19 பிப்ரவரி, 2011

உணவுப் பொருட்களின் விலை உயர்வு: கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை ஜனாதிபதி




மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தத்தின் தாக்கம் மற்றும் உலக சந்தையின் நிலைமை என்பன காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தீர்வுகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துவருகிறது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் அபேட்சகர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிராமத்தை மேம்படுத்தவும், கிராம மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும் பணியாற்றிய விசேட யுகமாக தற்போதைய அரசாங்கத்தின் பதவிக் காலம் வரலாற்றில் பதியும் என்பதில் ஐயமில்லை.

கிராமத்தை மேம்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசின் வேலைத் திட்டத்திற்கு இந்த உள்ளூராட்சித் தேர்தல் பாரிய சக்தியாக அமையும் என நம்புகின்றேன்.

தனிநபர், குடும்பம், கிராமம், நாடு என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் வேலைத் திட்டமாகும். இவ்வேலைத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. இந்தப் பொறுப்புக்களை உரிய முறையில் இனங்கண்டு அதற்கேற்ப சகலரும் செயற்பட வேண்டும். அதேநேரம் தனிப்பட்ட தேவைகளுக்கு அப்பால் கட்சியின் வெற்றிக்காகப் பொது நோக்கோடு சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதும் அவசியம்.

இன்று கிராமங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கின்றன. நாட்டுக்கு சிறந்த வீதி கட்டமைப்பு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. 2012ம் ஆண்டாகும் போது நாட்டிலுள்ள சகல கிராமங்களும் மின் வசதியைப் பெற்றுக்கொள்ளும். அத்தோடு சகலருக்கும் இருப்பிடங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான பாரிய வீடமைப்பு வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை எல்லா வீடுகளுக்கும் பொருளாதார அலகுகள் என்ற திட்டத்தின் கீழ் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்று மஹிந்த சிந்தனையை வெற்றிபெறச் செய்து தாயகத்தைக் கட்டியெழுப்பவென அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள் என்றார்.

இக்கூட்டத்தல் பிரதமர் தி. மு. ஜயரட்ன, அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

பெண் முடிச்சுமாறிகளின் திருட்டுகள்

கொழும்பிலும் நாட்டின் பிரதான நகரங்களிலும் இப்போது ஆண் முடிச்சுமாறிகளை (பிக்பொக்கட்ஸ்) விட பெண் முடிச்சுமாறிகளின் திருட்டுகள் அதிகரித்து இருப்பதாக பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளது.

அர சாங்க, தனி யார் துறை யினரின் சம்பள நாட்களிலும் அதற்கு பின்னர் ஓரிரு தினங்களுக்கும் இந்த பெண் முடிச்சுமாறிகளின் அட்டகாசம் கட்டுப்பாட்டை இழந் துள்ளது என்று பொலிஸார் கூறுகி றார்கள்.

இவர்கள் நல்ல செல்வாக்கான குடும்பப் பெண்களை போன்று நவநாகரீகமான உடையணிந்து சனநெரிசல் மிக்க பஸ்களிலும் ரயில் வண்டிகளிலும் பிரயாணம் செய்து நெருக்கடி காரணமாக அசெளகரிய நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் போன்று நடித்து அப்பாவி ஆண்களின் உடலில் உரசி மெல்ல தமது மெல்லிய விரல்களை விட்டு ஆண்களின் பேஸ்களை திருடிவிடுகிறார்கள்.

இத்தகைய பல முடிச்சுமாறி திருட்டுகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இந்த சாகசக்கார பெண்களை கைது செய்து தண்டிப்பதற்காக நல்ல உடல் கட்டுடைய பொலிஸ் பணியில் பயிற்சி பெற்ற பெண் பொலிஸார்களை பஸ்களிலும், ரயில்களிலும் பொது இடங்களிலும் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இந்த பெண் முடிச்சுமாறிகளிடம் இருந்து ஆண்கள் ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் பஸ்களிலும் ரயில் வண்டிகளிலும் தங்களிடம் நெருங்கி உடல் ஸ்பரிசத்தின் மூலம் ஆண்களின் உணர்வுகளை தூண்டச் செய்யும் பெண்கள் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் எச்சரிக்கை செய்கின்றார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

அக்மீமன, மொனறாகலை, அக்குரஸ்ஸ: உள்ளூராட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை






அக்மீமன, மொனறாகலை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச சபைகளுக்கு மார்ச் மாதம் 17ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணையாளருக்கு நேற்று இடைக்கால தடை உத்தரவை விதித்தது.

அக்மீமன மற்றும் மொனறாகலை பிரதேச சபைகளுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவொன்றும் சமர்ப்பித்த வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்கு அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கு ஏற்றவகையிலேயே இந்த இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் சத்யா ஹெட்டிகே, நீதிபதி உபாலி அபேரட்ன ஆகியோரால் இந்த இடைக் காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அக்மீமன, மொனறாகலை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச சபைகளுக்கு ஐ. ம. சு. மு. வும் சுயேச்சைக் குழுவொன்றும் சமர்ப்பித்த வேட்பு மனுக்கள் நிராகரிப்பட்ட மைக்கு ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்த நீதிபதிகள் இத்தடை உத்தரவை வழங்கினர்.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு மனு மீதான விசாரணை நிறைவுறும் வரையில் இத்தடை உத்தரவு அமுலில் இருக்கும்.

அக்மீமன மற்றும் மொனறாகலை பிரதேச சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சமர்ப்பித்த வேட்பு மனுக்களை நிராகரித்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்து ஐ. ம. சு. முன்னணி செயலாளர் நாயகமும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த்தும், அக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு சுயேச்சை குழு சமர்ப்பித்த வேட்பு மனுவை நிராகரித்தமைக்கு ஆட்சேபனை தெரிவித்து அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி யு. கமகேயும் இந்த மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இடி, மின்னல், மழை: விழிப்பாக இருக்க எச்சரிக்கை






அடுத்துவரும் சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் நேற்று வேண்டுகோள் விடுத்தது.

அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டி ஹேவகே நேற்று கூறினார்.

இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கடும் காற்றும் வீச முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோடை காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தீவிரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

அதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது திறந்த வெளியில் நடமாடுவதையும், நீர் நிலைகளுக்கும், உயர்ந்த மரங்களுக்குக் கீழ் நிற்பதையும், மின்சாரப் பொருட்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

தெங்குச் செய்கையாளர்களுக்கு மானிய உரம் வழங்குவதில் முறையான செயல் திட்டம்





வேளாண்மை செய்கைக்கு பசளையை மானிய அடிப்படையில் வழங்கப்படும் போது ஊழல் மோசடிகள் இடம்பெறுவது போலல்லாமல் தெங்குச் செய்கையாளர்களுக்கு பசளையை மானிய அடிப்படையில் வழங்கும் போது முறையான செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.

சரியான முறையில் தெங்குச் செய்கையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு பசளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தெங்குப் பசளை மானிய அடிப்படையில் வழங்குவது தொடர்பாக ஊடகங்களில் பிரபல்யம் அடைந்திருந்தன. அந்த முறையில் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இந்த மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைக்குப் பின் மானிய அடிப்படையில் வழங்க ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந் நாட்களில் அதற்குத் தேவையான விண்ணப்பங்கள் பாரம் எடுக்கப்படவுள்ளன. தெங்கு செய்கையாளர் சபையினர் பிரதேச காரியாலயத்திற்கு சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் ஊடாக இந்த விண்ணப்பங்களை ஒப்படைத்திருப்பார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

தகைமையுடைய தெங்குச் செய்கையாளர்கள் கமநல சேவை மத்திய நிலையம் மற்றும் அங்கீகாரமளிக்கப்பட்ட எந்த பசளை விநியோகஸ்தர்களின் பிரதிநிதிகளின் மார்க்கமாக பசளையை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...