10 ஜூன், 2010

ஜனாதிபதி - சோனியா டில்லியில் நேற்று சந்திப்பு




இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

புதுடில்லி மயூரா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை உயர்மட்டக் குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தர, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் பங்கு கொண்டனர்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகாலமாக நிலவும் நல்லுறவை மேலும் பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கு சோனியா காந்தி குறிப்பிட்டார்.

இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையிலான உல்லாசப் பிரயாணத்துறையை மேலும் முன்னேற்ற நல்ல தருணம் உருவாகியுள்ளதென்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி இரண்டாவது முறையாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சோனியா, இரு நாட்டுத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

குருநாகலில் விஷவிதை உண்ட 12 மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

குருநாகல் மாவட்டத்தில் ஒருவகை விஷ விதைகளை உண்ட 12 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

பிங்கிரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் இரு கட்டங்களில் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அதிகரி உபாலி சிங்க தெரிவித்தார்.

இவர்களில் ஒரு மாணவியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்ற உபாதைகளால் இவர்கள் பாதிப்படைந்துள்ளனர் என அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஆஸி நோக்கி 300 இலங்கையருடன் செல்லும் 'எம்வி சன் சீ' : சர்வதேசம் தகவல்

இலங்கை அகதிகள் சுமார் 300 பேர் இருக்கலாம் என நம்பப்படும் கப்பல் ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அகதிகள் புகலிடம் கோரும் நோக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த கப்பல் தாய்லாந்து-வியட்நாமிய கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருப்பதாக த அவுஸ்திரேலியன் செய்திதாள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்த கப்பலில் புகலிடம் கோருவோரை, அழைத்துச் செல்பவர்களே முன்னர் கனடாவுக்கு 76 இலங்கையர்களை அழைத்து சென்றவர்களாவர் என சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஏற்பாட்டாளர்கள் பிரின்சஸ் ஈஸ்வரி அல்லது ஒசியான் லேடி என்ற கப்பலில் 76 பேரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'எம்வி சன் சீ' எனப்படும் இந்தக் கப்பல் பிலிப்பைன்சின் கடற்கரை பகுதியிலும் தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் இது தொடர்பில் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.

எனினும் இவ்வாறான நடவடிக்கை ஒன்று குறித்து தமது அரசாங்கம் அறிந்துள்ளதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்வாறான கப்பல் ஒன்றின் வருகை குறித்துத் தாமும் அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனடாவின் அதிகாரிகள் தமது கடற்படை இது தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்
மேலும் இங்கே தொடர்க...

நாட்டின் அரசமைப்பில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம் : லக்ஷ்மன் யாப்பா

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரத்ன முன்வைத்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. அந்தவகையில் துரித கதியில் கட்டம் கட்டமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: "அரசாங்கம் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றது. அந்த வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. .

கடந்தகாலங்களில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு தடைகள் காணப்பட்டன. மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தனர். .

தற்போது 30 வருடகால பயங்கரவாதம் முடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. .

அங்கீகாரம்.

அந்தவகையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் யஐஐ அ, லஐ, லயஐஐஐ அ, ஆகிய அத்தியாயங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கும் புதிய திருத்தங்களை முன்வைப்பதற்கும் அடையாளம் காணப்பட்ட சட்டங்களுக்குத் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளவும் இது தொடர்பான சட்ட வரைவுகளை செய்யவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. .

அமைச்சரவை உபகுழு.

அதேவேளை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அவற்றை நீக்குவதற்கான யோசனைகள் என்பன தொடர்பில் ஆராய அண்மையில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் நானும் இடம்பெறுகின்றேன். தற்போது குறித்த குழு பல தடவைகள் கூடி யோசனைகளை தயாரித்து வருகின்றது. சில வாரங்களில் நாங்கள் இது தொடர்பான யோசனைகளை அமைச்சரவைக்குச் சமர்ப்பிப்போம்.

சல்மான்கானின் திரைப்படம் இலங்கையில்

மேலும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தியதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. அதாவது வேறு ஒரு நாட்டில் படப்பிடிப்புக்களை மேற்கொள்ளவிருந்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் திரைப்படம் தற்போது முழுமையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. 150 இந்திய குழுவினர் இலங்கையில் படப்பிடிப்புக்களை நடத்துவார்கள்."இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரளித்த பதில்களும் : கேள்வி: எவ்வாறான அம்சங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று கூற முடியுமா?

பதில்: பல விடயங்களில் திருத்தங்கள் இடம்பெறும். அவற்றை விபரமாக தற்போது என்னால் கூற முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தேர்தல் முறைமை உள்ளூராட்சி முறை போன்றவற்றில் திருத்தங்கள் இடம்பெறவுள்ளன.

கேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எவ்வாறு திருத்தம் செய்யப்படும்?

பதில்: அதாவது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நாடாளுமன்றத்துக்கு வரவேண்டிய வகையில் திருத்தம் செய்யப்படும். தற்போது அவ்வாறு இல்லை.

கேள்வி: ஜனாதிபதி பதவிக்கால தடவைகளை நீடிப்பது தொடர்பில் ஆராயப்படுகின்றதா?

பதில்: ஒருவர் எத்தனை தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பதனை மக்களே தீர்மானிக்கின்றனர். எனவே அதில் சிக்கல்கள் இல்லை. யார் ஜனாதிபதியாயானலும் மக்களே தீர்மானிக்கின்றனர்.

கேள்வி:அரசியல் தீர்வு விடயமும் அரசியலைமைப்பு திருத்தங்களில் உள்ளடக்கப்படுமா?

பதில்: அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பேசப்படுகின்றது

கேள்வி: எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தாரே?

பதில்: மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று நான் கூறவில்லை. அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பேசப்படுவதாகவே கூறினேன். இதில் பல்வேறு விடயங்கள் உள்ளன.

கேள்வி: அப்படியானால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு?

பதில்: நாங்கள் முதற்கட்டமாக வடக்கில் மாகாண சபையை நிறுவவுள்ளோம்.

கேள்வி:: அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஏதாவது பேசப்படுகின்றதா?

பதில்: நாங்கள் முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டுவருகின்றோம். அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவருகின்றோம். உலகில் எங்குமே இடம்பெறாதவாறு இடம்பெயர்ந்த மக்கள் மிகவேகமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

கேள்வி: அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான குழுவினரின் யோசனைகளுக்கா தற்போது அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்:அந்தக் குழுவும் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கேள்வி:மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாகவும் பேசப்படுகின்றதா?

பதில்: பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டும் ஆராயப்பட்டும் வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இடம்பெயர்ந்த தமிழர்கள் 3 மாதங்களில் குடியமர்த்தப்படுவர்: ராஜபட்ச உறுதி



குடியரசுத் தலைவர் மாளிகையில், இலங்கை அதிபர் ராஜபட்ச தம்பதியை புதன்கிழமை வரவேற்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்.
புது தில்லி, ஜூன் 9: இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் 3 மாதங்களுக்குள் அவரவர் வசிப்பிடங்களில் குடியமர்த்தப்படுவர் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச உறுதி அளித்தார்.

÷3 நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ள அதிபர் ராஜபட்சவை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு புதன்கிழமை காலை சந்தித்தது. அப்போது அவர்களிடம் ராஜபட்ச மேற்கண்டவாறு உறுதி அளித்தார்.

÷திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் உள்பட மொத்தம் 14 எம்.பி.க்கள் ராஜபட்சவை சந்தித்து மனு அளித்தனர்.

÷இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் டி.ஆர். பாலு கூறியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் முகாமில் அடைபட்டுள்ளனர். அவர்களை உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1987-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி - ஜயவர்த்தனே இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சி அதிகாரம் வழங்குவதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

÷அதற்கு பதிலளித்த ராஜபட்ச, அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது முகாமில் 54 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே உள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் அதாவது பருவமழை தொடங்குவதற்கு முன்பு அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் அவர் உறுதி அளித்தார் என்றார்.

÷தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது தொடர்பான கோரிக்கையில் ராஜபட்ச நம்பிக்கை தரும் வகையில் உறுதியான பதிலை அளிக்காததால் எம்.பி.க்கள் குழுவினர் அதிருப்தி அடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

÷இதனிடையே குழுவில் இடம்பெற்றிருந்த திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தமிழர்களுக்கு சுய அதிகாரம் வழங்குவது தொடர்பான 13வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து யோசனை செய்துவருவதாகவும் ராஜபட்ச தெரிவித்ததாக அவர் கூறினார்.

÷இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.500 கோடி நிதியை இலங்கை அரசு முறையாக பயன்படுத்தாமல் உள்ளது. அந்த நிதியை உடனடியாக வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட முன்வர வேண்டும் என்று ராஜபட்சவிடம் எம்.பி.க்கள் குழுவினர் வலியுறுத்தினர்.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜபட்ச சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே நீண்ட நல்லுறவு ஏற்படவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரு தலைவர்களும் விரிவான பேச்சு நடத்தியதாக சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.

÷இரு நாடுகளின் மீனவர்களிடையே அடிக்கடி மோதல்களை தடுத்து, நல்லுறவை ஏற்படுத்துவது மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பேச்சு நடத்த கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்று நிருபமா ராவ் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...