5 ஜூலை, 2010

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, சார்பாக 132 வாக்குகளும், எதிராக 32 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தன.

இந்நிலையில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஜி.ஸ்.பி பிளஸ் சலுகை ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்தம்

இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடைநிறுத்துவதென ஐரோப்பிய சங்கம் இன்று முடிவு செய்துள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை சரியான முறையில் பதிலளிக்கத் தவறியமையே இதற்கான காரணம் என ஐரோப்பிய சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேச்சு வார்தைக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாக சங்கத்தின் வெளியுறவுகளுக்கான தலைவர் கெத்தரின் எஸ்டன் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்மொழிப் பிரிவு

மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழிப் பிரிவு ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இது தொடர்பான வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜய குணரட்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 100 சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சி வகுப்புக்கள் இன்று மட்டு. பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பமாகின.

100 பொலிசாருக்கு 6 மாதகால தமிழ் மொழிப் பயிற்சி முடிவடைந்ததும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கப்படுமென பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி கே..ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்குளிய விவகாரம்; பொதுமக்கள் மீதே குற்றச்சாட்டு : பொலிஸ் தரப்பு


கொழும்பு மட்டக்குளியவில் கைது செய்யப்பட்ட நபர் இறந்துவிட்டார் என்று பொய்யான செய்தி பரவியதன் காரணமாகவே பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இலங்கக்கோன் தெரிவித்தார்.

மட்டக்குளிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து இந்நிலை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை பிற்பகல் பொலிஸ் தலைமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கக்கோன் இச்சம்பவத்துக்கு விளக்கமளித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்த நபர் எமது வாகனத்தின் கண்ணாடியைத் தனது கையால் உடைத்தார். அதன்போது அவரது கையில் காயம் ஏற்பட்டது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாரின் தாக்குதலினால் இவருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தவறாக எண்ணிவிட்டனர். இதுவே முறுகலுக்குக் காரணமாக அமைந்தது.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குற்றம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 160 ஆண்களும் 21 பெண்களும் கைது செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் அநுர சேனாநாயக்க கருத்து தெரிவிக்கையில், சந்தேக நபரை கைது செய்யும் போது அவரது கையில் 31 கிராம் ஹெரோயின் காணப்பட்டதாகக் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மையினர் மீதான அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.

தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.

கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"1936ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த டொனமூர் ஆட்சிகாலக் கவுன்ஸிலில் சிங்கள மக்கள் மட்டுமே அமைச்சரவை அந்தஸ்து பெற்றிருந்தனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாகவே அன்று 50:50 அதிகாரம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது.

அதேபோல் 1956இல் தனிச் சிங்களச் சட்டம் காரணமாக இனக் கலவரம் ஒன்று வெடித்தது.

1972, 1978 திருத்தங்கள் உட்பட இன்னும் பல விடயங்கள் தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் இளைஞர் போராட்டமாக மாறி 30 வருட யுத்தமாக முடிவுற்றது.இதன் மூலம் நாம் சந்தித்த அனுபவங்கள் இன்னும் நீங்கவில்லை.

எனவே சிறுபான்மை மக்களின் உரிமைகள் பற்றியும் நாம் சிந்தித்து அநீதி ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

சதாமின் உளவாளிக்கு குவைத்தில் குடியுரிமை


இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனின் உளவாளியாக நம்பப்பட்ட பவ்ஸி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு குவைத் அரசு குடியுரிமை அளித்து கெüரவித்துள்ளது.

1990-ம் ஆண்டு குவைத் மீது இராக் படையெடுத்தது. அப்போது சதாம் ஹூசேனின் தலைமையிலான இராக் படை குவைத்தை சுற்றிவளைத்து கைப்பற்றியது.

இராக்கின் இந்த பெரிய வெற்றிக்கு பவ்ஸிதான் முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. 1990ம் ஆண்டு போர் நடந்த போது பவ்ஸியும், அவரது குடும்பத்தாரும் குவைத்தில் தங்கி இராக் படைக்கு தேவையான உளவுத் தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளனர்.

குவைத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதிகள் எங்குள்ளன, ஷியா முஸ்ஸிம் மக்கள் அதிகமாக எப்பகுதியில் வசிக்கின்றனர் உள்பட முக்கியமான அனைத்து தகவல்களையும் கடிதத்தின் மூலம் ரகசியமாக சதாம் ஹுசேனுக்கு அளித்துள்ளார் பவ்ஸி.

குவைத் குறித்து இப்படி ரகசியத் தகவலை பவ்ஸி அளித்ததன் மூலமே அந்நாட்டை இராக் எளிதாக கைப்பற்ற முடிந்தது என்றும் அப்போது பேசப்பட்டது.

ஆனால் இதை பவ்ஸி திட்டவட்டமாக மறுத்து வந்தார். ஆனால் சதாம் ஹுசேனுக்கு பவ்ஸி எழுதிய கடிதங்கள் சில சமீபத்தில் சிக்கியுள்ளன. இதன் மூலம் சதாம் ஹுசேனுக்கு பவ்ஸியும், அவரது குடும்பத்தாரும் உளவாளிகளாக செயல்பட்டது உறுதியாகியுள்ளது.

எனினும் குவைத் அரசு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பவ்ஸிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் குடியுரிமை அளித்து கெüரவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

2015-ல் சீன மக்கள் தொகை 139 கோடியாக உயரும்


அடுத்த 5 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை 139 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந் நாட்டின் மக்கள்தொகை கொள்கை அமைப்பின் தலைவர் லி பின் கூறியதாவது:

சீனாவின் மக்கள் தொகை 2015-ல் 139 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது நகர மக்கள் தொகை 70 கோடியாக இருக்கும்.

நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக கிராம மக்களை விட நகர மக்கள் அதிகமாக இருப்பார்கள்.

2015-ல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 20 கோடியாக உயரும்.

2008-ல் சீனாவின் மக்கள் தொகை 132 கோடியாக இருந்தது. இது 1949-ல் சீனா உருவானபோது இருந்ததைப் போன்று 2.5 மடங்கு அதிகம்.

1978-க்குப் பின் சீனாவில் "பெற்றோருக்கு ஒரு குழந்தை' கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், 1978 முதல் 2008 வரை பிறப்பு விகிதம் 40 சதவீதத்துக்கும் குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக, 15 வயதுக்குக் குறைவானவர்கள் அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு குழந்தை கொள்கை காரணமாக சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுவது சரியல்ல என்றார் லி பின்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.அமைப்பு வாகனங்கள் வன்னி செல்ல அனுமதி மறுப்பு

ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக கடந்த திங்கட்கிழமை முதல் வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்குச் செல்லும் ஐ.நா. அமைப்புக்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிரதேசத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்ற ஐநா அமைப்புக்கள் அந்தப் பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று வருவதற்கான அனுமதி முன்னர் வழங்கப்பட்டிருந்தது.

வன்னிப் பிரதேசத்தில் பணியாற்றுவதற்கென குறிப்பிட்ட சில ஐநாவின் அமைப்புக்களுக்கே அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது.

அவ்வாறான அமைப்புக்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது நிறுவன வாகனங்களில் வன்னிப் பிரதேசத்திற்குச் சென்று வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அனுமதி கடந்த திங்கட்கிழமை முதல் மறுக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என ஓமந்தை சோதனைச்சாவடியைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான அனுமதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரி விண்ணப்பித்த போதிலும், அந்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவை அண்மையில் நியமித்தது தொடர்பில் ஐநாவுக்கும் இலங்கை அரசுக்கும் எற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாகவே வன்னிப்பிரசேத்தினுள் ஐநா அமைப்பு வாகனங்கள் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டிருப்பதாகப் பலரும் சந்தேகிக்கின்றனர்.

இத்தகைய தடை காரணமாக வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியேறி வருகின்ற இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதில் பெரும் பணியாற்றி வருகின்ற ஐநா அமைப்பின் ஐஓஎம் போன்ற நிறுவனங்களின் சேவைகள் முழுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் வெளியிடப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அடிப்படை வசதிகளின்றி சிரமப்படும் மீளக்குடியேறிய கிளிநொச்சி மாவட்ட மக்கள்

இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் என்னைத் தெரிவுசெய்த பிரதேச மக்களின் சார்பாகக் கலந்துகொண்டு அந்த மக்களின் தேவைகளையும் வேண்டுகைகளையும் இந்த மன்றத்தில் சமர்ப்பிப்பதற்குக் கிடைத்த இச்சந்தர்ப்பத்துக்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன். இந்த வரவு செலவுத்திட்டமானது யுத்தம் முடிந்த பின்னர் நாட்டை அபிவிருத்திசெய்யும் சூழலில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இதை அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டமாகக் குறிப்பிடலாம்.

அதேவேளை இந்த வரவு செலவுத்திட்டமானது போர் முடிந்த பிறகு அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் அந்தப் பிரதேசங்களினதும் மறுவாழ்வையும் மீளமைப்பையும் செய்வதற்கான உள்ளடக்கங்களைக் கொண்டு அமைய வேண்டுமெனக் கருதுகிறேன். இடப்பெயர்வின் துயரத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வின் கடினங்களையும் சுமந்தபடி மீள்குடியேறிய கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மக்களினுடைய குரல்களைப் பதிவுசெய்யுமாறு காலம் எனக்குப்பணித்துள்ளது. அதேவேளை முழுநாட்டினுடைய நலனுக்கு அவசியமான விடயங்கள் குறித்தும் என்னுடைய கவனத்தைப் பதிவுசெய்கிறேன். எனவே இவற்றின் அடிப்படையிலேயே இந்த மன்றில் என்னுடைய உரையைச் சமர்ப்பிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேற்றப்பட தொடங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் மீள்குடியேறிய மக்கள் இன்னமும் அடிப்படை வசதிகளுக்காகச் சிரமப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

அதேவேளை இந்தமாவட்டத்தில் இன்னும் சில பிரதேசமக்கள் மீள்குடியேற்றப்படாமல் நலன்புரி நிலையங்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். போரினால் முற்றாகவே அழிந்து போன இந்தமாவட்டத்தின் மீளுருவாக்கத்தைப் பற்றி அரசாங்கம் கவனமெடுத்திருக்கிறது. ஆனால் இந்த மீளுருவாக்கமும் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்களும் நன்கு திட்டமிடப்பட வேண்டும். இந்த மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தன்மை, மற்றும் மாவட்டத்தில் உள்ள வளங்கள், சுற்றுச்சூழல் போன்றனவற்றையும் கவனத்திற்கொண்டு, அபிவிருத்தியையும் மீளமைப்பையும் செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், இந்த மாவட்டத்தின் பல்வேறு தேவைகளையும் தொடர்ந்து இங்கே மன்றின் கவனத்துக்குத் தரவுள்ளேன்.

இதைப்போலவே யாழ்ப்பாண குடாநாட்டிலும் மீள்குடியேற்றப் பிரச்சினைகள், உயர்பாதுகாப்பு வலய விவகாரங்கள் முதல் வேலை வாய்ப்பு பிரச்சினைகள் வரையாக ஏராளம் தேவைப்பாடுகளோடும் வேண்டுகைகளோடும் மக்கள் இருக்கின்றனர். அவற்றையும் நான் மன்றின் கவனத்துக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

கிளிநொச்சிமாவட்டம் ஒரு விவசாய பொருளாதார மாவட்டமாகும். இந்தமாவட்டத்தில், தென்னைப் பயிர்ச் செய்கை, நெற்செய்கை அத்துடன் ஆனையிறவில் மேற்கொள்ளப்பட்ட உப்புஉற்பத்தி, பரந்தனில் இயங்கிய இரசாயனத் தொழிற்சாலை, கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, காட்டுவளம், பனைவளம் மற்றும் பனைதென்னை உற்பத்தித் தொழில்கள் என, நிறைந்த பொருளாதாரக் கூறுகள் பல உள்ளன. ஆனால், இவை எல்லாமே இன்று சிதைந்தும் அழிந்தும் போயிருக்கின்றன.

விவசாயம்

கிளிநொச்சி மாவட்டம் "வடக்கின் நெற்களஞ்சியம்' என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு, நெற்செய்கையில் அதிக உற்பத்தியையும் வருவாயையும் ஈட்டிய மாவட்டமாகும். ஆனால், யுத்தத்தின்காரணமாக, அது சிதைந்து போயிருக்கிறது. இந்தமாவட்டத்தில் மீண்டும் விவசாயச் செய்கையை நிறைவாக்கும்போது, நாம் மறுபடியும் அந்த நிலையை எட்ட முடியும். அதேவேளை இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், மாவட்ட மக்களின் வேலைவாய்புக்கும் இடமளிக்கலாம்.

கிளிநொச்சிமாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள், தற்போது விவசாயச்செய்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுடைய சிறுபோக நெற்செய்கைக்காக 6,269 ஏக்கர் நிலம் செய்கை பண்ணப்பட்டு, பயன்பெறும் நிலையை அடைந்துள்ளது.

தற்போது மீள்குடியேறிய 27,075 குடும்பங்களும் எதிர்வரும் பெரும்போகத்திற்கு 40,825 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளுவதற்கு தயாராக இருக்கின்றன. இந்த இலக்கில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு உதவும் முகமாக, விவசாயத் திணைக்களமும், விவசாயசேவைகள் திணைக்களமும் நீர்பாசனத்திணைக்களமும் விவசாயிகளைத் தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த நெற்பயிர்ச்செய்கைக்கு, அங்கே தற்போது எதிர்நோக்கப்படும் முக்கிய பிரச்சினை உழவு இயந்திரங்களின் பற்றாக்குறையாகும்.

இந்த விதைப்பிற்காக, ஏறக்குறைய 500 உழவு இயந்திரங்கள் தேவையான நிலையில், 50க்கும் குறைவான உழவு இயந்திரங்களே கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன, என விவசாய சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மானிய அடிப்படையிலும் இலகுகடன் அடிப்படையிலும் விவசாயிகளுக்கு உதவுவதுடன், நெல்லைக் கொள்வனவுசெய்வதற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுதல் அவசியமாகியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உரியநிவாரணத்தை வழங்கவேண்டுமானால், அவர்களுடைய உற்பத்தியை நிர்ணயவிலையில் உத்தரவாதப்படுத்தி கொள்வனவுசெய்யவேண்டும்.

யுத்தம்முடிந்தபிறகு, விவசாய திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் என்பன தமது கட்டடங்களையும் ஏனைய பௌதீகவளங்களையும் இழந்தநிலையிலேயே, இப்போது செயற்பட்டு வருகின்றன. அத்துடன் மனிதவளப்பற்றாக்குறையுடன் இயங்கமுடியாத நிலையில் இவை காணப்படுகின்றன. இதனைச் சீர்செய்வதும் அவசியமாகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை திட்டமிடலிலும் நடைமுறைப்படுத்தலிலும் பாரிய தடைகளை ஏற்படுத்துகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயங்களில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, தனங்கிழப்புப்பகுதிகளில் மீள்குடியேறிய மக்களின் விவசாயநடவடிக்கைகளும் இவ்வாறு பல உதவிகளையும் தேவைகளையும் வேண்டிநிற்கின்றன. வலிகாமம்வடக்கு தெல்லிப்பளைப்பகுதி மக்களின் விவசாயநடவடிக்கைகளும் அடிப்படைஉதவிகளையும் தேவைகளையும் வேண்டிநிற்கின்றன. அந்தப்பகுதியில் போர்முடிந்த பின்னர் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் செல்வதற்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக மேற்கொள்ள வேண்டும். விவசாயத்திற்கு அடிப்படையான நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரையில், பாரிய நீர்ப்பாசனகுளங்கள், சிறிய குளங்கள் அனைத்துமே புனரமைப்பை வேண்டியுள்ளன. அத்துடன் நீர்பாயும் வாய்க்கால்களும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், கல்மடுக்குளம், பிரமந்தன் ஆற்றுக்குளம் ஆகியகுளங்கள் விரைவாக புனரமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளன. குறிப்பாகப் பூநகரிப்பிரசேத்தில், விவசாய நீர்வழங்கலிற்கு அப்பால், குடிநீருக்கானதேவையும் அவசியமாக இருக்கிறது. அங்கே நிலத்தடிநீரை வழங்குவதில் சிறுகுளங்கள் பெறும்பங்காற்றி வருகின்றன.

கால்நடை

இவைதவிர, கிளிநொச்சிமாவட்டத்தின் இன்னொரு முக்கியமான விசயம் கால்நடைவளர்ப்பாகும். மீள் குடியேறிய மக்களின்வாழ்வாதாரத்தில், மிகவும் செல்வாக்குச்செலுத்தும் காரணிகளில் பால்உற்பத்தி, விலங்குவளர்ப்பு என்பன முதன்மையானவையாக இருக்கின்றன. இன்று மக்கள் தமது கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்ளவும், அவற்றின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தும் ஏற்பாடுகளையும் மேம்படுத்த உரிய வழிமுறைகளைச் செய்ய வேண்டும் எனக் கால்நடை அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியில் இருந்து தினமும் 12 கொள்கலன்களில் பால் சேகரிக்கப்பட்டு, பொலனறுவையிலிருந்த பால்பதனிடும் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

ஆகவே, மீண்டும் கால்நடைவளர்ப்பை சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களையும், மானியங்களையும், கடன் உதவிகளையும் வழங்குவதற்கான நிதிஒதுக்கீடு அவசியமாகிறது.

மீன்பிடி

கிளிநொச்சியைப் பொறுத்தவரை பூநகரிப் பிரதேசத்தில் 1180 மீனவக்குடும்பங்களும், கண்டாவளைப் பிரசேத்தில் 643 மீனவ குடும்பங்களும் மீள்குடியேறியுள்ளன. இந்த மக்கள் தொழில்செய்வதற்காக, 705 சிறிய கண்ணாடி இழைப்படகுகளும், 447 பெரிய படகுகளும், 1013 வெளிஇணைப்பு இயந்திரங்களும், 1148 மீன்பிடிவலைகளும், தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 138 படகுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதித்தேவைளையும் பூர்த்தி செய்யக்கூடிய வழிகளைக் கண்டறிய வேண்டியது அவசியமாகிறது.

பள்ளிக்குடா, நாச்சிக்குடா, வலைப்பாடு ஆகிய இடங்களில் மீன்பிடித்துறை அமைப்பதற்கும்,கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஐஸ் உற்பத்திநிலையங்கள், குளிர்சாதனவாகனங்கள் என்பனவற்றை வழங்கவும் கௌரவ மீன்பிடி நீரியல்வள அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் கிளாலிப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற வேண்டியுள்ளது. கிளாலியிலுள்ள மீன்பிடித்துறையும் மீளஇயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. பளைப் பிரதேசசெயலர்பிரிவு மற்றும் தென்மராட்சிப் பகுதிக்கான பிரதான மீன்பிடித்துறை இதுவாகும். எனவே இந்தத்துறை மீண்டும் இயங்குவதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சும் மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று யாழ்மாவட்ட மீனவர்களுக்கு, ஆழ்கடலில் பலநாள்தங்கி தெர்ழில்புரியும் படகுகள், சமாசம் ஒன்றிற்கு 5வீதம், 50படகுகள் தேவைப்படுகின்றன. இதற்கான வேண்டுகைகளை, கௌரவ கடற்தொழில் நீரியல்வள அமைச்சிடம், யாழ் மாவட்டமீனவர்கள் கையளித்துள்ளனர். இதே போன்று, குருநகர், பருத்தித்துறை, இன்பருட்டி, மயிலிட்டி போன்ற இடங்களில் மீன்பிடித்துறை முகங்கள் அமைப்பதற்கான திட்டங்களிற்கும் கடற்றொழில் அமைச்சு இணங்கியுள்ளது. அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

கல்வி

மீள்குடியேற்றம் நடந்திருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18,278 மாணவர்கள் பாடசாலைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9,100 மாணவர்களுக்கான மேசை, கதிரைகள் மட்டுமே இப்பகுதி பாடசாலைகளில் உள்ளன என்று கல்வித்திணைக்களப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை நிரந்தர கட்டடம் இல்லாமல், தற்காலிக கொட்டகைகளில் இயங்கும் பாடசாலைகள் செம்மண்குன்று, வேராவில், ஞானிமடம், சோரன்பற்று, மாயவன் ஊர், மண்ணித்தலை ஆகிய இடங்களில் உள்ளவையாகும். இந்தப் பாடசாலைகள் மழை வந்தால் இயங்கமுடியாதநிலையில் இருக்கின்றன. பூநகரிப் பிரதேசத்தில் இருக்கும் கரியாலை நாகபடுவான் பாடசாலைக்கு கூரையே இல்லை.

தருமபுரம், அக்கராயன்குளம், பளை, ஜெயபுரம், பகுதி பாடசாலைகள் இயங்குகின்ற போதும், அங்கே அடிப்படை வளங்களே பொதுவாக இல்லை எனலாம். சில சிரமங்களின் மத்தியிலேயே இந்தப் பாடசாலைகளை அதிபர்களும் ஆசிரியர்களும் இயக்கி வருகின்றனர். பெரும்பாலான பாடசாலைகளில் மரங்களுக்குக் கீழேயே வகுப்புகள் நடக்கின்றன. கிளிநொச்சிமாவட்டத்தின் பிரதான பாடசாலையாகிய கிளிநொச்சி மத்தியகல்லூரி தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாமாகவே இருக்கின்றது. இதனால், இந்தக் கல்லூரியின் மாணவர்கள், அருகிலிருக்கும் பிற கட்டிடங்களிலும் தற்காலிகக் கொட்டகைகளிலும் அகதி நிலையிலேயே கற்கின்றனர். எனவே, இந்தப்குதியிலுள்ள நான்குபிரதேச செயலக பிரிவுகளுக்கும் தலா ஒரு பாடசாலை வீதம் தெரிவு செய்யப்பட்டு, அவற்றைத் தரம் உயர்த்த கல்வி அமைச்சு கவனம் எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் நாம் புதிய இலக்குகளை எட்டமுடியும்.

தொண்டர் ஆசிரியர் நியமனம்

இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளிட்ட, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக 870 பேர் கடமையாற்றிவருகிறார்கள். இவர்கள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு மடு கல்வி வலய பாடசாலைகளில் மிக நெருக்கடியான காலங்களில் அர்ப்பணிப்புடன் 870பேர் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான நிரந்தர நியமனத்தினை வழங்க கௌரவ கல்வி அமைச்சு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை வேலையற்றபட்டதாரிகளின் பிரச்சினை இன்று யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. மிக நீண்ட காலமாக, குறிப்பாக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பலர்வேலை ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நம்பிக்கையினமும் விரக்தியும் நிரம்பிய இவர்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

மருத்துவம்

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான மருத்துவத் “தேவைகள், மருத்துவர்களின் தேவைகள் கடந்தகாலங்களில் இந்த மன்றில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இப்பொழுது, இந்தமாவட்டங்களுக்கு மருத்துவர்கள் உட்பட 250 மருத்துவப்பணியாளரர்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனாலும் வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்தியஅதிகாரிகள் பணிமனையிலும், நோய் வராதுகாக்கும் சுகாதாரப்பணிகளிலும், சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றுவோருக்கு நியமனம் வழங்கி, பற்றாக்குறைநிலவும் சுகாதாரப்பணி வெற்றிடங்களை நிரப்பவேண்டுமென, சுகாதார அமைச்சைக் கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரண நீடிப்பு

மீள்குடியேறியமக்கள், தமது சுயஉழைப்பில் தங்கிநிற்கும்நிலை ஏற்படும் வரையில், அவர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை, மேலும் ஆறுமாதங்களிற்கு நீடிக்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். எனவே, அவர்களுடைய நிர்க்கதியான நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குரிய உலர்உணவு நிவாரணம் மேலும் 6மாதங்களிற்கு நீடிக்க படவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கான தொழில் வாய்ப்புகள் உதவித்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தனியாகவும் குடும்பமாகவும் உள்ளனர். இவர்களுடைய பாதிப்பு சமூகத்தின் பாதிப்பாகவும் இருக்கின்றது.

யுத்தத்தின்போது பலர் காணாமற் போயுள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல்களை அறியமுடியாமல் உறவினர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை புலிகளால் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் உட்பட முன்னாள் உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகவும் கூடுதல் கவனம் எடுக்கவேண்டும் என இந்தச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்கின்றேன்.

தினமும் கண்ணீருடன் இவர்களுடைய உறவினரும் பிள்ளைகளும் கிராமங்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய துயரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும். நாடு அமைதிக்கும் இயல்புநிலைக்கும் திரும்பியுள்ளது என்பதை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் உணர வேண்டும். அதுதான் அரசாங்கத்தின் வெற்றியாகும். இந்தத் தீவில், முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மக்கள்கூட்டத்தின் மீது நமது கவனமும் கரிசனையும் பதியவேண்டிய தருணம் இதுவாகும். எனவே அந்த மக்களின் சார்பாக இந்த விடயத்தை இந்தமன்றில் கவனப்படுத்த விழைகின்றேன்.

ஆகவே, நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதையே மீண்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். போர் முடிந்தபிறகு சமர்ப்பிக்கப்படும் இந்த வரவு செலவுத்திட்டம், அபிவிருத்திக்கும் மீளமைப்புக்குமான ஒருதிட்டமாக கொள்ளப்படுவதற்கான அடிப்படைகளை இந்த மன்று ஏற்படுத்தி அங்கீகரிக்கவேண்டும் எனக்கேட்டு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி விடயங்களை மன்றிடம் கையளிக்கின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட சகல பொலிஸாருக்கும் இடமாற்றம்

மட்டக்குளியில் பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே நேற்று முன்தினத்திலிருந்து ஏற்பட்ட கொந்தளிப்பான நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அந்த நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட சகல பொலிஸாரையும் வேறிடங்களுக்கு மாற்றியதுடன் மேற்படி நிலைமை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமைக் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரும் இடமாற்றப்பட்டுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சட்டத்தை மீறி நடந்து கொண்டார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் குறித்து கொழும்பு குற்றவியல் பொலிஸ் பிரிவினர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மேலும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை விடயத்தில் ஐ.நா.சபை இரட்டை வேடம் பூணுகின்றது-





சிற்றி பிறெஸ் ஒரு நாட்டின் அரசாங்க அமைச்சர் அந்நாட்டிலுள்ள ஐக்கியநாடுகள் பணியாளர்களை பணயம் வைக்குமாறு பகிரங்கமாக மக்களை தூண்டும் போது ஐக்கியநாடுகள் என்ன செய்கிறது? அந்த நாடு சூடானாக இருந்தால் ஐக்கியநாடுகள் உடனடியாக கண்டித்திருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்த வரை செயலாளர் நாயகம் பான் கீமூன் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் குற்றம்சாட்டியுள்ளது. இவையெல்லாம் முன்னர் தென் கொரியரான பான் கீமூன் அந்த நாட்டின் வெளிநாட்டமைச்சராக இருந்த போது மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவருக்கமிடையே இருந்த தொடர்புகளை அடிப்படையாக கொண்டு நிகழ்கின்றன என்று மூனின் நிருவாக வட்டாரங்கள் கூறுகின்றன.

தற்போது, ரஷ்யாவும் சீனாவும் கடைப்பிடிக்கும் ராஜபக்ஷ ஆதரவுக் கொள்கையும் பான் கீமூனின் மௌனத்திற்கு வழிவகுத்துள்ளது. சீனா அல்லது ரஷ்யா பான் கீமூன் இரண்டாவது தடவை செயலாளர் நாயகம் பதவிக்கு போட்டியிடுவதை வாக்குத் தடுப்பு உரிமையை பயன்படுத்தி தடுத்துவிட முடியும். மேலும், இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸ ஐக்கியநாடுகள் அலுவலர்களை பணயம் வைக்குமாறு விடுத்த கோரிக்கை பற்றி இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் கேட்டபோது, மூனின் பேச்சாளர்கள் கூறியவுரையில் பதிலளிக்கவில்லை. அமைச்சர் வீரவன்ஸ கூறியதை ஊடகங்கள் தவறாக பிரசுரித்திருக்கலாம் அல்லது அரசாங்க தோரணையில் அன்றி அமைச்சர் அவரது தனிப்பட்ட கருத்தை தெரிவித்திருக்கலாம் என்று செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்கள் தெரிவித்தார்கள்.

தற்போது கருத்துக்கள் சம்பந்தகப்பட்ட மொழிபெயர்ப்பு தொடர்பாகவும் திருகுதாளங்கள் வெளியிடப்படுகின்றன. அதாவது, அமைச்சர் வீரவன்ஸவின் கோரிக்கை வன்முறையற்றது, சாத்வீகமானது என்று காந்தியம் பேசப்படுகிறது என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஐக்கியநாடுகள் அலுவலர்கள் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் பல ஐக்கியநாடுகள் அலுவலர்கள் வவுனியாவிலுள்ள கட்டாய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்கள். இந்த செய்திகள் பகிரங்கமாக வெளியாகும் வரை ஐக்கியநாடுகள் அலுவலகம் அதுபற்றி எதையும் வெளியிடவில்லை. ஆனால் சூடான் ஐக்கியநாடுகள் அலுவலர்களை பிடித்திருந்தால் ஐக்கியநாடுகள் அதிகாரிகளும் மூனும் உரத்து எதிர்ப்புக் குரல் எழுப்பியிருப்பார்கள். எனவே இலங்கை தொடர்காக ஐக்கயநாடுகள் ஸ்தாபனம் இரட்டை நிமைலப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது என்று இன்னர் சிற்றிபிறெஸ் தெரிவிக்கிறது.

இவற்றைத் தவிர, நேரடியாக மூனின் அலுவலகத்தை சாராத, ஐக்கியநாடுகள் செயலகத்தின் ஒரு அரசியல் பிரிவு நடத்திய இரகிசிய கூட்டம் ஒன்றில் இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக மூன் 3 நிபுணர்கள் குழுவை நியமித்தமைக்கு தாம் எதிரானவர்கள் என்று தெரிவித்துள்ளனர். ஐக்கயநாடுகள் ஸ்தாபனத்தின் உந்து சக்தியை இத்தகைய குழு குறைத்துவிடும் என்று இந்த அரசியல் பிரிவினர் தெரிவித்தனர். எதற்கான உந்து சக்தியை குறைத்தவிடும் என்று இன்னர் சிற்றி பிறெஸ் வினவுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகா நைரோபி செல்ல முடியாது- அரசு

ஜனநாயகக் கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நைரோபி செல்ல மாட்டார் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுநலவாய நாடுகளின் நாடாளுமன்ற சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு எதிர்கட்சிகளை சேர்ந்த நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சந்தர்ப்பங்களை வழங்கியுள்ள போதும் பொன்சேகா அங்கு செல்ல முடியாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

நைரோபி செல்வோரின் இறுதிப்பட்டியலில் இருந்து பொன்சேகாவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நைரோபி செல்லும் இந்த குழுவில் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தெரிவு செய்யட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

ஐநா செயலாளரின் நிபுணர் குழுவிற்கு அணிசேரா நாடுகள் எதிர்ப்பு

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு அணிசேரா இயக்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதுடன் இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் தயாராகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளையோ பாதுகாப்புச் சபையையோ கலந்தாலோசிக்காது ஐக்கிய நாடுகள் செயலாளரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அணிசேரா நாடுகளின் பிரதிநிதி ஒருவர் இது இலங்கையின் இறைமைக்கும் எதிரானது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நகல் கடிதமொன்று அணிசேரா நாடுகள் அனைத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்தும் இந்த நிபுணர் குழுவிற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பரந்தன் பகுதியில் குழந்தையின் சடலம் பொலிஸாரால் மீட்பு


பரந்தன் பகுதியில் குழந்தை ஒன்றின் சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த வெள்ளிக் கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள பற்றைக்குள்ளிருந்தே இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தையை தாயாரே பற்றைக்குள் வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இதுவரை இந்தக் குழந்தையின் தாயார் யாரென்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப்படை வீரர் தற்கொலை

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் படை வீரர் ஒருவர் இன்று காலை 7 மணியளவில் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருக்கும் விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். ஹிங்குரங்கொடையைச் சேர்ந்த 22 வயதுடைய ஏ.சி தலுவத்த என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விமான நிலையப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...