9 செப்டம்பர், 2010

சதாரண பொது மகனுக்கு சிறைத் தண்டனை, தேசத் துரோகிக்கு சுகபோகம்: ரவி கருணாநாயக்க
2500 ரூபா கொள்ளையடித்த பொதுமகன் ஒருவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் கடவுச் சீட்டு இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்ற விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய கே.பி.யை சதந்திரமாக நாட்டில் நடமாட விட்டு இருக்கின்றீர்கள். இது எவ்விதத்தில் நாயம். என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவி கருணாநாயக்க, சதாரண குற்றம் புரிந்த பொது மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. அவருக்கு பிணை வழங்கப்படுவதும் இல்லை. ஆனால் 1989 ஆம் ஆண்டு கே.பி என்வர் கடவு சீட்டு இன்றி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவரும் நாட்டுக்கு தேசத் துரோகம் புரிந்தவரும் ஆவார்.

தேசத்துரோகம் புரிந்த ஒருவருக்கு சுகபோகம் அனுபவிக்க கூடியதாக இந் நாட்டிலேயே காணப்படுகின்றது. என மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்து பிரதமர் தந்தை மரணம்


இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை இயான் கேமரூன் (வயது77). இவர் பிரான்சு நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அவர் டூவான் நகரில் இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.

தந்தை மரணம் பற்றி அறிந்ததும் பிரதமர் டேவிட் கேமரூன் பிரான்சு புறப்பட்டு சென்றார்.
மேலும் இங்கே தொடர்க...

நடிகர் முரளி உடல் தகனம் : ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை : மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் முரளியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர் - நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் 1984ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 46 வயதான அவர் பகல் நிலவு, இதயம், அதர்மம், வெற்றி கொடி கட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், தேசியகீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.

நடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் நடித்த முதல் படமே முரளிக்கு கடைசி படமாக அமைந்து விட்டது திரையுலகில் பெரும் ‌சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

நடிகர் முரளி கடல்பூக்கள் படத்திற்காக 2001ம் ஆண்டு தமிழக அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற மகன்கள் மற்றும் காவ்யா என்ற மகள் உள்ளனர். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி. அதற்குள் இப்படியொரு சோக முடிவு ஏற்பட்டு விட்டது என்று முரளியின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

முரளியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது. காலை 10.45 மணியளவில் வளசரவாக்கம் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 1 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் இன்று தாதியர் நேர்முகப் பரீட்சை

வட மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கான மாணவ தாதியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை இன்று 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியாவிலும் நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்முகப்பபரீட்சைக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தோற்றவுள்ளனர்.

இந்நிலையில், நாளை யாழில் நடைபெறும் பரீட்சைக்கு செல்வதில் பல சிரமங்கள் இருப்பதாக வவுனியாவிலுள்ள பரீட்சார்த்திகள் தெரிவித்திருந்தனர். இப்பரீட்சையை வவுனியாவிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சார்த்திகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, மேற்படி நேர்முகப் பரீட்சையை வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பரீட்சார்த்திகள் நலன் கருதி வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளதாக ஆணையாளர் கூறினார்.

இந்த நேர்முகப் பரீட்சைகள் அன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வவுனியா தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெறும் என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்

குடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்.

எமது செய்திப்பிரிவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள தொலைநகல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 1998- 09- 09 அன்று வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் நான்.

இராணுவத்தால் 18 வயதில் கைது செய்யப்பட்டு கடந்த 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். எனது குடும்பத்தின் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றேன். இன்று எனது குடும்பத்தைப் பராமரிக்க முடியாமல் அவர்களையும் துயரத்தில் ஆழ்த்தும் பரிதாப நிலையில் நிற்கின்றேன்.

குடும்ப சுமையைத் தாங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கு சொல்ல முடியாத ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியற்ற அநாதையாக வாடுகின்றேன்.

என்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றங்களில் 2008 - 07- 11 அன்று ஒரு வழக்கு தீர்த்து வைக்கபட்டது. இன்னும் மூன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடக்கின்றன.

அடுத்தவரிடம் கையேந்தும் நிலை

வழக்கு விசாரணைக்கென வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு பண்ணக்கூட என்னிடம் காசு இல்லை. உதவிக்கு யாருமற்ற அநாதையாக தவிக்கின்றேன். எனது சொந்த தேவைக்குகூட ஒரு சோப் கட்டி வாங்கக் கூட அடுத்தவரிடம் கையேந்தும் நிலைமை.

எனது நிலைமை யாருக்கும் வரக்கூடது. ஒரு யாசகனுக்கு கூட இந்த நிலை வந்திருக்காது. துன்பத் தீயில் துவளும் என் கண்ணீரைத் துடைக்க எவராவது உதவிக்கரங்கள் நீட்ட மாட்டார்களா என ஏங்கித் தவிக்கின்றேன்.

நான் எனது பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து வாழ வழிசமைக்க எவரும் முன்வர மாட்டார்களா? என்னைத் தங்கள் உறவாக நினைத்து உதவி புரிய எவரும் இல்லையா? வெளி உலகத்தைப் பார்க்க, எல்லோரையும் போல நானும் வாழ எவரும் உதவக் கூடாதா?

எனது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுமானால் என் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும் என்றே நான் நம்புகின்றேன்.

எனக்கு 2 சகோதரிகளும் 1 சகோதரனும் இருக்கின்றார்கள். அண்ணாவும் அக்காவும் திருமணம் முடித்துச் சென்று விட்டார்கள். அப்பா வயதானவர், நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார்.

எனது தங்கை திருமணம் முடிக்கவில்லை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். குடும்ப கஷ்டம் காரணமாக கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வந்த நான், இன்று இப்படியொரு அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.

முகம் தெரியாத வெளிநாட்டு உறவுகளே எனக்கு வழி காட்ட வேண்டும்.

இதுவரை யாரிடமும், எந்த உதவியும் நான் கேட்டதில்லை. இன்று உங்களை நம்பி, என் உறவாக எண்ணி, என் துன்பத்தில் பங்கு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் எனது மனச்சுமையினை இறக்கி வைத்துள்ளேன்.

எவராவது எனக்கு உதவ முன்வந்தால் அந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டேன் என்று கூறி உங்களை நம்பி எனது கண்ணீர் மடலை முடிக்கின்றேன்."

இவ்வாறு அந்த மடலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணிலுக்கு கிடையாது தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது - லக்ஷ்மன் செனவிரட்னஅரசுடன் இணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்
மக்களின்
மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று (08) பாராளும ன்றத்தில் தெரிவித்தார். அரசியலமை ப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வெளி நடப்புச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத் திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் அவ்வாறென்றால் தாம் நேரடியாக ஆதரவளி ப்பதில் என்ன தவறிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

18 ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட லக்ஷ்மன் செனவிரட்ன, ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அழிவைத் தேடிக்கொண்டது என்றார்.

18 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐ. தே. க. வெளிநடப்புச் செய்துள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் நேற்று சபையில் அமர்ந்திருந்தனர்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய செனவிரட்ன எம்.பி.,

மக்களின் நலனைச் சிந்தித்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் உருப்படாது. அதிபர் இல்லாத பாடசாலை, தலைவர் இல்லாத கட்சி எதுவும் சரிவரப் போவதில்லை. தலைவர்கள் அதிகம் இருந்தாலும் சிக்கல்தான் ஏற்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனை இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர். ஜனாதிபதியுடன் அவர் எதனைப் பேசி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை.

விவாதத்திலிருந்து விலகியது எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறைமுகமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார். அதனால் நாம் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றோம்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தால், அவரும் இந்தத் திருத்தத்தை நிச்சயம் மேற்கொண்டிருப்பார். அவரது தனிப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி அழிந்துவிட்டது. இந்தத் திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

போர் நிறுத்த உடன்படிக்கையை ரகசியமாக செய்த எமக்கு இன்று அவ்வாறு கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க வெல்லமுடியும். இதனை எல்லாம் அவருக்குச் சொல்லிப் புரியப் போவதில்லை’ என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

18வது திருத்தத்திற்கு ஆதரவு; நாடெங்கும் ஆர்ப்பாட்ட பேரணிகள் மனிதச் சங்கிலி போராட்டங்கள்

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு உட்பட நாடெங்கிலும் நேற்று ஊர்வலங்களும் மனிதச் சங்கிலி போராட்டங்களும் நடைபெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வர்ணப் புகைப்படத்தை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலங்களும், மனித சங்கிலிப் போராட்டங்களும் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களிலும், மனித சங்கிலி போராட்டத்திலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பாராளுமன்ற சந்திவரை நடாத்தப்பட்ட மனித சங்கிலி பேரணிக்கு துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமை தாங்கினார்.

இத்திருத்தத்திற்கு ஆதரவாக வத்தளை, களனி தொகுதி மக்கள் முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தலைமையில் பாராளுமன்ற சந்திக்கு மனித சங்கிலி ஊர்வலமாகச் சென்றனர்.

கடுவெல சந்தியிலிருந்து பாராளுமன்றச் சந்தி வரை சென்ற மனித சங்கிலி ஊர்வலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் ஆரம்பித்து வைத்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல தொகுதிகளிலிருந்தும் மனித சங்கிலி ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன.

அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றச் சந்தியில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கத் தலைவராகவும் தொழில் அமைச்சராகவும் இருந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு பல்வேறு சேவைகள் ஆற்றியவர்.

புதிய யாப்புத் திருத்தத்தின் மூலம் 3 மாதத்திற்கு ஒரு தடவை ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற வேண்டும். இது ஜனநாயகத்தை பலப்படுத்தும் செயற்பாடாகும். இன்றும், என்றும் உழைக்கும் வர்க்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனே கைகோர்த்திருப்பர் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த திலங்க சுமதிபால எம்.பி.; ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காகவே அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்கால ஸ்திரத்திற்கு வழங்கப்படும் வாக்குகளாகும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதேவேளை சுதந்திர ஆசிரியர் தொழிற்சங்கம் உட்பட பெருந்திரளான தொழிற்சங்கங்கள் அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலங்களையும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நேற்று நடாத்தின.

துறைமுக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி லிபர்ட்டி சுற்று வட்டத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேநேரம் இத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அத்தனகல்லை, கடுவெல, பதுளை உட்பட நாட்டின் பல நகர்களிலும் பிரதேச மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

18வது திருத்தம் ?

18வது திருத்தம் ?* எந்த ஒரு நபரும் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பதை நீக்குதல்

* ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு வரும் வகையில் வழி செய்தல்

* அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக “பாராளுமன்ற சபை” ஒன்றை உருவாக்குதலும் அதன் செயற்பாடு களை இலகுவாக்குவதும்

* அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரங்கள் செயற்பாடுகள், பொறுப்புக்கள் மீளமைக்கப்பட்டு அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படும்.

* பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸார் ‘அரச சேவைகள்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்பின் 18 வது திருத்தம் நிறைவேறியது ஆதரவு 161 எதிர் 17 மூன்றில் இரண்டுக்கும் மேலதிகமாக 11அரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று (08) மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 144 மேலதிக வாக்குகளால் 18வது திருத்தம் சபையில் நிறைவேறியது.

சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு இவ்வாறு நிறைவேற்றப்பட்டதும் குழுநிலையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார்.

அதன்படி, புதிய சரத்துகளும் உள்ளடக்கப் பட்டுக் குழுநிலையிலும் அங்கீகரிக்கப்ப ட்டது. அதனையடுத்து மீண்டும் மூன்றாவது வாசிப்பை நிறைவேற்ற சபை இணங்குகிறதா என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வினவினார். அப்போது பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

அதற்கமையவும் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான ஆதரவு டன் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்ற ப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வெளிநடப்பு செய்திருந்த நிலையில் அக்கட்சியின் அதிருப்தியாளர்க ளான பாராளு மன்ற உறுப்பி னர்கள் லக்ஷ் மன் செனவிர ட்ன, உபேக்ஷா சுவர்ணமாலி, ஏர்ள் குணசேகர, மனுஷ நாணயக் கார, ஏ. ஆர். எம். ஏ. காதர், ஜே. ஸ்ரீரங்கா, நில்வளா விஜேசிங்க ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்தாலும் அம்பாறை மாவட்டத்தின் உறுப்பினர் எச். ஏ. பியசேன மாத்திரம் ஆதரவாக வாக்களித்தார். அதேபோன்று ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்தனர்.

தவிரவும், இடதுசாரி கட்சிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்க ளும் சட்ட மூல த்திற்கு ஆதர வாக வாக்களித் தனர். வாக்கெ டுப்பு நடைபெறுவ தற்கு முன்னதாக ஐ. தே. க. அதிருப் தியாளர்கள் ஏழுபேர் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். 46 பேர் சபைக்குச் சமுகமளிக்க வில்லை. இவர்களுள் ஐ. தே. க. வின் 45 பேர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.

பிரதமர் தி. மு. ஜயரட்ன வினால் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 18ஆவது அரசியலமைப்புத் திருத் தச் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

பிரதமர் தி. மு. ஜயரட்ண இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன் எம்.பி. எதிரணியின் சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆளுந்தரப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற சூடான வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த உரைகளின் நிறைவில் இரவு ஏழு மணியளவில் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட் டது. பாராளுமன்ற வாக்கெடுப்பின் போதெல்லாம் எதிராக வாக்களிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 18 ஆவது திருத்தத்தையும் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தார்கள்.
மேலும் இங்கே தொடர்க...