23 மே, 2011

பின்லேடனை கொன்றதையொத்த நடவடிக்கை மீண்டும் பாகிஸ்தானில் முன்னெடுக்கப்படலாம்: ஒபாமா

பாகிஸ்தானின் போராளிக் குழுத் தலைவர் இன்னொருவர் இருப்பது கண்டறியப்பட்டால் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு முன்னெடுக்கப் பட்டதை யொத்த இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார்.

தனது ஐரோப்பிய விஜயத்தை முன்னிட்டு "பிபிசி' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலோ அல்லது ஏனைய இறைமையுள்ள பிராந்தியமொன்றிலோ அல் கொய்தாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லாஹ் ஓமரோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என பராக் ஒபாமாவிடம் வினவப்பட்ட போது அமெரிக்கா தேவைப்பட்ட நடவடிக்கையை எடுக்கும் என ஒபாமா தெரிவித்தார்.

""அமெரிக்காவை பாதுகாப்பது தான் எமது வேலையாகும்'' நாங்கள் பாகிஸ்தானின் இறைமைக்கு மிகுந்த கௌரவமளிக்கின்றோம். ஆனால் எமது மக்களையும் எமது நட்புறவு நாடுகளிலுள்ள மக்களையும் கொல்வதற்கு எவராவது திட்டமிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது'' எனக் கூறிய பராக் ஒபாமா எமது நடவடிக்கையை மீறி இத்தகைய செயற்றிட்டங்கள் செயலுருவம் பெறுவதை நாம் அனுமதிக்க முடியாது'' என வலியுறுத்தினார்.

சவூதி அரேபியாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒசாமா பின்லேடன் அமெரிக்க விசேட படையினரால் பாகிஸ்தானின் அபோதாபாத்திலுள்ள வசிப்பிடத்தில் வைத்து கொல்லப்பட்டார் என்பது தெரிந்ததே .
மேலும் இங்கே தொடர்க...

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சமூகம் செயல் முனைப்பற்றிருந்தமைக்கு காரணம் என்ன?:

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. பிரதிநிதியுமான ஜான் இஜ்லண்ட் தெரிவித்துள்ளார்.ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளாலேயே அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2 ஆவது ஆண்டு நிறைவினையும் நிபுணர் குழு அறிக்கையினையும் முன்னிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக் குவிப்பினைப் பெறுவதற்கும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் கடப்பாடுகளை வலியுறுத்தவும் கடந்த 10 ஆம் திகதி நோர்வே தமிழ் கற்கை மையம் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் இக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.

இக் கருத்தரங்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் தலைமையில் இடம்பெற்றது.

ஜான் இஜ்லண்ட் தனது கருத்துரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்படுவது வன்முறை சார்ந்த அவலங்களுக்கு முகம் கொடுத்த தேச மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு பொறுப்புக் கூறப்பட்டு திருத்தப்படாவிடின் நடந்தேறிய அவலங்களும் தவறுகளும் மீண்டும் நடந்தேறும் அபாயம் உள்ளது. எனவே உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்.

இரு தரப்பு மீதான போர்க் குற்றச் சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். வென்ற தரப்பான கொழும்பு அதிகார மையத்தின் மீதே பொறுப்புக் கூறும் வகையிலான கவனம் குவிக்கப்பட வேண்டும்.

தேசிய அரசுகள் தமது சொந்த மக்களை இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், இனத்துடைப்பு மற்றும் மனிதத்திற்கு எதிரான மீறல்களிலிருந்து பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் ஒருமித்தும் விரைவாகவும் வலுவானதுமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என 2005 இல் இடம்பெற்ற ஐ.நா. உயர் மட்டக் கூட்டத்தில் 190 நாடுகள் உறுதியெடுத்திருந்தன.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான விரைந்த செயற்பாடு லிபியா விவகாரத்தில் நடைமுறைப்பட்டது. ஏலவே எச்சரிக்கப்பட்டிருந்த போதும் 2009 இல் இலங்கைத் தீவில் ஐ.நா உட்பட்ட அனைத்துலக சமூகம் நடந்தேறிய அவலமான பேரழிவினைத் தடுக்கத் தவறிவிட்டன.

இறுதிக் கட்டப் போரின் போது நலன்சார் அரசியல் காரணிக்கு அப்பால் அனைத்துலக சமூகம் இரண்டு மூலக் காரணிகளால் செயல் முனைப்பு இல்லாதிருந்தது. முதலாவது காரணி, ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கின.

இரண்டாவது காரணி, பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக பேக்ஷிரின் விளைவு, விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமையாகும்.

நோர்வேக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதேவேளை, அதன் வகிபாகம் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது மிக அவசியமானது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. மனித உரிமை பேரவை கோரினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை: மார்ட்டின்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான முதன்மையான அதிகாரம் இலங்கை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது, அவ்வாறான குற்றச் செயல்களுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அதிகாரமும் அவ்வரசாங்கத்துக்கே உரித்துடையதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேச்சாளர் நெசர்கீ மேலும் கூறியுள்ளதாவது,

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றினால் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். மேற்படி அமைப்புகள் எந்தவித கோரிக்கைகளையும் எடுக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு விசாரணைக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்திலேயே யுத்தக் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 30 ஆம் திகதி முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஆரம்பமாகவிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் பெரிய தம்பனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

மன்னார் பெரிய தம்பனையில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

பெரிய தம்பனைக் குளக்கரையில் உள்ள மரமொன்றின் கீழ் புதைக்கப் பட்டிருந்த 25 ரவைகள் மீட்கப்பட்டதாகவும் இவற்றுள் 15 ரவைகள் துருப்பிடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மிகுதி ரவைகள் பெரிய தம்பனை இராணுவ முகாமில் ஒப்படைக்கப் பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கு மாகாண சபை உறுப்பினர; கிருஸ்ணானந்தராஜாவை பார்வையிட உறவினர்களுக்கு பொலிஸார் அழைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர; கிருஸ்ணானந்தராஜாவை பார்வையிட உறவினர்களுக்கு பொலிஸார் அழைப்பு செயலாளர் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா அவர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கடந்த 16-05-2011 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு சந்தேகத்தின் பேரில், எதுவித காரணங்களும் வீட்டாருக்கோ அல்லது கட்சித் தலைமைக்கோ தெரிவிக்காமல் விசாரனைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட மாகாண சபை உறுப்பினரின் குடும்பத்தார் நாளை சனிக்கிழமை (21-05-2011) கொழும்பு 4ம் மாடிக்குச் சென்று காலை 09-00 –12-00 மணிக்குள் பார்வையிடலாம் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கௌரவ கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் கொழும்புக்குச் சென்ற கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபப்~ அவர்களுக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்று முடிந்த பேச்சுவார்த்தையின் பயனாகவே குறித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா அவர்களை உறவினர்கள் நாளை பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பில் அண்மையில் மதியழகன் என்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரின் கொலைச் சம்பவத்தில் இவருக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே விசாரணைக்கென்று கொழும்பிலிருந்து வந்த குற்றத் தடுப்பு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அவரின் விடுதலை இன்னும் ஒரு வாரத்திற்கு விசாரணைகள் முடிந்த பிறகே விடுவிக்கப்படுவார் அல்லது நீதி மன்றத்தில் ஆஜராக்கப்படுவார் என்றும் நேற்றைய ஜனாதிபதி சந்திப்பின் போது கூறப்பட்டதாகவும் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

2400 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம் அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் வைபவம்

தேசியக் கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடகால டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 2400 பேருக்கு நாளை (24ம் திகதி) ஆசிரியர் நியமனம் வழங்கப் படவுள்ளது.

இவர்களுக்கு ஆசிரிய சேவை நியமனக் கடிதம் வழங்கும் வைபவம் அலரி மாளிகையில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தலைமையில் நடைபெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆசிரியர் நியமனக் கடிதம் கையளிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி தெரிவித்தார்.

இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ள தாகவும் உரிய நேரத்திற்கு சமுகமளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும், மேலதிக செயலாளர் முகம்மட்தம்பி மேலும் தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில், தேசிய கல்வியியற் கல்லூரிகளில் மூன்று வருட டிப்ளோமாப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த சுமார் 2400 பேர் நாளைய தினம் நியமனக் கடிதம் பெறவுள்ளனர். இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு – 03 தரம் ஒன்றுக்கு இவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

புதிய டிப்ளோமாதாரிகளில் அதிகமானவர்கள் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நியமனத்தின் மூலம் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் முற்றாக நிவர்த்திக்கப்படும் என மேலதிக செயலாளர் முகம்மட்தம்பி குறிப்பிட்டார்.

தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தவிர்ந்த எஞ்சியவர்கள், மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களின் அடிப்படையிலும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் வழங்கிய பட்டியலின் பிரகாரமும், மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களையும் கல்வி அமைச்சே வழங்கவுள்ளது.

நாளைய வைபவத்தின் போது, மாகாணப் பாடசாலை ஆசிரியர்களும், ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதம் பெறவுள்ளனர்.

ஆசிரியர்களில் அதிகமானவர்கள், அவர்களின் வதிவிடத்தை அண்டிய பாடசாலைகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளனர். வெற்றிடங்களின் அடிப்படையில், பாட ரீதியாக ஒருசில ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும், மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடங்களைப் போன்று பிற மாகாணப் பாடசாலைகளுக்கு எந்தவொரு ஆசிரியரும் நியமனம் செய்யப்படவில்லை. கடந்த வருடங்களில் பிற மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலதிக செயலாளர் குறிப்பிட்டார்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரு வருட உள்ளகப் பயிற்சியினையும் ஒரு வருட பாடசாலைக் கற்பித்தல் பயிற்சிகளையும்பெற்ற டிப்ளோமாதாரிகளே ஆசிரியர் நியமனக் கடிதம் பெறவுள்ளனர். இவர்களில் தமிழ், ஆங்கிலம், சிங்களம், மொழி டிப்ளோமாதாரிகள் அடங்குவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆளுமை பயிற்சித்திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை

பல்கலைக்கழகம்

உயர் கல்வியமைச்சு அறிவிப்பு; திட்டமிட்டபடி தொடரும்

பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆளுமை பயிற்சி வழங்கும் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

உச்சநீதிமன்றம் பல்கலைக்கழகத்துக்குத் தகுதி பெறும் மாணவர்களுக்கான ஆளுமை பயிற்சியை இடைநிறுத்துமாறோ அல்லது ஒத்திவைக்குமாறோ எந்தவித மான உத்தரவுகளையும் பிறப்பிக்கவி ல்லையென உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண அரசாங்கத் தகவல் திணைக்களத் துக்குத் தெரிவித்துள்ளார்.

ஆளுமை பயிற்சித்திட்டத்தை ஒத்திவைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் எம்மிடம் கோரியிருந்தது. எனினும், இப்பயிற்சித் திட்டத்தை 23ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப் பட்டிருப்பதுடன், இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் நாம் நீதிமன்றத்துக்குப் பதிலளித்துள்ளோம் என்றார்.

மூன்று வாரங்களைக்கொண்ட இந்த ஆளுமை பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தங்குமிட வசதிகள், உணவு, சீருடை என்பன வழங்கப்படும். 185 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 22,000 மாணவர்களுக்கும் ஆளுமை பயிற்சி கட்டாயமாக வழங்கும் திட்டமொன்றை உயர்கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது. 10,000 மாணவர்கள் இன்று தமது பயிற்சிகளை ஆரம்பிக்கின்றனர்.

இந்த ஆளுமை பயிற்சியானது மாணவர்களுக்கான இராணுவப் பயிற்சி இல்லையென்று தெரிவித்திருக்கும் அவர், பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மாணவர்கள் தமது திறமைகளையும், ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே இப்பயிற்சி வழங்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நெடியவன் கைது: உன்னிப்பாக கவனிக்கிறது இலங்கை

புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகளை உன்னிப் பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெடியவனின் கைது மற்றும் அவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் பற்றி அவதானித்து வருவதுடன், நெடியவனின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையைப் பாதிக்குமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நோர்வேயில் புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சியான கொன்ச வேர்டிவ் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. புலி பயங்கரவாதிகள் நோர்வேயில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என நோர்வே எதிர்க்கட்சி குறிப்பிட்டு ள்ளது.

புலிகள் அமைப்புக்காக ஐரோ ப்பா உட்பட பல்வேறு நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயில் வசித்து வந்த நெடியவன் ஹொலன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறைச்சாலைகளில் கூரையில் ஏறி கைதிகள் போராட்டம்

வெலிக்கடை, போகம் பரை மற்றும் மஹர சிறைச் சாலைகளின் கூரைகளில் ஏறி சுமார் 50 பேர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வெலிக்கடை சிறையின் கூரையில் 25 கைதிகளும், போகம் பரை சிறையில் 21 கைதிகளும், மஹர சிறையில் நால்வரும் இவ்வாறு கூரைகளில் ஏறி உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட்டதோடு பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை வெலிக்கடை சிறையின் கூரையில் ஏறிய நான்கு கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1989க்கு முன்னர் இடம்பெற்ற பொது மன்னிப்பு காலத்தை மீண்டும் செயற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மரண தண்டனை மற்றும் ஆயுட் தண்டனை கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று சிறைக் கைதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகநிலை தோன்றியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க தெரிவித்தார்.

மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து மஹர சிறைச்சாலையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய கைதிகள் போராட்டத்தைக் முடித்துக்கொண்டு கீழே இறங்கியுள்ளதாகவும், போகம்பரை சிறையின் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் கைதிகளும் இதேபோன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

நல்ல ஒழுக்கத்தை பேணும் கைதிகள் வருடத்துக்கு ஒரு முறை வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான சிபாரிசு நீதி அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கைதியின் பிரதிநிதிகள் ஏற்றிக்கொண்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறினார்.

கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளை கீழே இறங்கச் செய்யும் அடிப்படையில் செயலாற்றவில்லை என்றும், அவர்களுக்கு வழங்கக் கூடிய நிவாரணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 900 பேர் 5ம் திகதி சமூகத்தில் இணைப்பு






புனர்வாழ்வு பெற்ற 900 பேர் எதிர்வரும் 5ஆம் திகதி சமூகத்தில் இணைக்கப் படவுள்ளனர்.

அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க தெரிவித்தார்.

சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படு வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 900 பேரின் பட்டியல் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புனர்வாழ்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் சுயதொழில் பயிற்சிகள் வழங் கப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளுடன் உள்ள முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் தொடர்பாக இம்முறை அக்கறை செலுத் தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் 4095 பேர் தற்போது புனருத்தாரண முகாம்களில் உள்ளதாகவும் அவர்கள் படிப்படியாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவார்களென்றும் அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...