12 மார்ச், 2010

அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலைய நிர்மாணப் பணிகள்... 2 இலட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பு






அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் நிர்மாணப் பணிகள் மூலம் சுமார் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் பொரு ளாதாரம் இரண்டு மடங்காக உயர்த்தப்படவிருப்பதாக துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே. வி. பி. ரஞ்சித் சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

துறைமுகம் மற்றும் விமான நிலையத்தினூடாக 26,500 பேர் நேரடியாகவும் 2 இலட்சத்து 5 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் துறைமுக மற்றும் விமான நிலையங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு தற்கால திட்டங்கள் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

இதில் கருத்துத் தெரிவித்த இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரம கூறுகையில், அம்பாந்தோட்டை துறைமுக கட்டமானப் பணிகள் 04 கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டம் குறித்த திகதியிலும் 12 மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் நவம்பர் முதல் துறைமுக நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.

அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கப்படவிருப்பது அறிய வந்தது முதல் இதுவரை 24 முதலீட்டாளர்கள் அங்கே முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.

நாட்டில் பயங்கரவாதம் இருந்ததனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வர மாட்டார்களென பலரிடம் நிலவி வந்த கருத்தினையும் முடக்கும் வகையில் இன்று முதலீ ட்டாளர்கள் எமது நாட்டை த்தேடி வருவது பெருமைக்குரிய விடயமா கும்.

அம்பாந்தோட்டை பிரதேசமானது சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய இடத்திலுள்ளது. தினந்தோறும் 200 தொடக்கம் 300 வரையான கப்பல்கள் எமது நாட்டிற்கு வராமல் அம்பாந்தோட்டையூடாக செல்கின்றன. வருடத்துக்கு 60 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் வரையான கப்பல்கள் இவ்வாறு செல்கின்றன.

இதில் ஆகக் குறைந்தது 15 தொடக்கம் 20 சதவீதத்தினை இத்துறைமுகத்தினூடாக வரவழைப்பதன் மூலம் எமது நாட்டில் போதிய அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.

மேலும் இத்துறைமுகத்தினூடாக நேரடியாக 25 ஆயிரம் பேரும் மறைமுகமாக 2 இலட்சம் பேரும் தொழில்வாய்ப்பினை பெறுவர்.

அத்துடன் கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்தும் செயற்திட்டம் இம்மாத இறுதிக்குள் முழுமைப்படுத்தப்படும் வகையில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இங்கே ஒரே தரத்தில் 10 கப்பல்களை நங்கூரமிடமுடியும். விரிவுபடுத்தும் திட்டம் முழுமைபெற்றதும் ஒரேநேரத்தில் 90 கப்பல்கள் நங்கூரமிடமுடியும்.

இதேவேளை, உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் காலி துறைமுகமும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் ஒலுவில் துறைமுகமும் சுதந்திர வர்த்தக வலயத்தை ஊக்குவிக்கும் வகையில் திருமலை துறைமுகமும் உள்நாட்டு உற்பத்தியை அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் விதமாக காங்கேசந்துறை துறைமுகப் புனர்நிர்மாணப்பணிகளும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் கூறினார்.

இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் கமல் ரத்வத்த பேசுகையில், 2012 ஆம் ஆண்டு நவம்பர் முதல் விமான சேவைகளை ஆரம்பிக்கும் வகையில் மத்தள விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரே இடத்தில் 10 விமானங் கள் நிறுத்தி வைக்க கூடிய வகையில் மிகவும் விசாலமாக அமைக்கப்படும் இவ்விமான நிலையத்தில் 318 ரக எயார்பஸ் தலையிறங்க கூடிய வகையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 1500 பேர் நேரடியாகவும் 5 ஆயி ரம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு பலம்மிக்க பாராளுமன்றம் அவசியம்




உழைக்கும் வர்க்கத்திடம் ஜனாதிபதி வேண்டுகோள்

மஹிந்த சிந்தனை: இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப் பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டம்

(லோரன்ஸ் செல்வநாயகம்)

எந்தவித சக்திகளிலும் தங்கியிராத பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற மொன்றை அமைப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தைத் தேர்தலின் பின் நாம் மறந்துவிடவில்லை. யுக யுகமாக அதனை முன்னெடுத்து ஆசியாவின் ஐஸ்வர்யமிக்க நாடாக இலங்கையை உருவாக்க நாம் கட்டுப்பட்டுள்ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிமஹிந்த சிந்தனைபீ எதிர்காலத்திட்டம் சம்பந்தமாக தொழிற்சங்கத்தினருக்குத் தெளிவுபடுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடை பெற்றது.

அமைச்சர்கள் சுசில் பிரேமஜயந்த, டியூகுணசேகர, கீதாஞ்சன குணவர்தன உட்பட அமைச்சர்கள் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மகாநாட்டில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

மஹிந்த சிந்தனையை வெளியிட்டு நாம் அதன் மூலம் செயற்பட்டோம். மக்கள் பிரசாரங்களால் அதனை அறிந்து கொள்ளவில்லை. நாட்டில் மேற்கொள்ளப் பட்ட அபிவிருத்தித் திட்டங்களே மஹிந்த சிந்தனையை மக்களுக்குக் காண்பித்தன. அதன் மூலம் நாம் சொன்னதைச் செய்தோம். அதுவே அத்திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மூலம் நாம் 350 ரூபாவுக்கு உரம் வழங்குகிறோம் என்றதையும் நாட்டை ஒன்றிணைப்போம் என்று உறுதியளித்ததையும் நம் தலைவர்கள் பலர் நம்பவில்லை.

அதை பகற்கனவு என்றனர். பிரபாகரன் கூட இதெல்லாம் மஹிந்தவின் கனவு எனவும் குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது.

கடினமானது கஷ்டமானது என எதனையும் நாம் செய்யாமலிருக்கவில்லை. கைவிட்டு தப்பியோடவும் நினைக்கவில்லை. கஷ்டம் கடினம் என்றில்லாமல் நாட்டுக்கு எதுதேவையோ அதனை முன்கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

மஹிந்த சிந்தனையானது இந்நாட்டு மக்கள் இழந்ததை மீளப்பெற்றுக் கொடுக்கும் கொள்கைத் திட்டமாகும். பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோருக்கு உரிமையில்லாத நிலை இருந்தது. ஒன்றிணைந்த நாடு எமக்கு இழக்கப்பட்டிருந்தது.

மஹிந்த சிந்தனை மூலம் இவற்றை நாம் நிறைவேற்றியது மட்டுமன்றி நாட்டிற்கும் மக்களுக்குமான கெளரவத்தையும் பெற்றுக்கொடுத்தோம்.

சுதந்திரம், சமாதானம், பொருளாதார அபிவிருத்தி என்பவற்றையும் மஹிந்த சிந்தனை மூலம் எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. முழு உலகமே பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுத் தவித்த வேளையில் எம்மால் துணிவுடன் எழுந்து நிற்க முடிந்தது.

சுதந்திரத்தின் பின்னர் உருவான பல்வேறு நாட்டினதும் நகலாக நாம் இருக்கக் கூடாது. சிலர் இந்த நாட்டைச் சிங்கப்பூராக்குவோம் என்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்பை இங்கு திணிக்கப் பார்த்தார்கள். வேறு நாடுகளில் வழங்கப்பட்ட இனப் பிரச்சினைத் தீர்வுகளை இங்கும் நடைமுறைப்படுத்த தயாராகினர்.

இதனால் எமது தனித்துவம் இல்லாது போகும். நாம் அதற்கு இடமளிக்கவில்லை. நாம் எந்த நாட்டினதும் நகலாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் இலங்கையை இலங்கையாகக் கட்டியெழுப்பவே மஹிந்த சிந்தனை மூலம் முயற்சித்தோம்.

அரசியல் ஆரம்பமாவது மக்கள் ஒன்றிணையும் இடத்தில்தான். நாம் மக்களிடம் சென்று அவர்களுடன் செயற்பட்டு, அவர்களிடம் பாடம் கற்று அவர்களுக்குச் சேவை செய்தே அரசியலைக் கற்றுக் கொண்டோம்.

மஹிந்த சிந்தனையைத் தயாரித்தது வெளிநாட்டு நிபுணரல்ல. நம் நாட்டு சாதாரண மக்களின் தரிசனமே மஹிந்த சிந்தனை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தொழிற்சங்கப் போராட்டங்களின் போது உயிரைத் தியாகம் செய்த தொழிற்சங்கவாதிகளின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஞாபகச் சின்னம் மற்றும் உதவித் தொகையொன்றையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
உலகப் பணக்காரர்களின் வரிசையில் முகேஷ் அம்பானி
இந்தியாவிலிருக்கும் பில்லியனர்கள் எனப்படும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக அமெரிக்க சஞ்சிகையான போர்ப்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் தெரிவித்திருக்கிறார்.

2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. இது 2009 ஆம் ஆண்டு 49 ஆக உயர்ந்திருக்கிறது. ஆங்கிலத்தில் ஒரு பில்லியன் என்பது நூறுகோடி.

போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் பட்டியலின்படி, ஆசிய பிராந்தியத்தில் இருக்கும் 25 பெரும் பணக்காரர்களில் பத்து இந்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பெரு நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், அவர் தான் இந்தியாவின் அதிகபட்ச பணக்காரர் என்றும் போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் எக்குத்தொழிலில் உலகின் பெரும் வர்த்தகரான லக்ஷ்மி மிட்டலின் நிகர சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படு கிறது. இவர் தனது வர்த்தகத்தை மேற்குலகில் நடத்தி பெரும் பொருள் ஈட்டியிருந்தாலும் தனது இந்திய குடியுரிமையையும் கடவுச்சீட்டையும் தொடர்ந்து வைத்திருப்பதால் இவர் இந்தியராகவே கருதப்படுகிறார்.

இவர்கள் இருவருமே, உலகின் பத்து பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார்கள். இதில் அம்பானி நான்காவது இடத்திலும் மிட்டல் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

மற்றவர்களின் குற்றச்சாட்டு பற்றி நான் கவலைப்படவில்லை : ஜனாதிபதி

மற்றவர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. நான் ஒற்றை ஆட்சி பற்றிப் பேசிய போதெல்லாம் அது வெறும் கனவு என்றார்கள். அதனால் என்ன கிடைக்கப்போகிறது எனச் சிலர் கேட்டார்கள். ஆனால் நான் செய்துகாட்டினேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிமகிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு' கொள்கைப் பிரகடனம் தொடர்பான விசேட சம்மேளனம் இன்று சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

"எந்தவொரு விடயத்தையும் செய்யத் தொடங்கும் முன்னர் அதைச் செய்வதனால் நாட்டுக்கு நன்மையிருக்கிறதா என்பதை நான் சிந்தித்துத் தான் செயலாற்றுகிறேன். மகிந்த சிந்தனை பலராலும் விமர்சிக்கப்பட்டது. உரம் 350 ரூபாவுக்கு வழங்க முடியாது என்றார்கள். நான் அதனை நடைமுறைக்குக் கொண்டுவந்தேன்" என அவர் அங்கு மேலும் கூறினார். _
மேலும் இங்கே தொடர்க...

புனித அந்தோனியாரின் திருப்பண்டம் மட்டக்களப்பு வருகை

இத்தாலி நாட்டின் பாதுவை நகரில் இருந்து கோடி அற்புதரும், வேத நூல் மறை வல்லுனருமான புனித அந்தோனியரின் திருப்பண்டம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட இத்திருப்பண்டம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை வரை மக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின் புதன்கிழமை காலி நகருக்கு எடுதுச் செல்லப்பட்டது.

பின் அங்கிருந்து இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இத்திருப்பண்ட பேழையை மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் துணை ஆயர் கலாநிதி பொன்னையா யோசப்பும் பொறுப்பேற்றனர்.

தற்போது இத்திருப்பண்டம் மட்டக்களப்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.இதனைத் தரிசிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அந்தோனியாரின் இத்திருப்பண்டம் இன்று இரவு 7.00 மணிக்கு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் மக்கள் தரிசனத்துக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை இத்திருப்பண்டம் மன்னாருக்குக் கொண்டு செல்ல ஏற்பாடகியுள்ளது.மன்னார் தள்ளாடியிலிருந்து விசேட பவனியுடன் காலை 8.00 மணிக்கு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்குக் கொண்டு வரப்படவுள்ளது.

காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு பின் அன்று மாலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

779 ஆண்டுகள் புனித அந்தோனியாரின் உடலில் அழியாத பாகமாக காணப்பட்ட 'திருப்பண்டமான' இதயத்தைத் தரிசித்து இறையாசீர் பெற அனைவரும் புனிதரின் அடியார்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

பொதுத் தேர்தலின் பின் 3 ஆண்டுகால இடைக்கால ஆட்சி உருவாக்கப்படும் : ஜேவிபி

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், மூன்று ஆண்டுகால இடைக்கால ஆட்சி ஒன்று உருவாக்கப்படும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடைக்கால ஆட்சி ஒன்றை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்தல், தேர்தல் முறைமையை மாற்றி அமைத்தல், மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தல் போன்றவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசாங்கம் தொடர்ச்சியாகத் தடுத்து வைத்துள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ததேகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியீடு

ததேகூ தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று முற்பகல் 11.00 மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.

இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினை, நடைமுறைப் பிரச்சினை மற்றும் நீண்டகாலக் கோரிக்கை என்பனவற்றின் அ தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் கூறுகின்றார். டிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வு போன்ற பல விடயங்களை உள்ளடக்கியது
மேலும் இங்கே தொடர்க...

சமூக விரோதிகளுக்கு பதுளை மாவட்டம் நிச்சயம் பாடம் புகட்டும் : இதொகா

"இந்நாட்டில் எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் அதனோடு இணைந்து மலையக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் மேம்படுத்த வேண்டும் என்பதே இ.தொ.காவின் இலட்சியம்.

இந்த அடிப்படையில் தான் மறைந்த பெருந்தலைவர், மலையகத் தந்தை அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களுடன் சேர்ந்து இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்" என இ.தொ.கா ஊடக பிரிவு, நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம் குறித்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

"இந்த அடிசுவட்டை மேலும் கட்டியெழுப்புவதற்காகவே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் எமது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றோம்.

பதுளை மாவட்டத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது மக்கள் இதை நன்கு உணர்வார்கள். நாம் மென்மேலும் பெற வேண்டிய இன்னும் பல அடிப்படை உரிமைகளையும் சலுகைகளையும் இன்னும் பிற வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. எமது கட்டுக்கோப்பான ஐக்கியப்பாட்டின் மூலமாகவே இவற்றை எம்மால் அடைய முடியும்.

அரசாங்கத்தில் நாம் இணைந்திருக்கின்றோம் எமது குரலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்குண்டு அதனால் மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும், தேர்தல் தொகுதிகளிலும் எமது மக்களின் கட்டுக்கோப்பைத் தொடர்ந்து நாம் பாதுகாக்க வேண்டும்.

இதன் பொருட்டே பதுளை மாவட்டத்தில் இ.தொ.கா தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிடுகிறது. எமது முயற்சியை தவிடுபொடியாக்க சில தீயசக்திகள் திட்டமிட்டு வருகின்றன. அபாண்டமான பொய்களையும், சூழ்ச்சிகளையும், தந்திரோபாயங்களையும் கட்டவிழ்த்து, எம்மிடையே கலவரங்களை உண்டுபண்ணி சுயலாபம் தேட இச்சக்திகள் முனைகின்றன.

எனவே எம் மக்கள் எதிர்வரும் தேர்தலில் இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நம்பிக்கை எமக்குண்டு. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீய சக்திகளுக்குப் பாடம் புகட்டுவோம்."

இவ்வாறு இதொகா ஊடக பிரிவு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. _
மேலும் இங்கே தொடர்க...

அவசர காலச் சட்டங்கள் மிகைப்படுத்தப்படுகின்றன : அமெரிக்கா குற்றச்சாட்டு

பயங்கரவாத மற்றும் அவசர காலச் சட்டங்களை சில அரசாங்கங்கள் மிகையாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை மீறல் அறிக்கையிலேயே இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீதும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் சில முக்கியஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.வின் வெற்றி நிச்சயம்:சுசில் பிரேம் ஜயந்த

நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

தேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.

தற்போது 80ஆக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 35 ஆகக் குறைக்கப்படும்.

உதாரணமாக கல்வித் துறையில் மூன்று அமைச்சுக்கள் வெவ்வேறு துறைகளுக்கு உண்டு. இனிவரும் அரசின் கீழ் பலம்வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே அமைச்சின் கீழ் கல்வித் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் நியமிக்கப்படும். அத்துடன் மூன்று பிரதி அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார்.

150 ஆசனங்களைக் கொடுக் வேண்டாம் என்கிறார். அதாவது 149 ஆசனங்களை வழங்குமாறு தானே கூறுகிறார்? இதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறாரா?" என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

போதை கடத்தல் புள்ளி துபாயில் திடீர் கைது





துபாய் : சர்வதேச போலீசான, "இன்டர்போல்' அமைப்பால் தேடப்படும் இந்தியாவைச் சேர்ந்தவர், துபாயில் கைது செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர் தாவூத் மதியா. போதை மருந்து கடத்தலில் உலகப் பிரசித்தி பெற்ற 10 பேரில் ஒருவர் இக்பால் மிர்ச்சி; இவரும் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். இந்த இருவரும் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டதாக இந்திய அரசால் தேடப்பட்டு வருபவர்கள்.
பின் குலாமைத் தேடி, இன்டர்போல் போலீசார் வாரன்ட் பிறப்பித்தனர். 1997ல் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள மலாவியில் குலாம் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், பாகிஸ்தானுக்கு தப்பித்து சென்றார். பாகிஸ்தானில் பாஸ்போர்ட் பெற்று துபாயில், "எமிரேட்ஸ் ஹில்ஸ்' பகுதியில் தன் குடும்பத்துடன் குடியேறி பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரை கடந்த மாதம் துபாயில் போலீசார் கைது செய்தனர். ஆனால், துபாயில் இவர் சட்டவிரோத காரியம் எதிலும் ஈடுபடவில்லை என்றும், துபாயில் அவர் ஒரு தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்றும், அங்குள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.
குலாம் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவாரா என்பது குறித்து விவரம் தெரியவில்லை. ஐக்கிய அரபு நாடுகள் பிரதமரும் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், நேற்று டில்லிக்கு வந்த நேரத்தில் இச்சம்பவம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

சட்டவிரோதமாக தங்கியதற்காக 12 இந்தியர்கள் பிரிட்டனில் கைது




லண்டன் : சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கி வேலைபார்த்துவந்ததாக, ஒரு பெண் உட்பட 12 இந்தியர்களை பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஹீத்ரூவில் உள்ள ஒரு சரக்கு கிட்டங்கியில் வேலைபார்த்த பணியாளர்களிடம் குடியுரிமை பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், இந்தியாவைச் சேர்ந்த எட்டுப் பேரும், சட்டவிரோதமாக குடியேறியுள்ளது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்தக் கிட்டங்கி நிறுவனத்துக்கு 58 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், ஹேஸ் மற்றும் சவுத்ஆல் என்ற பகுதிகளிலுள்ள மூன்று குடியிருப்புகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்தியர்கள். இருவர் தென்னாப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.
இந்த 14 பேரில் ஏழு பேருக்கு, குடியுரிமையை ரத்து செய்து சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பவும் , மற்றவர்களுக்கு நிறுவனம் மூலம் சுற்றுலா விசா எடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனில் முறையாக தங்கி வேலை பார்ப்பதற்குரிய ஆவணங்கள், பணியாளர்களிடம் இருக்கிறதா என்று சோதனை செய்யாத நிறுவனங்களுக்கு, ஒரு நபருக்கு ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் அந்நாட்டில் அபராதம் விதிக்கப்படும்
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. பதத்துக்கு உண்மையான அர்த்தம் உணர்த்தப்பட்டுள்ளது:சமல் பிரசன்ன

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று பலரும் இணைந்துள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சி என்ற பதத்துக்கு உண்மையான அர்த்தம் தற்போது உணர்த்தப்பட்டுள்ளது.எனவே இம்முறை அனைவரது ஒத்துழைப்புடனும் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பது உறுதி என வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சமல் பிரசன்ன செனரத் தெரிவித்தார்.

குருணாகல் வடமேல் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உலகின் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் 1977 இல் பொதுத்தேர்தல் நடத்திய காலப்பகுதியிலும் மனித உரிமைகள் மீறப்பட்டன.ஆனால் அந்தப் பொதுத்தேர்தலில் ஐ.தே.க மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இன்று ஆளும் அரச தப்பினருக்கு மக்கள் முன் சென்று வாக்குக் கேட்க முடியாது.மக்களின் கல்வி,சுகாதாரம், பொருளாதாரம், தொழிற் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படவில்லை. இதுகாலவரை யுத்தம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், இம்முறை யதார்த்தபூர்வமான மக்களின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தேர்தலைச் சந்திக்க வேண்டியுள்ள போதிலும் அது அவர்களால் முடியாதுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானைச் சுற்றி இருந்தவர்கள் எம்முடன் இணைந்துவிட்டனர்.அவர் தனித்து உள்ளார்.இம்முறை நுவரெலியா மக்கள் அவரை நிராகரிப்பர். அவரின் தோல்வி உறுதியாகிவிட்டது.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எதற்கு?இன்று மாகாணசபை வெறும் அரச நிறுவனமாகவே உள்ளது.அபிவிருத்தி செய்கிறோம் என ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்களே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குடும்ப ஆதிக்கத்தை அதிகரிக்கவே மூன்றில் இரண்டு கோருகின்றனர்.

பொலிஸார் ஸ்ரீ லங்கா பொலிஸ் என்பதை மறந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொலிஸார் என்றே செயற்பட்டு வருகின்றனர்.பொலிஸார் முன்னிலையில் 'கட் அவுட்'கள் வைக்கப்பட்டும் அவற்றை அவர்கள் அகற்றுவதில்லை. பொலிஸ் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. மக்களை இறைவனே காப்பாற்ற வேண்டும்.ஸ்ரீ.ல.சு.க. இணை அலுவலகங்களாகவே பொலிஸ் நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.

இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களில் அரச குண்டர்கள் திரிந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.ஏனைய கட்சிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மாகாணசபைகள் மூலம் ஒதுக்கிய பணம் இன்றும் எமக்கு வந்து சேரவில்லை.

இம்முறை மூவின மக்களும் இணைந்துள்ளனர்.முஸ்லிம், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஐ.தே.மு. அரசில் உருவாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவை கலைப்பு : துணைவேந்தர் ராஜினாமா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை நேற்றுடன் கலைக்கப்பட்டது. துணை வேந்தர் கலாநிதி என். பத்மநாதன் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் என பிபிசி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று முன் தினம் துணை வேந்தரை, ஏற்கனவே மாணவர் பேரவை பிரதிநிதிகளாக அங்கம் வகித்தவர்கள் உட்பட சில மாணவர்கள் சந்தித்து பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகவும் இதன் காரணமாகவே அவர் பதவி விலகியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையிலேயே நேற்றுப் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தர் பதவி விலக வேண்டும் எனக் குறிப்பிட்ட மாணவர் பேரவை பிரதிநிதிகள் கொடுத்த அழுத்தத்திற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அநேக மாணவர்கள் எழுத்து மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

அநேகமான மாணவர்களின் வேண்டுகோளின் பேரிலேயே பல்கலைக்கழக மாணவர் பேரவையைக் கலைக்க தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணை வேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் கூறுகின்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ



ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசதகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா,செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா,மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இதன் தற்போதைய தலைமைத்துவத்தை ஈரான் வகிக்கின்றது. அடுத்த தலைமைத்துவத்துக்கு மிகப்பொருத்தமானவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அந்நாடுகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை ரயில் சேவை




யாழ் தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் பெருமளவு முடிவடைந்துள்ளதாக பதில் ரயில்வே பொது முகாமையாளர் சந்ரதிலக கூறினார். 200 மீட்டர் நீளமான ஓமந்தை ரயில் நிலையத்தின் முதலாம் கட்டப் பணிகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பல வருடங்களாக தடைப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரையையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில்பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முதல் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதோடு ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்க 3.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மன் றம் ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளது
மேலும் இங்கே தொடர்க...

பான் கீ மூனின் செயற்பாட்டுக்கு அணிசேரா இயக்கம் கண்டனம்




இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தமக்கு அறிவுறுத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கையை அணி சாரா இயக்கம் கண்டித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள அணிசேரா இயக்க கூட்டிணைப்பு பணியகத்தின் தலைமைத்துவம் இந்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திலேயே தனது கண்டனத்தை அணிசேரா இயக்கம் தெரிவித்துள்ளது அவ்வாறான நிபுணர்கள் குழுவை நியமிக்கும் விடயம் இலங்கையில் உள்ள நிலையை கருத்திற் கொள்ளாமலும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்படுவதாக அணி சாரா இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட விடயம் தன்னிச்சையாக விசாரிப்பதற்காக உள்நாட்டிலேயே குழுவொன்றை நியமிக்கும் தனது நோக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை என்று அணி சாரா இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படுவது ஐ.நா. அமைப்பின் ஸ்தாபக கொள்கை மற்றும் அதன் சாசனத்துக்கு முரணானது என்று அணிசாரா இயக்கத்தின் கூட்டிணைப்பு பணியகம் கூறியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கையில் தற்போது இடம்பெறும் ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் முயற்சிகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு நன்மையை விட தீமையையே ஏற்படுத்தக் கூடும். எனவே இலங்கை அதன் உள்நாட்டு நடைமுறையை பூரணப்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அணி சாரா இயக்கம் கூறியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஆராச்சிகட்டுவ இறால் பண்ணையில் 40 கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு




சிலாபம், ஆராச்சிகட்டுவ பகுதியிலுள்ள பிமுத்துபந்திபீ மீன்பிடி கிராமத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 40 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்களை நேற்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பிமுத்துபந்திபீ கிராமத்திலுள்ள இறால் பண்ணையொன்றினுள் மிகவும் சூட்சுமமாக பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு ள்ள 40 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் களை பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு (நாகொடிக்) கைப்பற்றியது.

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முந்தல் பகுதியில் 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டை விட்டு தப்பிப்போக எத்தணித்த போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே முத்துபந்தி கிராமத்தில் சந்தேக நபருக்கு சொந்தமான இறால் பண்ணையில் 40 கிலோ ஹெரோயின் புதைத்துவைக்கப்பட்டுள்ள விடயமும் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.ம.சு.மு அரசின் அமைச்சரவையில் பாரிய மாற்றம்: எண்ணிக்கையும் குறையும் எதிர்க்கட்சியினர் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்





தேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 80 அமைச்சுக்களாக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணை க்கப்பட்டு சுமார் 35 அமைச்சுக்களாகக் குறைக்கப்படும்.

உதாரணமாக கல்வித் துறையில் மூன்று அமைச்சுக்கள் வெவ்வேறு துறை களுக்கு உண்டு. இனிவரும் அரசின் கீழ் பலம்வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே அமைச்சின் கீழ் கல்வித் துறை சார்ந்த அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் நியமிக்கப்படுவதுடன் மூன்று பிரதி அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

புநடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ் வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே. எதிர்க்கட்சியினர் இப்போதே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார். அதாவது 150 ஆசனங்களைக் கொடுக் வேண்டாம் என்கிறார். அதாவது 149 ஆசனங்களை வழங்குமாறு தானே கூறுகிறார். இதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மூண்றிலிரண்டு பெரும்பான்மை ஏன் தேவைப்படுகிறது? என்பது பற்றியும் அமைச்சர் விளக்கமளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...