கிழ. மாகாண அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மீண்டும் பாதுகாப்பு படையினர்
சட்டவிரோதமாக துணி விற்பனையில் ஈடுபட்ட 5 இந்திய வியாபாரிகள் கைதாகி பிணையில் விடுதலை
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு
நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டிற்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேக நபர்களை விற்பனைப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வாகரையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இராமையா மகாலிங்கம் ,மாரியப்பன் அழகுசாமி ,மாரியப்பன் முருகேசன் ,வெங்கடாசலம் முணியாண்டி ,சின்னவேலு இராமு, ஆகிய குறிப்பிட்ட சந்தேக நபர்கள் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை தலா ரூபா 50 ஆயிரம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி கடவுச் சீட்டை நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்து வெளிநடமாட்டத்தின் நிமித்தம் அதன் போட்டோ பிரதியை பெற்றுக் கொள்ளுமாறும் சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கிய நீதிபதி அன்யை தினம் சந்தேக நபர்களை மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு மீண்டும வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் டெலோ, புளொட், ஈ. பி. டி. பி., ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் அலுவலகங்களுக்கும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று முன்தினம் முதல் எவ்வித முன் அறிவித்தல்களுமின்றி திடீரென பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவின் பேரில் வாபஸ் பெறப்பட்டன.
இதன் காரணமாக இவ் அலுவலகங்களுக்கும் குறித்த நபர்களுக்கும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தாம் சேவையாற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு திரும்பினர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து பாதுகாப்பு உயர் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு 48 மணி நேரத்திற்குள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் தலைவருமான இரா. துரைத்தினம் திருகோணமலையிலுள்ள தமது கட்சி அலுவலக்திற்கு நேற்று மாலையும் மட்டக்களப்பிலுளள் அலுவலகத்திற்கு இன்று காலையும் பொலிஸார் மீண்டும் பாதுகாப்பு கடமைகளுக்கு திரும்பயுள்ளதாக கூறினார்.
தமது கட்சியைச் சேர்ந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அவர் குறிப்பிட்டார்