12 பிப்ரவரி, 2011

ஏப்ரல் 13, 2036 இல் பூமிக்கு அழிவா?: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக் கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன் மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சென் பீட்டர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள்.

இக் கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000 கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ் தெரிவிக்கின்றார்.

சிலவேளை மத்திய கிழக்கு,தென் அமெரிக்கா அல்லது ஆபிரிக்காவின் மேற்கு கரையோரப்பகுதியில் மோதலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது பூமியோடு மோதினால் இதன் சக்தி வெளிப்பாடு சுமார் 100 அணுகுண்டுகளுக்குச் சமனாகவிருக்குமென நாசா தெரிவித்துள்ளது.

எனினும் இது 2036 ஆம் ஆண்டு மோதுவதற்கான வாய்ப்பு 45,000 இற்கு 1 என்ற நிகழ்தகவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் நாம் எத்தகையதொரு சந்தர்ப்பத்திற்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அக் கோள் பூமியுடன் மோதுவதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...

வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டப் பணிப்பாளர் வா.கிருபாசுதன் ஆகியோர் கையொப்பமிட்டு, மாவட்ட புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புச் செயலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கடந்த முதலாம் திகதி அறிவித்தல் ஒன்று நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நலன்புரி முகாமில் இருந்து வரும் இவர்கள், வவுனியாவிலேயே தமக்குக் காணிகளை வழங்கி வீடு கட்ட உதவி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் 97 ஆம் மற்றும் 99 ஆம் ஆண்டுக் காலப்பகுதி முதல் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து இந்த முகாமில் தங்கியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே நிவாரண உதவிகள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உதவிகள் எதுவும் இல்லாத நிலையில், உழைத்துப் பெறும் சிறிதளவு வருமானத்தில் தான் தாம் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மழை காலமென்பதால் தொழில்வாய்ப்புக்களும் குறைந்து பிள்ளைகள் போதிய உணவு மருத்துவ வசதியின்றி கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமரவேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்கைக்கமையவே இவர்களை முகாமிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

எனினும், தமக்கு அங்கு சொந்தக் காணிகள் எதுவும் இல்லை என்றும், இப்போது அங்கு மீள்குடியேறச் சென்றால் தமக்கான வசதிகள் உரிய முறையில் செய்துதரப்படுமா என்றும் முகாமில் வசிக்கும் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பரசூட் விபத்து இராணுவ வீரர் பலி
வேருவில இராணுவப் பாதுகாப்பு நிலையத்தில் இராணுவ வீரர் ஒருவர் பரசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நேற்று காலை 10.30 மணியளவில் பலியாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்தார்.

அனுபவமிக்க இவ்வீரர் 8000 அடி உயரத்திலிருந்த பரசூட் மூலம் குதித்த போது பரசூட்டின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது அவ்வீரர் வேருவில நீர்த்தாங்கியில் மோதுண்டு காயமடைந்து பின்னர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலியான இராணுவ வீரர் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஹக்கீம் உட்பட 7 மு.கா. எம். பிக்கள் மீதான : ஐ. தே. கவின் ஒழுக்காற்று விசாரணைக்கு இடைக்கால தடை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடங்கலான முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு ஐ.தே. க தலைவருக்கும் கட்சிச் செயலாளருக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சிச் செயலாளர் ஹசன் அலி எம்.பி., பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் அடங்கலான ஏழு எம்.பிகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று கொழும்பு மாவட்ட நீதவான் ரஞ்சித் என். வதுபொல முன்னிலையில் நடைபெற்றது. இந்த மனுக்களில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

ஐ.தே.க எம்.பி க்களான மனுதாரர்கள் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் கட்சி ஒழுங்கை மீறியதாகக் கூறி ஐ.தே.க செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவ தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தாம் ஐ.தே.க. அங்கத்தவர்கள் அல்ல எனவும் தேர்தலுக்காக மட்டுமே ஐ.தே.க. வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்ததாகவும் குறிப்பிட்டிருந்த மனுதாரர் முஸ்லிம் காங்கிரஸினால் மட்டுமே தங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமென மனுதாரர் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மனுதாரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு 24 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று இந்திய, பாக். சபாநாயகர்கள் கொழும்பு வருகைபொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள், பாராளுமன்ற செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இன்று முதல் 15 ஆம் திகதி வரை ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் நேற்று இலங்கையை வந்தடைந்ததாக பாராளுமன்ற உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மாநாட்டையொட்டி நேற்று பாராளுமன்ற செயலாளர்களின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது

இன்று ஆரம்பமாகும் மாநாடு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்களாதேஷ் சபாநாயகர் அப்துல் ஹமீத், இந்திய லோக் சபா சபாநாயகர் மீராகுமார், மாலைதீவு சபாநாயகர், பாகிஸ்தான் செனட் சபை பிரதி தலைவர் மற்றும் அந்நாட்டு பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்களும், தாயும் சேயும் என்பன தொடர்பில் இங்கு முக்கியமாக ஆராயப்பட உள்ளதாக பாராளுமன்ற உயரதிகாரி கூறினார்.

இலங்கை வருகை தந்துள்ள பொதுநல வாய ஆசிய பாராளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி சீகிரிய பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர் இறுதி நாளான 15 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை, பேராதனை பூங்கா, பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றுக்கும் செல்ல உள்ளதாக அறி விக்கப்படுகிறது. இதேவேளை, பொதுநல வாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர் களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த இந்திய சபாநாயகர் ஸ்ரீமதி மீராகுமார், பாக். சபாநாயகர் ஜனாபா பெரோஷ்கான் பாக். செனட் சபையின் தலைவர் மிர், முகம்மத் ஜமால்கான் ஆகி யோரை விமான நிலையத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று வரவேற்றார்.

சபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும் இவர்களை வர வேற்பதற்காக சென்றிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புறக்கோட்டையில் பதுக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் கிலோ அரிசி கண்டுபிடிப்பு

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நேற்று புறக்கோட்டை 4ஆம் குறுக்குத் தெருவில் செய்த சோதனை நடவடிக்கையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12,000 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசியை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

நேற்று முன்தினம் இவ்வாறு நடத்தப்பட்ட தேடுதலின்போது 250 கிலோ அரிசி புறக்கோட்டை பழைய சோனகத்தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதியும் அரிசியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த 100 வர்த்தக நிலையங்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சுற்றிவளைத்தது. நேற்று முன்தினம் இவ்வாறு 110 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக வும் கூட்டுறவு அமைச்சு தெரிவிக்கிறது.

மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, கண்டி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் இவ்வாறு அதிகளவு சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

போதியளவு அரிசி கையிருப்பில்; இறக்குமதிக்கு அவசியமில்லை பதுக்கல்காரர் மீது அதிரடி நடவடிக்கை அரிசி தட்டுப்பாட்டுக்கு இடமே இல்லை
நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் கையிருப்பு உள்ளதாகவும் அதனால், வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாதென்றும் கமநல சேவைகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கையிருப்பில் தற்போது ஒரு இலட்சத்து 82 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் உள்ளதாகவும் இதில் 25 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி உடனடியாக சந்தைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தவிரவும் தனியார் துறையினரிடமும் கூடுதலான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும் இதனால், எந்த வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாதென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2010-2011 பெரும்போகத்தில் 14 கோடியே 30 இலட்சம் புசல் நெல் அறுவடையை எதிர்பார்த்திருந்ததாகக் கூறிய அமைச்சர் அண்மைய வெள்ளப் பெருக்கின் காரணமாக 12 கோடி புசல் மட்டுமே அறுவடைசெய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் 2 கோடியே 30 இலட்சம் புசல் சேதமடைந்ததால் 1322 கோடி நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேன, நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 655 விவசாயிகளின் நெல் விளைச்சல் சேதமடைந்ததாகவும் கூறினார். 2010-2011 பெரும்போகத்தில் 18 இலட்சத்து 29 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...