1 அக்டோபர், 2009

வவுனியா பதில் வைத்திய நிபுணர் டாக்டர் உமாகாந்த்தை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு கோரிக்கை


பொது வைத்தியசாலையில் பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய வைத்திய நிபுணர் டாக்டர் உமாகாந்த் புதன்கிழமை இரவு வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காகக் கூட்டிச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்டதை அரச வைத்தியர் சங்க வவுனியா கிளையின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்தார்.

அத்துடன், பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய இவரை அவரது பதவி நிலைக்கு ஏற்ற வகையில் நடத்த வேண்டும் என்றும், மேல் படிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்வதற்காக இருக்கும் அவரது தொழில் முன்னேற்றத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு அவர் மீது குற்றமின்றேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச வைத்தியர் சங்கம் கோரிக்கை விடு்ப்பதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

வைத்திய நிபுணர் உமாகாந்த் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமது தாய்ச் சங்கத்தின் கவனத்திற்கும் தாங்கள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றமின்றி தொடர்ந்தும் அவலம் : திருக்கோவில் கூட்டத்தில் கிராமவாசிகள் கவலை

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிக்குடிச்சாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மீள் குடியேற்றமின்றி தொடர்ந்தும் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருப்பதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் மற்றும் பாதுகாப்பு இணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இக் கிராமவாசிகள் எதிர்வரும் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கு முன்னதாக தமது மீள் குடியேற்றத்தின் அவசியத்தையும் சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வயல்வெளிகளை அண்மித்த சாகாமம், கஞ்சிக்குடிச்சாறு,காஞ்சுரன்குடா மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 905 குடும்பங்கள் (3093 பேர்) இடம்பெயர்ந்து 10 வருடங்களுக்கு மேலாக யுத்த அகதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இக்குடும்பங்களில் சாகாமம் கிராமத்தைச் சேர்ந்த 138 குடும்பங்கள் (517 பேர்), காஞ்சுரன்குடா கிராமத்தைச் சேர்ந்த 147 குடும்பங்கள் (556 பேர்) என 469 குடும்ங்கள் (1598 பேர் ) கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி மீள் குடியமர்த்தபபட்டிருந்தனர். எனினும் காஞ்சுரன்குடா, தங்கவேலாயுதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மேலும் 620 குடும்பங்கள் (2020 பேர்) இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று நடைபெற்ற சிவில் மற்றும் பாதுகாப்பு இணைப்புக் குழுக் கூட்டத்தில் அந்த பிரதேசத்தில் தாம் குடியேறி பெரும்போக வோளாண்மைச் செய்கையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அதிகாரிகளைக் கிராம மக்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

அதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அடுத்த ஆண்டு பெரும்போக வேளாண்மைச் செய்கை வரை தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்தனர்.

இதற்குப் பதிலளித்த விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பற்றிக் சில்வா,

"குறிப்பிட்ட பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும்போக வோளாண்மைச் செய்கையில் ஈடுபட முடியும்"என்றார்
மேலும் இங்கே தொடர்க...
ஈரானின் அணுசக்தி தொடர்பான முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் ஆரம்பம்
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி விவகாரம் தொடர்பான முக்கியத்துவம் மிக்க பேச்சுவார்த்தைகள் நேற்று வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின.

பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளதும் மற்றும் ஜேர்மனியினதும் பிரதிநிதிகளும் ஈரானிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றனர்.

முதல் நாள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஒத்துழைக்க ஈரான் தவறியுள்ளதாக ஜேர்மனி தெரிவித்தது. ஈரானானது தனது இரண்டாவது அணுசக்தி நிலையம் தொடர்பான இரகசியத்தை மறைத்து சட்டத்திற்கு புறம்பான வகையில் நடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

""யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தை நிர்மாணிக்க தீர்மானித்த தினத்தில், அது தொடர்பில் ஈரான் எமக்கு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அது அவ்வாறு செய்யவில்லை, என சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் தலைவர் மொஹமட் எல்பரடேயி தெரிவித்தார்.

ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்து ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நஜாத் குறிப்பிடுகையில், ஜெனிவா கலந்துரையாடல் ஓர் வாய்ப்பாகவும், ஓர் பரீட்சையாகவும் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேற்குலக நாடுகளுக்கு உலகளாவிய ரீதியிலான தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவும், ஏனைய நாடுகளைக் கையாளும் வழிமுறையை திருத்திக் கொள்ளவும் இது ஓர் சந்தர்ப்பமாக அமைகிறது என்று கூறினார்
மேலும் இங்கே தொடர்க...
30.09.2009 தாயகக்குரல்21

இந்த நாட்டில் இனவாதம் இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழிலும் சிங்களத்திலும் அடிக்கடி கூறிவந்தாலும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படாதவரை இனவாதத்தை இல்லாமல் செய்யமுடியாது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மக்கள் தொடர்ந்து அரசியல் வாதிகளால் இனவாத உரு ஏற்றப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இதிலே தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதற்கு சிங்கள தலைவர்களே காரணம் என தமிழ் தலைவர்கள் சிங்களத் தலைவர்கள்மேல் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் உண்மையில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதில் தமிழ் தலைவர்களுக்கும் பங்குண்டு என்பதை மறைக்கமுடியாது.


இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் போனதில் தமிழ் தலைவர்களும் தவறு இழைத்துள்ளனர். கடந்த காலங்களில் தேசியம் பேசிப்பேசியே தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றக் கதிரையை நிரப்பிவந்த தமிழ் மிதவாத தலைவர்களிடம் ஏமாந்த தமிழ் மக்கள் பின்னர் திவிரவாதிகள் பக்கம் சென்றனர். அவர்களும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் யதார்த்தமான அணுகுமுறைகளை கையாளாததால் இன்று தமிழ் மக்கள் முன்னர் அனுபவித்த உரிமைகளையும் இழந்து நிர்க்கதியாக உள்ளனர்.


1994ல் ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்கா இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்தார். அவர் ஜனாதிபதித் தேர்தலின்போதும் அந்த வாக்குறுதியையே அளித்திருந்தார். எனவே அவருடைய காலத்தில் சமாதானம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டது. அவருடைய காலத்தில் சமாதானத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டபோதிலும் அதை சரியான முறையில் பயன்படுத்த தமிழ் தலைவர்களும் புலிகளும் தவறிவிட்டனர்.
ஜனாதிபதி பிரேமதாசா காலம் முதல் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரையான தலைவர்களும் புலிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பலதடவைகள் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட போதிலும் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
பலமுறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இறுதிக்காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தை என்பது சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையா அல்லது பாரிய யுத்த தயாரிப்;புக்கான காலஅவகாசமா என்ற பரவலான சந்தேகம் மக்களிடையே காணப்பட்டது.


மக்கள் சந்தேகித்தபடியே 2002 யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் அரசும் புலிகளும் யுத்த தயாரிப்புக்களையே செய்துள்ளனர் என்பது இறுதி யுத்தத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. கிழக்கில் மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் வடக்கில் புதுமாத்தளனில் முடிவுற்றது. யுத்தத்தில் புலிகள் அழிக்கப்பட்டதும் தமிழர்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை, தீர்வு எதுவும் தேவையில்லை என்ற குரல்கள் தெற்கில் ஒலிக்கத் தொடங்கின.
மொழி, கல்வி, தொழில், காணி சம்பந்தமான பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு இருப்பதை 1957ல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா அரசு ஏற்றுக்கொண்டதன் பின்னணியில்தான் பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தீர்வுத் திட்டம் முதலியவை எல்லாம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னணியேயாகும்.


யுத்தம் முடிந்த பின்னர் இனப்பிரச்சினை பின்தள்ளப்பட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த அகதிகளை மீள்குடியேற்றுவது தொடர்பான பிரச்சினையே எல்லாத் தரப்பிலும் முன்னிலை வகிக்கிறது. அனைத்து கட்சிகளும் மீள்குடியேற்றம் பற்றியே அரசின்மேல் குற்றம் சாட்டி வருவதால் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய நெருக்கடிகள் அரசுக்கு தற்காலிகமாக குறைந்துள்ளன.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்மாகாணசபைத் தேர்தலில் ஆகக்கூடிய பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று வெற்றி பெறவேண்டும் என்பதே அரசின் தற்போதைய இலக்காகும். அடுத்த இலக்கு ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய இரண்டிலும் அதிக கூடிய பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவேண்டும் என்பது. அதன் பின்னரே இனப்பிரச்சினைக்கான அரசின் அரசியல் தீர்வு பற்றிய உண்மையான நிலைப்பாடு தெரிய வரும்.
இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடியும்வரை அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இப்போது அதன் கூட்டாளி கட்சிகளான ஹெலஉருமய, தேசிய சுதந்திர முன்னணி ஆகியவற்றையும் அனுசரித்துப் போகவேண்டி நிலையில் அரசு உள்ளது.


இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் ஏற்படுத்தப்;பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தமது அறிக்கையின் சாராம்சத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு அவரின் பதிலுக்காக காத்திருக்கிறது.
ஜனாதிபதியிடம் கையளித்த அரசியல் தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக வெளியிடவேண்டும்; என்று ரணில் கேட்டிருக்கிறார். அறிக்கையை வைத்து ஒரு அரசியல் இலாபம் தேட ரணில் நினைத்திருக்கலாம்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது பொதுத் தேர்தலுக்கு முன்னரோ இனப்பிரச்சினை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளியிட்டு மக்கள் ஆதரவை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி விரும்பமாட்டார்.
அதேவேளை யுத்தம் முடிவுற்றதால் இனப்பிரச்சினையை தீர்ப்பதில் அரசு தாமதம் காட்டினாலும் சர்வதேச சமூகம் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டுகின்றன. ஆனால் இவர்களுடைய அக்கறை நிரந்தரமானது என எதிர்பார்க்கமுடியாது.


ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு முன்பாகவே இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு யோசனையை முன்வைக்கவேண்டும்; என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்கும்வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதில்லை என்ற தோரணையில் இலங்கை ஜனாதிபதி நடந்துகொள்வது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என அமெரிக்கா தெரிவிக்கிறது.
ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் எதிர்பார்க்கலாம். ஆனால் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படவேண்டும்.
என்ன நிர்ப்பந்தம் இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலும்;, பொதுத் தேர்தலும் முடிந்த பின்னரே இனப்பிரச்சினை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கலாம்.

மேலும் இங்கே தொடர்க...
யாழ்தேவி பாதையை மீளமைக்க விடுக்கும் அழைப்புக்கான ஊடக பிரசாரம் நேற்று கொழும்பில் ஆரம்பம்


'உத்துரு மித்துரு தெற்கின் தோழன் இதயத்திற்கோர் டிக்கெட்' யாழ்தேவியின் பாதையை மீளமைத்திட விடுக்கும் அழைப்புக்கான ஊடக பிரசார விளம்பரத்தின் அங்குரார்ப்பண வைபவம் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில், போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தலைமையில், வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைக்கும் தாண்டிக்குளம் முதல் காங்கேசந்துறை வரையிலான 154.89 கிலோ மீற்றர் ரயில் பாதையை மீள நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதற்கென இலங்கை மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கவென, அவர்களுக்குப் போதிய விளக்கத்தினை அளிப்பதே இவ் ஊடக விளம்பரத்தின் பிரதான நோக்கமென இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்நிகழ்வில் ஓமந்தை தொடக்கம் காங்கேந்துறை வரையான ரயில் நிலையங்களை மீளமைக்கும் திட்டத்தைப் பொறுப்பேற்றிருக்கும் நிறுவனங்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும உத்தியோக பூர்வமாக அது தொடர்பான பணிகளைக் கையளித்தார்
புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கக் கூடாது : அமெ. அரசு தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ் தொழிற் கட்சி ஆகிய தடை செய்யப்பட்ட இயங்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என ஒபாமா அரசாங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

குறித்த இரண்டு அமைப்புக்களுக்கும் ஆதரவு வழங்கப்பட வேண்டுமென லொஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்க நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளன.

எனினும், இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும், 2010ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் இந்த வழக்கு விசாரணைகள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இவ்வாறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவோருக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுட் காலம் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் மிகவும் முக்கியமானதென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், குறித்த இரண்டு அமைப்புக்களுக்கு ஆதரவு வழங்குவதைச் சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு அமெரிக்க மனித உரிமை நிறுவனம் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சட்ட அங்கீகாரம் வழங்குமாறு தெரிவித்து குறித்த நிறுவனம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இடம்பெயர்ந்தோரை நாகரிகமான முறையில் மீள்குடியமர்த்த வேண்டும் : எஸ்.எம். கிருஷ்ணா


வடபகுதியில் இடம்பெயர்ந்தோர் நாகரிகமான முறையில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கை எடுக்கும் என இந்தியா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களில் தங்கியுள்ள 2,50,000 அப்பாவித் தமிழ் பொதுமக்களை மீள்குடியேற்றும் முயற்சிகளுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்தோர் விவகாரத்தில் கூடுதல் அவதானம் செலுத்தும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களைப் போன்றே இலங்கை இடம்பெயர்ந்தோருக்கு இந்தியா சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்
போர்ச் சூழலில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க விசேட பிரதிநிதி : ஐ.நா.சபையில் தீர்மானம்


உட்பட்ட நாடுகளில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இவை இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க, ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குப் பலியாகியுள்ளனர்.

சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பெணகள் தொடர்பான இந்தப் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஓரு ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் பால்மா உட்பட உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு-- ஜே.வி.பி.


வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் பால்மா உட்பட உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2,000 ஆயிரம் ரூபாவுக்குக் கூட சிறுவர்களுக்கான பால்மாவினைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலநிலை அங்கு உருவாகியுள்ளது என்று ஜே.வி.பி எம்.பி.யும், இடம்பெயர் முகாம் மக்களின் நலன்பேணும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகவுள்ள பருவ மழையினால் முகாம் வாழ் மக்களின் நிலைமை இன்னமும் மோசமடையும். அரசாங்கத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்பிலான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இடம்பெயர் முகாம் மக்களின் நலன் பேணும் மத்தியநிலையத்தின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளரும் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் கூறியதாவது: கடந்த கால உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தற்போது முகாம்களில் வாழும் அப்பாவி பொதுமக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மந்த போக்கை கடைப்பிடித்ததனால் நிலைமை மோசமடைந்துகொண்டே வருகின்றது. எமது மத்திய நிலையத்திற்கு இதுவரையில் 723 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை அவற்றின் பெரும்பாலானவை காணாமல் போதல் தொடர்பாகவும் விரைவான மீள்குடியேற்றம் தொடர்பானதாகவே உள்ளமை. முகாம்களில் உணவுத்தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிறுவர்களுக்கான பால் மாவுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாவிற்கு கூட பால்மா பைக்கற்றுக்களைப் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. சுமார் 50 குடும்பங்கள் குழுவாக சமைத்து உண்ண வேண்டிய நிலை காணப்படினும் அதற்கான அத்தியாவசிய உணவுப்பொருட்களோ சமையல் உபகரணங்களோ இல்லாத நிலை காணப்படுகின்றது.

சமைப்பதற்கு விறகு தேடவேண்டிய தேவை காணப்படினும் அதற்கு அனுமதி கிடைப்பது இதனால் ஏற்பட்ட பிரச்சினைகளின் ஒன்றே கடந்த சனிக்கிழமை குறிப்பிட்ட முகாம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் வரை சென்றுள்ளது. ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் கூறும் கருத்தோ உண்மைக்கு புறம்பானதாகும் சதோச போன்ற விற்பனை நிலையங்கள் முகாம்களில் காணப்பட்டபோதிலும் மக்களிடையே போதியளவு பண வசதி இன்மையால் பயன்பெறமுடியாத நிலை உள்ளது.

மலசலகூடங்களின் நிலை

70 ஆயிரம் பேருக்கு 200 மலசலகூடங்களே காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை நிரம்பி வழிகின்றன. உடைகளுக்கு பாரியளவு தட்டுப்பாடுகள் காணப்படுகின்றது. ஆண்களுக்கு கிரம் வழங்கப்படுவதாகவும் பெண்களுக்கு அதுவும் வழங்கப்படவில்லை என்றே தெரியவருகிறது. அதேபோன்றே அரசாங்கத்தின் மீள் குடியேற்ற பணிகளிலும் நம்பகத்தன்மை காணப்படவில்லை. வடக்கின் பிரதேசங்களில் மிதி வெடிகளை காரணம் காட்டி மீள்குடியேற்றத்தை தாமதப் படுத்தும் அரசாங்கம் அதே நேரம் ""வடக்கின் வசந்தத்தின்''கீழ் அதே பிரதேசங்களில் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி வருகின்றது.

மெனிக்பாம் முகாம்களில் இருந்து அண்மையில் 60 ஆயிரம் குடும்பங்களை அரசாங்கம் மீள் குடியேற்றியதாக கூறுகின்ற போதிலும் உண்மையில் அங்கு மீள்குடியேற்றம் ஒன்று இடம்பெறவில்லை. மீள்குடியேறுவதாக கூறி கைதடி, மிருசுவில் போன்ற பிரதேசங்களிலுள்ள முகாம்களில் இவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இதேபோன்றே கிழக்கு பகுதிகளிலும் நிலைமை காணப்படுகின்றது.

20 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து ஓடிவிட்டதாகவும் அரசாங்கம் கூறிவருகின்றது. மீள்குடியேற்றம் தொடர்பாகவும் இடம்பெயர் முகாம்களை பராமரிப்பது தொடர்பாகவும் இந்த அரசாங்கத்திற்கு எவ்விதமான அடிப்படை அறிவுமே கிடையாது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் முகாம் மக்களின் பிரச்சினைகள் கட்டுப்படுத்த முடியாதளவு விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இதனால் சர்வதேச தலையீடுகளும் அதிகரிக்கும்.

Wednesday, September 30, 2009

இந்தோனேஷியா, பசுபிக்தீவில் பு+கம்பம் 13 அடி உயரத்திற்கு மேல் சுனாமி அலை

150 பேர் வரை பலி; கிராமங்கள் தரைமட்டம்: மேலும் பலர் புதையுண்டிருக்கலாமென அச்சம்

பசுபிக் பெருங்கடலிலுல், இந்தோ னேசியாவின் தென் பகுதிக் கட லிலும் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டு ள்ளன.

இதில் 113க்கும் அதிகமானோர் கொல் லப்பட்டு மேலும் நூற்றுக்கணக்கா னோர் காயமடைந்துள்ளனர்.

பசுபிக் பெருங்கடலில் உள்ள சமோவோ தீவில் 8.3 ரிச்டர் அள விலான பாரிய பூகம்பம் இலங்கை நேரப்படி நேற்று முன்தினமிரவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் இலங்கை நேரப்படி நேற்றுப் பிற்பகல் 3.46 இற்கு பத்தான் நகருக்கு அருகில் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட் டது. இது கொழும்பிலிருந்து 2380 கிலோ மீற்றர் தொலைவில் இலங் கைக்குத் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.85 கிலோ மீற்றர் கடல் ஆழத்திலேயே இந்தப் பூகம் பம் ஏற்பட்டுள்ளது.

பூகம்பத்தினால் 10 நிமிடங்கள் வரை அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய் தியால் இலங்கையிலும் கரையோரப் பிரதேசங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பி.ப. 4.10 மணி அளவில் இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், 5.10 மணி அளவில் வாபஸ்பெறப்பட்ட தாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.

அமெரிக்காவின் பசுபிக் பெருங் கடல் தீவான சமாவோவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள னர். பல கிராமங்கள் முற்றாக அழி ந்துள்ளன. நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நியூசிலாந்துக்குக் கிழக்கே இருக்கும் இந்தக் குட்டித்தீவின் தென் கிழக்கே 120 கிலோ மீற்றர் தொலைவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இல ங்கை நேரப்படி நேற்று முன்தினம் நள் ளிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நில அதிர்வு 8.3 ரிச்டர் அளவில் பதி வாகியுள்ளதாகவும் அமெரிக்க பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்தது.

கடலோரத்தில் உள்ள பகுதிகளில் இராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். நூற்றுக்கணக் கானோரை காணவில்லை. சில உடல்கள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. மண்ணுக்குள் பலர் புதைந்திருக்கலாம் என்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

சுனாமி அனர்த்தத்தால் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தேவையான நிவாரண உத விகளை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அந்நாட்டு விமானப் படை யினருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சி 130 விமானங்கள் நிவாரணப் பொருட்க ளுடன் சமாவோ போய்ச் சேர்ந்தன.

இதேவேளை, டொங்கன் தீவில் 13 அடி உயரத்திற்கும் கடல் அலைகள் மேலெழும்பி யதாகவும் இதில் ஐந்து பேர் பலியானதாகவும் நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்தது.

ஜப்பானில் சூறைக்காற்று

இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பாடசாலைகள் மூடப்பட்டதுடன் மீனவர்கள் கரைக்குத் திரும்பியதாக அறி விக்கப்பட்டது. ஜப்பானில் சூறைக்காற்று வீசியதுடன், கடும் மழையும் பெய்ததால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் பூகம்பம்

அதேநேரம், நேற்றுப் பிற்பகலில் இந் தோனேஷியா, இந்தியா, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தோனே ஷியாவில் 7.9 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதாக வானிலை அவதான மையம் அறிவித்தது. எனினும், பாதிப்புகள் குறி த்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நியூசிலாந்து அரசாங்கம் இந்தச் சுனாமி யின் தாக்கம் இங்கும் உணரப்பட்டதாக அறிவித்துள்ளதுடன் ஐந்து பேர் இதில் காயங்களுக்குள்ளானதாகவும் அறிவித்துள்ளது. இப்பிரதேசம் முழுதும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்களை விளிப்புடன் இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. சமோவோத் தீவில் கடல் பாரிய இரைச்சலுடன் குமிறியதாகவும் மலை போன்ற உயரத்தில் கடல் அலைகள் எழும்பியதாகவும் அறிவிக்கப்பட்டது.

காணாமல் போனோரைத் தேடும் பணிகள் முடிவடைந்த பின்னரே உயிரிழந் தோரின் சரியான எண்ணிக்கையை அறிய முடியுமென மீட்புப் பணியாளர்கள் தெரி வித்துள்ளனர். மீட்கப்பட்ட பிரேதங்கள் பொது இடங்கள் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. சொந்தங்களை இழந்தோரின் விபரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன
மேலும் இங்கே தொடர்க...