4 ஆகஸ்ட், 2010

சூரியனில் “திடீர்” வெடிப்பு: பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கும் அபாயம்- மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?

.



சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.

பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன. பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.

இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இதை கணக்கிட்டு பார்த்தால் இன்று இந்த வெப்பம் பூமியை தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். இதனால் பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கி ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.

இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன. பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணி களை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன.

சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது.

செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.

வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை “சூரிய சுனாமி” என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்தசுனாமி பூமியை தாக்குமா? இல்லையா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும்.
மேலும் இங்கே தொடர்க...

புத்தளத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

புத்தளம் மாவட்ட செயலகத்தின் கீழ் புதிதாக சிறுவர் பராமரிப்பு நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலகம் என்பனவற்றில் பணியாற்றும் அதிகாரிகளின் பிள்ளைகள் இந்த பராமரிப்பு நிலையத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.

புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்ணான்டோ இதனை திறந்து வைத்தார். இதன் மூலம் அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தமது பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி எசல பெரஹரா! பக்தர்களின் நலன்கருதி 1000 பஸ்கள் சேவையில்







கண்டி தலதா மாளிகையின் வரு டாந்த எசல பெரஹராவைக் காண வரும் பக்தர்களின் நலன்கருதி ஆயிரம் பஸ் வண்டிகள் மேலதிக மாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

10ம் திகதி முதல் 14ம் திகதி வரை எசல பெரஹரா இடம்பெறுவ தோடு முதலாவது கும்பல் மஹா பெரஹரா 15ம் திகதி இடம்பெறும்.

இ.போ.ச.வின் கண்டி பஸ் கம்பனிக்கு சொந்தமான ஏழு டிப் போக்களிலிருந்து 600 பஸ் வண்டி யும் மத்திய மாகாண போக்குவரத்து அபிவிருத்தி சபை 400 பஸ்வண்டிக ளையும் சேவையில் ஈடுபடுத்தவுள் ளது.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு பிரதேசத்திலுள்ள புலிகளின் சொத்துக்களை சுவிகரிக்க அரசு முடிவு இடம்பெயர் முகாமிலிருந்து ஒரு மாதத்தில் 723 புலிகள் கைது

கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் புலிகள் இயக்கம் அமைத்துவரும் வீடுகள் வியாபார நிலையங்கள் காணிகள் மற்றும் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் என்பவற்றை அரசாங்கம் சுவிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன கூறினார்.

கடந்த ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்த 723 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவசர கால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டதாவது:- 30 வருட பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்பட்டு நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிரந்தர சுதந்திரமாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சில சட்ட நிலைமைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கைதான புலி உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த மக்கள், புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி புலிகள் மறைத்து வைத்திருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இது தவிர இந்தத் தகவல்களின் அடிப்படையில் புலி உறுப்பினர்களை அடையாளங் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் இடம்பெயர்ந்த முகாம்களில் இருந்த 723 புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவசர காலச் சட்டத்தின் கீழ் புலி உறுப்பினர்கள் உட்பட 765 பேர் கைதானதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 74 பேர் கைது செய்யப் பட்டனர். கைதான புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி கொழும்பிலும் அண்டிய பகுதிகளிலும் புலிகள் அமைத்துள்ள வீடுகள், காணிகள் பல்வேறுபட்ட வியாபார நிலையங்கள் புலிகளின் சொத்துக்கள் என்பவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு உதவி வழங்கிய கனடா அரச சார்பற்ற நிறுவனமொன்றை அந்த நாடு தடை செய்துள்ளது. புலிகளுக்கு உதவிய நபர் ஒருவருக்கு தென் இந்தியாவில் ஒரு வருடசிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாம் பெற்ற சுதந்திரத்தை நிரந்த சமாதானமாக மாற்றுவதற்கு அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டியுள்ளது.

சிலர் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால் எமது நாட்டு நலன்களைப் பாதுகாக்க வேண்டியது சகல எம். பி. க்களின் பொறுப்பாகும்.
மேலும் இங்கே தொடர்க...

நடமாடும் வாகனமொன்றில் போலி வாகன பதிவு நிலையம்

நாரஹேன்பிட்டி வாகனப் பதிவு திணைக்களம் அருகில் கண்டுபிடிப்பு; 3பேர் கைது, ஆவணங்களும் சிக்கின

நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் வாகன பதிவு திணைக்களத்துக்கு அருகில் கடந்த பத்து வருட காலமாக நடமாடும் வாகனமொன்றில் செயற்பட்டு வந்த போலி வாகன பதிவு நிலையமொன்று கொழும்பு குற்றப் பிரிவு பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போலி நடமாடும் வாகன பதிவு நிலையத்தை கண்டுபிடித்த குற்றப் பிரிவு பொலிஸார், குறிப்பிட்ட வாகனத்தில் இருந்து போலி வாகன அனுமதி பத்திரங்கள், பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றுடன் 2 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியதுடன் மூவரை கைது செய்துள்ளனர்.

60-6199 என்ற இலக்கத்துடன் கூடிய வாகனத்திலேயே இந்த போலி வாகன பதிவு நிலையம் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் குளியாப்பிட்டிய பிங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவர். மற்றைய இரு சந்தேக நபர்களும் இராஜகிரிய மற்றும் நாரஹேன்பிட்டி மெனிங் டவுண் பகுதியை சேர்ந்தவர்களாவர்.
மேலும் இங்கே தொடர்க...

உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட யாழ். குருநகர் ரெக்லமேஷன் கிழக்கு,








உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட யாழ். குருநகர் ரெக்லமேஷன் கிழக்கு, மேற்கு பகுதிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து புதிய கடற்கரை வீதியும் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைப்பதைப் படத்தில் காண்க.
மேலும் இங்கே தொடர்க...

சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று மின் உற்பத்தி மூலம் சலுகையுடன் மின்சார வசதி ஜனாதிபதி


சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மாற்று மின் உற்பத்தி மூலம் நுகர்வோருக்கு மிகவும் சிறந்த சலுகையுடன் மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

தேசிய எரிசக்தி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிசக்தி மின்சக்தி அமைச்சும், இலங்கை மாற்று எரிசக்தி அதிகார சபையும் இணைந்து சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள ‘விதுலகா’ நிகழ்வை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இவ்வைபவத்தின்போது விதுலகா கண்காட்சியையும், கருத்தரங்கையும் ஜனாதிபதி தொடக்கி வைத்தார்.

இதன் நிமித்தம் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாம் கடந்த காலங்களில் எரிசக்தி நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். அந்தந்த சந்தர்ப்பங்களில் அந்நெருக்கடிகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன. குறிப்பாக 1970 களிலும், 1980களிலும் இவ்வாறான நெருக்கடிகளை நாம் எதிர்கொண்டோம். எண்ணெய் நெருக்கடி காரணமாக அண்மையிலும் கூட எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தது.

இவ்வாறான நிலையில் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழி வகைகள் குறித்து நாம் கவனம் செலுத்தினோம். அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோம். மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தக்கூடிய இயற்கை வளங்கள் எம்மிடம் உள்ளன. நீர், காற்று, சூரிய ஒளி என்பன அவற்றில் பிரதானமானவை.

சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் உணர்ந்துள்ளோம். இத்துறையில் நாம் முன்னேற வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நாம் இவ்வாறான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்போது பல விதமான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அவற்றை எம்மால் காணமுடிகின்றது.

இருநூறு சிறிய நீர்மின் திட்டங்களை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ள்ளன. அவை சூழலுக்கு உகந்த வகையில் அமைக்கப்படும்.

நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் 85 சதவீதத்தை நாம் உற்பத்தி செய்கின்றோம். இதனை நூறு சதவீதம் உற்பத்தி செய்வதே எமது நோக்கம். இந்த அடிப்படையில் தான் நுரைச்சோலை, மேல் கொத்மலை, மின் திட்டங்களை அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே இவ்விரு மின் திட்டங்களையும் ஆரம்பிக்கும் வேலைகள் பல வருடங்கள் தாமதமாகின. அப்போதைய ஆட்சியாளர்கள் சரியான முடிவுகளை எடுக்காததே இதற்குக் காரணம். இருப்பினும், நாம் நாட்டு நலன்களைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானத்தை எடுத்து இம்மின் திட்டவேலைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றோம்.

கிராமிய மின் திட்டத்திற்கு ஈரானிய அரசு எமக்கு உதவி வழங்கியுள்ளது. சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இவ்வேலைத் திட்டத்தை செயற்படுத்தி நுகர்வோருக்கு மிகவும் சிறந்த சலுகையுடன் மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத் திட்டத்திற்கு நாம் பங்களிப்பு செய்ய வேண்டும். இதனை நான் நினைவூட்ட விரும்புகின்றேன். சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டை முன்கொண்டு செல்லும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்கான வழிகாட்டலை நாம் அரசுக்கு வழங்கியுள்ளோம்.

சுற்றாடலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் உற்பத்திகள் இங்கு இடம்பெறுவது தொடர்பாக சர்வதேசத்திற்கு செய்தி வழங்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. எதிர்கால நெருக்கடிகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு சுற்றாடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத வேலைத் திட்டங்கள் பெரிதும் உதவும் என்றார்.

இவ்வைபவத்தில் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த், பிரதியமைச்சர்கள் பிரேமலால் ஜயசேகர, முத்து சிவலிங்கம், மாகாண அமைச்சர்கள், எம்.பிக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

வர்த்தகரின்; சடலம் இறக்குவானையில் காணப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை பொலிஸார்.



இறக்குவானை - சூரியகந்தை - 10ஆம் வளைவு பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

10ஆம் வளைவு பகுதியில் நேற்றைய தினம் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அவ்வாறான சடலமொன்றை குறித்த பகுதியி;ல் தாம் மீட்கவில்லை எனவும், அது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தேடுதல் நடவடிக்கைகளுக்காக தெனியாய பொலிஸாரும் தம்முடன் இணைந்து செயற்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

தெனியாய - ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய அத்துல அபயவிக்கிரம என வர்த்தகர் கடந்த 31ஆம் திகதி மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் தெனியாய - அணில்கந்த பகுதியிலிருந்து கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டிருந்தது. குறித்த வர்த்தகரின் சடலமே இவ்வாறு 10ஆம் வளைவு பகுதியில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...