17 டிசம்பர், 2009

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு
No Image

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.



போரினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்கக் கோரிக்கை


போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி அவசர நிவாரண உதவிகளையும், மறுவாழ்வுக்கான வசதிகளையும் செய்து தருமாறு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக கைத்தொழில், வேளாண் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கைகளின் விபரம் வருமாறு:

* இடம்பெயர்ந்துள்ள வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களில் மீண்டும் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

* வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களைத் தமது சொந்த வாகனங்களில் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* வர்த்தகர்கள், கைத்தொழில் உரிமையாளர்கள், விவசாயிகள் அனைவரினதும் இழப்பீடுகளுக்கு உரிய நட்டயீடுகள் வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் இந்த அமைப்பினால் திரட்டப்பட்டு வருகின்றன.

* தொழில் முயற்சியாளர்கள் போர்ப்பிரதேசங்களில் கைவிட்டுள்ள பொருட்களைப் பார்வையிடவும், அவற்றை அடையாளம் காட்டி மீளப் பெறுவதற்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தமது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாகக் குறைந்த வட்டி வீதத்தில் அரச தனியார் வங்கிகளின் மூலம் கடன்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐநா உதவி நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் கிட்டுவதற்கும் வழி செய்யப்பட வேண்டும்.

* ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வர்த்தக அனுமதியை அவரவருக்கு வழங்கும் அதேவேளை, புதிய அனுமதிகள் வழங்கப்படும்போது, எமது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

* போர்ப்பிரதேசங்களில் கைவிடப்பட்ட, அரச பதிவு பெற்ற, உரிமை மாற்றம் செய்யப்படாத அனைத்து வாகனங்களுக்கும் உரிய நட்டயீடு வழங்கப்படுவதுடன், கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்யும்போது, அவர்களுக்குத் தீர்வை விலக்களிக்கப்பட வேண்டும்.

* காப்புறுதி செய்துள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் உரிய காப்புறுதி இழப்பீட்டுப் பணம் வழங்கப்பட வேண்டும்.

* அரச வங்கிகள் வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு வழங்கிய கடன்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள், ஜனாதிபதி, வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அமைப்பின் தலைவர் அ.இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைச் சார்ந்தவர்கள், தமது இழப்பீடுகள் தொடர்பான விபரங்களை அதற்கென இந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தின் மூலமாகப் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இத்தகைய விபரங்களைத் தந்து பதிவு செய்யாதவர்கள் உடனடியாக வவுனியா மில் வீதி, 115 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச வர்த்தக, கைத்தொழில், வேளாண் அமைப்புடன் தொடர்பு கொள்ளுமாறு அந்த அமைப்பின் செயலாளர் செ.பிரபாகரன் கோரியுள்ளார்.




சிவசக்தி ஆனந்தனி ன் கூற்றுக்கு மறுப்புத் தெரிவித்து சிவாஜிலிங்கம் கடிதம்
No Image



எமது இணையத்தளத்தில் 11-12-2009 ஆம் திகதி வெளியான செய்தி ஒன்றில் தனது பெயரைக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்ததாகக் கூறி, அதற்கு மறுப்புத் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கடிதம் ஒன்றை அனுப்பு வைத்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு :

"தமிழ் மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனை திசை திருப்புவதற்காக ஒரு பகுதிதயினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார் என சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியிருந்தார்.

அவருடைய குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். வன்னிப் பகுதியில் போர் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், முடிவடைந்து மூன்று லட்சம் மக்கள் முள்வேலி முகாம்களில் அகப்பட்டிருந்ததைக் கண்டித்தும் 13 மாதங்களாக இலங்கைக்கு வராமல் இந்தியாவிலும் பிரித்தானியாவிலும் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை வீதிகளில் இறங்கி நடத்தியவன் நான் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

அது மாத்திரமல்ல, இந்திய நாடாளுமன்றத்திற்கு வெளியே பல போராட்டங்கள் நடத்தியதையும் ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக இந்தியாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்ட சூழ்நிலையில் 5 தடவைகள் பிரித்தானியாவுக்கும் 3 தடவைகள் சிங்கப்பூருக்கும் ஒரு தடைவ மலேசியாவுக்கும் சென்று இந்தியா திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

தமிழ் மக்களின் மீதான இனப் படுகொலைகளைக் கண்டித்து பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக நடைபெற்ற வீதி மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்டேன். பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன்.

எமது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக 2009 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமது ஆயுதங்களை 3ஆம் தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஊடக அறிக்கை மூலம் கேட்டிருந்தேன்.

அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் நிகழ்வில் ஆற்றிய உரை சம்பந்தமாக தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வழக்கை எதிர்நோக்கியவன் நான். சுதந்திர தமிழீழப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்கி தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்ககீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தமை என என்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. கடந்த மாதம் நாடு திரும்பிய பின்னரும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வன்னிப் போரின் போது 50 ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலை செய்த அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு மனசாட்சியுள்ள தமிழனால் முடியுமா?

வன்னிப் போரில் சிங்களப் போர் வெற்றி நாயகன் தானே என உரிமை கொண்டாடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கும் மனசாட்சியுள்ள தமிழனால் முடியுமா?

இம்மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் 22 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் 7 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தோம். ஐந்து பேர் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.

ஏனைய ஐந்து பேரும் பொறுத்திருப்போம் என்று கூறிய பொழுது ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆட்சி மாற்றத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தார்.

கலந்து கொண்ட 17 பேரில் 2 பேர் பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவரையும் ஆதரிக்க முடியாது என்ற கருத்தை முன் வைத்தனர். அவர்களில் ஒரு சிலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை ஆதரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைக்குமாறு தூண்டிய தமிழ் அரசியல்வாதி யார் என்பதனை நான் அறிவேன். துணிவிருந்தால் அந்த அரசியல்வாதி குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும் என்று சவால் விடுகிறேன்.

சிவசக்தி ஆனந்தனிடம், கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிய வேண்டாம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வெகு விரைவில் சிவசக்தி ஆனந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு சிவாஜிலிங்கம் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இங்கே தொடர்க...
ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர் மக்களும் வாக்களிக்க வழி வகுக்க வேண்டும் : No Image டேவிட் மிலிபாண்ட்


இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஓர் உண்மையான இணக்கப்பாடு ஏற்படுவது மிகவும் முக்கியம் என்றும், அங்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரும் வாக்களிக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலவரம் தொடர்பாக நேற்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

"அண்மையில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்று இலங்கை அரசு அறிவித்துள்மை சாதகமான முன்னேற்றம். இருந்தபோதிலும் மனிதநேயப் பணியாளர்களுக்கு இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று வரவும், முன்னாள் போராளிகளைச் சந்திக்கவும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் அனைத்து சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளும் அபிலாஷைகளும் நிறைவேறும் வகையில் எல்லா விடயங்களையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் வகையில் இலங்கை அரசுடனும் சர்வதேச சமூகத்துடனும் நேரடியாக பிரிட்டிஷ் அரசு இணைந்து செயற்படும்.

நியாயமான முறையில் தேர்தல்கள்.....

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலும் அதை அடுத்து நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலும் சுதந்திரமாகவும், முறைகேடுகள் இல்லாமலும் நம்பகத்தன்மையுடனும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அவ்வாறான ஒரு நடவடிக்கைதான் அனைத்து சமூகத்தின் நம்பிக்கையையும் பெற்று நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.

இலங்கையின் எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று கருதுபவர்கள் அனைவரும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஓர் அரசியல் தீர்வை முன்வைப்பதற்குப் பங்காளிகளாக இருந்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

இலங்கையில் உள்நாட்டு மோதல் ஏன் ஏற்பட்டது என்பதனை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எழுப்பியுள்ள விடயங்கள் குறித்து இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள், அந்நாட்டிடம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்" என டேவிட் மிலிபாண்ட், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்


யாழ்ப்பாணத்தில் தொடர் மழையால் மக்கள் பெரும் பாதிப்பு




No Image
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலங்களில் உள்ளவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாவாந்துறை, குருநகர், காக்கைதீவு, பருத்தித்துறையின் சக்கோட்டை, வியாபாரி மூலை, பொலிகண்டி, அல்வாய் தும்பளை ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மழை வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடுப்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தேவாலயங்களிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

மழை நீர் வடியக் கூடிய வாய்க்கால் அமைப்பு இவ்விடங்களில் இல்லாததால், வெள்ளம் தேங்கி நிற்கின்றது. தொடர்ந்து மழை பெய்வதால் வெள்ளம் அதிகரித்தே காண்ப்படுகிறது.

தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுவதால், சுகாதார வசதிகளும் இம்மக்களுக்குத் தேவைப்படுகின்றன. உணவு, குடிநீர் இன்றித் தவிக்கும் இம்மக்களை நேற்றுச் சந்தித்த சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பிஸ்கட் பக்கட்டுக்கள் வழங்கினார்.

இவர்களுக்கான நிவாரண வசதிகளைச் செய்து கொடுப்பதில் அப்பிரதேச செயலர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். வீதிகளும் வெள்ளத்தினால் நிரம்பியிருப்பதால், போக்குவரத்து நடவடிக்கைகளும் யாழ்ப்பாணத்தில் குறைந்துள்ளன. பாரிய வாகனங்களின் வரவினால் சேதமடைந்திருந்த வீதிகளில் கிடங்குகள் காணப்படுகின்றன. பல இடங்களில் பாரவூர்திகள், பஸ்கள் இத்தகைய கிடங்குகளில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தின் வீதிகள் மோசமடைந்து காணப்படுகின்றன.

மேலும் மழை தொடரும் பட்சத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மக்கள் தாமே வாய்க்கால்களை அமைத்து நீர் வடிந்தோடச் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது

டெலோ`விலிருந்து சிவாஜி, ஸ்ரீகாந்தா விலகல்



No Image

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் தாங்கள் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தி(டெலோ) லிருந்து விலகிக் கொள்வதாக கட்சித் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சையாகப் போட்டியிடுவது குறித்து அக்கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் காரணமாகவே இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏகமனதாக முடிவெடுத்திருந்த போதிலும் தமது கட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு மாறாகச் செயல்படுவதாக டெலோ கூறுகின்றது.

நேற்றிரவு டெலோ முக்கியஸ்தர்கள் கொழும்பில் கூடி, தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராய்ந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை வாபஸ் பெறுமாறு சிவாஜிலிங்கத்திடம் வலியுறுத்திக் கேட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று அறிக்கையொன்றை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் தற்போது வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் நாளை நாடு திரும்புகின்றார்.

நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு கூடி, தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்தும் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் விரிவாக ஆராயவிருப்பதாக கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
பௌத்த குருமாரை பயன்படுத்தி பொன்சேகா வேட்புமனு தாக்கல் செய்வதை தடுக்க சதி-மங்கள சமரவீர எம்.பி. குற்றச்சாட்டு


பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா வேட்புமனுத் தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கு பௌத்த குருமாரைப் பிழையான வழியில் திசைதிருப்பி தேர்தல்கள் திணைக்களத்தை முற்றுகையிடுவதற்கான சதித்திட்டத்தை நாளை (இன்று) வியாழக்கிழமை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதõக குற்றம்சாட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும், எம்.பி.யுமான மங்கள சமரவீர, சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் எமது படையினரை ஆஜர்படுத்த முடியாது. மக்களை ஏமாற்றவே அரசு இவ்வாறான பிரசாரத்தை மேற்கொள்கின்றது என்றும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை அவரது ஊடகப் பிரிவு பொறுப்பாளர்களான மங்கள சமரவீர எம்.பி. மற்றும் அநுரா திஸாநாயக்க எம்.பி. ஆகியோர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மங்கள சமரவீர எம்.பி. மேலும் கூறியதாவது:

தென் பகுதியைச் சேர்ந்த ஒமாரே கஸ்ஸப்ப தேரரைப் பயன்படுத்தி பௌத்த மதகுருமாரைப் பிழையான வழியில் திசைதிருப்பி, பஸ்கள் மூலம் கொழும்புக்கு நாளை (இன்று) வியாழக்கிழமை கொண்டுவருவதற்கு அரசாங்கம் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

பிக்குமாரைப் பயன்படுத்தி தேர்தல் திணைக்களத்தை முற்றுகையிடச் செய்து ஜெனரல் சரத் பொன்சேகாவை காலை 11.00 மணிக்குத் தடுத்துவைத்து, வேட்புமனுவைத் தாக்கல் செய்வதை தடுத்து அவரது வேட்புமனுவை நிராகரிக்கச் செய்வதற்காகவே அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது. அத்தோடு, இம் மதகுருமார் மத்தியில் அமைச்சரொருவரைச் சார்ந்த பாதாள உலகக் கோஷ்டியினரையும் வேடமணியச் செய்து, தேர்தல்கள் திணைக்கள பிரதேசத்தில் குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றி நிச்சயம் என்றால் ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? இதன்மூலம், அரசாங்கத்தின் தோல்வியும் வங்குரோத்து நிலையும் வெளிப்படுகின்றன. எந்தவொரு சதித்திட்டம் எந்த ரூபத்தில் உருவெடுத்தாலும் எமது வெற்றியை, தடுத்துவிட முடியாது. அனைத்தையும் தகர்த்தெறிவோம்.

சர்வதேச யுத்த நீதிமன்றம்

எமது படையினரை சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது. இது தொடர்பான உடன்படிக்கையில் 29 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. ஆனால், நாம் கைச்சாத்திடவில்லை.

ரணிலின் ஆட்சிக்காலத்திலும், நான் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த போதும் லக்ஷ்மன் கதிர்காமர் பதவிவகித்த போதும் சர்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடக் கோரிய போதும் நாம் கைச்சாத்திடவில்லை.

நல்லவேளை, பாதுகாப்புச் செயலாளர் பிரஜாவுரிமை பெற்றுள்ள அமெரிக்காவும் இவ்உடன்படிக்கையில் கைச்சõத்திடவில்லை. எனவே, யுத்த நீதிமன்றத்திற்கு எமது படையினரை அனுப்பமாட்டேன், நான் போவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மார்த்தட்டிக் கொள்வதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

இது படையினரின் மனவலிமையைக் குறைத்து மக்களை ஏமாற்றும் பிரசாரமாகும்.

யார் காட்டிக்கொடுத்தவர்கள்?

எமது படையினர் ஒழுக்கமுள்ளவர்கள்; எந்தவிதமான யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை. தோல்விகள், வெற்றிகள் அனைத்திற்கும் பொறுப்பேற்பதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாகவும், எனவே அவர் தேசத்துரோகியென்றும் தயாசிறி கோமின், விமல் வீரவன்ச உட்பட அரசாங்கத்தின் அடிவருடிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஜெனரல் சரத் பொன்சேகா, படையினர் அனைவரது பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறானதோர் நிலையில், இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாக கூறுவதால் என்ன நடக்கும்? உண்மையிலே இரகசியங்கள் இருக்கின்றன என்ற தோற்றப்பாடு உருவாகும். இது எமது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயலல்லவா. எனவே 41 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றி பயங்கரவாதத்தை ஒழித்து அனைத்திற்கும் தானே பொறுப்பெனக் கூறிய ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டைக் காட்டிக் கொடுத்தவரா? தேசத்துரோகியா? அல்லது, இராணுவ இரகசியங்கள் இருப்பதாகக் கூறி படையினரைக் காட்டிக்கொடுப்பவர்கள் தேசத்துரோகிகளா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். அலரிமாளிகையில் என்ன நடக்கின்றது பேசப்படுகின்றதென்பது அனைத்தும் பேச்சுக்கள் நடைபெற்று அரை மணித்தியாலயத்திற்குள் எனக்கு கிடைத்துவிடும். அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. அன்று விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் பிரதான இலக்காக இருந்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா. செத்துப் பிழைத்தவர். ஆனால், இன்று இராணுவ இரகசியங்களை வெளியிட்டாரெனக் கூறும் அரசாங்கத்தின் அடிவருடிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை 17 வருடம் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கூறுகின்றனர் என்று இங்கு கருத்துத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தேசத்துரோகிகள் யாரென்பதை மக்கள் புரிந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும். இன்று ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் அரசாங்கம் தினம் தினம் ஒரு தலையங்கத்தைத் தேடிக்கொள்கிறது. ஆனால், நிலையான பிரசார நடவடிக்கைகள் எதுவுமே அங்கில்லை. தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, அவர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள 15,000 தமிழ் இளைஞர்களை விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே ஏன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுகிறது போன்ற பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தோம். ஆனால், எதற்கும் பதிலில்லை. அன்றாடம் ஒரு தலையங்கத்தை வைத்துக்கொண்டு வங்குரோத்து பிரசாரத்தை அரசாங்கம் நடத்துகிறது. அலரிமாளிகையில் தினமும் 3000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. இது யாருடைய பணம். பாதாள உலகக் கோஷ்டியினர், சலுகைகளைப் பெற்றோர், போதைவஸ்து விற்பனையாளர்கள் போன்றோரே உதவிவருகின்றனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஜனவரி முதல் 10 இலட்சம் ரூபா

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சகல கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 10 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்படுமென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார். கிராமத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமென அமைச்சர் கூறினார்.

கலகெதரை வேத்தாவ கனிஷ்ட பாட சாலைக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். எமது கட்சியின் கொள்கை அனைத்து கிராமங்களுக்கும் நிதி வழங்கு வதாகும் ஆனால் மற்றைய கட்சிகளின் கொள்கை கொழும்புக்கு நிதியை கொண்டு வருவதாகும். இதுவரை இருந்த அரசாங்கங்கள் மேல் மாகாணத்துக்கே நிதியை செலவிட்டன. அதேபோல் நாட்டின் 52 சதவீத நிதி மேல் மாகாணத்திலேயே உள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனையின் மூலம் மட்டுமே முதல் முறையாக இவ்வாறு கிராமங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கிராமங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன.


மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல்

23 வேட்பாளர்கள் கட்டுப்பணம்: ராஜகிரிய தேர்தல் செயலக பகுதியில் பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. நேற்று ஒரு அரசியல் கட்சியும் ஒரு சுயேச்சை உறுப்பினரும் கட்டுப்பணம் செலுத்தியதாகத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்தது.

இதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 4 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரம் புலிகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது

தவறாக பயன்படுத்தப்படவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

நிறைவேற்று னாதிபதிக்கான அதிகார த்தை நான் தவறாகப் பயன்படுத்தியதாக எவரும் கூற முடியாது. புலிகளைத் தடை செய்தமை, புலிகளுடனான உடன்படிக்கையை இல்லாதொழித்தமை போன்றவற்றிற்கே அதனைப் பயன்படுத்தி யுள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேவேளை, நாம் திறைசேரியிலிருந்து பெருமளவு நிதியைச் செலவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கே இந்த நிதியைச் செலவிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, எந்த முறைமையின் கீழாவது இலவசக் கல்வியையோ, சுகாதாரத்தையோ இல்லாதொழிக்க முற்படவில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்று கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, திருமதி பேரியல் அஷ்ரப், ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயரத்ன ஹேரத், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

மனிதாபிமான யுத்தத்தில் ஈடுபட்ட படைவீரர்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூற்றுக்கள் சர்வதேச அளவில் பெரும் அசெளகரியங்களுக்கு நாடு முகங்கொடுக்க காரணமாகியுள்ளன.

இதனால் பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் மட்டுமன்றி முழு நாடும் பாதிக் கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் ஒரு தவறான கூற்றின் மூலம் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்க சிலர் முனைகின்றனர்.

இந்தவறான கூற்று காரணமாக 58வது படையணியினர் வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள துடன், அவர்களுக்கான வெளிநாட்டு விசாவும் மறுக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் எதையும் செய்ய முடியும் என்று சொல்பவர்கள் புலிகளுடனான உடன்படிக்கையை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தபோதும், பாராளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரம சிங்கவே புலிகளுடன் உடன்படிக்கையை மேற்கொண்டார். நிறைவேற்று ஜனாதி பதியால் முடியாததை ரணில் விக்கிரமசிங்க செய்தார், ஜனாதிபதியால் வெறுமனே அதனைப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்தது.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கடல் வர்த்தகத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்கும் வகையில் ஐந்து துறைமுகங்கள் ஒரே சமயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

எந்தகைய அபிவிருத்தி முன்னேற்றங்களை நாம் எட்ட முடிந்தாலும், நல்லொழுக்க முள்ள இளைய சமுதாயமொன்றைக் கட்டியெழுப்ப முடியாமற் போனால் எதிலும் பயனில்லை.

அதனைக் கருத் திற்கொண்டே நாம் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்ட திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். எமது கலா சாரத்தை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

சமூகத்தையும், பிள்ளைகளையும் பாது காத்து புதிய யுகமொன்றை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளையே நாம் மேற்கொண்டு வருகிறோம்.

நாம் எந்தளவு நிதியைச் செலவிட்டும் பயனில்லை. தொழில் வாய்ப்புக்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் பயனில்லை. எமது எதிர்கால தலை முறையினர் சிறந்த கல்விமான்களாக, ஒழுக்கம் மிகுந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.

இதற்கான ஒரு வழிமுறையாகவே பொது இடங்களில் புகை பிடித்தல், போதை ஒழிப்பு போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அத்துடன் இவ்வருடத்தை ஆங்கில மொழி மற்றும் தொழில்நுட்ப வருடமாகவும் பிரகடனப் படுத்தியுள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற பதிவு செய்யப் பட்ட உதவி மருத்துவர்கள் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஜனாதி பதிக்குத் தமது பூரண ஆதரவை வழங்கு வதாக உறுதியளித்தனர்.






மேலும் இங்கே தொடர்க...