4 மே, 2011

யுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி * நல்லிணக்க முன்னெடுப்பு ஐ.நா.செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம்


யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இனங்களுக் கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்கும் நோக்குடன் அமைச்சர் பீரிஸ் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளாமலேயே இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பட்டியல் இட்டு தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு அமைய அதனை கருத்திற்கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக குரோத மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றுக்கு உடன்படவும் முடியாது. இந்த அறிக்கையின் ஊடாக எமது நல்லிணக்க செயற்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கிறது.

எதிர்வரும் 16ஆம் திகதி இந்தியா செல்லும் நான் அங்கு இந்திய தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுவதுடன் சீனாவின் பீஜிங் நகரிலும், இந்தோனேசியா, மாலைதீவு போன்ற நாடுகளிலும் வெளிநாட்டு அமைச்சர்களைச் சந்தித்து பேசவுள்ளேன் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அரசின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்தும் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்: கடந்த கால காயங்கள் ஆறிக்கொண்டிருக்கின்றன. மென்மேலும் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை இருக்கிறது. எமது நல்லிணக்க செயற்பாட்டை குழப்புவதாக இருப்பதுடன், ஆறிக்கொண்டிருக்கும் காயத்தில் வேல் பாய்ச்சுவதாக அமைக்கிறது.

அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்கள். எதுவிதமான விசாரணைகளுமின்றி விசாரணைகளுமின்றி இவர்கள் எவ்வாறு இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள்.

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையல்ல. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஒருதலைப்பட்சமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையில் அரசைக் குற்றஞ்சாட்டுவதுடன் புலிகளை மேன்மைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.

யுத்தம் ஒரு துன்பியலாக முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இது எங்களுக்குத் துன்பியல் சம்பவமாகும். பான்கீ மூனின் இந்தக் குழுவினர் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் சென்றிருக்கிறார்கள்.

இந்த அறிக்கை தொடர்பாக நான் தொலைபேசி மூலம் ஐ.நா. செயலாளருடன் பேசினேன். இலங்கை அரசு வேண்டுகோள் விடுக்கும்வரை நான் எதனையும் செய்யமாட்டேன். அத்துடன் ஐ.நா. உறுப்பு நாடுகள் வேண்டுகோள் விடுக்கும்வரை என்னால் எதனையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.

இலங்கையின் அபிவிருத்தி பற்றிப் பார்க்கும் போது நாம் இரண்டு வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தியைச் செய்திருக்கின்றோம்.

சிறுவர் போராளிகளாக இருந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதுடன், நல்வாழ்வளித்துள்ளோம். அவர்கள் க.பொ.த. பரீட்சைக்கும் தோற்றி திறமை சித்திகள் பெற்றிருக்கிறார்கள். 13 பில்லியன் ரூபா வங்கிகளின் ஊடாக சுய தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்திருந்தனர். இப்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள். வடக்கு கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஜப்பான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் மீன்பிடித்துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் தமிழ் கட்சிகளுடனும் பேச்சுநடத்தி வருகிறோம். ஐந்து சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த பேச்சுவார்த்தை 12ஆம் திகதி நடைபெறும்.

அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்கவும் வேண்டும். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என்பதுபற்றி இப்போது எமக்கு கூறமுடியாது.

இலங்கையின் நிலைப்பாடு கருத்துக்கள் தொடர்பாக உலகின் மத்தியில் கொண்டு செல்வதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

அத்துடன் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டக்களை முறிய டிக்க கட்சி, இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இஸ்லாமிய கொள்கையை பேணுவதற்கு சகலதையும் இழந்து போராடியவர் ஒசாமா பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்?




1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் திகதி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் பிறந்த சிவில் இன்ஜினிய ரும் பொருளியல் பட்டதாரி யுமான ஒசாமா பின்லேடன் ஏகாதிபத்திய நாடுகளினால் இஸ்லாத்திற்கு முரணாக மேற்கொண்ட அக்கிரமங்களை பொறு த்துக்கொள்ள முடியாத நிலை யில் 1979ஆம் ஆண்டு அல் கைதா இயக்கத்தை ஆரம் பித்தார்.

இவர் இஸ்லாமிய மார்க்க பற்றுமிக்கவர். இவ ரது தீவிரவாத செயல்கள் யாவும் இஸ்லாத்திற்கு முர ணானவர்களுக்கு எதிராகவே இருந்தது. இவரது இவ் இயக்கம் இல்லாது இருந்தால் இன்று முஸ்லிம் நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அடக்கி ஒடுக்கியிருக்கும்.

ஒசாமா பின்லேடன் பயங்கரவாதியா? இஸ்லாமிய கொள்கை தீவிரவாதியா? என்பதை ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அதை தீர்மானிக்கும் சக்தி படைத்தவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.

இன்று இஸ்லாமிய நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளினால் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கின்ற இவ் வேளையில் அதைப்பற்றி குரல் கொடுப்பார் எவருமில்லை.

ஆனால் ஒசாமா பின்லேடன் இஸ்லாத்திற்காக இஸ்லாமிய கொள்கைகளை பேணுவதற்காக தனது சொத்துக்களை சுதந்திரத்தை கூட இழந்து போராடியவர். இவர் இஸ்லாமிய கொள்கைகளுக்காக போராடாமல் தன்பாட்டில் வாழ்ந்திருந்தால் இன்று உலகில் மாபெரும் செல்வந்தராக விளங்கியிருப்பார்.

அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏகாதிபத்தியம் எவ்வாறானது எனில் பிரபாகரனை கொலை செய்தது மனித உரிமை மீறலாகவும் பாகிஸ்தானில் ஒசாமாவை கொலை செய்தது தீவிரவாத ஒழிப்பாகவும் காட்டப்படுகின்றது. இதன் விளக்கம்தான் என்ன?

. நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் பிரபாகரனுக்கு ஒரு நியாயமும் ஒசாமாவுக்கு வேறு நியாயமும் காட்டுவது ஏன்?

ஒசாமா இஸ்லாம் எங்கே பாதிக்கப்படுகின்றதோ அங்கே அதற்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டார். இவரது படுகொலை தீவிரவாதத்துக்கு எதிரான ஏகாதிபத்திய நாடுகளின் போராட்டமா? அல்லது இஸ்லாத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் போராட்டமா? என்பது சிந்தனைக்குரியது.

இந்த ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சியினால் இன்று உலக முஸ்லிம் நாடுகள் யாவும் பிரச்சினைக்குட்பட்டு இருக்கின்ற இவ்வேளையில் முஸ்லிம்களாகிய நாம் சிந்தனையுடன் செயல்பட வேண்டுமென உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு ஆளுநர் அலவி மெனலானா விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சனல்-4 விவகாரம்: நிபுணர்களின் கருத்தை பெற நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானம்

பிரிட்டனின் சனல்-4 தொலைக் காட்சி வெளியிட்ட வீடியோ காட்சி தொடர்பில் கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு நிபுணர்களின் கருத்தைக் கேட் டுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இவ்வீடியோ காட்சி பற்றிய கருத் தைக் கேட்பதற்கு மொரட்டுவ பொறியியல் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் திணை க்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சத்துர.டி.சில்வா வுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத் துள்ளது.

இன்று பிற்பகல் 3.30 மணி க்கு கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் கலாநிதி சத்துர.டி. சில்வா சனல்-4 வீடியோ காட்சியை பார்வையிடவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கனேடிய நாடாளுமன்றுக்கு இலங்கைப் பெண்மணி ராதிகா சிற்சபைஈசன் தெரிவு

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணியான ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்றுள்ளார்.

இத் தேர்தலில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் இவர் போட்டியிட்டார்.

இதேவேளை கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி 70 ஆசனங்களை பெற்று இரண்டாவது கட்சியாக இம்முறை வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி கன்சர்வேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது.

இதேநேரம் புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாவது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பின்லேடன் படுகொலையின் எதிரொலி அமெரிக்க-பாக். உறவில் விரிசல் நிலை



அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பில்லை என அந்த நாடு கூறிவரும் நிலையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட்டுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க தூதுவர் மூன்று நாடுகளுக்கும் பங்குள்ளதாக கூறியுள்ளதையடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெசாஹுர், கராச்சி துணை தூதரங்களை அமெரிக்கா காலவரையறையின்றி மூடியுள்ளது. இதனையடுத்து விசா உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. எனினும் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரஜை ஒருவருக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் நிலையை தொடர்ந்து அடுத்த மாதம் இஸ்லாமாபாத்துக்கு பயணம் செய்யவிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பயணம் ரத்துச் செய்யப்படும் என கூறப்படுகின்றது. அல் குவைதா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானிடமிருந்து எந்தவித உதவியும் பெறாமல் அங்கு தஞ்சமடைந்திருக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு தஞ்சம் அளிக்கவில்லை என நிரூபிக்க முடியுமா என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உலகமே தேடிவந்த ஒருவர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்திருந்தமை அதிர்ச்சியளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அல் குவைதாவின் 20 சிரேஷ்ட தலைவர்களில் குறைந்தது ஆறு பேராவது பாகிஸ்தானில் சுற்றித்திரிகின்றனர். ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாபாத்துக்கு அருகில் எவ்வாறு தங்கியிருந்தார் என அந்நாட்டிடம் அமெரிக்க சட்ட நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது பற்றி அந்நாட்டுக்கு தெரியுமா? தெரியாதா என்று ஊகிக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக இந்த கேள்வியை கேட்க விரும்புகின்றோம். இந்த உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு. பாகிஸ்தானுக்கு என்ன தெரியும் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தீவிரவாத ஒழிப்புக்குழுவின் ஆலோசகர் ஜோன் பிரர்னன் ஒசாமாவுக்கு எந்தவித உ தவியும் அளிக்கவில்லை என பாகிஸ்தான் கூறியிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார் என்பதனை சி.ஐ.ஏ. விசாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அபோதாபாத்தில் வசித்து வந்த ஒசாமா பின்லேடன் பெற்ற உதவிகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ தினம் இடம்பெற்ற தாக்குதலில் ஒசாமா பின்லே டனை கைது செய்ய முடியாமல் போனமையினால்தான் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் ஒசாமாவுடன் தங்கியிருந்த அவரது மனைவி மனித கேடயமாக செயற்பட்டு அவர்களை பாதுகாக்க முனைந்ததாகவும் இறுதியில் வேறு மார்க்கமின்றி அவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இஸ்லாமிய முறைப்படி மத சடங்குகள் செய்யப்பட்ட பின்னரே பின்லேடனின் உடல் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அவர் கூறினார். அத்துடன் அல் குவைதா இயக்கத்தை முற்றிலுமாக இல்லாதொழிக்க தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பின்லேடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அல் குவைதாவின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல் சௌஹாரி துடிப்பான ஓர் தலைவர் இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை ஒசாமா மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து விசேட செய்மதி மூலம் நேரடியாக பார்த்துள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா "ஹிலாரி கிளின்டன்' சி.ஐ.ஏ. உயர் அதிகாரிகள் என ஏழு பேர் இந்தக் காட்சியை நேரில் பார்த்துள்ளனர்.

தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் அது முடியும்வரை அதி நவீன செயற்கை கோள் மூலம் இது ஒளிபரப்பப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்த சமயம் ஒபாமா உட்பட அனைவரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டதாகவும் ஒரு சமயம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி இருக்கையின் நுனியில் இருந்தவாறு நகத்தை கடிப்பது போன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதல் நடந்த 40 நிமிட நேரமும் மிகவும் உன்னிப்பாக ஒபாமா நேரடியாக நிலைமையை அவதானித்ததாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் எவருடனும் பேசவில்லை எனவும் அத்துடன் அவர் அங்கிருந்தவாறு எந்தவித உத்தரவும் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட சமயம் அனைவருக்கும் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்று சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்பு தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி தெரிவித்த கருத்து எம்.பி.க்களின் சிறப்புரிமையை மீறும் செயல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்பில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்த கருத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயலாகும் என்பதனால் நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக அது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களான மாவை சேனாதிராஜாவும் நானும் மீண்டும் ஒரு யுத்தத்தை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கடந்த அவசரகாலச் சட்ட விவாதத்தின்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். இக் கருத்துக்கு கண்டனத்தையும் தெரிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கோப்பாயிலுள்ள எனது வீட்டுக்கு இராணுவச் சீருடையில் சென்றவர்கள் அங்கு காவலுக்கு நின்ற பொலிஸாரிடம் என்னைப் பற்றியும் எனது வருகையினை பற்றியும் அவர்களிடம் விசாரித்துள்ளனர்.

அதேபோல யாழில் எனது அலுவலகத்திற்கு சென்றவர்கள் என்னைப் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

அவர்களும் இராணுவ சீருடையிலேயே சென்றுள்ளனர். இவ்வாறான நிலையில் எனது செயலாளர் விஜயகுமார் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவர்கள் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதனால் காயமடைந்த அவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

மேற்குலகத்துக்கு எதிராக நடுத்தர நாடுகளின் அணி உருவாக வேண்டியது அவசியம்

இலங்கையின் வளங்களை அழித்து மக்களை கொலை செய்து கொன்று குவித்த பயங்கரவாத அமைப்பை ஒழித்து நாட்டில் இன ஐக்கியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டியெழுப்பியுள்ளார். இதனை எவ்வாறு யுத்தக் குற்றம் என்றும் மனித உரிமை மீறலென்றும் கூற முடியும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன கேள்வி எழுப்பினார்.

மேற்குலக நாடுகளுக்கு எதிராக மத்தியதர நாடுகளின் அணியொன்று உருவாக வேண்டிய காலம் தோன்றியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை பிரிஸ்டல் வீதி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடக்கம் சேர்.ராசிக் பரீட் மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான் நிகழ்வை சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட பிரதமர் சேர்.ராகிக் பரீட் மாவத்தை பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்த பின்னர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில்: நாட்டுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.

அதைவிடுத்து வேறொரு நாட்டில் உள்ள ஒருவரின் உயிருக்கு விலை நிர்ணயித்து அந்நாட்டுக்கு இராணுவத்தை அனுப்பி நாம் எவரையும் கொலை செய்யவில்லை.

நாட்டு மக்களை பாதுகாப்பது நாட்டுத் தலைவரின் கடமையாகும். அதற்கமையவே ஜனாதிபதி 3 இலட்சம் மக்களை மனிதாபிமான நடவடிக்கை மூலம் மீட்டெடுத்தார். இதனை இன்று மேற்குலகம் பிழையென்று நடக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன நல்லுறவை சீர்குலைத்து மீண்டும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திட்டத்தை மேற்குலகம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு இடமளிக்காது இன மத ரீதியாக பிரிந்திருக்காது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

மேற்குலக நாடுகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக நடுத்தர அணி ஒன்று உருவாக்கப்பட வேண்டிய காலம் வந்துள்ளது.

இந்த நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் ஈடேற்றத்திற்காக மட்டுமன்றி தமிழ் சிங்கள அனைத்து மக்களினதும் தேசியத் தலைவராக திகழ்ந்தவர் சேர்.ராசிக் பரீட் அவரது பெயரை இவ்வீதிக்கு சூட்டியிருப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அவர் மறைந்தாலும் அவரது சேவைகள் எம் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் கைதியின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் கடந்த 09 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வரும் மரியதாஸ் அன்ரனி அஞ்சலோ சார்பில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி திருநாவுக்கரசுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம் மனுவில் குறித்த மரியதாஸ் அன்ரனி அஞ்சலோ 23.02.2009இல் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின் அவர் வரலபட பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு அங்கு 6 மாதங்கள் வரையில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த காலப்பகுதியில் அவர் பொலிஸாரினால் கொடூரமான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குறிப்பிட்ட கைது இடம்பெற்றவேளையில் கைதுக்கான காரணம் தனக்கு தெரிவிக்கப்படவில்லையென்றும் இதன் மூலம் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இந்த அடிப்படையில் தனக்கு மூன்று மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளராக ரவி கருணாநாயக்க எம்.பி. நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலேயே ரவி கருணாநாயக்க எம்.பி. தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ரவி கருணாநாயக்கவை தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த யோசனைக்கு செயற்குழுவில் பெரும்பான்மை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட புதிய யாப்பின் பிரகாரமே இந்த பதவிக்கு உறுப்பினர் தெரிவு இடம்பெற்றுள்ளது.

தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட ரவி கருணாநாயக்க "கேசரி'க்கு கருத்து வெளியிடுகையில் :

மிகவும் முக்கியமான கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி கட்சியில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே, கட்சியின ஒற்றுமையை பேணுவதற்கு இந்த பதவியில் இருந்துகொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

கட்சியை பல்வேறு மட்டங்களில் பலப்படுத்துவதற்கும் வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்குமாக மிகவும் அர்ப்பணிப்புடன் எனது பணிகளை முன்னெடுப்பேன் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...