9 ஜூன், 2010

பாலியல் புகார் -6 சிப்பாய்கள் கைது


இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் ரெட்பானா பகுதியில் இரவு வேளை வீடொன்றினுள்ளே புகுந்தவர்கள் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்பப் பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து, வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் இருவரும் இன்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்ற அமர்வின்போது இந்தச் சம்பவம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தோருக்கென 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு இந்தியா நிதியுதவி ஜனாதிபதி மஹிந்த - மன்மோகன் சந்திப்பில் இணக்கம்
இந்தியாவும் இலங்கையும் அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் பரந்துபட்ட ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தின. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உடனான சந்திப்பின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் சமாதானம், சகோதரத்துவம், கெளரவம், சம உரிமையுடன், ஜனநாயக மற்றும் மனித உரிமையுடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை தமது அரசின் எதிர்ப்பார்ப்பு என்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நோக்கங்களை அரசியலமைப்பில் அவற்றை குறிக்கும் ஷரத்துக்களின் மூலம் நிறைவேற்று அவர் இணக்கம் தெரிவித்தார்.

இதனை பெரிதும் வரவேற்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சமாதானத்துக்கும் அமைதிக்கும் இலங்கை எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்று குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துக்களை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கு நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்தது. அதே போன்று வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் ஒழிந்து போன உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்துத் தரவும், புதிய நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகளை நிர்மாணித்துத் தரவும், தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு உதவி வழங்கவும் இந்திய இணக்கம் தெரிவித்தது.

இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேலும் விஸ்தரித்துக் கொள்வது தொடர்பான இணக்கம் முன்னுரிமை பெற்றது. இதற்காக இருநாடுகளும் இணை ஆணைக் குழு ஒன்றை வெளியுறவு அமைச்சு மட்டத்தில் இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதென இணக்கம் காணப்பட்டது.

இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பற்றி குறிப்பிட்ட இரு தலைவர்களும் இரு தரப்பு பொருளாதார கூட்டுறவை விஸ்தரிப்பது தொடர்பாக நிலையான வியூகமொன்றை அமைப்பதற்கு இரு நாடுகளினதும் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இலங்கை படையினருக்கு பயிற்சி வழங்குவதற்கும் இராணுவ பிரதிநிதிகளை பரிமாறிக் கொள்வதற்கும் இரு நாடுகளுக்கிடையிலும் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பாக செயலமர்வுகளை நடத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்தன. அத்துடன் அண்மையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பொலிஸாருக்கு இந்திய நிறுவனங்களில் பயிற்சி வழங்குவதற்கும் இணங்கப்பட்டது.

கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையிலும் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரையிலும் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டதுடன் அதனை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

இந்திய கவுன்ஸில் அலுவலகங்களை யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டையிலும் திறப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. புதுடில்லி, சென்னை மற்றும் மும்பாயில் உள்ள அலுவலகங்களுக்கு புறம்பாக மற்றொரு அலுவலகம் அமைப்பதற்கான இலங்கையின் விருப்பத்துக்கு இந்தியப் பிரதமர் சாதகமான அறிகுறியைக் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று இந்திய ஜனாதிபதி மாளி கையான ராஜ்டிரபதிபவனில் மகத்தான வரவேற் பளிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரபதிபவனை நேற்றுக் காலை சென்ற டைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல் பிரதமர் கலா நிதி மன்மோகன்சிங் ஆகியோரினால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டதுடன் இலங்கை ஜனாதிபதி யின் வருகையைக் கெளரவிக்கும் வகையில் முப்ப டைகளினதும் அணிவகுப்பு மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு இரு நாடுகளினதும் நட் புறவைப் பிரதிபலிக்கும் வகையில் விசேட வைபவ மொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இவ்வைபவத்தின் போது இந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபாபட்டேல், இந்திய ராஜதந்திரிகள் மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகளையும் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுடன் ஜனாதிபதி தலைமையிலான இல ங்கை தூதுக்குழுவும் அறிமுகப்படுத்தி வைக்கப்பட் டது.

நேற்றைய தினம் மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதனையடுத்து பிற்பகல் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தையையும் மேற்கொண்டார்.

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தில் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, கெஹெலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர உட்பட பல அமைச்சர்களின் செயலாள ர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவும் இணக்கம்;செய்தியாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை யில் ஈடுபடவும், இணைந்து செயற்படவும் ஜனாதிபதி யுடனான சந்திப்பில் இணக்கம் கண்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் அடுத்த கட்டப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம், இடம்பெயர்ந்து மீள்குடியேறும் மக்களுக்கு இன்னும் பணிகளை ஆற்ற முடியுமென்றும் அதற்காக உலக நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொடுக்கத் தயாரென்றும் கூறிய சம்பந்தன் எம்.பி. அதற்காக சர்வதேச நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கோரிக்கை விடுக்கவும் தயார் எனத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற குழு அறையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்து, 28 கிராமங்களில் மீள்குடியேறிய மக்களின் நிலவரங்களைக் கூட்டமைப்பினர் நேரில் அவதானித்து ஆராயந்துள்ளனர். இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கையொன்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சம்பந்தன் எம்.பி. செய்தியாளர் மாநாட்டிலும் அதனை வெளியிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கத்திற்குத் தார்மீக ரீதியாகவும் சட்டரீதியாகவும் கடப்பாடு உள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர் வடக்கில் தமது விஜயத்தின்போது நேரில் தெரிந்து கொண்ட குறைபாடுகளை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பினர் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. சந்திப்பைத் தொடர இணக்கம் கண்டிருப்பதாகவும் கூட்டமாக அல்லாமல் சிறிய சிறிய குழுக்களை அமைத்து பேச்சுவார்த்தையைத் தொடரவுள்ளதாகவும் ஜனாதிபதி நாடு திரும்பியதும் அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டதாகக் கூறிய சம்பந்தன் எம்.பி, “ஜனாதிபதியை நாம் சந்திக்கச் சென்ற போது, புலிப் பயங்கரவாதிகள் கேட்டதை என்னிடம் கேட்காதீர்கள் என்றார். நாம் அதனைக் கேட்க வரவில்லை என்று கூறினேன். நாம் அரசாங்கத்தைக் குறைகூறவில்லை. அரசாங்கம் மக்களுக்குப் பணியாற்றி இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது.

கடந்த காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படவில்லை. அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தவில்லை என்று கூறுவது தவறு. அழைத்த அத்தனைப் பேச்சுவார்த்தைக்கும் சென்றிருக்கிறோம். இனி மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் இணைந்து செயற்படுவோம்” என்றும் தெரிவித்தார்.

“உதவி வழங்கும் நாடுகளுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சம்பந்தன், ‘இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சொந்தத் தொழிலுடன் சுகபோகமாக வாழ்ந்த மக்கள் இன்று வெறுங்கையுடன் நிற்கிறார்கள். அவர்களை மீளவும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வருவதற்குப் பெருந்தொகைப் பணம் அவசியமாகிறது.

எனவே, உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நிதியைப் பெற்றுக் கொடுக்கும் அதேநேரம் அது உரிய முறையில் செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத் தினார்.
மேலும் இங்கே தொடர்க...

வடபகுதி மக்களும் கெளரவமாக வாழ நடவடிக்கை பசில் ராயபஹ்சாதமிழ்க்கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்பாடு
வட பகுதி மக்களும் கெளரவமான இலங்கையர்களாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்தி அவர்களின் ஆதரவுடன் வடபகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெ ன்றும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காகத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்த போதிலும், சில அழுத்தங்கள், தலையீடுகள் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக மீளக் குடியமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இல்லாவிட்டால் அந்த மக்களுக்கு சிறந்த வாழ்வாதார ஆதரவினை வழங்கியிருக்க முடியுமெனத் தெரிவித்தார்.

பெரும்போக அறுவடையைச் செய்யக்கூடியவாறு மக்களை மீளக்குடியமர்த்தவிருந்ததாகவும், ஆனால், தற்போது அவர்கள் இடைப்போகத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் மீளக் குடியேறியுள்ள பிரதேசங்களுக்குச் சென்று நேரில் அவதானித்த விடயங்கள் குறித்து இரா. சம்பந்தன் எம். பி. நேற்று (09) சபையில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வட பகுதிக்குச் சென்றுவரக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்று குறிப்பிட்ட அமைச்சர் பசில், கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதும் ஐ. நா. வின் சான்றிதழைப் பெற்றே மக்களை மீளக் குடியமர்த்துவதாகவும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறினார்.

வடக்கில் ஒரேயொரு பிரதேச செயலகப் பிரிவைத் தவிர ஏனையவற்றில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதை, மின்சாரம், குடிநீர், நீர்ப்பாசனம், கூட்டுறவு சங்கக் கடை, வைத்தியசாலை உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன.

மீன்பிடித்துறை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்ற துறைகளில் தொழில்களைத் தொடங்க ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டதும் நன்னீர் மீன்வளர்ப்பு ஆரம்பிக்கப்படும்.

மீனவர்களுக்கு வலை, படகு என்பவை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வடக்கில் உள்ள 160,00. வீடுகளையும் புதிதாக நிர்மாணித்துக் கொடுப்பது அரசால் சாத்தியமில்லையென்றும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கரங்கொடுத்தால், அவர்கள் சொந்தக் காலில் சுயமாக எழுந்துநிற்க முடியுமென்று நம்புவதாகவும் சுட்டிக்காட்னார்.
மேலும் இங்கே தொடர்க...

டெல்லியில் இன்று மன்மோகன்சிங்குடன் ராஜபக்சே சந்திப்பு; ஒப்பந்தங்களில் கையெழுத்து

இலங்கை அடெல்லியில் இன்று    மன்மோகன்சிங்குடன்    ராஜபக்சே சந்திப்பு;    ஒப்பந்தங்களில் கையெழுத்துதிபர் ராஜபக்சே 2-வது முறையாக அதிபர் பதவியை ஏற்ற பிறகு முதன் முறையாக இந்தியா வந்துள்ளார்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த அவர் நேற்று இரவு டெல்லி வந்தார்.

இன்று அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அவரை வரவேற்றனர். ராணுவ அணி வகுப்பு மரியாதையும் நடந்தது. அதை ஏற்றுக்கொண்டார்.
அதை தொடர்ந்து மன்மோகன்சிங் - ராஜபக்சே சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஜனாதிபதி மாளிகையிலேயே நடந்த இந்த நிகழ்ச்சியில் பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

இன்று மாலை தமிழக எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சேயை சந்தித்து இலங்கை தமிழர்கள் நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மவுரியா ஓட்டலில் இந்த சந்திப்பு நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை ஜனாதிபதி - தமிழக எம்பிக்கள் இன்று சந்திப்பு

டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இன்று மாலை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். இதன்போது போரினால் இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்துவர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். இலங்கை பிரச்சினை குறித்து முக்கிய தலைவர்களைச் சந்தித்து அவர் பேசுவார்.

கடந்த 6ஆம் திகதி முதல்வர் கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்க்கும் வகையில், அவர்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார்.

மேலும் இதுதொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டில்லி சென்று, ராஜபக்ஷவை நேரில் சந்தித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் உத்தரவிட்டார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்த டி.ஆர்.பாலு, நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, ராஜபக்ஷவிடம் இலங்கை தமிழர்களை விரைவில் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி உத்தரவுபடி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கவிஞர் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.செந்தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஸ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஏ.ஏ.ஜின்னா, வசந்தி ஸ்டாலின், மணிசங்கர் அய்யர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணித்தாகூர், ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்பன், ஞானதேசிகன் ஆகியோர் இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்துவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. செயலாளர் மூன் மௌனம் : மனித உரிமை அமைப்புக்கள் விசனம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்களில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மற்றும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதம அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரின் பங்களிப்பு பற்றி சர்வதேச நெருக்கடிகள் குழுவும் ஏனைய அமைப்புக்களும் கேள்வி எழுப்பியுள்ளன.

இப்பொழுது, நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து எந்தவித சுயாதீன விசாரணைக்குழு முன்னிலையிலும் ஜெனரல் சரத் பொன்சேகா சாட்சியமளிக்க துணிந்தாரேயானால் அவரைத் தூக்கிலிடப் போவதாக ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அச்சுறுத்தியிருந்தார்.

ஆனால் பான் கீ மூனும் அவரது அலுவலகமும், கோத்தபாய ஜூன் மாதம் 7ஆம் திகதி விடுத்த இந்த அச்சுறுத்தலை அறிந்து கொண்டும் அது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கின்றனர்.

வரலாற்றை அடிப்படையாக வைத்து, மனித உரிமை பேணல் அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்தின் சுய விசாரணை நம்பகமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்கப் போவதாக தெரிவித்து 3 மாதங்களாகியும் தயக்கம் காண்பித்து வரும் செயலாளர்நாயகத்திற்கு தற்போது சாட்சிகள் மீதான கோத்தபாயவின் கொலை அச்சுறுத்தல் திருப்தி அளிக்குமா என்று இன்னர் சிற்றி பிறெஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கொலை அச்சுறுத்தல் பற்றி ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அறிந்தள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ள செயலாளர் நாயகம் மூனின் துணை பேச்சாளர் பர்ஹான் ஹான், நிபுணர்கள் குழுவின் அங்கத்தவர்கள் செயல்படும் விதிமுறைகளைத் தயாரிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக பதிலளித்துள்ளார்.

இது புதுமையாக இருக்கிறது. உதாரணமாக, இஸ்ரேல், காசா நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரண உதவிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரம்கூட ஆவதற்குள் அந்தச் சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கு செயலாளர் நாயகம் இஸ்ரேலுடனும் துருக்கி பிரதமருடனும் விதிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளார் என்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பான் கீமூன் வக்காலத்து வாங்குவதும் அவரது அதீதமான மந்தகதியும் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்களில் கொண்டுள்ள பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றனவா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

கைது செய்ததாக கூறப்படும் கே.பி.யும் கப்பல்களும் எங்கே?-ரவி கருணாநாயக்க எம்.பி. கேள்விபடையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி. (குமரன் பத்மநாதன்) எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் கப்பல்கள் எங்கே என்று ஐ.தே.க. எம்.பி.யான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.

குறுக்குக் கேள்வி வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புறம்பானது என்பதனால் பதிலளிக்க முடியாது என ஆளும் தரப்பினர் தெரிவித்தனர்.

ரவி கருணா நாயக்க எம்.பி. 2000 ஆம் ஆண்டு தொடக்கம் நட்ட ஈட்டு உரிமை பெறுவதற்குரிய படையினரின் எண்ணிக்கை தொடர்பில் கேள்விகளை கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் தினேஸ் குணவர்தன நட்ட ஈட்டு உரிமை பெற்ற படைகளின் எண்ணிக்கையும் தெரிவித்தார். இதனிடையே எழுந்த ரவி எம்.பி கைது செய்யப்பட்ட கே.பி. எங்கே, கப்பல்களும் எங்கே, யுத்த வீரனான ஜெனரல் சரத்பொன்சேகாவை கைது செய்து தடுத்து வைத்துள்ளீர்கள் என சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவான தினேஸ் குணவர்தன பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அதோ இருக்கிறார் என ஜெனரல் சரத் பொன்சேகாவை சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை - ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பீரிஸ்


"இலங் கையில் இடம்பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்திருக்கிறார்.”இந்தக் கட்டத்தில் இறைமையுள்ள அரசாங்கத்துக்கு தீய நோக்கத்துடனான எந்த சுமைகளையும் ஏற்றக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

லண்டனை தளமாக கொண்ட கேந்திரோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் அமர்வின் போதே பீரிஸ் இதனை கூறியுள்ளார்.”கிளர்ச்சி எதிர்ப்பும் ஆட்சியை வலுப்படுத்துவதும்” என்ற கருப்பொருளில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றிய பின்னர் கேள்விக்கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டதாக இந்துப் பத்திரிகை குறிப்பிட்டது.

“இந்தக் கட்டத்தில் வெளிமட்ட தலையீட்டுக்கான எந்தவொரு தேவையும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.”நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது குறைபாடுகள் தேவைகள் ஏற்பட்டால் நிச்சயமாக எமக்குத் தேவைப்படும் ஆதரவு குறித்து ஐ.நா. முறைமையிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசாமல் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

நீதியான தீர்வை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்கள மக்களின் மனநிலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய நிலைமையில் இருப்பதாக மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், 25 வருடங்களில் முதல் தடவையாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டரீதியான ஆற்றலையும் அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோதலுக்குப் பின்னரான தற்போதைய கட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு வலுவான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த கால யோசனைகளுக்கு அப்பால் மேலும் விடயங்களை சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மேற்குலகிலும் ஏனைய இடங்களிலுமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நாங்கள் விடுக்கும் செய்தியானது அவர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் வட,கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் உள்சார் கட்டமைப்பு திட்டங்களில் அவர்களையும் பங்கேற்குமாறு நாங்கள் அவர்களுக்கு கூறுகின்றோம்.

அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பாக உள்நாட்டு மட்டத்திலான பொறிமுறையே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு வெளிமட்ட அழுத்தமும் இல்லாமல் இது இடம்பெறுகிறது. “அவசரகால ஒழுங்குவிதிகளில் 70 சதவீதமானவற்றை நாம் நீக்கியுள்ளோம்” என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் கொண்டிருந்தது.அவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். 9 ஆயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப்படக்கூடியவர்களாகும். இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும்.மீதிப் பேரைப் பொறுத்தவரை அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டுள்ளோம் என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச் சட்டம் மக்களை அடக்குவதற்கே பயன்படுகிறது-சரத் பொன்சேகா

பயங்கரவாதம் யுத்தம் இல்லாத நிலையில் பொது மக்களை அடக்கி ஒடுக்குவதற்கே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுவது நாட்டிற்கு பெரும் ஆபத்தானதாகும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா சபையில் கூறினார்.

சாதாரண சட்டம் அமுலில் இன்மையால் நீதிபதிகள் மட்டுமின்றி நீதிமன்றங்களும் அஞ்சுகின்றன. சட்டத்தை கையிலெடுத்து மக்கள் பிரதிநிதியை தூக்கிலிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் முயற்சிக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தம் இல்லாத நிலையில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை. அரச பயங்கரவாதத்தினால் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். அறிஞர்களும், மதத் தலைவர்களும் அஞ்சுகின்றனர். விஹாரைகளுக்கு கல் வீசப்படுகின்றன.அவசரகாலச் சட்டத்தை முன்னெடுப்பதற்காக சாதாரண பொதுச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டதன் பின்னர் ஒரு மாதத்திற்கு கைது செய்யப்பட்டவராக நான் மட்டுமே இருக்க முடியும். நீதிபதிகளும் அஞ்சுகின்றனர். பெண் நீதிபதிகளும் அச்சுறுத்தப்படுகின்றனர். எனக்கெதிரான வழக்கை விசாரித்த நீதிபதியை இடமாற்றுவதற்கு முயற்சித்தனர். எனினும் எதிர்ப்பினால் ஒரு மாதத்திற்கு இடமாற்றம் இடை நிறுத்தி வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டிற்குள் அமைச்சர்களும் ஆளுந்தரப்பினரும் ஜனநாயக கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின்பேக்ஷிது படுகொலைகளும் தாக்குதல்களும் இடம்பெற்றன. ஜே.வி.பி., ஐ.தே.க. வினரும் தாக்கப்பட்டனர். பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடக்கின்றது. புனர்வாழ்வளிக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? முகாம்களுக்கு வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டனவா? இவையெல்லாவற்றையும் செய்யாவிடின் அவர்களை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடும் செயற்பாடாகவே அமையும்.சட்டத்திற்கு சகலரும் சமமானவர்கள் என அமைச்சர் பீரிஸ் அமெரிக்காவில் கூறியிருப்பதும் என்னைப் பற்றி கூறியிருப்பதும் கவலைக்குரியதாகும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. திணைக்களம் மக்களின் நலனுக்காக அன்றி அரசாங்கத்தின் நலனை காப்பதற்காக முயற்சிக்கின்றது. இராணுவத்திலிருந்து வெளியேறிய பலர் வேலையின்றி இருக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர ""பொம்மையாக இருக்க முடியாது'' இருக்கவும் கூடாது. பயங்கரவாத தடைச் சட்டத்தில் தற்காலிக ஏற்பாடுகள் இருக்கின்றன. அதில் கூட்டுப் பொறுப்பு முக்கியமானதாகும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் என்னை கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுக்கான தீர்மானம் பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் முறைகேடாகவே இடம்பெற்றது என்பதை உயரிய சபையில் உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இதன்போது ஆளும் தரப்பினர் கூச்சல் குழப்பமிட்டு கூற்றை நீக்குவதை விட வாபஸ்பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நின்றனர். இடைஞ்சலுக்கு மத்தியில் சரத் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும்போது எனக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் என்னை தூக்கிலிடுவதற்கு முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருக்கின்றார். பாராளுமன்ற உறுப்பினரை தூக்கிலிடுவதற்கு முயற்சிக்கின்றார். நாட்டின் சட்டத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கையிலெடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அமைச்சுக்கு சொந்தமானவர் அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். யுத்த வெற்றிக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் எதனையுமே செய்யவில்லை என்பதனை இயற்கையும் நிரூபித்துவிட்டது.படையணியில் கலந்து கொள்ளவிருந்த வீரர் ஒருவர் இடி தாக்கத்திற்கு இலக்காகி பலியாகியுள்ளார். இது முதற்தடவையாகும் என்பதுடன் பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை நிலை நாட்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
மேலும் இங்கே தொடர்க...