18 பிப்ரவரி, 2011

இந்திய மீனவர் விடுதலை







இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் உள்ளுர் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 136 இந்திய மீனவர்களும் சட்டமா அதிபரின் விசேட பணிப்புரைக்கமைய பொலிசாரினால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இலங்கைக் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த 25 இழுவைப் படகுகளும் விடுவிக்கப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை கடற்பரப்பிலும், மாதகல் கடற்பரப்பிலும் இரண்டு கட்டங்களாக உள்ளுர் மீனவர்களினால் இரண்டு தினங்ளில் சுற்றிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் உத்தரவிட்டு, மேல் நடவடிக்கைக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு பொலிசாருக்குப் பணித்திருந்தன.

இதனையடுத்து, சட்டமா அதிபரிடம் இருந்து கிடைத்த விசேட பணிப்புரைக்கமைய, இந்த மீனவர்கள் அனைவரும் கடலில் எங்கெங்கு கைது செய்யப்பட்டார்களோ அந்தந்த இடங்களில் கொண்டு சென்று விடுதலை செய்யுமாறு இந்த நீதிமன்றங்கள் பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கின்றன.

இந்திய மீனவர்கள் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மீனவர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மீனவர்கள் 16 பேரைக் காணவில்லை

இதற்கிடையில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை மாலை 3 படகுகளில் கடலுக்குச் சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை என்றும், அந்தப் படகுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக 4 படகுகளில் சென்ற பத்து மீனவர்களையும் காணவில்லை என்றும், பருத்தித்துறை பிரதேச மீனவர்களும் கடற்படையினரும் இவர்களைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் இங்கே தொடர்க...

ஓராண்டு நினைவு அஞ்சலி

ஓராண்டு நினைவுஞ்சலி

20. 05. 1960....... .19 .02 .2010
தாயின் மடியில் ண்டவன் பிடியில்

திருமதி. தேவிகா தயாபரன் (யசோஃதயா)
நிறைவேற்று பணிப்பாளர், உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் மட் டக்களப்பு யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு மாமாங்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தேவிகா தயாபரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீளும் காலப் பெருவழியில் - நீயும்
நீளுகிறாய் நினைவுகளுடன்
நிஜங்களை நிழலாக்கி
நெருஞ்சி முள்ளாக
நெஞ்சுக்குள் குத்தும் வலி தந்து
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
மறையா உருவத்தோடு
புன்னகைத்து வலம் வருகிறாய்.

உனைப்பிரிந்து ஆண்டொன்று
ஆன போதும் - உந்தன்
மாறாத நினைவுகளோடு
தயாபரன்(அன்பு கணவன்)
அருண் பிரதீஸ்(அன்பு மகன்)
தாய், தந்தை, மாமியார்,
சகோதரன்கள், சகோதரிகள்,
மைத்துனன்மார், மைத்துனிமார்,
பிள்ளைகள், மருமக்கள்,
உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
த. தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777840312
அருண் பிரதீஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625654448
சிவபாலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404650112
மேலும் இங்கே தொடர்க...

மீனவர் விவகாரம் தொடர்பில் இந்தியா இலங்கையை அச்சுறுத்த முற்படுகிறது


மீனவர்களின் விவகாரத்தைக் காரணம் காட்டி இந்தியா இலங்கையை அச்சுறுத்துவதற்கோ இறைமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவதற்கோ முற்படக் கூடாது. அதற்கு அருகதையும் கிடையாது என்பதுடன் அனுமதிக்கவும் முடியாது என்று ஜே. வி. பி. தெரிவித்துள்ளது.

அப்பாவி மீனவர்களைப் பலிக்கடாக்களாக்கி தமிழகத்தின் தி. மு. க. தேர்தல் இலாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றது. தி. மு. க. வே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்பரப்புக்குள் அனுப்பி பிரச்சினைகளை உண்டு பண்ணியுள்ளது. இவ்வாறான கீழ்மட்ட செயற்பாடுகளைக் கைவிடுமாறு தி. மு. க. தலைவர்களை எச்சரிப்பதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அரசும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

ஜே. வி. பி.யின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது



இலங்கையின் தேசியக் கொடியை எரித்த குற்றச்சாட்டில் 25 பேரை பொலிஸார் கைது செய்தனர்.இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்திய இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது மீனவர்களை மீட்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் இலங்கையின் தேசியக் கொடியையும் எரித்தனர்.

இந்நிலையில் இலங்கையின் தேசிய கொடியை எரித்ததற்காக போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீதும் மதுரை திடீர் நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

கொலைக் குற்றச்சாட்டு இலங்கையருக்கு 7 வருட சிறை: கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு


தனது நாட்டை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு டோகா நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

இறந்தவரின் குடும்பத்திற்கு 200,000 ரியால் நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் இவருக்கு கட்டளை பிறப்பித்துள்ளது.

வீட்டுப் பணிப் பெண்ணொருவர் மீது இருவரும் காதல் கொண்டதால் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பலியாகியுள்ளார். கள்ள உறவில் ஈடுபட்டதற்காக பணிப் பெண்ணுக்கும் கொலை செய்தவருக்கும் 3 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசம் முடிந்ததும் இவர்கள் நாடு கடத்தப்படுவர்.
மேலும் இங்கே தொடர்க...

குட்டி அரசாங்கத்தை அமைப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது: கரு

குட்டி அரசாங்கம் ஒன்றை அமைக்க வடபகுதி மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது. தமிழ் சிங்களத் தலைவர்கள் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைத்து இன மக்களும் முன்வர வேண்டும் என்று ஐ.தே.க. வின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான ஐ.தே.க. வின் செயற்பாடுகளுக்கு இன்றைய யாழ். விஜயம் வெற்றியளித்துள்ளது. நாம் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே கொழும்பு திரும்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். காரை நகரில் அமைந்துள்ள விஜய கலா மகேஸ்வரன் எம்.பி.யின் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கரு ஜெயசூரிய எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

ஐ.தே.க. வின் விஷேட குழு இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளது. இந்த வருகையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் வடக்கு மக்கள் தமது தலைவர்களை ஐ.தே.க. வினூடாக மீண்டும் பெற்றுக்கொள்ள இதுவொரு சந்தர்ப்பமாக அமையும்.

இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் எம்.பி. அமரர் தியாகராசா மகேஸ்வரனை ஞாபகப்படுத்த வேண்டும். அவரது இழப்பு தமிழ் சமூகத்துக்கு பாரிய இழப்பாகவே அமைந்துள்ளது. இந்த நாட்டில் சகல இனமக்களும் அனைத்து உரிமைகளுடனும் வாழும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். இதற்கு அமைவாக தமிழ் சிங்கள தலைமைகள் இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தன. அந்த சுதந்திரத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

83 களில் இந்நாட்டில் துரதிஷ்டவசமாக இனங்களுக்கிடையே முரண்பாடுகள் மோதல்கள் தீவிரமடைந்தது. இதனை மீண்டும் தொடர இடமளிக்க முடியாது.

இரத்த தானம் செய்யும் போது தமிழ், சிங்கள வேறுபாட்டினை காணமுடியுமா? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஐ.தே.க. விற்குள் அனைத்து இன பிரதிநிதிகளுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த பொறுப்பை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து சகல இன மக்களுக்குமான ஜனநாயக உரிமைகள் மற்றும் அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுக்க ஐ.தே.க. முன்னின்று செயற்படும். இதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தகாயாவில் இலங்கை யாத்திரிகர் இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர் இருவர் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயா மலைச் சிகரங்களில் ஏறும் போது உயிரிழந்துள்ளனர். 60 வயதான விதானபதி ரணனாவதி கும்கேஷ்வரி குன்றில் ஏறும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மற்றொரு இலங்கையர் கிதுகுட் குன்றில் ஏறும் போது சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இருவரின் சடலங்களும் இந்திய மகாபோதி சமூக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்திய மாவட்ட அதிகாரிகள் இது குறித்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

50 பேர் கொண்ட இலங்கையர் குழுவுடன் யாத்திரை மேற்கொண்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு மக்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு ஐ.தே.க. தயார்


அதிகாரங்களையும் சம உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்துக்கு ஐ.தே.க. தலைமை தாங்கும். யுத்தத்தின் பின்னர் நூறு வீதமான சுதந்திரமோ சமாதானமோ வடக்கு மக்களுக்கு கிட்டவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் சூழலை வெகு விரைவில் ஐ.தே.க. வின் அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐ.தே.க. வின் யாழ். மாவட்ட எம்.பி. விஜயகலா மகேஸ்வரனின் காரைநகர் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம்: நேரடி பேச்சுக்கு வருமாறு கனிமொழிக்கு அழைப்பு






இலங்கை- இந்திய கடல் எல்லைகள் மீறப்படுதல் மற்றும் கடற்றொழிலாளர் கைது செய்யப் படுதல் தொடர்பாக நேரடியாக பேச்சு நடத்துவதற்கு இலங்கை வருமாறு இந்திய நாடாளு மன்ற உறுப்பினர் கனி மொழிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அழைப்பு விடுத்தார்.


யாழ். சிறையில் உள்ள தமிழக மீனவர் வள்ளங்களை
சுத்தம் செய்வதற்கு அனுமதி

இலங்கை கடல் எல்லையைக் கடந்து யாழ். குடாக் கடலில் தமிழக மீனவர்கள் கடற்றொழிலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது குறித்தும் தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் மீன் வளம் சூரையாடப்படுவது குறித்தும் இருநா டுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டி ருந்த நிலையிலேயே கடந்த 15 ஆம் திகதி 112 தமிழக கடற்றொழிலாளர்கள் யாழ். மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இதேவேளை தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதாக இந்திய தரப்பில் எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை வந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையிலுள்ள கடற்றொழில் சங்கத்தினருக்கும் தமிழக கடற்றொழிலாளர் சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கை- இந்திய தரப்பி னருடன் பேச்சுக்களை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையி லேயே 112 தமிழக கடற்றொழிலாளர்க ளும், அதன் பின்னர் 24 கடற்றொழிலாளர்க ளும் யாழ். மீனவர் களால் சிறைபிடிக்கப்ப ட்டனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்குடனும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழக, கடற்றொழிலாளர்களை சட்டபூர்வமாக விடுதலை செய்வதை துரிதப்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தைகளை நடத்த கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை இலங்கைக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்தார்.


சென்னையில் பா.ஜ.க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்:
200பேர் கைது

தமிழகத்திலுள்ள கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளையும் உடன் அழைத்து வருமாறும் அமைச்சர் டக்ளஸ், கனி மொழிக்கு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பு தொடர்பாக தமிழக அரசுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாகவும் கனிமொழி தெரிவித்ததாக அமைச்சர் டக்ளஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கலைஞரின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர் சென்னையிலு ள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கடற்படையினரே கைது செய்ததாகக் கூறியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தின் போது கனிமொழி உட்பட 1000 பேர் பொலிஸாரி னால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடு தலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மாதகல் கடலில் ஊடுறுவிய
26 இந்திய மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர்


யாழ். மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இலங்கை மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்களும் இன்று காலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த தமிழக மீனவர்கள், 112 பேர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை மீனவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்ட மறுநாளே 26 தமிழக மீனவர்களும் மாதகல் பகுதிக்குள் ஊடுருவினர்.

இதேவேளை, மாஜிஸ் திரேட்டின் உத்தரவின் பிரகாரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 112 தமிழக மீனவர்களும் ஏனைய சிறைக் கைதிகளோடல்லாது தனியாக ஒரே இடத்தில் இருக்கக் கூடியவாறு சிறப்பேற்பாடுகளுடன் தடுத்து வைக்குமாறும் நீதவான் சிறையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர்களது 18 வள்ளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் திரும்பி தங்களது நாட்டுக்குச் செல்லும் வரை அவர்களது வள்ளங்களை பராமரித்தல் மற்றும் துப்பரவு வேலைகள் செய்வதற்காக சிறையிலிருந்து குறிப்பிட்ட சில மீனவ ர்களை வள்ளத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் சிறையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே முதலில் கைது செய்யப் பட்ட 112 பேர் மற்றும் 26 தமிழக மீனவர்களையும் விரைவில் விடுதலை செய்து தமிழகத்துக்கு அனுப்புவதற்கான பேச்சுக்களும் நடைபெற்று வருகின்றன.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி

இலங்கை கடற் படையினரை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் உட்பட 200 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 112 மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த 24 மீனவர்களும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இச் செயலைக் கண்டித்தும், இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 112 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை தூதுரகத்தை முற்றுகையிட முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும் வலி வடக்கில் பிரதேச செயலகம் அறிவிப்பு


வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற முன்வராதவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு மீள்குடியமர முன்வராத குடும்பங்கள் சாதாரண குடும்பங்களாகவே கணிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் குடும்பங்களை வலி வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இடங்களில் படிப்படியாகக் குடியமர்த்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

எனினும் மீள் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களில் குடியமர விருப்பமில்லாத சிலர், வாழ்ந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை மட்டும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்தபடியே நிவாரணப் பொருட்களை மட்டும் தவறாது பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுகிறார்கள். ஏற்கனவே வலி வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மக்களை மீளக் குடியமர அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் அப்பகுதிக்கு சென்று தமது வீடுகளை, காணிகளை துப்புரவு செய்வதற்கோ குடியமர்வதற்கோ ஆர்வம் காட்டாமல் தாம் வாழும் பகுதிகளில் இருந்துகொண்டே நிவாரணப் பொருட்களை மட்டும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே பிரதேச செயலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதும்,

அரசாங்கம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவ தற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில் மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டவேண்டும். இதனாலேயே இவ்வாறான நிர்வாக ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்தோர் மீளக்குடியமர 19 பெருந்தோட்டங்கள் தெரிவு


மண்சரிவு காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இருப்பிடங்களை இழந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தவென 19 பெருந்தோட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தோட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பொருத்தமான பிரதேசங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு சிபாரிசு செய்துள்ளது.

இச்சிபாரிசின் அடிப்படையில் இவ்விரு மாவட்டங்களிலும் மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான வேலைத் திட்டங்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ளவர்களைப் பாதுகாப்பான மாற்று இடங்களில் மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்பாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார கூறுகையில்: மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தவென பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தித் தருமாறு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர்கள் 19 பெருந்தோட்டங்களை எம்மிடம் வழங்கினர். பதுளை மாவட்டத்தில் 16 பெருந் தோட்டங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 3 பெருந்தோட்டங்களும் இவ்வாறு வழங்கப்பட்டன.

இத்தோட்டங்களில் இருப்பிடங்களை இழந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி அது தொடர்பான சிபாரிசுகளை மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கியுள்ளோம். எமது சிபாரிசுகளுக்கு அமைய மீள்குடியேற்றத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான நடவடிக்கை ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றார்.

மண்சரிவு காரணமாக பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 586 குடும் பங்களை சேர்ந்த 2292 பேர் இருப் பிடங்களை இழந்து 20 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகா மைத்துவ நிலையப் பேச்சாளர் பிர தீப் கொடுப்பிலி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

நுரைச்சோலையில் டெங்கு நோய்க்கு இளைஞன் மரணம்


கற்பிட்டி, நுரைச்சோலை, கற்பாலி முகாமைச் சேர்ந்த பரீத் முகம்மது பாஹிம் என்ற 26 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் நேற்று மரணமானார்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவர் மூன்று தினங்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இவரது நிலை மிக மோசமாக காணப்பட்டதால் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குருநாகல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இவர் உயரிழந்தார். இவர் கொழும்பு கிராண்ட்பாஸ் தைக்கா பள்ளிவாசலில் பேஷ் இமாமாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...