தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஆராய்ந்து தீர்வினை முன்வைப்பதற்கென நியமிக்கப்பட்ட ஆறுபேர் கொண்ட உபகுழுவானது இன்றுபிற்பகல் 2.30 அளவில் கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கூடியது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோரும், தமிழ் அரங்கம் சார்பில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அ.இராசமாணிக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியின் இடத்திற்கு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக குறித்த உபகுழுவானது ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதுடன், பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரோ மேற்படி உபகுழு சார்பில் எடுக்கப்பட்ட பொது நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் உதவி- மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டுசெல்லும் பணிகளிலும், பிரதேச செயலகங்களிலிருந்து வழங்கப்படும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுப் பொருட்களை எடுத்துச்சென்று விநியோகிக்கும் நடவடிக்கையிலும் புளொட் உறுப்பினர்கள் கடந்த நான்கு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட புளொட் உறுப்பினர்கள் பலர் இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்றையதினம் புதுமண்டபத்தடி, குறிஞ்சாமுனை, கரையாக்கன்தீவு, கொத்தியாவளை பகுதிகளில் புளொட் உறுப்பினர்கள் பிரதேச செயலகங்களில் இருந்து உலருணவுப் பொருட்களை இயந்திரப் படகுகளில் எடுத்துச்சென்று விநியோகிக்கும் நடவடிக்கையிலும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளிலும் ஈடுபட்டு வருவதுடன், நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கும், வைத்தியர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வதிலும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...