இணையத்தள முகவரியை உங்கள்
நண்பர்களுக்கும் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எமது முகவரி
http://puthiyapathai.com
நன்றி
இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டவுடன் அப்பகுதிகளில் தபால் விநியோகத்தை சீராக நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியேற்றப்பட்டவுடன் அவர்களுக்கான தபால் வசதிகள் செய்து கொடுக்கப்படுமென தபால் மாஅதிபர் பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் ஏற்கனவே செயற்பட்ட தபால் நிலையங்களைத் திறக்கவும், சேதமடைந்த தபால் நிலையங்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தபால் அதிபர்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு முன்னரைப் போன்றே தபால் சேவையை நடத்தமுடியும் என்றும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வடபகுதியிலுள்ள அரச அதிகாரிகளால் பாதுகாப்புக்கு உகந்தது என சிபார்சு செய்யப்படும் பகுதிகளில் தபாலகங்கள் இயங்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 1000குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கென இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஓமந்தை, நொச்சிமோட்டை, கந்தசாமிநகர் உள்ளிட்ட 32 கிராமங்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வானது வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளமை இங்கு குறி;ப்பிடத்தக்கது.
கொழும்பு தெகிவளை பிரதேசத்திலிருந்து ஒருதொகை ஆயுதங்களைப் பாதுகாப்புப் பிரிவினர் நேற்றையதினம் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலினைத் தொடர்ந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களில் டெட்னேற்றர்கள் 43, ரிமோட் கொன்றோலர் 01, ரிசீவர் 01, டைமர் 08, கன்வாஸ் பெல்ட் 01, பூஸ்டர் 04 என்பன அடங்குவதாகவும், இந்த ஆயுதங்கள் மிகவும் இரகசியமான முறையில் தெகிவளை மெல்பேர்ட் கிறசென்ட் பிரதேச்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை படிப்படியாக துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக திருமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாமும் எமது சொந்த இடங்களுக்குச் செல்லமாட்டோமா? என ஏங்கித் தவிக்கும் மக்கள் முகாம்களில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களையும் விரைவாக குடியமர்த்துவதுதான் அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.
மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு தடையாக இருப்பது மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளும் கண்ணிவெடிகளுமே.
மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், அதன் வேகம் போதுமானதாக இல்லை. மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படல் வேண்டும்.
இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வடமாகாண அபிவிருத்தி மீள்குடியேற்றத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டிலிருந்து 10 தன்னியக்க மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளார்.
மிக துரிதமாக மேற்படி இயந்திரங்களை இவர்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற காரணத்தினால் விமானங்கள் மூலம் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இதற்கமைய கடந்த 4ஆம் திகதி ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொசீனா ரக 5 இயந்திரங்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன. இவை சுமார் 270 மில்லியன் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருந்தன.
மன்னார் கட்டுக்கரைகுளம் பகுதியில் இன்று இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் மேலும் 5 இயந்திரங்கள் குரேஷியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்த 5 இயந்திரங்களும் கடந்த 12ஆம் திகதி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. எம். பி. 4 என அழைக்கப்படும் இயந்திரங்கள் டொகிங் நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
தன்னியக்க இயந்திரங்களான இவையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாரிய இரும்பு சுத்தியல் (Flail Hammers) நிலத்தை ஓங்கி அடித்து அடித்து முனனேறி மிதிவெடிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவையாக உள்ளன.
நீர் நிலைகள், ஓடைகள், ஏரிகள், வரம்புகள், மரங்களை சூழவுள்ள வேர் பகுதிகள், வீடுகளை சூழவுள்ள பகுதிகள், கட்டடங்களைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற வற்றில் மிக எளிதாக இயக்க முடியும்.
5 தொன் எடைகொண்ட இயந்திரங்கள் செயின் புளொக் மூலம் நகர்கின்றன. நிலத்தை இறுகப் பற்றியபடி முன்னேறிச்செல்லும் போது அடிப்பாகத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் கணமுள்ள குண்டு துளைக்காத இரும்பு பிளேட்டுகள் எந்தவிதமான வெடிவிபத்துக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றலையும் கொண்டதாக உள்ளன.
மணிக்கு 2200 சதுர மீற்றர் பரப்பில் மிதிவெடிகளை அகற்றும் திறன்கொண்ட இந்த இயந்திரங்கள் வடக்கில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு தனது பங்களிப் பைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.
வாகனம் விபத்து முரளிதரனுக்கு காயம் | |
விநாயகமூர்த்தி முரளிதரன் விபத்தில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். எனினும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும் அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியாவில் இன்று இடம்பெற்ற மீள்குடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் முரளிதரன் அங்கிருந்து ஹெலிக்கெப்டரில் கொழும்பிற்கு வருகைதந்துள்ளார். ஹெலிகெப்டர் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மைதானத்தில் தரையிறங்கியது அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அமைச்சர் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அமைச்சரின் வாகனத்தின் மீது எதிரே வந்த பஸ் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அமைச்சருக்கு கால்களிலும் தலையிலும் சிறு காயங்கள் ஏற்பட்டதுடன் மெய்பாதுகாவலர் மற்றும் சாரதிக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளது |
எவ்வித பாகுபாடும் இன்றி மீள்குடியேற்றம் செய்யவும் : அகதிகள் அரசிடம் கோரிக்கை | |
வன்னி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு பகுதியினர் இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கு அமைய குடியேற்றப்படுகின்றனர். இவ்வாறு குடியேற்றப்படுபவர்களின் குடும்பத்தைச் சார்ந்த கணவனோ அல்லது பிள்ளைகளோ தடுப்பு முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள் குடியேற்றம் செய்ய மாட்டோம் என்று சம்பந்தப்பட்டவர்களது தரப்பில் கூறப்படுகிறது. இது எந்தவகையில் நீதியானது என்று முகாம்களில் தங்கியுள்ள மக்கள் கேசரி வார இதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். முதலாம் கட்ட மீள் குடியேற்றத்தின் போது இவ்வாறான நிபந்தனை விதிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாம் கட்ட குடியேற்றத்தின் போது பாரபட்சம் காட்டுவது அநீதியானது. எனவே எவ்வித பாரபட்சமும் இன்றி எம்மையும் குடியேற்ற நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முகாம்களில் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மக்கள் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முகாம் மக்களாகிய நாங்கள் அறியத் தருவது : "வன்னியிலிருந்து உறவுகள் பலரை இழந்த நிலையில் அப்பாவி தமிழ் மக்களாகிய நாம் தற்போது முகாம்களில் வாழ்கின்றோம். நாம் வன்னியில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை விபரிக்க முடியாது. பல திசைகளிலுமிருந்து எம்மை நோக்கி வந்த ஷெல் குண்டுகளுக்கு மத்தியில் பலவிதமான இடர்பாடுகளுக்கு மத்தியில் எமது உயிர்களைக் காக்கும் எண்ணத்துடன் தப்பி ஓடி வந்த நாம் இன்றும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே வாழ்கிறோம். அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளன. குடிநீருக்கு வரிசை, மலசலம் கழிப்பதற்கு வரிசை இவ்வாறு வரிசையில் நின்றுதான் போக வேண்டும். எதை அடக்க முயன்றாலும் வயிற்றோட்டத்தை அடக்க முடியுமா? சிலர் வரிசையில் மலசலம் விடுவார்கள். இவ்வாறு இருக்கும் போது இறப்பவர் தொகை அதிகமாகும். இம்முகாம்களில் தற்போது இருக்கும் நோய்களான செங்கண்மாரி, வயிற்றோட்டம், அம்மை முதலான பல நோய்கள் பரவுகின்றன. இதேவேளை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கந்தளாய், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற பிரதேசங்களை சொந்த முகவரியாகக் கொண்டவர்களை மீள்குடியேற்றம் செய்தனர். முதலாம் கட்ட மீள்குடியேற்றம் செய்தனர். பின்னர் தற்போது இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் இப்போது நடைபெற்றுள்ளது. இதில் தான் பிரச்சினை. இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் போது கணவனோ அல்லது பிள்ளைகளோ அகதி முகாம்களில் இருந்தால் அக்குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்யமாட்டோம் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள். பிரிவினைக் காட்டுவது நியாயமா? இது என்ன நீதி? முதலாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இவ்வாறு பிரிவினை காட்டாமல் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் இப்படி பிரிவினை காட்டுவது நியாயமா? விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த ஒரு காரணத்தால் எமது உறவுகள் சரணடைந்தனர். அது குற்றமா? அவர்கள்தான் சரணடைந்து விட்டார்களே, பிறகு ஏன் அவர்களின் தாய், மனைவி, பிள்ளைகளையும் சிறையிலடைத்த மாதிரி இம் முகாம்களில் வைத்துள்ளனர்? உதவி இல்லாமலும் கையில் பணம் இல்லாமலும் எத்தனை பேர் கஷ்டப்படுகின்றனர். இம் மக்களில் மட்டு., அம்பாறை, திருகோணமலை மக்களில் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தில் தங்களின் பெயர், விபரம் வந்தும் தங்கள் சொந்த ஊர்களுக்கு போக முடியாமல் போனது பெரும் கவலையாக உள்ளது. எனவே, எங்கள் குறைகளைத் தீர்க்குமாறு கண்ணீருடன் வேண்டி நிற்கிறோம். இத்திட்டத்தை மாற்றி அனைத்து மக்களையும் தங்கள் சொந்த மாவட்டங்களில் மீள் குடியமர்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் |
புலிகள் இயக்கத்தில் பயிற்சிபெற்ற 10ஆயிரம் பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணக் கோவையொன்றினை மட்டக்களப்பு, குடும்பிமலை நரகமுல்லைப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விபரங்கள், புலிகள் வங்கிகளின் மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருதொகை பற்றுச்சீட்டுக்கள், தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகளிலான சஞ்சிகைகள், புலிகள் இயக்கம் கொழும்பு வர்த்தகர்களுடன் கொண்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான 05ஆவணங்கள் என்பனவும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மெனிக்பாம் முகாமிற்குள் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரவைகள் ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையென படையினர் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் முச்சக்கரவண்டி ஒன்றில்வைத்து இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய இரண்டு மின்கலன்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கேகாலை றம்புக்கணை வெல்கொடவத்தைப் பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவி;த்துள்ளார். பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 04, 8.3மில்லி மீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் 22 உட்பட மேலும் சில வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.