10 ஏப்ரல், 2010

விமான விபத்தில் போலந்து அதிபர் உட்பட 132 பேர் பலி

மாஸ்கோ, ஏப்.10- போலந்து அதிபர் லெக் காக்ஸிநிஸ்கி இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மனைவி, முக்கிய அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட சுமார் 132 பேர் அந்த விமான விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் ரிஸ்ஸக்ஷ்ர்ட் க்கúஸக்ஷ்ராஸ்கி, நாடாளுமன்றத் துணைத் தலைவர் ஜெர்ஸி ஸ்மஜ்ஸின்ஸ்கி, அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி லாடிஸ்லா ஸ்டாசியக் உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவில் உள்ள ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

விமான நிலையம் அருகேயுள்ள மரங்களில் அந்த விமானத்தின் இறக்கைப் பகுதிகள் மோதியதால் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது 22 ஆயிரம் போலந்து ராணுவ அதிகாரிகளை சோவியத் படைகள் படுகொலை செய்ததன் 70வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போலந்து அதிபரும் முக்கிய பிரமுகர்களும் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

போலந்து அதிபர் உட்பட அந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்ததை ஸ்மோலென்ஸ்க் நகர மேயர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், போலந்து நாட்டின் 'டிவிஎன் 24' செய்தித் தொலைக்காட்சியும் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

. மக்கள் விரும்பும் போது, களத்தில் இறங்குவேன்: அரசியலுக்கு, என்னை நான் தயார்படுத்தி வருகிறேன்; நடிகர் விஜய் பரபரப்பு பேட்டி

மலையாளத்தில் வெளிவந்த `பாடிகார்ட்' என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூரில் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து விஜய்-அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பு இடைவேளையில் விஜய், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு விஜய் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்கள் `மக்கள் இயக்கம்' எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?

பதில்:- மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிகர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. கம்ப்ஸிட்டர்கள் வழங்குதல், ஏழைகளுக்கு இலவச திருமணம் என்று பல்வேறு பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இத்தகைய நற்பணிகளை விளம்பரப்படுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால், அது ஒரு மவுன புரட்சியாக நாளுக்கு நாள் வேகத்துடன் நடந்து வருகிறது. மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

கேள்வி: உங்கள் இயக்கத்துக்கு எந்த மாதிரியான இளைஞர்களை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- "உண்மையான உணர்வுள்ள நூறு இளைஞர்கள் என்னுடன் வாருங்கள். இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்'' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அந்த பேச்சின் வலிமை, தன்னம்பிக்கை எனக்கு பிடித்த விஷயம். அதே பாணியில்தான் உண்மையான உணர்வுள்ள, சமூக அக்கறை கொண்ட துடிப்பான இளைஞர்களை என் மக்கள் இயக்கத்துக்கு எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் உங்களை நம்பி வந்த ரசிகர்களை ஏமாற்றி விடுவீர்களோ என்ற அச்சம் உள்ளதே?

கேள்வி:- நான் எந்த பணியில் ஈடுபட்டாலும் நூறு சதவீதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும், சூழலும் முக்கியம் இல்லையா? அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரை சேர வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை நான் தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன். எப்போதும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அதை பலப்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்தால், நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்கி களப்பணி ஆற்றுவேன். நான் ஒரு முடிவெடுத்தால், அந்த முடிவை நான் நினைச்சாக்கூட மாத்திக்க மாட்டேன். இது, சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படித்தான்.

கேள்வி:- மக்களுக்கு பிரச்சினை என்றால் குரல் கொடுப்பதுடன், மக்களுக்காக முன்னின்று போராடவும் தயங்கமாட்டேன் என்று முன்பு கூறினீர்களே?

பதில்:- அதில் எந்தவித மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்காரவைத்து அழகு பார்த்த அருமை மக்களுக்காக, போராட எப்போதும் நான் தயார்நிலையில் இருக்கிறேன். என்னை ஒரு சகோதரனாக, மாணவ சமுதாயத்தினர் ஒரு சக மாணவனாக, பெரியோர்-தாய்மார்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி போராடுவேன். என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும், என்னை நம்பி என் வழியை பின்பற்றும் என் ரசிகர்களையும் கைவிட மாட்டேன்.''

இவ்வாறு விஜய் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9-வது திருமணம்: 78 வயதில் 49 வயது நண்பரை மணக்கிறார்

பிரபல ஆலிவுட் நடிகை எலிசபெத் டெய்லருக்கு தற்போது 78 வயதாகிறது. திருமணம் செய்வதிலும், விவாகரத்து செய்திலும் இவர் உலகப்புகழ் பெற்றவர். இதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். கடைசியாக லேரி என்ற கட்டிட தொழிலாளியை திருமணம் செய்தார். அவருடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலிசபெத் டெய்லர் 1996ல் அவரை விரட்டிவிட்டு விட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் இருந்தார். 2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.

இந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயதுகாரரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார். இவர் எலிசபெத்தின் நீண்ட நாள் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர்களின் புதிய புகலிடக் கோரிக்கை இடைநிறுத்தம் : ஆஸி. அறிவிப்பு


அவுஸ்திரேலியாவானது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலுள்ள மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து புதிய புகலிடக் கோரிக்கைகளையும் உடனடியாக இடைநிறுத்தம் செய்வதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மேற்படி நாடுகளின் சூழ்நிலைகள் மாற்றமடைவதை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் கிறிஸ் ஈவன்ஸ் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையானது ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பலமான செய்தியொன்றை அனுப்புவதாக அமைவதாக அவர் கூறினார்.

படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடையும் புகலிடம் கோருபவர்களின் தொகை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருபவர்களில் அநேகர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களாவர். புகலிடம் கோருபவர்கள் 70 பேரை ஏற்றி வந்த படகொன்று இந்து சமுத்திரத்தில், அவுஸ்திரேலிய தடுப்பு முகாமைக் கொண்டுள்ள கிறிஸ்மஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் மூழ்கியதையொட்டியே அவுஸ்திரேலியாவின் இந்த புதிய அறிவிப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டில் தற்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது முதற் கொண்டு புகலிடம் கோருபவர்களை ஏற்றி வந்த 100க்கு மேற்பட்ட படகுகள் அந்நாட்டு கடற் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டன.

மேற்படி விவகாரம் குறித்து அந்நாட்டு பிரதமர் கெலின் ருத் கடும் அரசியல் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடம் கோருபவர்களின் விஸா விண்ணப்ப செயற்கிரமங்களை உடனடியாக இடைநிறுத்தம் செய்வது படகுகளின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோதமாக பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.

புகலிடம் கோருபவர்களின் தொகை அதிகரிப்பதானது இந்த வருடம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய தேர்தலில் உணர்வுபூர்வமான ஒரு விடயமாக அமைவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை நிலைமைகளை எதிர்வரும் 3 மாத காலத்திற்கும் ஆப்கானிஸ்தான் நிலைமைகளை எதிர்வரும் 6 மாத காலத்திற்கும் மதிப்பீடு செய்யவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இடை நிறுத்தப்பட்ட இந்த புகலிடக் கோரிக்கைகள் மேற்படி நாடுகளுக்கு வழங்கப்பட்ட காலத் தவணையின் பிற்பாடு மீள் மதிப்பீடு செய்யப்படும்.

புகலிடம் கோருபவர்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மட்டும், அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என அந்நாடு நம்புகிறது.

முறையற்ற விதத்தில் படகுகளில் வந்து புகலிடம் கோருவது தடுத்து வைக்கப்படுவதற்கு தொடர்ந்து வழிவகை செய்கிறது. ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு தொகை சட்டங்களை அவுஸ்திரேலியா வலுப்படுத்தி வருகிறது.

ஆட்களைக் கடத்துபவர்களுக்கு நிதி மற்றும் ஆதரவு வழங்கப்படுவதைத் தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் புதிய சட்டவிதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

மோசடிகளும் வன்முறைகளுமே வாக்களிப்பு வீதம் குறையக் காரணம் : திஸ்ஸ அத்தநாயக்க

நாடாளுமன்றத் தேர்தலில் பொது மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கு அரசாங்கத்தின் தேர்தல் மோசடிகளும் வன்முறைகளுமே பிரதான காரணமாக அமைந்தன. தேர்தல் முடிவுகளை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி இன்று அறிவிக்கும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் குறிப்பிட்டளவு பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இதற்கான காரணிகளை இனங்கண்டு தேவைப்படின் கட்சியில் மாற்றங்களை கொண்டு வந்து புதிய வழிமுறைகளையும் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வழமை போலவே அரசாங்கத்தின் வன்முறைகளும் மோசடிகளும் எதிர்க்கட்சிகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இதனாலேயே ஆரம்பத்திலிருந்து நாடாளுமன்றத் தேர்தல் சுயாதீனமாக நடைபெறாது என நாம் கூறியிருந்தோம்.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கவோ, தேர்தல் சட்டங்களை மதிக்கவோ, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பொது மக்களின் வாக்குரிமைகளை மீறியே தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கின்றது.

இதனால் பொது மக்கள் தேர்தல் மீது நம்பிக்கை வைக்கவில்லை. தேர்தல் சுயாதீனமாக நடைபெறாத பட்சத்தில் அதன் நம்பகத் தன்மை குறைந்தே காணப்படும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதித் தேர்தலை விட பாரிய வாக்கு வீழ்ச்சியை அரசாங்கம் சந்தித்துள்ளது.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சியின் தலையீடுகளால் தன்னால் நியாயமான முறையில் செயற்பட முடியாமல் போனது எனத் தேர்தல்கள் ஆணையாளர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். ஏட்டில் உள்ள அதிகாரங்களை தேர்தல்கள் ஆணையாளர் செயற்படுத்த விடாமல் அரசாங்கம் தலையீடு செய்து வந்தது.

நாவலப்பிட்டி, வன்னி, மெனிக் பாம் மற்றும் வாழைச்சேனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும்.

தேர்தல்கள் ஆணையாளரின் சுயாதீனமான செயற்பாடுகளுக்குத் தடைகள் ஏற்படுமாயின் அதற்கு எதிராக ஆணையாளரினால் சட்ட உதவியை நாட முடியும். ஆனால் தேர்தல்கள் ஆணையாளர் ஆரம்பத்திலிருந்தே வெறும் கட்டளைகளைப் பிறப்பிப்பதிலேயே இருந்து விட்டார்.

எவ்வாறாயினும் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எம்மால் எதுவும் கூற முடியாது" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புதிய அமைச்சரவைத் தொடர்பில் ஜனாதிபதி உயர்மட்ட ஆலோசனை
ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியதை அடுத்து புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.

தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதியானவுடனேயே ஜனாதிபதி இந்த ஆலோசனையை ஜனாதிபதி மாளிகையில் வைத்தே நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையைக் குறைத்து மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கைத் துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலேயே அவர் கலந்துரையாடியதாகவும் அதில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கலந்துகொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்-சிங்கள புதுவருட புத்தாண்டுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...