27 மே, 2011

ஈரானில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொலை, பாலியல் வல்லுறவு ,கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

ஈரானின் டெஹ்ரானில் உள்ள ஷிராஸ் நகரில் வைத்தே நேற்று இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அந்நாட்டில் இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனையே வழங்கப்பட்டு வருகின்றது இதுவும் பல சமயங்களில் பொது மக்கள் முன்னிலையிலேயே இடம்பெற்று வருகின்றது.

ஈரானின் இக் கொடூர தண்டனைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கண்டனம் ‌தெரிவித்துள்ள போதிலும் தமது நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு இத்தகைய தண்டனைகள் அவசியமென ஈரான் தெரிவிக்கின்றது. இதேவேளை நேற்று மேலும் 7 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஈரானில் இவ்வருடத்தில் 143 பேருக்கு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் அங்கு 179 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாகவும், சீனாவிற்கு அடுத்ததாக அதிகப்படியான மரணதண்டனைகள் இங்கேயே நிறைவேற்றப்படுவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

தூக்குமேடையில் ஏற்றி அலுகோசு கயிறை இழுத்தாலும் கண்ணீர் மல்கேன்: பொன்சேகா

சர்வதேச யுத்த விசாரணைக்கு முகம்கொடுப்பதற்கு நான் தயார். நாடு முகம்கொடுத்திருக்கும் சர்வாதிகார ஆட்சியில் என் வாழ்க்கை இருக்கும் வரையில் 100 சிறைகளில் அடைத்தாலோ, தூக்கில் ஏற்றினாலோ எனது தாய்நாட்டின் மீதான அன்பை அப்படியே வைத்திருப்பேன். அலுகோஸ் என்னை ஏற்றுக்கொள்ளட்டும் அவர் தூக்குகயிறை இழுத்தாலும் நான் கண்ணீர் மல்கேன் என்று வெள்ளைக்கொடி விவகார வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார்.

யுத்தத்தின் வெற்றிக்காக போராடிய இராணுவத்திற்கு நானே தலைமைதாங்கினேன். இராணுவம் தொடர்பிலும் என்னைப்பற்றியும் பான் கீ மூன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையை இன்று வரையிலும் நான் பார்க்கவில்லை அதற்கான சந்தர்ப்பமும் எனக்கு கிடைக்கவில்லை அவ்வறிக்கைக்கு நானே பதிலளிக்ககூடியவன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் நானும் எதிர்க்கட்சி தலைவரும் கைது செய்யப்பட்டிருப்போம். இன்று நான் சிறைச்சாலையில் இருக்கின்றேன் கே.பி அரசாங்க சிறையில் இருக்கின்றார் என்றும் அவர் சொன்னார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி. வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையிலேயே இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.வழக்கின் பிரதிவாதியான முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையை ஐந்தாவது நாளாகவும் சமர்ப்பித்து வாசிக்கையில்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா வழங்க ஏற்பாடு மொரட்டுவ பல்கலையில் விசேட பயிற்சி


இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர் களுக்கு Online வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது.

இப்புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில் நுட்பத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு தயாரிக்கவுள்ளது.

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டினரும், இலங்கை ஊடாக செல்லும் வெளி நாட்டினரும் இவ்வாறு Online வீசாவுக்காக விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விண்ணப்பிப்பவருக்கு விசா வழங்கப்பட்டு விட்டதற்கான அறிவித்தல் ஷிணிஷிஊடாகவோ,லீசீailஊடாகவே அறிவிக்கப்படும்.

விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும்.

இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.
மேலும் இங்கே தொடர்க...

ஓமந்தைவரை யாழ்தேவி


21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும்.

போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது.

ஓமந்தை ரயில் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள்.

1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழகங்களை மூடியாவது பகிடிவதைக்கு முடிவு கட்டப்படும்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அடுத்த வருடம் முதல் முற்றாக நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கொரு முடிவு கட்டப்படும் என உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் ஒரு சிறு குழுவினர் மேற்கொள்ளும் இத்தகைய அநாகரிகமான நடவடிக்கை களினால் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுமே பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கு தீர்க்கமான தீர்வு ஒன்று எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம். பி. அநுரகுமார திசாநாயக்க முன் வைத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

சில பல்கலைக்கழகங்களில் பகிடிவதை என்ற பெயரில் மாணவ மாணவியர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அண்மைக் காலமாக பெண்கள் மிக மோசமான விதத்தில் வதைக்கப்படுவதுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் பேசுவதற்குக் கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர இனியும் இடமளிக்க முடியாது. அடுத்த வருடத்தில் இதற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவையேற்படின் பல்கலைக்கழகங்களை மூடியாவது இதற்கு தீர்க்கமான முடிவு கட்டப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

படை வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து
நாட்டுக்காக அபரிமிதமான சேவையை ஆற்றிய படை வீரர்களை நினைவு கூரும் தேசிய படை வீரர் தினத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடை கிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

எமது தாய்நாட்டுக்காக சகலரும் எதிர்பார்த்த, பிரார்த்தித்த உயரிய சுதந்திரம் உதயமாகியுள்ளது. இதன் முழுமையான கெளரவம் படை வீரர்களுக்கே உரித்தானது.

இந்த சுதந்திரத்திற்காக அவர்கள் தமது உயிர்களை, கை, கால்களை, கண்களை அர்ப்பணித்தார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறோம்.

இந்த உயரிய சுதந்திரத்தையும், அபிமானத்தையும் பாதுகாக்க வேண்டியது எம் அனைவரின தும் கடமையாகும்.

இதற்காக நாம் தோல்வியுறச் செய்த பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்கு வதற்குரிய சகல வழிகளையும் தடுக்க வேண்டும். இது படை வீரர்களின் அபிமானத்துக்கும், கெளரவத்துக்கும் எம்மால் செய்ய இயன்ற பெறுமதியான உதவியாகும்.

இதேபோன்று தேசத்தின் கெளரவத்தை பாதுகாத்துத் தந்த படை வீரர்களினதும், அவர்களது குடும்பத்தினரதும் நலன்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதும் எம் அனைவரினதும் கடமையாகும். அரசைப் போன்றே இந்த கடமையை நாட்டின் அனைத்து பிரஜைகளும் நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன். என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

உத்தேச தனியார்துறை ஓய்வூதிய சட்டமூலம்:

50 வயதுக்கு உட்பட்ட ஊழியர்கள் இணைந்து கொள்வது கட்டாயம்

50 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் சேரலாம் கலாநிதி பி.பி. ஜெயசுந்தரஅரசாங்கம் விரைவில் அமுல்படுத்த விருக்கும் தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் அங்கத்த வராக இணைந்து கொண்ட ஒருவர் 50 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட காலகட்ட த்தில் மரணமடைந்தால் அவரது மனைவிக்கு அவர் செலுத்திய ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் சேமிப்பு வழங்கப்படும்.

இதேவேளையில் 60 வயதை தாண்டிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டிருப்பவர் மரணமடைந்தால் அவருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ கொடுக்கப்படமாட்டாதென்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடந்த தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் அங்கத்தவராக சேர்ந்து கொள்ளும் ஒருவரின் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், மற்றும் பணிக்கொடை கொடுப்பனவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சம்பந்தப் பட்ட அங்கத்தவர் இந்த சலுகைகளை தங்கு தடையின்றி பெற்றுக் கொள்ளவும் முடியும்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தொழில் சட்டங்களுக்கு ஏற்ப பெரும்பாலும் ஒருவர் 57 வயதில் இளைப்பாறுவதுண்டு. எனினும், தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொண்ட ஒருவர் 57 வயதில் இந்த ஓய்வூதியத்தை பெறும் தகுதியை அடைய மாட்டார். அவர் 60 வயதை பூர்த்தி செய்த பின்னரே அவருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும்.

தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் பற்றி மேலும் விளக்கமளித்த கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, இந்தச் சட்டத்தின்படி 50 வயதுக்கு குறைவான தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் இவ் ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென்றும், 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் விரும்பினால் மாத்திரமே இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.

ஆயினும் ஒருவர் 50 வயதிற்கு பிறகு இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர்ந்து 60 வயதாகும் போது இளைப்பாறினால் அவருக்கும் இந்த ஓய்வூதியத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும். தனியார் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒருவர் 10 ஆண்டு காலம் சேவையை பூர்த்தி செய்த பின்னரே ஓய்வூதியம் பெறும் தகுதியை பெறுகிறார்.

ஒருவர் 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த பின்னர், சேவையில் இருந்து இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் அவர் எஞ்சிய மூன்று ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவுகளை தமக்கு கிடைக்கும் ஊழியர்சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை நிதிய மற்றும் பணிக்கொடையில் இருந்து அதற்கான மூன்று ஆண்டுகளுக்கான முழுத் தொகையையும் செலுத்திய பின்னர் ஓய்வூதியத்தை 60 ஆவது வயதில் பெறும் தகுதியை அடைவார்.

இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தின் 2சதவீதத்தையும், அவர் பணியாற்றும் நிறுவனம் அவ்விதம் 2 சதவீதத்தையும் மாதாந்தம் செலுத்த வேண்டும்.

இந்த ஓய்வூதியத் திட்டத்தில் மூன்று வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். ஒரு சாரார் தனியார் துறை நிறுவனமொன்றில் தொழில் புரிபவர்கள். இரண்டாவது பிரிவினர் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர் ஆவர். மூன்றாவது பிரிவினர் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்களாவர்.

இதேவேளை, 2025ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 60 வயதிற்கு கூடியவர்கள் 20சதவீதம் இருப்பார்கள். அவர்களுக்கு தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தை மற்றவர்களை நம்பி வாழாமல், கெளரவ மான முறையில் வாழ்க்கையை உதவும் உன்னத திட்டத்திற்கு அமையவே இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறதென்று அவர் மேலும் கூறினார்.

மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்படுகிறது.

இந்நிகழ்வில் கலாநிதி பி.பி. ஜெயசுந்தர, தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் தொழில் அமைச்சின் செயலாளரும், மேலும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் இன்று யுத்த வெற்றிவிழா
* இராணுவ, படைக்கலங்களுடன் அணிவகுப்பு

* விமானப்படையினர், கடற்படையினர் சாகசம்

* காலி முகத்திடலில் பிரமாண்ட வைபவம்

ஸாதிக் ஷிஹான்

யுத்த வெற்றியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும் தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் மாலை 4.30 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் றொஹான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய மற்றும் சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறை இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப்படையில் 9035 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 108 அதிகாரிகளும், 8927 வீரர்களும் அடங்குவர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த மற்றும் மேஜர் ஜெனரல் சாகி கால்லகே ஆகியோர் வெற்றி அணிவகுப்புக்கு தலைமை வகிக்கவுள்ளனர்.

படைவீரர்களை கெளரவித்து நினைவு கூரும் வகையில் ஜனாதிபதி அவர்கள் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இராணுவம்

இராணுவ அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இராணுவத்தின் கனரக வாகனங்கள், கவச வாகனங்கள், ஆட்லரி படைப் பிரிவு உட்பட மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட சகல உபகரணங்களும் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.

கடற்படை

கடற்படை அணி வகுப்பில் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையின் சகல படைப்பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அணிவகுப்புக்கு மேலதிகமாக கடற்படைக்குச் சொந்தமான வேகப் படகுகளான ‘சுரனிமல’, ‘நந்தமித்ர’, படகுகள், ஆழ்கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும். ‘சயுரல’, ‘சமுதுர’, ‘சாகர’, ‘சக்தி’ கப்பல்கள், ஜெட்லைனர் கப்பல், அதிவேக டோரா படகுகள் மற்றும் பெருந்தொகையான சிறிய ரக படகுகள் காலி முகத்திடல் கடலில் சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

விமானப்படை

இந்த அணிவகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் விமானப் படைக்குச் சொந்தமான சுமார் 34 விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்து செல்லவுள்ளதுடன் சாகசங்களையும் காண்பிக்கவுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் என்ரு விஜேசூரிய தெரிவித்தார்.

அம்பலங்கொடைக்கும் புத்தளத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளிலிருந்து இந்த விமானங்கள் பறக்கவுள்ளன. கல்கிசையில் ஒன்றிணையும் விமானங்கள் ஒவ்வொன்றும் 20 செக்கன்கள் இடைவெளியில் பெல் 412, 212 ஹெலிகள் தேசிய கொடிகளை பறக்க விட்ட வண்ணமும் வை – 12, கே - 8, ஏ.என். – 32 மற்றும் ஜெட் விமானங்களும் காலி முகத்திடல் வான் பரப்பில் சாகசங்களுடன் பறந்து செல்லவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...