27 செப்டம்பர், 2010

காலங்கடந்து அரசுடன் இணைந்ததால் பியசேனவுக்கு முழுப் பலன் கிட்டவில்லை : முரளிதரன்

பியசேன காலங் கடந்து அரசாங்கத்துடன் இணைந்தமையால் முழுமையான பலன்களை அவரால் அனுபவிக்க முடியவில்லை. ஆளும் கட்சியில் ஒரு பிரதிநிதியை நீங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்திருந்தால் பல அபிவிருத்திகளை விரைவாகச் செய்யக் கூடியதாக இருந்திருக்கும்.

அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் இல்லை. ஆரம்பத்திலேயே அரசாங்கத்தில் அவர் சேர்ந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்" என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக நேற்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இதன்போது திருக்கோவில் விநாயகபுரத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அவருக்குப் பாரிய வரவேற்பளித்தனர். விநாயகபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆலய வழிபாடுகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைக் காரியாலயத்தை அவர் திறந்து வைத்தார்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

"உங்கள் வாக்குபலத்தை வீணடிக்கும் செயலை கடந்த தேர்தலில் நீங்கள் செய்திருந்தீர்கள். உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உங்களுடன் இருப்பவர்களுக்கும் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களியுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒருவரை அனுப்புவதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வேலைகள் மட்டக்களப்பு, திருமலை, வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்து வசதிகளையும் விரைவில் மேற்கொள்வுள்ளேன்.

எதிர்வரும் நவம்பருக்குப் பின்னரே வீடுகள் அமைப்பது போன்ற அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதற்கு முன்னதாக உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொழில்வாய்ப்புகள், கல்வி நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

யுத்தத்தால் கடந்த 30 வருடங்களாக நாம் பட்ட இன்னல்கள் கொஞ்சங்கொஞ்சமாக களையப்பட்டு வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, அதன் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

வீதி அபிவிருத்தி மற்றும் அடிப்படைக் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்துத் தனிப்பட்ட ஒவ்வொருவரையும், மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபடவுள்ளோம்.

அம்பாறை மாவட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு அமைச்சிடம் இருக்கிறது. அதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கான ஆரம்பமாகவே உங்களை இன்று சந்திக்கிறோம். நீங்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விட்டுவிடாது நமக்காக உழைப்பவர்களை அரசியலுக்குக் கொண்டுவாருங்கள். அதன் மூலம் தான் எமது பிரதேசத்தைப் பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாக மாற்றியமைக்க முடியும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

18ஆவது அரசியலமைப்பு:பிரதிநிதிகளை அறிவிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம்

18 ஆவது அரசியலமைப்பின் நாடாளுமன்ற சபைக்கு எதிக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தமது பிரதிநிதிகளை அறிவிப்பதற்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இரு தலைவர்களும் இன்னும் ஒரு வாரத்தில் தமது பிரதிநிதிகளை அறிவிப்பர் என நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் தம்மிக்க கித்துல்கொட இன்று தெரிவித்தார்.

ஏற்கனவே தெரிவான பிரதிநிதியின் பெயர் நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் மற்றுமொருவரை அறிவிக்கும்படி தாம் எழுத்துமூலம் கேட்டிருந்ததாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதியவரை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்ததும், பிரதிநிதிகள் பட்டியலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கவுள்ளதாக சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை பரிந்துரை செய்திருந்த போதிலும், அது நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அக்கிய மூவரும் ஐவரை மேற்படி புதிய அரசியலமைப்புச் சபைக்கு பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும்படி கேட்கப்பட்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் மேலும் 25 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை

இலங்கையில் ஆபாச இணையத்தளங்களைத் தடை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு, அவ்வாறு இயங்கும் 25 இணையத்தளங்களைத் தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

ஆபாச தகவல்கள், காட்சிகளை வெளியிட்ட 186 இணையத்தளங்கள் நீதிமன்ற அனுமதியுடன் தடை செய்யயப்பட்டுள்ளன. இவற்றில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளின் ஆபாச புகைப்படங்கள், காணொளிகள் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

வர்த்தக நகரமாக கரடியனாறு : கிருஷ்ணானந்தராஜா கோரிக்கை

கரடியனாறை மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக மாற்றுமாறும், வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கரடியனாறு பொலிஸ் நிலையத்தை நவீன முறையில் அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவரது கடிதத்தில் மேலும்,

"கரடியனாறில் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் நிலையக் கட்டடம் கமநலசேவை வளாகத்தில் அமைந்திருந்துள்ளது.

அந்த வளாகத்தில் நெல் சுத்திகரிப்பு நிலையம், நெல் களஞ்சியசாலை, கமநல சேவை நிலையம், என்பன அமைந்திருந்தன. இவை அனைத்தும் சேதமாக்கப்பட்டு விட்டன.

இங்கிருந்த பொலிஸ் நிலையம் தற்காலிகக் கொட்டகையில் இயங்கி வருகிறது. அத்துடன் கால்நடை வைத்திய காரியாலயம், அருகிலிருந்த ஆலயம், தபாலகம் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் என்பனவும் சேதமடைந்துள்ளன.

இவ்வாறு முழு அளவிலும் பகுதியளவிலும் அரச, தனியார் கட்டடங்கள் கரடியனாறில் சேதமடைந்துள்ளன.

எனவே விசேட புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி வேலைத் திட்டம் ஒன்றை கரடியனாறில் ஆரம்பித்து மாதிரி விவசாய விளைபொருள் வர்த்தக நகரமாக அதனை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இந்த இடத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாமை வேறிடத்துக்கு மாற்றி, கரடியனாறு பொலிஸ் நிலையத்தைப் புதிய முறையில் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

பதுளை வீதியில் கரடியனாறு நகரம் என்பது, ஏ 5 வீதியின் மையப் பகுதியிலும், ஆயித்தியமலை உன்னிச்சை வீதி சந்திக்குமிடமாகவும், வேப்பவெட்டுவான் மாவடியோடை பகுதியை இணைக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.

இப்பகுதியிலுள்ள 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம், மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு வருபவர்களாவர்.

இலங்கையின் முக்கியமான மரக்கறி மாதிரிப் பண்ணைகளில் ஒன்றான கரடியனாறு இங்கு அமைந்துள்ளதால் இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இங்கு விவசாய விளைபொருள் வர்த்தக நிலையம் ஒன்றை அமைப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்கள் பாரிய நன்மையடைவார்கள். இதன்மூலம் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மேம்பாட்டுக்கும் ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐதேக சிரேஷ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க அரசுடன் இணைவார்?

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க அரசுடன் இணைந்து கொள்வார் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஐதேக மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரை இழக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

நியூயோர்க் சென்றிருக்கும் ஜோன் அமரதுங்க நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன் அமரதுங்க. இலங்கை வெளி விவகார அமைச்சின் விசேட அழைப்பின் பேரில் தாம் நியூயோர்க் செல்ல இருப்பதாக முன்னர் தெரிவித்தார். இதற்கு ஐ.தே.கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதன் பின்னர், தாம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் செல்வதாக அவர் தெரிவித்தார்.

அவர் இன்று 27ஆம் திகதி நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்துகொள்வார் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன் அமரதுங்கவின் வீட்டுக்குத் தற்போது விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பதவிக்காலம் முடிவதற்குள் பாராளுமன்றத்தை கலைத்து ஐ.தே.க ஆட்சியை கைபற்றும்: ரணில்

இன்றைய அரசாங்கத்தின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் நீடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். கூடிய விரைவில் பாராளுமன்றத்தைக் கலைத்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப் பீடமேற்றுவதுடன் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமாதான ஒப்பந்தம் மேற்கொண்ட என்னை தேசத்துரோகியாக வர்ணித்தவர்கள் இன்று பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டை மீட்ட சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்திருப்பது தான் தேசப்பற்றா? என்று கேட்க விரும்புகிறேன். என்னைத் தூற்றிய எந்தவொரு சிங்கள அமைப்பாவது பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்துள்ளதா? அல்லது சிங்கள ஊடகங்கள் தான் விமர்சித்துள்ளனவா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி பிரதேச அமைப்பாளர் பெவன் பெரேரா ஏற்பாடு செய்திருந்த இளைஞர் அணிக் கூட்டம் அவரது இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ரவி கருணாநாயக்க, ருவான் விஜேவர்த்தன ஆகிய எம்.பி. க்களும் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரும் பயங்கரவாதத்தை அழித்தொழித்தவருமான சரத் பொன்சேகா எம்.பி. யை இன்றைய அரசாங்கம் மிக மோசமான முறையில் பழிவாங்க அவரை சிறையில் தள்ளியிருக்கின்றது.

அவருக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் அவரது பதவிகள், பதக்கங்கள் பறிக்கப்பட்டு ஓய்வூதியமும் இரத்துச் செய்யப்பட்டு இறுதியில் அவர் இராணுவ சேவையில் பதவி வகிக்காதவர் என்றும் அறிவிக்கப்பட்டது.

அப்படியானால் இராணுவ சேவையில் இல்லாத சிவிலியன்களில் ஒருவரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக எவ்வாறு இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அமைக்க முடியும்? சிவிலியன் ஒருவரை எவ்வாறு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த முடியும் என்று கேட்க விரும்புகிறேன். அவருக்கு வழங்கப்பட்டுள்ள 3 வருட சிறைத் தண்டனையானது இராணுவ ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கான நீதிமன்றத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. மாறாக அந்தத் தீர்ப்பு அரசியலமைப்பின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சட்ட ரீதியான நீதிமன்றத்திலிருந்து வழங்கப்படவில்லை என்பதையும் இங்கு கூறி வைக்க விரும்புகிறேன். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினூடாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எம்.பி. யை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது மட்டுமல்லாது அவருக்கு பாரிய துரோகமிழைத்துள்ளது.

சமாதான உடன்படிக்கை மேற்கொண்ட என்னை தேசத்துரோகி என்று இந்த நாடே கூறித் தூற்றியது. பல சிங்கள அமைப்புக்கள் எனக்கெதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போர்க்கொடி தூக்கின. அவமதிப்பான சொற்பிரயோகங்களை வெளிப்படுத்தின. ஆனால் இன்று சரத் பொன்சேகாவின் நிலை என்ன என்பதை அந்த அமைப்புக்கள் அறிந்துள்ளனவா?தேசப்பற்று குறித்து பேசிய ஜாதிக ஹெல உறுமய எங்கே இருக்கின்றது. ஊடகங்கள் வாய் திறந்துள்ளனவா? சரத் பொன்சேகா தொடர்பிலான விடயங்களை தமிழ் மொழியிலான இணையத்தளங்கள் செய்தி வெளியிடும் அளவுக்கு கூட சிங்கள ஊடகங்கள் அக்கறைகாட்டவில்லை. ஆனாலும் நாள்தோறும் எனக்கு சேறு பூசும் விடயங்களை மாத்திரம் சரியாக செய்து வருகின்றன.

சரத் பொன்சேகா மக்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானவராவார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பினையடுத்து அவரது அனைத்து சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு உடந்தையான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கத்தின் இன்றைய சர்வாதிகாரப் போக்கினை உடன் தடுத்து நிறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனை மேலும் அனுமதிக்க முடியாது. தங்க மகன் என்றும் பயங்கரவாதத்தை வென்ற யுத்த வெற்றியாளன் என்றெல்லாம் கூறிய அரசாங்கம் தான் இன்று அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது. எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கென்று பொறுப்புக்கள் இருக்கின்றன. ஜனநாயகத்துக்கு விரோதமான பயணத்தை நிறுத்தியாக வேண்டும்.

எனவே முதலில் நாம் கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்துவோம். அடுத்ததாக இன்றைய அரசாங்கத்தின் ஆறு வருட பதவிக் காலத்தை இடையிலேயே முறியடித்து வெகு விரைவில் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அது மட்டுமல்லாது மக்களின் பேரபிமானத்துடன் ஆட்சியை அமைத்து சரத் பொன்சேகாவை சிறையிலிருந்து விடுவிப்போம்.அரசாங்கத்தின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும் அதேநேரம் சரத் பொன்சேகா எம்.பி. யை விடுதலை செய்து கொள்வதற்குமான போராட்டம் அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றயை தினம் பூகொடை பௌத்த மத்தியஸ்தான விஹாரையில் பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் நிம்மதியாக வாழ முடியாத சூழல்

இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது. இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில்,

உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் பாரிய மோசடிகளே இடம்பெறுகின்றது. பொதுமக்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு அரசாங்கத்தின் அடக்கு முறைகள் காணப்படுகின்றது. மனித உரிமைகளுக்கோ மனிதாபிமானத்திற்கோ இலங்கையில் மதிப்பில்லை.

அரசியல் பழிவாங்கல்களும் சர்வாதிகார ஆட்சியுமே இலங்கையில் மேலோங்கியுள்ளது. இது உலக நாடுகள் அறிந்த உண்மை. இதனை இல்லை என அரசாங்கம் ஐ.நாவில் கூறியமை சர்வதேச மட்டத்திலான வேடிக்கையாகவே உள்ளது. சிறுபான்மை இன மக்கள் மாத்திரமல்ல எந்தவொரு இனத்திற்கும் இலங்கையில் அச்சமின்றி வாழ முடியாது.

காலாகாலமாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. சலுகை இல்லாமல் போனதற்கு உள்நாட்டில் மனித உரிமைகளும் நல்லாட்சியும் இல்லாமையே காரணமாகும். அத்தோடு யுத்தம் முடிந்துள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. கம்பி வேலிகளுக்குள் தமிழ் மக்கள் சிறைப்படுகின்றனர். இன்னும் ஆள்கடத்தல்கள் கூட முடிவிற்கு வரவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு இலங்கையே சுதந்திரமான நாடு என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை எனக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தரமுயர்வு கல்வித்துறை மேம்பாட்டுக்கென நான்காண்டு திட்டம் ஜனவரியில்






வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்ட ங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசா லைகளே இவ்வாறு தரம் உயர்த்தப்பட வுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள ஆயிரம் பின்தங்கிய பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சருக் கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப் பட்டதாகத் தெரி வித்த அவர், இவற்றில் வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பி ட்டார்.

வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும், அரசாங்கமும், மாகாண அமைச்சும் மேற்கொண்டுள் ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறையில் வரவுள்ள இத்திட் டம் நான்கு ஆண்டு காலத்திற்குள் நிறைவடை யவுள் ளது என்றார். வட மாகாணத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐந்து பாட சாலைகளும், மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் 1006 பாடசாலைகளும் உள்ளதாக தெரிவித்த அவர், இவற்றில் 82 பாடசாலைகள் இன்னும் மீள திறக்கப் படாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். ஐந்து கிராமங்களிலிருந்து ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் மாவட்டமொன்றி லிருந்து 20 தொடக்கம் 30 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

பின்தங்கிய 20 பாடசாலைகளையும் சம்பந்தப்பட்டவர்களின் உதவியுடன் தானே தேர்ந்தெடுத்து அதற்கான சிபாரிசு களை கல்வி அமைச்சுக்கு அனுப்பவுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் வடமாகாணத்திலு ள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வுள்ளதுடன் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் நன்மையடைய வுள்ளனர்.

இதேவேளை, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறந்த பாடசாலைகளைத் தேடி அலையும் சிரமத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பாடசாலைக்குத் தேவை விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடங்கள், நூலகம், கணனி அறைகள், பெளதீக வளங்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் மேற்படி பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கையும் 1500 ஆக அதிகரிக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் மூடப்பட்டுள்ள சுமார் 82 பாடசாலைகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மூவர் பலி கட்டுநாயக்க ரயில் கடவையில் கோரம்


கட்டுநாயக்கா ரயில்வே கடமையில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தொன்றி மூவர் பலியாகியதுடன் மற்றுமொருவர் படுகாயங்களுடன் கொழும்பு பெரியாஸ் பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரே இவ்விபத்துக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் இருவர் பெண்களாவர்.

விபத்தில் பலியான மூவரது சடலங்களும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கொழும்பி பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே துறை உயரதிகாரியான விஜயசமரசிங்க தகவல் தருகையில், நேற்றைய தினம் 6.14 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து ரயில் எஞ்சினொன்று சிலாபத்தை நோக்கி சென்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயப் பிரதேசத்தில் நான்கு பேர் பயணித்த மோட்டார் சைக்கிளானது ரயில் கட வையை ஊடறுத்துச் செல்ல முனைகையிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் என்ஜின் மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேற்படி விபத்தில் சம்பந்தப் பட்ட நால்வரும் கட்டுநாயக்க பிரதேச வாசிகளல்ல எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். விசாரணைகள் தொடர்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ரூ.12 இலட்சம் பெறுமதியான கருத்தடை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவிலிருந்து திருட்டுத்த னமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான கருத்தடை மாத்திரை களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியு ள்ளனர்.

இலங்கையர் ஒருவரே இந்தியாவின் சென்னையிலிருந்து இம்மாத்திரைகளைக் கடத்தி வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கான உணவு சவர்க்காரம் மற்றும் சொக்கலேட்டுக்களுக்குள் மறைத்து வைத்தே இதனை கொண்டு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

அன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடை ந்த யி. வி. 573 விமானத்தில் பயணித்துள்ள அவர் சுங்க அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இதனை வெளியே கொண்டு வருவதற் காக பெரும் பிரயத்தனம் மேற்கொண்ட போதும் அது பலிக்க வில்லை. சுங்க அதிகாரிகளான லால் சில்வா, நந்தன ஜயதிலக ஆகியோர் லாவகமாக குறிப்பிட்ட கருத்தடை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் பதிவு செய்யப்படாத 3860 மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்கவின் வழிகாட்டலில் பிரதிச் சுங்கப் பணிப்பாளர் ஹேமால் கஸ்தூரி ஆராய்ச்சி மேற்படி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சந்தேக நபருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீள் குடியேற்றப்பட்டோருக்கு விசேட ஏற்பாடு: மழைக்கு ஈடுகொடுக்கும் வகையில் கூடாரத்துணிகள், கூரைத்தகடுகள்

வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளோ ர்க்கு எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பாதுகாப்பான கூடாரங்களை அமைத்துக் கொடுப்பதற்கென வட மாகாண சபை 5 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளதென மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிரி தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கில் மீள்குடியேறியுள்ளோருக்கென 51 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஒக்டோபர் நடுப்பகுதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மழைக் காலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் தற்காலிகமாக இந்தக் கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படவிரு ப்பதாகவும் ஆளுநர் கூறினார்.

மோதல்களின் போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்கள் மற்றும் ஏனைய வெளி மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அரசாங்கத்தின் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். துரிதகதியில் மீள் குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில், எதிர்வரும் மழைக்காலத்திற்கு முன்னதாக அம்மக்களுக்கு பாதுகாப்பான கூடாரங்கள் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக வடமாகாண ஆளுநர் தலைமையில் அண்மையில் கொழும்பில் கூடி ஆராயப்பட்டது.

இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதாக இணக்கம் தெரிவித்திருக்கும் கூரைத் தகரங்களுக்கும் மேலதிகமாகவே வடமாகாண சபை இதற்கென 05 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேவேளை, ஆளுநரின் வேண்டுகோளுக்கமைய போதி யளவு கூரைத்தகரங்கள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் சீட்டுக்களைப் பெற் றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மீள்குடி யேற்ற அமைச்சு முன்னெடுத்து வருவதாக வும் அதன் செயலாளர் எஸ். திஸாநாயக்க கூறினார். இதற்குரிய நிதி கூடிய விரை வில் அமைச்சினூடாக பெற்றுக் கொடுக்கப் படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல தன்னார்வ தொண்டு நிறுவனங் களும் மழைக் காலத்திற்கு முன்னதாக கூடா ரங்களைப் பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இதன்படி குடும்ப மொன்றுக்கு 12 கூரைத் தகடுகள் வீதம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க வர்த்தகர்களுடன் ஜனாதிபதி சந்தித்து பேச்சு


நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிலுள்ள முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கலந்துரையாட ப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அமெரிக்காவின் பிரபல வர்த்தகர்கள் பங்குபற்றிய கூட்டமொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றது. இதில் பிரபல வர்த்தகர்கள் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது அமெரிக்க பிரபல வர்த்தகர்களை சந்தித்த ஜனாதிபதி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

இதற்கு அமெரிக்க வர்த்தகர்களும் தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை தற்போது சிறந்த தகுதியுடைய நாடு என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாக ஆராய்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசிய பிரதமர் அப்துல் ரஸாக்கை நியூயோர்க்கில் சந்தித்து பேசினார். மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற பயங்கரவாதத்தை முறியடிக்க படையினருக் கான யுத்தப் பயிற்சி மற்றும் புலனாய்வுத் துறையில் மலேசியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அச்சமயம் மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் பாதுகாப்பு படையினரை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பிராந்தியத்தில் உயர்மட்ட படையினர் பயிற்சி பாடசாலையான ஸ்கயிட் படை யினர் பயிற்சி பாடசாலையில் பயிற்சியளிக்க தொடர்ந்து வாய்ப்பளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் இணங்குவதாக இந்த சந்திப்பின் போது மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் முதலீடு செய்துள்ள மலேசியர்கள் பெரும்பாலும் தொலைத் தொடர்புத் துறையிலேயே முதலீடு செய்துள்ளனர். இதனை மலேசிய பிரதமரின் அவதானத்துக்கு உட்படுத்திய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏனைய துறைகளிலும் மலேசிய வர்த்தகர்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மலேசிய பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...