இலங்கையில்
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லை. இதனாலேயே, இன்று உலக நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தமிழீழ தாயகமொன்றுக்காகக் குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளனர் என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளரும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
பிரித்தானியாவிற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜயமானது உத்தியோகபூர்வமானதொன்றல்ல. அங்குள்ள இலங்கைத் தூதரகம் இந்த விஜயம் தொடர்பில் எச்சரிக்கை விட்டிருந்த போதிலும் ஜனாதிபதி அதனை பொருட்படுத்தாமலேயே சென்றுள்ளார். எனவே அழையாத வீட்டில் மரியாதையை எவ்வாறு எதிர்பார்க்க முடியுமெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
ஜே. வி. பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தது. அதே மாதம் 27 ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தி மீள்குடியேற்றம் உட்பட தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு யோசனைகளை ஜே. வி. பி. அரசாங்கத்திற்கு முன் வைத்தது. அதன் போது தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். இதனை தவற விட்டு விட்டு மீண்டும் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக நினைத்தால் இன்னுமொரு பிரிவினை வாத ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என அன்றே நாங்கள் எச்சரித்து இருந்தோம்.
யுத்தம் முடிவடைந்து சுமார் ஒரு வருடமும் 6 மாதங்களும் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கோ, தேசியப் பிரச்சினைகளுக்கோ அரசாங்கம் முறையான தீர்வை ஏற்படுத்தவில்லை. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாது, அரசியல் இலாபம் தேடி ஏனைய கட்சிகளையும் வடக்கு கிழக்கிற்கு செல்ல விடாது அரசாங்கம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டது.
இன்னும் இராணுவத்தை பயன்படுத்தி அடக்கு முறையிலான சூழலையே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ளது பயங்கரவாதத்தில் நாடு பெற்ற சுதந்திரத்தையும் சமாதானத்தையும் தமிழ் மக்களால் உணர முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுகள் இன்று சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எதிரொலித்துள்ளது. மீண்டும் தனி நாட்டு போராட்டத்திற்கு வித்திடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தின் ஆபத்தான சூழலை அண்மையில் ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு சென்ற போது உணரக் கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக் கணக்கான புலம்பெயர் தமிழர்கள் தமிழீழக் கொடியுடன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஜே. வி. பி. இந்தப் போராட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஆனால் மேற்படி விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வமான விஜயமல்ல.
ஒக்ஸ்போர்ட் யூனியனில் மாணவர் சங்கமொன்றின் அழைப்பின் பேரில் உரையாற்றவே ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தார். இந்த யூனியனுக்கும் சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது மேற்படி போராட்டங்களின் ஊடாக தெளிவாகின்றது. எனவே ஒரு மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டுத் தலைவர் ஒருவர் இவ்வாறு செல்வது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.
எவ்வாறாயினும் உள்நாட்டில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக செயற்பட்டிருந்தால் மேற்படி போராட்டங்கள் சவால்களுக்கு உட்படுத்தியிருக்கலாம். கொழும்பிலிருந்து வெளியேற்றப்படும் தமிழ் மக்களை கூட விரும்பினால் வடக்கில் சென்று குடியேற்ற முடியும் என பாதுகாப்பு செயலாளர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான கருத்துக்களால் மீண்டும் தேவையற்ற பிரச்சினைகளையே சந்திக்க நேரிடும்.
எனவே தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான அவதானத்துடன் இனிமேலும் செயற்பட வேண்டும். மீண்டும் தமிழர்கள் இலங்கையில் முடக்கப்பட்டால் போராட்டங்கள் உருவெடுப்பதை தடுக்க முடியாது என்றார்.