14 அக்டோபர், 2010

இயக்கச்சி மீள்குடியேற்றப் பகுதியில் வெடிப்புச் சம்பவம் : மாணவர் படுகாயம்


இயக்கச்சியில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மீள் குடியமர வந்த மேற்படி குடும்பத்தினர் தங்கள் வீட்டைத் துப்புரவு செய்து, குப்பைகளைக் கூட்டித் தீயிட்ட வேளை, அவற்றுக்குள் இருந்த வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்தது. இதில் இயக்கச்சி கோவில் வீதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் துளசிகரன் என்பவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் : ததேகூ குற்றச்சாட்டு

இடம் பெயர்ந்த சிங்கள மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவித ஆட்சேபனைகளும் கிடையாது.

ஆனால் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் நேற்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த 1 லட்சதத்து 65 ஆயிரம் சிங்கள மக்களையும் மீளக் குடியேற்ற வேண்டும் என்ற கூற்றுக்குப் பதிலளித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"கடந்த 30 வருடகால யுத்தத்தின்போது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அன்று சகலருமே இடம்பெயர்ந்தனர். ஆனால் மிக அதிகமாக இடம் பெயர்ந்தவர்கள் தமிழர்கள்தான்.

வடக்கு, கிழக்கிலிருந்து 12 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அதற்கும் காரணம் யுத்தம்தான்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி பயணம்



பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி நோக்கிப் பயணமானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் டில்லியை நோக்கிபயணமானதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். இவரது புதுடில்லி விஜயம் குறித்து பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்கள் குறித்தே அனைவரும் சிந்திப்பதாகவும், ஆனால் இடம்பெற்ற யுத்தத்தினால் 1 லட்சத்து 65 ஆயிரம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களே தற்போது யாழ். ரயில் நிலையத்திலும், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்திலும் நிலைகொண்டு தமது உரிமைகளுக்காகப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகையால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள சிங்கள மக்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், இதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த நாடு சகலருக்கும் சொந்தமானது எனக் குறிப்பிட்ட அவர், சிங்கள மக்கள் எங்கும் சென்று வாழ்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் அதிகளவு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்: எம்.சரவணானந்தன்

வடக்கில் அதிகளவு தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் அபிவிருத்தி நிறுவனமொன்றின் முன்னணி ஆய்வாளர் முத்துகிருஸ்ணன் சரவணானந்தன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விவசாயத் துறையில் அதிகளவு முதலீடுகள் அவசியப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 ஆண்டு காலமாக தங்கி வாழும் மனோ நிலையைக் கொண்டுள்ள மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு உடனடியாக தனியார் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் உதவிகளை நம்பியே யுத்த பிரதேச மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையில் உடனடி மாற்றம் அவசியம் எனவும், மக்களின் வாழ்வதாரத்தை வலுப்படுத்தி அவர்களின் வருமான வழிகளை ஸ்திரப்படுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய முறையில் தனியார் முதலீடுகள் மேற்கொள்ளபடாவிட்டால் வன்னி தொடர்ந்தும் பயனற்ற பிரதேசமாக ஒதுக்கப்பட்டுவிடக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னிப் பொருளாதாரத்தில் அரசாங்க மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பணப் புழக்கமே அதிகளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயம் கைத்தொழில் போன்ற துறைகளுக்கான பங்களிப்பு 20 வீதமாகவே காணப்படுகின்றதென தெரிவித்துள்ளார்.

வன்னிப் பிரதேசத்தின் சனத் தொகைப் பரம்பல் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகவும், ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 70 நபர்கள் என்ற ரீதியில் சனத்தொகைப் பரம்பல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீள் குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்த வகையிலும் போதுமானதல்ல என பிரதேச மக்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மேல் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த கைதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். திக்வல்ல சியம்பலாப்பே பகுதியைச் சேர்ந்த 62 வயதான கருணாரட்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாது: சிவாஜிலிங்கம்

நிவித்திகல குக்குலகல தோட்டத்தில் மக்கள் தொடர்ந்து வாழ முடியாத நிலை காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்ம் தெரிவித்தார்.

இன்று நிவித்திகல குக்குலகல பிரதேசத்துக்கு விஜயம் செய்த சிவாஜிலிங்கம் அங்குள்ள தமிழ் மக்களை சந்தித்துள்ளார்.

இது குறித்து எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவித்த எம்.கே சிவாஜிலிங்கம்,

"நான் இன்று நிவித்திகல குக்குலகல பிரதேச மக்களை நேரில் சென்று சந்திதேன். இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இம் மக்கள் இங்கு தொடர்ந்து தங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை 10 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேறியுள்ளதாகவும் தற்போதும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் குடும்பங்களின் 25 வீடுகள் பெருபான்மை இனத்தவரால் தாக்கப்பட்டுள்ளதோடு உடைமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மட்டுமே வந்து தம்மை பார்வையிட்டதாகவும், எந்த ஒரு தமிழ் அமைச்சரும் வரவில்லை என மக்கள் கவலை தெரிவித்தனர்" என மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். சிங்கள மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பான கருத்துப் பகிர்வு


யாழ். திரும்பியுள்ள சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் என்ற கருப்பொருளிலான பகிரங்க கருத்துப் பகிர்வு நிகழ்வொன்று எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கருத்துப் பகிர்வு நிகழ்வை யாழ். ஆய்வறிவாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் கருத்துரை வழங்க அனுமதிக்கப்படுவரென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

சவூதி அரேபியாவுக்கு இலங்கையரை அனுப்புவதில் எவ்விதத் தடையுமில்லை


சவூதி அரேபியாவுக்கு இலங்கையர்களை வேலைவாய்ப்புக்காக அனுப்புவதில் எவ்வித தடையுமில்லை. இரு அரசாங்கங்களுக்குமிடையில் அவ்வாறு எத்தகைய உத்தியோகபூர்வ முடிவு களுமில்லையென வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக முகாமையாளர் டி. பி. வீரசேகர தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சிலர்

மேற்கொண்டுவரும் பிரசாரங்களை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்ட அவர் சவூதிக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

வருடாந்தம் இலங்கையிலிருந்து 60,000ற்கு மேற்பட்டவர்கள் வேலைவாய்ப் பிற்காக சவூதி அரேபியாவுக்கு பணியகத்தால் அனுப்பப்பட்டு வருகின்றனர். அத்துடன் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பல்வேறு தொழில் துறைகளில் பணிபுரிகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கும் சவூதி அரேபிய ஆட்திரட்டல் குழுவுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்று தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதாக அறிய முடிகின்றது. அது குறிப்பிடத்தக்க பிரச்சினையொன்றல்ல. இலங்கையர்களை வேலைவாய்ப்புக்கு அனுப்புவதற்கு இது எவ்விதத்திலும் எமக்கு தடையாக அமையாது.

இரு அரசாங்கங்களுக்கிடையில் அத்தகைய எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானங்களும் இல்லாத நிலையில் நாம் அதனைக் கவனத்திற்கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது பற்றி ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு


எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு செயற் குழுவின் அமர்விற்குத் தலைமை தாங்கி கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமான், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரத்னசிறி விக்கிரமநாயக்க, ராஜித சேனாரத்ன, தினேஷ் குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, காமினி லொகுகே ஆகியோருடன் அமைச்சின் செயலாளர்கள் உயரதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்:-

தேசிய நெல் உற்பத்தி உள்ளிட்ட சகல விவசாய உற்பத்தி மேம்படுத்தலின் போதும் சர்வதேச சந்தைவாய்ப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சில காலம் கைவிடப்பட்ட நிலையிலிருந்த விவசாய ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வசதிகளைச் செய்துள் ளது.

இதன்மூலம் விவசாயிகளுக்குத் தெளிவூட்டி நிரந்தரமான அபிவிருத்திக்கு விவசாயத்துறையின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதும் முக்கியமாகும்.

முதலீட்டு சபையின் வரி மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து தோசைக்கடைகள் மற்றும் சனீஸ் ரெஸ்டூரன்களைக் கட்டியெழுப்பிய யுகத்தை நினைவுபடுத்திய ஜனாதிபதி, இனிமேலும் அத்தகைய நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி, முட்டை உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க இடமளிக்கக் கூடாது எனவும் அவர் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள் ளார்.
மேலும் இங்கே தொடர்க...

குத்துச்சண்டையில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் மஞ்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்து




இந்தியாவின் புதுடில்லி நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 72 வருடங்களின் பின்னர் குத்துச்சண்டையில் முதலாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்றது.

56 கிலோகிராம் எடைப் பிரிவில் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி இலங்கைக்கான முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை நேரப்படி நேற்று மாலை 3.20 அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர் மஞ்சு வன்னியாராச்சி வேல்ஸ் நாட்டின் சீன் மெக் கோல்ரீக் என்பவருடன் மோதினார். இந்தப் போட்டியில் 16-14 புள்ளி அடிப்படையில் வெற்றியீட்டினார்.

கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட மஞ்சு வன்னியாராச்சி (வயது 30)க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உடனடியாக தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஊடாக ஜனாதிபதி உடனடியாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இப்போட்டிக்காக புதுடில்லி சென்றுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் சீ. பி. ரத்னாயக்கவும் மஞ்சுவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பொதுநலவாய போட்டிகளில் 56 கிலோ கிராம் எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை பெற்ற இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னர் 1933 ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை 56 கிலோ எடைப்பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

அதன்பின்னர் 1950 ஆம் ஆண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஞ்சுவுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தபோது

மஞ்சு வன்னியாராச்சி ஜனாதிபதியுடன் உரையாடினார். அதன் பின்னர் கருத்து தெரிவித்த மஞ்சு வன்னியாராச்சி விளையாட்டுத்துறைக்காக ஜனாதிபதி காட்டும் அக்கறை, ஆர்வம் தொடர்பாக தான் மிகவும் மகிழ்வதாக தெரிவித்தார்.

1995, 1996, 2004, 2005 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டைப் போட்டிகளில் மூன்று தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களையும் மஞ்சு வன்னியாராட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...