தமிழ் பேசும்
மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அவர்கள் முகம் கொடுத்து வரும் வாழ்வியல் உரிமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையிலான பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினருக்கும் பேராசியர் ஜி. எல். பீரிஸ் தலைமையிலான அரச உயர் மட்ட குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி காரியாலயத்தில் நடைபெற்ற இவ் விஷேட பேச்சு வார்த்தையின்போது ஈ.பி.டி.பி தரப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எடுத்து விளக்கப்பட்டது.
நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் எதுவித குடியேற்ற மாற்றங்களும்; நிகழாது பாதுகாத்தல்.
நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருக்கும் தமிழ் மக்களுக்கான காணிகளை பகிர்ந்தளித்தல்.
இடம்பெயர்ந்து துயரப்பட்ட தமிழ் மக்களுக்கென மேற்கொள்ளப்பட்டுவரும்; மீள் குடியேற்றங்களையும் வாழ்வாதார வசதிகளையும் மேலும் அர்த்தமுள்ளதாக உருவாக்கி கொடுத்தல்.
கடந்த கால யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் வேலையற்றிருக்கும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்கும் முகமாக வடக்கு கிழக்கில் பல்வேறு தொழிற்றுறைகளை ஊக்குவித்தல்.
பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளில் தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை கணிசமான அளவு இணைத்தல்.
யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினால் அவசர கால சட்டத்தை விரைவில் நீக்குவதற்கான கால வரையறை ஒன்றை வகுத்து செயற்படல். தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர், விபரங்களை அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு உடன் தெரியப்படுத்துவதோடு அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துதல். நீண்டகாலமாக அரசியல் காரணங்களுக்காக சிறைகளில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்வதற்கான நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு சிவில் நிர்வாகத்தை மேலும் சிறப்புற இயங்க வைத்தல். இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் என்பது பரஸ்பரம் ஏற்படும் வகையிலான ஏற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்தல்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவதற்கும், கலாசார உறவுகளை பேணவதற்கும் உரிய வசதிகளை உருவாக்கும் நோக்கிலான நம்பிக்கை தரும் ஏற்பாடுகளை முன்னெடுத்தல்.
அரச கரும மொழிக்கொள்கையின் அடிப்படையில் தமிழ் மொழி அமுலாக்கலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் நி;லையங்களில் தமிழில் முறைப்பாடு பதிவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.
நீதித்துறை மற்றும் அரசாங்க அலகுகளுடன் தமிழில் தொடர்பு கொள்ளுவதற்கு வசதியாக, வடக்கு கிழக்கிற்கு வெளியே செறிந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வசதி கருதி அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தல்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதில் ஆரம்பித்து அதற்கான மேலதிக அதிகாரங்களை வழங்குதல்.
மாகாண நிர்வாகத்திற்கும், மத்திய அரசிற்கும் இருக்கும் அதிகாரங்களைத் தவிர, இரண்டிற்கும் இடையில் இருக்கும் இணைப்பு பட்டியலில் உள்ள அதிகாரங்களையும் மாகாண நிர்வாகத்திற்குரிய அதிகாரங்களோடு இணைத்தல். இதன் மூலம் அதிகாரப்பகிர்வினை வழங்குதல்.
மேற்படி அதிகாரப்பகிர்வையும், சிறுபான்மை இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், தமிழ் மக்கள் எதுவித தடைகளுமின்றி சம உரிமைகளை உரிய முறையில் அனுபவித்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்கான ஏற்பாடக இரண்டாவது சபை ஒன்றை நிறுவுதல்.
இவைகளையே 13 வது திருத்தச்சட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களாக நடைமுறைப்படுத்துதல்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் அரச உயர் மட்ட குழுவினரிடம் பரிந்துரைக்கப்பட்ட மேற்குறித்த விடயங்கள் யாவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அன்றி தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ ஒரு போதும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்ற நியாயபூர்வமான எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு அரசாங்கம் இக்கோரிக்கைகள் அனைத்தையும் விரைவாக நடைமுறைபடுத்த சகல வழிகளிலும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஈ.பி.டி.பி தரப்பால் உறுதி வழங்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினையானது தீராப்பிரச்சினையாக நீண்ட காலமாக நீண்டு செல்வதற்கான காரணம் என்பது நடை முறைச்சாத்தியங்களுக்கு அப்பால் நின்று சிந்தித்ததே என்பதால் நடை முறைச்சாத்தியமான அணுகுமுறையினையே தாம் முன்வைத்திருப்தாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தரப்பால் எடுத்து விளக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் நடைமுறை வாழ்வியல் உரிமைகள் குறித்து பேசப்பட்ட இவ் விஷேட பேச்சு வார்த்தையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அசோக் சந்திரகுமார், கட்சியின் நிர்வாக செயலாளர் அ. இராசமாணிக்கம், அமைச்சரின் இணைப்பதிகாரி றொபின் ராஜ்குமார், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா ஆகியோரும் அரச சார்பில் அமைச்சர்களான பேராசிரியர். ஜீ. எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜித் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.