியை 15 ரூபாவாலும் அரசாங்கம் குறைத்துள்ளது.

சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து ச. தொ. ச. மூலம் மக்களுக்குப் போதியளவில் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்தது.

அத்துடன் பண்டிகைக் காலத்தை காரணங்காட்டி அரிசி விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயலுவார்க ளேயானால் அரிசிக்கு மீண்டும் கட்டுப்பாட்டு விலையை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு இலட்சத்து 500 மெற்றிக் தொன் நெல் கையிருப்பில் உள்ளதால் தேவையான போது அவற்றை மக்களுக்கு அரிசியாக்கி குறைந்த விலையில் விற்பதற்கும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சின் உயரதி காரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்:- அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்கின்றார்.

அதேவேளை; நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் நியதிகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மும்முரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

1160 . மில்லியன் ரூ. செலவில் வடக்கு சுகாதார அபிவிருத்தி


வட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 1160 மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன.

2011ம், 2012ம் ஆண்டுகளில் இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வடமாகாண மக்களின் சுகாதார துறையை மேம்படுத்தவென வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக வடபகுதியிலுள்ள 5 பிரதேச வைத்தியசாலைகள் புனரமைக்கப்படவுள்ள துடன், 20 வைத்திய சாலைகளுக்கான வெளி நோயாளர் பிரிவு (ஓ. பி.டி.) நிறுவப்படவுள்ளன.

அத்துடன் 12 மருத்துவ அதிகாரிகள் அலுவலகமும், 200 கட்டில்களைக் கொண்ட வார்ட் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுமார் 531 மில்லியன் ரூபா செலவில் பாரிய சுகாதார திட்டங்கள் இவ்வாண்டு முன் னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

தற்பொழுது வடக்கின் பல்வேறு பகுதிகளில் 43 திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளும் உள்ளட க்கப்பட்டுள்ளன.

சுமார் 363 மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலைகள் புனரமைப்பு, பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அலுவலகம் நிர்மாணப் பணிகள், வாட் வசதிகள், விபத்துச் சேவைகள் பிரிவு, மருத்துவ அதிகாரிகளுக் கான விடுதிகள் போன்றன அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைக ளுக்கு 168 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வட பகுதியில் சிறந்ததொரு சுகாதார சேவையை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...