13 ஜூலை, 2011

வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு

வாகரைப் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத ஆயுதக் குழு ஒன்றினால்பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ரீ56 ரக துப்பாக்கிகள் 35 உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிகள், விமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுண்டு : குணவன்ச

இன்றைய அரசாங்கத்தை நாங்களே உருவாக்கினோம் எனவே 13 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு கிடையாது என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார். நோர்வேயிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் எம்மிடமுள்ளது. எனவே அவ்வாறானவர்கள் வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது நல்லது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே எல்லே குணவன்ச தேரர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தேரர் மேலும் உரையாற்றுகையில்; இந் நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் 13 ஆவது திருத்தத்தை கோரவில்லை. இந்தியாவே பலாத்காரமாக எம் மீது இதனை சுமத்தியது. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பிரச்சினை என்ன என்பதை தெரிவிக்கப்படவில்லை.

லியம் பொக்ஸ், யசூசி அகாசியென வெளிநாட்டவர்கள் அடிக்கடி இலங்கைக்கு படையெடுக்கினற்னர்.

இதன் பின்ணியில் சதித்திட்டமொன்று உள்ளது. இன்று சில அமைச்சர்கள் நோர்வேயினை மீண்டும் பிரச்சினைக்கு தீர்வு மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். இவ்வாறாக நோர்வேயிடமிருந்து எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற பட்டியல் எம்மிடம் உள்ளது.

இவர்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படையினருக்கு ஒரு தோடம் பழத்தையேனும் வழங்கியதில்லை. ஆனால் அடிக்கடி நோர்வேக்கு பயணத்தை மேற்கொள்வதில் அக்கறையுடன் செயற்படுவார்கள்.

மாகாண சபைகளால் என்ன நன்மைகள் கிடைத்துள்ளது. சைக்கிள் கூட இல்லாதவர்கள் மாகாண சபை உறுப்பினர்களாகி ப்ராடோ சொகுசு வாகனத்தில் பவனி வரும் நிலைமையே உருவானது. இதற்கு வீணாக நாட்டின் பணம் செலவு செய்யப்படுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால் பாகிஸ்தானுக்குப் பாதிப்பில்லை: இராணுவம் அறிவிப்பு


அமெரிக்காவின் நிதி குறைப்பு நடவடிக்கையால், பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பாதிப்பு அடையாது என அந்நாட்டின் இராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அபாஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசினால் பாகிஸ்தானுக்கு வருடாந்தம் வழங்கப்பட்ட 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த 800 மில்லியன் டொலரை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா பாதுகாப்புச் செலவீனங்களை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கிற்கு செல்வதற்கான பாதுகாப்பு முன் அனுமதி முறை முற்றாக நீக்கம்

வடக்கிற்கு செல்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடவுச்சீட்டை உடையவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறும்முறை கடந்த சில மாதங்களாக அமுலில் இருந்த அந்த நடைமுறை கடந்த வாரம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் வடகிற்கு பிரயாணம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருந்த நடைமுறை நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்திக்கச் செல்வதற்கு இன்னும் பாதுகாப்பு அமைச்சு அனுமதியை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சிலாபம் வைத்தியசாலை அறுவை சிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள் வேலைநிறுத்தம்


சிலாபம் பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களும் ஊழியர்களும் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்டத்தினால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் நீர்கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இரண்டு அறுவை சிகிச்சை கூடங்களினதும் குளிரூட்டி பழுதடைந்த நிலையில் அதனை திருத்தித் தருமாறு முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாததை அடுத்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் வைத்தியர்களும் ஊழியர்களும் ஈடுபட்டனர்.

சிலாபம் வைத்தியசாலை புத்தளம் மாவட்டத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையாக விளங்குவதோடு, கல்பிட்டிய, ஆனைமடுவ பிரதேச வைத்தியசாலையிலுள்ள நோயாளிகள் இங்கு மாற்றப்படுகின்றனர்.

இங்கு ஒரு நாளைக்கு குறைந்தது 30 அறுவை சிகிச்சைகள் வரை இடம்பெறுவதோடு, இரு அறுவைசிகிச்சை கூடங்களிலும் 7 வைத்திய நிபுணர்கள் சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ரொஹான் குணரட்ணவுக்கு எதிராகக் கனடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல்


இலங்கையில் இருந்து வெளிவரும் லக்பிம பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ரொஹான் குணரட்ண, கனடியத் தமிழர் பேரவை தொடர்பாகக் கூறிய கருத்துக்களுக்காக, கனடியத் தமிழர் பேரவை கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஒன்ராரியோ மாநிலத்தில் இவ்வழக்கினைத் தாக்கல் செய்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொஹான் குணரட்ண லக்பிமவுக்கு அளித்த பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ் செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். ரொஹான் குணரட்ணாவின் இக் கூற்று உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொய்களால் சோடிக்கப்பட்டவை என்றும், இவ் வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் பேரவை ஆனது, தமிழ்க் கனேடியர்களின் குரலாக ரொரன்ரோ மாநகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு கனடா முழுவதும் பல் கிளைகளை நிறுவி, கனடாவில் உள்ள மத்திய, மாகாண, மாநகரசபை அரசாங்கங்களுடனும், அரசியல்வாதிகளுடனும் தொடர்புகளைப் பேணி இயங்கி வரும் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகும். கனடியத் தமிழர் பேரவை அதன் அங்கத்துவர்களால் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த கல்விமான்கள், தொழில் விற்பன்னர்ளை உள்ளடக்கிய ஒரு பணிப்பாளர் குழுவினரால் வழிநடத்தப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ரொஹான் குணரட்ணவுக்கு எதிரான இம் மானநஸ்ட வழக்கில் கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் சுந்தமூர்த்தி, கனேடியத் தமிழ் பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை ஆகியோர் வாதிகளாகவும், ரொஹான் குணரட்ண, அக் கூற்றைப் பிரசுரித்த லக்பிம பத்திரிகை நிறுவனர் ஆகியோர் பிரதிவாதிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் ஆவணப் பிரதிகள், சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்டத்தரணி குழுவினரால், ரொஹான் குணரட்ணவுக்கு சேர்க்கப்பட்டுள்ளன என்பதும், இன்று வரை தனக்கெதிரான வழக்கினை எதிர்த்து அவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

2020 இல் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி நேரடியாக ஆய்வு மேற்கொள்ள சீனா முடிவு


விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா அளவிற்கு சீனா முன்னேற ஆர்வமாக உள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வுகளை மேற்கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.

சீனா தனக்கென்று விண்வெளியில் ஓர் ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, அதற்காக பொருட்கள், கருவிகளை ரொக்கட் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ளது.

2013 இல் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதோடு, அதற்கான நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...