ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை யிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. இதனையிட்டு, பட்டாசுகள் கொளுத்தப்பட்டு மகிழ்ச்சியார வாரம் செய்யப்பட்டதோடு பாற்சோறு, இனிப்புக்களும் பரிமாறப்பட்டதாக நமது பிராந்திய நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் கிழக்கில், திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்துக்கான பதவியேற்பு வைபவத்தை ஒட்டி விசேட நிகழ்வுகளிலும், கொண்டாட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதிகளிலுள்ள பெளத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களில் இரண்டாவது தடவை ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பொதுமக்கள் பட்டாசுகள் கொளுத்தி ஜனாதிபதியின் பதவியேற்பை மிகவும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடியதுடன் இனிப்புப் பண்டங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
இந்நிகழ்வுகள், நாட்டின் வடக்குக், கிழக்கு பகுதிகள் மட்டுமன்றி வட மத்திய மாகாணம், மத்திய மாகாணம் தென் மாகாணம், ஊவா மாகாணம் உட்பட நாட்டின் 9 மாகாணங்களிலும் சிறப்புற நடைபெற்றன.
அம்பாறையில் விசேட வைபவங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தை முன்னிட்டும் பிறந்த தினத்தையொட்டியும் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு வைபவங்களுடன் மத வழிபாடுகளும் இடம்பெற்றன.
நேற்று வெள்ளிக்கிழமை (19) அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, லகுகல, அம்பாறை, இறக்காமம், சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு, நாவிதன்வெளி, உகண மற்றும் சேரங்கடவெல போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இப்பிரதேசங்களிலுள்ள கிராமங்களில் ஜனாதிபதியின் கட்அவுட்களும், பதாகைகளும், வாழ்த்துப் பலகைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்ததுடன் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன.
விகாரைகள், கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி மத வழிபாடுகள் இடம்பெற்றன. சில முஸ்லிம் பிரதேசங்களில் ஜும்ஆத் தொழுகையின் பின் விசேட பிரார்த்தனை வைபவங்களும் நடைபெற்றன.
வெவ்வேறு இடங்களில் ‘தெயட்ட செவன’ திட்டத்தின் கீழ் மரநடுகைத் திட்டங்களும் சிரமதானப் பணிகளும் நடைபெற்றன.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக பதவியேற்பதை கெளரவிக்கு முகமாக யாழ்ப்பாணத்திலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. சகல திணைக்களங்கள், வங்கிக் கிளைகள், கூட்டுஸ்தாபனங்கள், வைத்தியசாலைகள், கல்விக் கூடங்கள், நியதிச் சபைகள் வணக்கஸ்தலங்கள், படை முகாம்கள் என சகல இடங்களிலும் காலை 10.07 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி பணியாள ர்கள் கொடிவணக்கத்தில் ஈடுபட்டனர்.
அங்கெல்லாம் நடந்த நிகழ்வுகளில் ஜனாதிபதியின் சேவையைப் பபாராட்டியதுடன் புதிய பதவிக் காலத்தில் நாட்டை பொருளாதார சுபீட்சமிக்கதாக உருவாக்குவார் என நம்பிக்கை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரையில் விசேட பூஜைகளும் அதனைத் தொடர்ந்து ஏழைகளுக்கு உணவுப் பார்சல்கள் இடம்பெற்றன. பருத்தித்துறை போக்குவரத்துச் சபை சங்கானை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் விழாக்களும் இடம்பெற்றன. நேற்றிரவு வங்கிகளும் மின்சாரசபை அலுவலகங்கள் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இரத்தினபுரி மாவட்டத்தில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு இரத்தினபுரி, காவத்தை, குருவிட்ட, எஹலியகொடை, கலவான, நிவித்தகலை, பலாங்கொடை, கொடக்கவெல, எம்பிலிபிட்டிய, இறக்குவானை, கொலன்ன, பெல்மதுளை, பல்லேபெந்த, ஆகிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஜனாதிபதியின் பதாதைகள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை நேற்றுக் காலை ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு நடைபெற்ற வேளை இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்படி நகரங்கள், கிராமங்களில் உள்ள இந்து ஆலயங்கள், பெளத்த ஆலயங்கள், கிறிஸ்தவ, முஸ்லிம் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
மேற்படி வைபவத்தை முன்னிட்டு இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் கமநெகும, கெமிதிரிய ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அத்தோடு பூர்த்தி செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன.
பதுளையில்
‘சரித்திர நாயகர்’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2வது பதவியேற்பு விசேட வைபவத்தை முன்னிட்டு பதுளையிலும் மற்றும் பிரதேசங்களிலும் பல்வேறு விசேட நிகழ்வுகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பதுளை நகரில் ‘பட்டாசு’ கொளுத்தி பொதுமக்கள் பெருமக்கள் தமது பெருமகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்தவை வாழ்த்தி பதாதைகள், கொடிகள், அமைக்கப்பட்டிருந்தன.
சர்வமத ஸ்தலங்களிலும் விசேட நிகழ்வுகள், பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
பதுளை - புவக்கொடமுல்ல மஸ்ஜிதுல் ஜென்னத் பள்ளிவாசலில் ‘முதல் குத்பாவை’ நிகழ்த்திய இரத்தினபுரி கலீல் மெளலவி வரலாற்று முக்கியத்துவமிக்க இத்தினத்தில் ஜனாதிபதிக்கும், சகல நாட்டு மக்களுக்கும் இறை ஆசிவேண்டி விசேட பிரார்த்தனை புரிந்தார்.
அம்பாந்தோட்டை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம், இரண்டாவது பதவியேற்பினை முன்னிட்டு நேற்று அம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலைகள், அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், தனியார் நிறுவனங்கள் என்பனவற்றில் தேசிய கொடி ஏற்றப்பட்டு ஜனாதிபதிக்கும் வாழ்த்து தெரிவித்து பாரிய படங்களும் தொங்கவிடப்பட்டுள்ளன.
பாடசாலைகள், விகாரைகள், பள்ளிவாசல்கள் என்பனவற்றில் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி விசேட வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.