11 ஜூன், 2011

அரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - இந்திய தூதுக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை




இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இன்று சந்திக்க ஏற்பாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்ட தூதுக்குழு நேற்று நண்பகல் இலங்கை வந்ததடைந்தது.

இந்நிலையில் இந்திய உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்,

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.

இலங்கை வரும் வழியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டே வந்திருந்தார்.

மேலும் சிவ் சங்கர் மேனன் இந்தியா திரும்பும் வழியில் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து இலங்கை விஜயம் குறித்தும் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரப்புக்கும் இடையில் இது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதும் இருதரப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் குறிப்பிட்டன.

இதேவேளை தமிழக தீர்மானம் தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்திய மாநில அரசுகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசுடனேயே தொடர்புகளை பேணுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், அவசரகால சட்டத்தை அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கபாடு காணப்பட்டிருந்தது.

இதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின் தமிழ்க் குரல்


கனேடிய பாராளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தமிழ்மொழியில் உரை நிகழ்த்தினார்.

அந்த உரையில்,

"கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன்.

தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம்.

இன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.

கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...