புலிகள் பலமடைவதற்கு 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு ஜூலை சம்பவமே பிரதான காரணமாகும். கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் நாங்கள் வருத்தம் தெரிவித்தாக வேண்டும். மேலும், இந்தியாவை நாம் எமது சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று சமூக சேவை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும், நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அமைச் சர் பீலிக்ஸ் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:
யாழ்ப்பாண மண் மிகவும் செழிப்பானது. அங்குள்ள மக்களும் சிறந்த முறையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். 1980களில் யாழ்ப்பாணத்தில் விவசாய உற்பத்தி அதிகளவில் காணப்பட்டது. ஆனால், தற்போது மிகவும் குறைந்துவிட்டது. அங்கு விவசாய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். அந்த மக்களின் உற்பத்திகளை நாம் விலைக்கு வாங்கவேண்டும்.
1983 ஆம் ஆண்டு நாம் பாரிய தவறு ஒன்றைச் செய்தோம். அந்த ஆண்டின் கறுப்பு ஜூலைச் சம்பவமே புலிகள் பாரியளவில் பலமடைவதற்கான முக்கிய காரணமாகும். யாழ்ப்பாணத்தில் அன்று 13 படைவீரர்கள் உயிரிழந்ததும் அவர்களின் சொந்த இடங்களில் நல்லடக்கம் செய்திருக்கலாம். ஆனால், இறந்தவர்களின் உடல்களை கொழும்புக்குக் கொண்டுவந்து அன்று வன்முறை இடம்பெறுவதற்கு சிலர் வழிவகுத்தனர். சர்வதேச மட்டத்தில் எமக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டது. புலிகளும் பலமடைந்தனர். பலர் நாட்டைவிட்டு வெளியேறினர். நான் எனது பகுதியில் தமிழ் மக்களைப் பாதுகாத்தேன் என்பதனை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.
இதேவேளை, இந்தியாவை நாம் சகோதரனாகவும் தமிழகத்தை உறவினராகவும் பார்க்கவேண்டும். இந்தியாவை எமது பாதுகாவலனாக வைத்துக்கொள்வதுடன், அந்த நாட்டை மீறி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. எமது வெளிவிவகாரக் கொள்கையை உருவாக்கும் போது இந்தியா குறித்து அதிகளவில் சிந்திக்கவேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் ஐந்து கோடி தமிழ் மக்கள் உள்ளனர். எனவே, தமிழகத்துடன் நாங்கள் சிறந்த உறவைப் பேணவேண்டும். எமது நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய நாம் தமிழகத்துடன் சிறந்த உறவைப் பேணவேண்டும். தமிழகத்தைக் கோபமூட்டினால் எதிர்காலத்தில் எமக்குப் பிரச்சினைகள் வரலாம். இந்தியாவுக்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடக் கூடாது. அந்த நாட்டை எமது பாதுகாவலனாகப் பார்க்கவேண்டியது அவசியமாகும். உண்மையில் இந்தியா எமது பாதுகாவலனாகவே செயற்படும். இலங்கையில் பிரிவினை ஏற்படுவதற்கோ, தனிநாடு அமைவதற்கோ இந்தியா ஒருபோதும் இடமளிக்காது.
தனிநாடொன்று அமைந்தால் இந்தியாவுக்குப் பிரச்சினை ஏற்படும் என்பது அந்த நாட்டுக்குத் தெரியும். எனவே, சீனாவிடம் மாட்டுவண்டியை வாங்கினால் இந்தியாவிடம் மாடுகளையாவது பெறவேண்டும். எந்தவொரு வகையிலும் இந்தியாவை புறக்கணிக்கவோ பகைத்துக்கொள்ளவோ கூடாது. இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டபோது நாங்கள் இலங்கையில் கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தியிருந்தோம். இது உண்மையில் சிறந்த நகர்வாகும்.
வடக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். யாழ்ப்பாண மக்கள் சிறந்த முறையில் கல்வி கற்பவர்கள். முன்னர் அரச சேவையில் அதிகமான அளவில் வடக்கு மக்களே இருந்தனர். மேலும், அவர்கள் கல்வியை ஒருபோதும் கைவிடவில்லை. எனது ஆசிரியராக இருந்தவர் ஆனந்தசங்கரி என்பதனை இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன். 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டதக்ஷிக நான் கருதவில்லை. அப்போதைய அரசியல்வாதிகள் சுயநல அரசியலுக்காகப் பிரிவினையை முன்வைத்தனர். தனிநாட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். வடக்கு மக்கள் ஜனநாயகத்தை எதிர்த்தனர் என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால், புலிகள் அவர்களுக்குப் பாரிய தடையாக இருந்தனர். மேலும், பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் போன்ற தலைவர்களுக்குப் பின்னர் அவர்களைப் போன்ற தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகவில்லை.
எமது அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கைகயை மேற்கொண்டு மக்களை மீட்டெடுத்தது. அந்த வேலைத்திட்டத்தின் போது இராணுவத்தினர் சிறப்பாக செயற்பட்டனர். எங்களுக்கு முப்படையினருடன் சிறந்த தொடர்புகள் உள்ளன. படையினருக்கு உணவு வழங்கும் நிறுவனம் ஒன்றை எனது மனைவி நடத்திவருகின்றார். எனவே, அவர்களைப் பற்றித் தெரியும். இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை.
மாறாக, பயங்கரவாதத்துக்கு எதிராகவே நடத்தப்பட்டது. அத்துடன், இனரீதியிலோ மதரீதியிலோ நாட்டில் அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்று நான் எண்ணுகின்றேன். அதனைத் தடுப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.