8 மே, 2010

ததேகூவுக்கு ஆதரவு; அரச அதிகாரிகள் இடமாற்றம் : செல்வம் அடைக்கலநாதன் முறைப்பாடு

பொதுத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் எனக் கருதப்படும் அரச அலுவலர்களைப் பழிவாங்கும் நோக்குடன் அரச தரப்பினர் அவர்களை இடமாற்றம் செய்து வருகின்றனர்.

இது குறித்து எழுந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

தேர்தலின்போது அரச பதவி வகித்த சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சார்பாக செயற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தேர்தல் முடிவுற்ற நிலையில் குறித்த அதிகாரிகள், பழிவாங்கப்படும் நோக்குடன் இடமாற்றம் மற்றும் . இடைநிறுத்தம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற விடயங்கள் இடம்பெறின் உடனடியாகத் தனக்கு அறியத்தருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐஸ்லாந்தில் மேலும் ஒரு எரிமலையில் வெடிப்பு



ஐஸ்லாந்து நாட்டில் உள்ள மேலும் ஒரு எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடித்தது. இதனால் மீண்டும் எரிமலை சாம்பல் அதிக அளவில் வெளியாகி காற்றில் பரவி வருகிறது.

கடந்த மாதம் ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெரிய எரிமலை வெடித்துச் சிதறியதிலிருந்து வெளியான எரிமலை குழம்பிலிருந்து உருவான சாம்பல் காற்றில் பரவியது. இதனால் ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்து முற்றாகத் தடைபட்டது.

இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐஸ்லாந்து நாட்டில் உள்ள மேலும் ஒரு எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடித்தது. இதனால் மீண்டும் எரிமலை சாம்பல் அதிக அளவில் வெளியாகி காற்றில் பரவி வருகிறது.

வானில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் இதன் சாம்பல் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மீண்டும் விமானங்கள் பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சாம்பல் ஐஸ்லாந்தின் பக்கத்து நாடான அயர்லாந்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, மேற்கு அயர்லாந்தில் உள்ள விமான நிலையங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.

இந்தச் சாம்பல் காரணமாக ஸ்பெயின் நாட்டில் சாண்டியாகோ, டி கம்போஸ்டெலா, லா கருணா ஆகிய 3 விமான நிலையங்கள் மூடப்பட்டன. ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் அதிவேகமாக காற்றில் பரவுவதால் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் பிரதேசந்தோறும் இராணுவ முகாம் : கோத்தபாய ராஜபக்ஷ



பயங்கரவாதத்திடம் இருந்து நிலப்பரப்பை வெற்றிகொண்டது போல் தமிழ் மக்களின் மனங்களையும் வெல்லவேண்டும். மீண்டும் பயங்கரவாதம் நாட்டில் தலைதூக்க இடமளிக்காது முப்படைகளின் பங்களிப்புடன் மக்கள் நலன்பேண நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடபகுதி மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்பு படையினருக்கு உள்ளது. எனவே, அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்களை அமைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளிடமிருந்து கிளிநொச்சி நகரம் படையினரால் மீட்கப்பட்டதை நினைவுக்கூரும் முகமாக கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"இலங்கையில் 30 வருடம் நீடித்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு வருடமாகின்றது. பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டது போன்று தமிழ் மக்களின் மனங்களை வெல்வது எமது பாரிய பொறுப்பாகும்.

முப்படையினரின் பங்களிப்புடன் வடபகுதி மக்களின் நலன்களை பேண பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் முக்கிய இடமாக கிளிநொச்சி நகரம் காணப்பட்டது. கிளிநொச்சியை வீழ்த்த முடியாதென புலிகளும் பாதுகாப்பு ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக கூறி வந்தனர்.

ஆனால், எமது படையினர் கிளிநொச்சியை மீட்டது மட்டுமின்றி புலிகளின் பிடியில் சிக்கியிருந்த அப்பாவி மக்களையும் அவர்களின் உடைமைகள், உயிர்கள் என்பவற்றையும் மீட்டது பாரிய வெற்றியாகும்.

எனவே, வடபகுதி மக்களின் நலன்களை பாதுகாப்பது எமது கடமையாகும். மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்காது அப்பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒவ்வொரு பிரதேசத்திலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்பு

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மான்ஸ்டர் ரேவிங் லூனி வில்லியம் ஹில் கட்சி உறுப்பினர் ஆலன் ஹோப்பின் வாழ்த்துகளை ஏற்கிறார் கன்சர்வே
லண்டன், மே 7: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் அடுத்த பிரதமராகிறார். பிரிட்டன் பிரதமருக்கு ஒதுக்கப்படும் எண்.10, டெüனிங் தெரு இல்லத்தை அலங்கரிக்கப் போகும் வாய்ப்பு இந்த முறை கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்குக் கிடைத்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறி நிலை ஏற்படும் என்றும், தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்று அரசியல் நோக்கர்கள் ஏற்கெனவே கணித்திருந்தனர். இது உண்மையாகிவிட்டது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மொத்தமுள்ள 649 தொகுதிகளில் 624 இடங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் கன்சர்வேடிவ் (பழமைவாதம்) கட்சி 294 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 251 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. சுதந்திர ஜனநாயக கட்சி 52 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சை மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 27 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பிரிட்டன் நாடாளுமன்ற விதிப்படி, தற்போது பிரதமராக உள்ள கார்டன் பிரவுன் முதலில் ஆட்சி அமைக்க முயல வேண்டும். அது முடியாதபட்சத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அடுத்தபடியாக பெரும்பான்மை பெற்றுள்ள மற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்.

பொதுவாக சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு அடுத்த இடத்தை தொழிலாளர் கட்சி பிடிக்கும். ஆனால் இந்த தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து பெரும்பான்மைக்குத் தேவையான 326 இடங்களைப் பிடிக்க முடியவில்லை.

விட்னி தொகுதியில் போட்டியிட்ட கேமரூன் 34,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாவிட்டால், அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சியை தங்களது கட்சி ஆதரிக்கும் என சுதந்திர ஜனநாயக கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி கன்சர்வேடிவ் கட்சிக்கு தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் நிக் கிளெக் தெரிவித்தார். கூட்டணிக் கட்சியாக இல்லாமல் தோழமைக் கட்சியாக ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

2 இந்தியப் பெண்கள் வெற்றி: முதல் முறையாக பிரிட்டிஷ் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். பிரீத்தி படேல் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராகவும், வலேரி வாஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை பொதுமக்கள் சபையில் இரண்டு இந்தியப் பெண்கள் வெற்றி பெற்றது கிடையாது.

குதிரை பேரம்: இந்திய அரசியல் களத்தில் மிகவும் அறியப்பட்ட குதிரை பேரம், இந்த முறை இங்கிலாந்து அரசியலிலும் தலைகாட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பான்மையை நிலைநாட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சிறிய கட்சிகளை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் சுதந்திர ஜனநாயகக் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்தியதால், "குதிரை பேர'த்துக்கு வாய்ப்பின்றி போனது.

பின்னடைவு: இந்த தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் நடைபெற்ற மூன்று விவாதங்களில் இக்கட்சியின் தலைவர் நிக் கிளெக் முதலிடத்தில் இருந்தார். இதனால் இக்கட்சி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த முறை வெற்றி பெற்ற 62 இடங்களைக் கூட இக்கட்சியால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

பெரும்பான்மை: கார்டன் பிரவுன் மற்றும் அவரது தொழிலாளர் கட்சி ஆட்சியில் தொடர வாய்ப்பில்லை. அதிக இடங்களைப் பிடித்துள்ள தனிப்பெரும் கட்சியாக கன்சர்வேடிவ் கட்சி திகழ்கிறது. எனவே தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று டேவிட் கேமரூன் வலியுறுத்தியுள்ளார். சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆதரவுடன் பிரிட்டனில் நிலையான கூட்டணி ஆட்சியை அளிக்கப் போவதாக டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 பேர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...