4 ஜூலை, 2010

சாத்தியமான அரசியல் தீர்வை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் சபையில் அமைச்சர் டக்ளஸ்




* எஞ்சியோரை மீளக்குடியமர்த்த வேண்டும்
* சரணடைந்தோர், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்



நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டுமென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எஞ்சியுள்ள மக்களையும் மீளக்குடியமர்த்தி அவர் களின் வாழ்வாதாரத்திற் கான சகல ஏற்பாடுகளையும் விரைவுபடுத்த வேண்டு மென தெரிவித்த அமைச்சர், சரணடைந்தோர் மற்றும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டோர் அனைவரையும் விடு விக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரை யாற்றிய அமைச்சர் வடக்கின் மீள்கட்டமைப் பிற்காக நிதியுதவி வழங்கியுள்ள இந்திய அரசாங் கத்திற்கும் நன்றியினைத் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரி வித்ததாவது, தமிழ் மக்களுக்கான அமைதி, சமாதானம், ஜனநாயகம், வாழ்வியல் மற்றும் அரசியல் சமவுரிமை ஆகியவையே எமது இலட்சியமாகும். அதற்கான கனவுகள் இன்று நனவாகி வருகின்றன.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாக செயற்படும் ஒரு சூழலில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசிய லுரிமை குறித்து சிந்திக்க முடியும்.

அத்தகைய சூழலொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கித் தந்துள் ளார். அதற்காக அவருக்கு நன்றி கூறு வதுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மைக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலரும் ஜனாதிபதிக்கு இந்தச் சபையில் நன்றி கூறியதை வர வேற்கிறேன்.

மனிதராலும் இயற்கையாலும் ஏற் படுத்தப்பட்ட அனர்த்தங்களின் மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் 7வீத வளர்ச்சியை நோக்கி அதிகரித்துள்ளது.

கைத்தொழில் துறையினரை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். ஏனைய பிரதேசங்களைப் போலவே யுத்தப் பாதிப்பு தேசங்களையும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

புத்தாக்குதல்களுக்கு ஊக்விப்பு வழங்தல், வாராந்தச் சந்தைகளை ஆரம்பித்தல், கைத்தொழில் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. பனை வளம் எமது அமைச்சின் கீழ் உள்ளது. அதன் மூலம் அதனை நம்பியுள்ள கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கற்பகம் விற்பனைக் கிளைகளை நாடளாவிய ரீதியில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கைதடி ஆராய்ச்சி நிறுவனத்தை மீளத் திறப்பதுடன் அதன் தலைமை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பட்ஜட் சபையில் நிறைவேற்றம் வாக்கெடுப்பின்போது ஐ.தே.க கூச்சல், குழப்பம்;


சபையில் போத்தல் வீச்சு; சூடான வாக்குவாதம்


2010ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

நேற்றுக் காலை 9.00 மணிக்கு ஆரம்ப மான இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் மாலை 5.55 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து பெயர் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வாக்கெடுப்பின் போது 138 வாக்கு கள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. வாக்களிப்பில் 11 பேர் சமுகமளித்திருக்கவில்லை.

ஐ.தே.க., ஐ.தே.கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன. வாக்களிப்பில் கலந்துகொண்ட ஐ. தே. க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் ஆதரவாக வாக் களித்தார். நேற்றைய விவாதத்தின் பின் னர் வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் விடுத்தார். பெயர் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியதற்கிணங்க வாக்கெடுப்பு பெயர் குறித்து நடத்தப்பட்டது.

2010ம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் கடந்த 29ம் திகதி பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் நேற்று வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதிநாள் விவாதம் நேற்று மாலை நிறைவு பெற்ற துடன், விவாதத்தை முடித்து வைத்து சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா பதிலுரையாற்றினார். அதனையடுத்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை உறுப்பினர்களின் பெயர் கூறி மேற்கொள்ளப்பட்ட போது, ஐ. தே. க. உறுப்பினர்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்தியதால் சபையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. குழப்பம் விளைவித்தவர்களுக்கு எதிராக நாளை நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களைக் கூறி ஆளுந்தரப்பினர் வரிசையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் எதிரணிப் பக்கம் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை அழைத்த போது, ஐ. தே. க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதனால் வாக்கெடுப்பை நடத்துவதில் பெரும் நெருக்கடியான ஒரு நிலை உருவானது.

ஐ. தே. க. உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரின் ஆசனங்களுக்கு நடுவே பா.உ. ஏ. ஆர். எம். அப்துல் காதர் அமர்ந்தபடியே காணப்பட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிரணியில் அமர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எவரும் எழுந்து நிற்கவில்லை.

ஐ. தே. க.வினர் கோஷங்களை எழுப்பியதால், பதிலுக்கு ஆளுந்தரப் பினரும் கோஷம் எழுப்பினர். இந்தச் சர்ச்சைக்கும் மத்தியில் உறுப் பினர்களின் பெயர்களைக் கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐ. தே. க.வினரின் கூச்சலுக்கு சகித்துக் கொண்டிருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைதியைப் பேணா விட்டால் உறுப்பினர்களின் பெயர் கூறி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார். எனினும், கூச்சல் தணியவில்லை. அவ்வேளையில் ஆளுந்தரப்பிலி ருந்து எதிரணி வரிசையை நோக்கி தண்ணீர்ப் போத்தலொன்று எறியப் பட்டது. அது பா.உ. ஜோன் அமரதுங்கவின் மீது விழுந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் புத்தகமொன்று நனைந்துவிட்டது. வாக்கெடுப்பின் போது அவர் அதனைக் கைக்குட் டையால் துடைத்தபடியே காணப் பட்டார்.

இந்தக் கூச்சலும் குழப்பமும் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தொடர்ந்தது. முடிவு அறிவிக்கப்பட்டது
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆணைக்குழு புனர்வாழ்வு,புனரமைப்புக்கு நிபுணர்குழு-கி.மா முன்னாள் முதலமைச்சர்

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாகத் தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவாகும். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள், விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக் கூடிய திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறன் மிக்க நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கள் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று இணைந்த வட கிழக்கு மாகாண சபைகளின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேசரி வார இதழுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் போரின் காரணமாக அகதிகளாகப் போன 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மறுவாழ்வு, அழிந்து போய்க கிடக்கின்ற வடக்கு கிழக்கை மீள் கட்டி எழுப்புதல் போன்ற விடயங்களை அரசாங்கம் வெறுமனே நடைமுறையில் இருக்கின்ற அரசு இயந்திரத்தில் மாத்திரம் தங்கியிருப்பதில் பலனில்லை. எனவே புனர்வாழ்வு, மீள் கட்டுமாணப் பணிகளுக்கான ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவினை அமைக்க வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கூறியதாவது,.

அதிகாரப் பரவலாக்கள் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துவதற்கு உடனடியாக தேவைப்படுவது ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிக்கும் பட்சத்தில் அதில் அரசியல் யாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்கள் விடயங்களை திறமையாக நிர்வகிக்கக் கூடிய நிர்வாகத் திறனுடைய நிபுணர்கள், மேலும் சில அரசியல் தலைவர்களை உள்ளடக்கி அந்த ஆணைக்குழுவை உருவாக்குவதன் மூலம் இப்பொழுது அரசியல் யாப்பின் தாகமாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை எப்படி சிறந்த முறையில் அதை நிறைவேற்றலாம் என்பது பற்றி தீர்மானித்து அந்த தீர்மானிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றுகின்ற பொழுது முதற்கட்டமாக/ முதற்படியாக 13 ஆவது திருத்தத்தை அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயத்தின் ஒரு செயன்முறைக்கு உயிராக மாற்றலாம். ஏனென்றால் இந்த அதிகாரப் பகிர்வு சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றி பேசி, பேசி அல்லது அதைப் பற்றிய நாடாளுமன்ற குழு அல்லது அரசியல் கட்சிகளுக்கிடையிலான குழு என்ற கடந்த 20 வருடங்களாக இவ்வாறு மங்கள முனசிங்க கமிட்டி தொடக்கம், பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி என காலம்போய் விட்டது..

இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அந்த 13 ஆவது திருத்தத்தை சிறந்த முறையில் எப்படி நிறைவேற்றுவதென்று அதை தீர்மானித்து நிறைவேற்ற வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக இந்த 13 ஆவது திருத்தத்தையே எப்படி திருத்துவது 13 ஆவது திருத்தத்திற்கு மேலான, அதிகார பரவலாக்க வேலையை எப்படி வழங்குவது என்றவிடயங்களை அரசியல் கட்சிகள்தீர்மானித்துக் கொள்ளலாம். அதை எதிர்காலத்தில் நடைமுறைக் கொள்ளலாம்..

இரண்டாவதாக இப்பொழுது தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை, 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களில் அகதிளாகி போனவர்களின் மறுவாழ்வு, புனர்வாழ்வு இந்த 30 வருட யுத்தத்தினால் அழிந்து போய் கிடக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுடைய புனரமைப்பு, அதாவது அதனுடைய உட்கட்டமைப்புகள் அவற்றினுடைய வர்த்தகம், அதனுடைய பொருளாதாரம் ஆகியவற்றினுடைய தனிப்பட்டவர்களின் வீடுகள், ஏனைய கட்டுமானங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் வெறுமனே அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் மட்டும் தங்கியிருக்காமல் அதற்கு உரிய வகையில் இருப்பதாகவோ அல்லது செயற்படக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாகவோ காணப்படவில்லை. ஆகவே அரசாங்கம் உடனடியாக புனரமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஒரு திறமை வய்ந்த அல்லது ஆற்றல் வாய்ந்தவர்களைக் கொண்டு ஒரு கமிட்டியை நியமித்து அவர்கள் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தங்கி நேரடியாகவே அந்த பிரதேசங்களைப் பார்வையிட்டு அபிவிருத்திகளை திட்டமிட்டு அந்த அபிவிருத்திகளை நடைமுறைப்படுத்த வேண்டும்..

ஏனென்றால் இவ்வாறான சேவை மக்களோடு அந்த பிரதேசத்தோடு இருந்து செயற்படுகின்ற நிபுணர் குழு இல்லாமல் அரசாங்கம், கொழும்பிலிருந்து சில விடயங்களை தீர்மானிப்பதும் பாரம்பரிய அரசாங்க கட்டமைப்பினூடாக செயற்படுவதன் மூலம் அது செயலில் கூடியதாக இல்லை என்பதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். எத்தனையோ விதமான தடைகள் அந்த அமைப்பிலே காணப்படுகின்றன. மேலும் இந்த நிர்வாகங்கள் விடுதலைப் புலிகள் இருந்த கால கட்டத்தில் ஒரு பிழையான போக்குகளுக்கு அவை செயற்படுத்தப்பட்டதனால் அந்த போக்குகள் இன்றைக்கும் தொடருகின்றன. நிலைமைகளே அந்த நிர்வாக அமைப்பில் காணப்படுகின்றது. ஆகையால் இந்த நிர்வாக அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இருக்கின்ற அதேவேளை அந்த வொரு நிர்வாக அமைப்பில் தங்கியிருக்காமல் ஒரு விரைவுபடுத்தப்பட்ட புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்தை மேற்கெள்வதற்கென ஒரு நிபுணர்கள் குழு ஒன்றை அரசாங்கம் உடனடியாக நியமித்து செயற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும். என்னுடைய ஆலோசனையாகும் என்றும்கூட அதனை கொள்ளலாம்
மேலும் இங்கே தொடர்க...

திவுலுவௌவில் புதிதாக பாடசாலை நிர்மாணம்


யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றப்பட்டவர்களின் நலன்கருதி இலங்கை விமானப் படையின் நிதியுதவியின் கீழ் திவுலுவௌவில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையொன்றை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜகபக்ஷ நேற்று திறந்துவைத்தார்.

மொரவௌ திவுலுவௌவில் 1985 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களிலுள்ள மாணவர்களின் நலன் கருதியே இப்பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கு உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,“நாட்டில் கல்வியின் தரத்தை அதிகரிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. எந்த பேதங்களும் இன்றி அதனை செய்ய வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் செயற்படுகிறோம்.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சமுதாயத்தில் மிகச் சிறந்த வகையில் முன்னேறி சொந்த கிராமத்துக்கும் நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பள உயர்வு கோரி இந்த வாரம் போராட்டம்

அரச, தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறை சார் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஜே.வி.பி., தேசிய தொழிற்சங்க நிலையம் ஆகியன இணைந்து இந்த வாரம் போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இப்போராட்டத்தில் இணையுமாறு மேலும் 300 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. பிரமுகர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். இன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது அரசினால் வழங்கப்பட அமைச்சர் பசில் ராஜபக்ஸ கல்விசாரா கொடுப்பனவுகளை 2550மூ அதிகரிப்பதாக ஊறுதியளித்தார். ஜனாதிபதியால் கூறப்பட்ட சம்பள மீளாய்வு நடைபெறும் வரை கல்விசாரா கொடுப்பனவுகளை 25 50மூ அதிகரிக்கும் படி நமது சங்கம் வலியுறுத்துவதாகவும் கலாநிதி மஹின் மென்டிஸ் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டு.செஞ்சிலுவை சங்க கிளை புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

கடந்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை புதிய உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளதுடன் இன்று சத்தியப்பிரமாண வைபவமும் இடம் பெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய உபதலைவர் சுனில் திசாநாயக்கா பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.

அரசாங்க உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது செயற்பாட்டை நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்

மட்டக்குளிய பொலிஸ் நிலையம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகப் பொலிஸ் நிலையத்துக்குப் பலத்த சேதமேற்பட்டது. இதனையடுத்து அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவிக்கையில், போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபரொருவரை மட்டக்குளிய பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அவர் திடீரென பொலிஸ் நிலையத்தின்ஜன்னல் கண்ணாடி மீது பலமாக அடித்ததன் காரணமாக அவரது கையில் காயமேற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்..

இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மட்டக்குளிய பொலிஸ் நிலையத்தைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட நபர், பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியே காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென்ற யூகத்தின் அடிப்படையில் ஆத்திரமடைந்த மக்கள் பொலிச்நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனவும் இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அபாயங்களுடன் வரும் இலங்கை அகதிகளை மீண்டும் அபாயத்துக்குள் தள்ள முடியாது-ஆஸி பிரதமர்

இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் யூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை அகதிகள் தொடர்பிலான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு, அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜுலியா அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அகதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல், எதிர்ப்பு தெரிவித்து சுலோகங்களை தூக்குவது ஏற்புடையதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது எதிர்கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளே தவிர, உண்மையான கரிசனைக்கானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் வாரம் தாம் இலங்கை அதிகள் தொடர்பான தீர்வினை முன்வைக்க விருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதற்கிடையில் பசுபிக் கொள்கை அடிப்படையில், அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிப்படகுகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுமா? என அவரிடம் கேள்வி எழுப்பப்ட்டது. இதற்கு பதில் வழங்கிய அவர், பாரிய அபாயகரமான பயணத்தின் பின்னர் அவுஸ்திரேலியா வரும் அவர்களை, மீண்டும் அதே அபாயத்துக்குள் தள்ளுவதில் நியாயமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தப்பி, அபாயகரமான முறையில் அவுஸ்திரேலியா வருகின்றவர்கள் தொடர்பில் கரிசனை காட்ட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்: 91 வயது பெண்ணின் காலை வெட்டினார்கள்

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்:     91 வயது பெண்ணின்    காலை வெட்டினார்கள்
ஆஸ்திரியா நாட்டின் மேற்கு மாகாணமான திரோல் நகரில் செயின்ட் ஜோகன் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு காலில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற 91 வயது பெண் வந்தார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த ஒரு காலை மட்டும் ஆபரேஷன் மூலம் வெட்டி அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு அவர் சம்மதித்தார்.

இதைதொடர்ந்து அவருக்கு கடந்த மாதம் 16-ந்தேதி ஆபரேசன் செய்யப்பட்டது. அப்போது நோய் பாதித்த காலுக்கு பதிலாக நல்ல நிலையில் இருந்த காலை வெட்டி டாக்டர்கள் அகற்றினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆபரேசன் நடத்தப்பட்டது.

அப்போது, நோய் பாதித்த கால் அகற்றப்பட்டது. டாக்டர்களின் தவறான ஆபரேசனின் மூலம் தற்போது அப்பெண் 2 கால்களையும் இழந்து தவிக்கிறார்.

நடந்த சம்பவத்துக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மருத்துவத்தில் ஏற்பட்ட குளறுபடியால் இது போன்ற தவறு நடந்துவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த தவறுக்கு காரணமான டாக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இது போன்ற தவறுகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. கடந்த 2005-ம் ஆண்டு டாக்டர்களால் தவறானமருந்து கொடுக்கப்பட்ட ஒரு நபர் இறந்தார்
மேலும் இங்கே தொடர்க...

கின்ஷாஷா் காங்கோ நாட்டின் கிவு நகரத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி தறிகெட்டு ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.






கின்ஷாஷா் காங்கோ நாட்டின் கிவு நகரத்தில் பெட்ரோல் டாங்கர் லாரி தறிகெட்டு ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. அதில் இருந்த பெட்ரோல் முழுவதும் சாலையில் ஆறாக ஓடியது. சுற்றிலும் நெருக்கமான குடியிருப்பு பகுதிகள்.


பெட்ரோல் வீணாவதை அறிந்ததும் கையில் பாத்திரங்களுடன் மக்கள் நெருக்கியடித்து ஓடி வந்தனர். பெட்ரோலை பிடிக்க முயன்ற னர். அப்போது திடீரென டாங்கர் வெடித்து சாலையில் பரவிய பெட்ரோல் தீப்பற்றியது. இதானால் . டாங்கரை முற்றுகையிட்டிருந்த மக்கள் தீயில் கருகினர். இந்த கோர விபத்தில் 200 பேர் பலியாகினர். சுமார் 100 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

112 ஆண்டுகளுக்கு முன் ஏரியில் மூழ்கிய நீராவி கப்பல்: மீனவர்கள் வீசிய வலையால் வெளியுலகிற்கு தெரிந்தது





ஆர்.எம்.எஸ்., டைட்டானிக் என்ற பிரிட்டிஷ் பதிவு பெற்ற உல்லாசக் கப்பல், கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி 2200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது, கடலில் மூழ்கியது. இதில் 1500 பயணிகள் இறந்தனர்; 700 பேர் உயிர் தப்பினர். வரலாற்றில் ஒரு சோக முத்திரையை பதித்த இந்த சம்பவம் திரைப்படமாக உருவாகி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பல ஆண்டுகளுக்கு பின், டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடைத்தன. அவை டைட்டானிக் கப்பலின் நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன.

இதேபோல், கடந்த 112 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏரியில் மூழ்கிப்போன ஒரு நீராவிக் கப்பல் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள, மில்வாகி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 1991ம் ஆண்டு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 300 அடி ஆழத்தில் ஒரு மர்மமான பொருளில் அவர்களின் வலை சிக்கியது. இது, பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய ஏதாவது ஒரு கப்பலின் பாகங்களாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதையடுத்து, மில்வாகிக்கு தெற்கே 40 மைல் தொலைவில், கடந்த 20 ஆண்டுகளாக மெக்சிகன் ஏரியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கு கொண்டனர். ஆழ்கடலில் ஆய்வு செய்யும் தொழில் நுட்பத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், மிகப்பெரிய நீராவிக் கப்பலான எல்.ஆர்.டோடி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சிக்கி நீரில் மூழ்கிய சம்பவம் மீண்டும் வெளி உலகிற்கு தெரியவந்தது.

ஜிட்கா ஹனகோவா தலைமையில் நீரில் மூழ்கும் குழுவிடம் இந்த நீராவிக் கப்பல் குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன கப்பல்களில் மிகப்பெரியது இது என இக்குழுவினர் கண்டுபிடித்தனர். மெக்சிகன் ஏரியின் அடியில் களிமண் சேற்றில் கப்பல் செங்குத்தாக சிக்கியிருந்த போதிலும் சேதமடையாமல் இருந்தது. மெக்சிகன் ஏரி நன்னீர் ஏரி என்பதாலும், அதன் அடியில் உள்ள நீர் குளிர்ச்சியாக இருந்ததாலும் டோடி கப்பல் சேதமடையாமல், நல்ல நிலையிலேயே இருந்தது. மேலும், கப்பலின் பாய்லர் ரூமில் இருந்த உடல்களும், அழுகிப் போகாமல் நல்ல நிலையில் இருந்தன. 20 அடி உயரம் உள்ள கப்பலின் உள்ளே, புயலின் போது 30 அடி உயரத்திற்கு அலை எழும்பி பல டன் எடையுள்ள நீர் கப்பலில் கொட்டியதால் கப்பல் மூழ்கியது ஆய்வில் கண்டறியப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் 12க்கும் மேற்பட்ட மூழ்கிய கப்பல்களை ஆய்வு செய்த, தொல்பொருள் ஆய்வாளர் பிரன்டான் பெய்லாட் கூறுகையில், "1898ம் ஆண்டு அக்டோபர் மாதம் மெக்சிகன் ஏரியில் தெற்கு சிகாகோவில் இருந்து ஒன்டாரியோவிற்கு மக்காச்சோளம் சரக்குகளை ஏற்றிக் கொண்டு எல்.ஆர்.டோடி நீராவிக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பயங்கர புயல் காற்று வீசியது. பனியும், ஆலங்கட்டி மழையும் தொடர்ந்து பெய்தன. 30 அடி உயரத்திற்கு அலை தோன்றி கப்பலை தாக்கியது. இதில் 300 அடி நீளமுள்ள நீராவிக் கப்பல் நீரில் மூழ்கியது. அந்த நேரத்தில் இரண்டு பாய்மரக்கப்பல்களை கொண்டு இழுத்து நிறுத்த முயற்சி செய்தும் அது நிறைவேறவில்லை. நீராவிக் கப்பலில் பயணம் செய்த 17 பேரும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

புயல் காற்று ஏற்படும் போது கப்பலை திசை திருப்ப உதவும் சுக்கான் உடைந்து போனால் கப்பல் தள்ளாடி மூழ்கி விடும். இதனால் கப்பலில் உள்ளவர்கள் இறந்து விடுவர். தற்போது விஸ்கோசின் மாநிலத்திற்கு சொந்தமான எல்.ஆர். டோடி கப்பலை வெளியே எடுக்கும் எண்ணமில்லை. நூறு ஆண்டுகளாக நீரில் மூழ்கி இருக்கும் இக்கப்பலை இனியும் நல்ல முறையில் பாதுகாப்பது கடினம். இயற்கையாகவே இன்னும் சில ஆண்டுகளில் கப்பல் சேதமாகிவிடும். மூழ்கிப்போன டோடி நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், 100 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட எங்களது கலாசார வரலாறு தெரிந்து கொள்ள முடிகிறது' என்கிறார். புயல் காற்று, கப்பலில் ஓட்டை உள்ளிட்ட பல்வேறு விபத்துக்களில் சிக்கி ஆயிரக்கணக்கான கப்பல்கள் பெரிய ஏரிகளில் மூழ்கியுள்ளன. இதில் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் மெக்சிகன் ஏரியில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...