4 பிப்ரவரி, 2010


ஹைதி தீவில் பூகம்ப சாவு 2 லட்சமாக உயர்வு



அமெரிக்கா அருகே கரிபியன் கடலில் உள்ள குட்டி நாடான ஹைதி தீவில் கடந்த மாதம் 12-ந் தேதி கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் அதிபர் மாளிகை என அனைத்தும் தரைமட்டமாயின.

லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். உணவு, குடிநீர் இன்றி தவித்தனர். அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட உலக நாடுகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அங்குள்ள மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றன.

பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்ததால் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தொடக்கத்தில் 1 லட்சம் பேர் இறந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் தோண்ட தோண்ட பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது சாவு எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. 3 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

இந்த தகவலை ஹைதி பிரதமர் ஜூன்- மாஸ் பெல்லரிவ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஹைதியில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் அது முடிவுக்கு வரவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான்கிமூன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் ஹைதிக்கான ஐக்கிய நாடுகள் சபை சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனும் கலந்து கொண்டார்.

அப்போது கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய கண்டத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் போது நடந்த மீட்பு பணி போன்று அனைத்து அமைப்புகளுடன் இணைந்து அதிரடியாக நடத்த வேண்டும் என்று பில் கிளிண்டனிடம் பான்கிமூன் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே ஹைதியில் இருந்து 33 அனாதை குழந்தைகளை கடத்த முயன்றதாக அமெரிக்க கிறிஸ்தவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர்களை கைது செய்தது துரதிருஷ்வசமானது. ஏனென்றால் அக்குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் மிகவும் நல்லது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகார பகிர்வு குறித்த உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் : கருணாநிதி

மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளதாக அதன் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடும் போது ஒரு தீர்மானம் இயற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுபேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த போதும் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியை விடுவிப்பது குறித்து மத்திய அரசுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே : சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ



ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன்.

அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்" என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

"இந்த நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30 வருட காலத்தில் இந் நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்த நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன்.

வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகையில்,

"இன்று எமது சுதந்திர தினம். நம் எல்லோருக்கும் சந்தோஷமான நாள். 30 வருட காலமாக நிலவிய பயங்கரவாத நிலைமை இப்போது இல்லை. அப்படியான சூழ்நிலையில் இன்று நாம் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகின்றோம்.

இன்று நாம் பிரச்சினைகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும். பாதுகாப்பாக வாழ முடியும். காலம் முழுவதும் நாம் சந்தோஷமாக வாழ முடியும். அதுதான் மிக மிக முக்கியம்.

இது நமது தாய் நாடு. நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள். இந்நாட்டு மக்கள். நாம் அனைவரும் சகோதரர்கள்.

சம உரிமையோடு கௌரவத்துடன் நாம் வாழ வேண்டும். எல்லோருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் அதுதான் சமத்துவம், சம நிலை. ஒரே நாடு, ஒரே மக்கள் என்றவாறு நாம் வாழ வேண்டும்.

தாய் நாட்டை நீங்கள் எப்போதும் மறக்க வேண்டாம் இந்நாட்டில் சிறுபான்மை என்று யாரும் இல்லை.

அபிவிருத்தி பாதையில் நமது தாய் நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அபிவிருத்தியில் முக்கிய கேந்திர ஸ்தானமாக எமது நாடு திகழ வேண்டும்" என்றார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இடம் பெறும் சுதந்திர தின வைபவம் என்பதாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இடம்பெறும் மிக முக்கியமான வைபவம் இது என்பதாலும் உள்நாட்டு, சர்வதேச மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

சுதந்திரம் ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாயதர்மம்

பிரதமர்



புசுதந்திரம்பூ என்பது ஒவ்வொரு உயிரினமும் எதிர்பார்க்கும் நியாய தர்மமாகும். அவ்வாறே ஜனநாய கத்திற்கு மதிப்பளிக்கும் சமூக மொன்றிலே, இருக்க வேண்டிய அடிப்படை இயல்பாகும்பூ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்தார். சுதந்திர தினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியதாவது,

பெளத்த நற்குணங்களின் மூலம் வளர்க்கப்பட்ட இலங்கையர்கள் தமது சுதந்திரத்தைப் போன்றே மற்றையவர்களது சுதந்திரத்தையும் மதிக்கும் சிறந்த சமூகத்தினர்.

மனிதத்துவத்திற்கு எதிரான மனிதத் தன்மையற்ற மனிதர்களது செயற்பாடுகள் முழு மனித சமூகத் தினதும் சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு காரணமாக அமைகின்றது. அனைவருக்கும் சுதந்திரத்தின் பெறுமதி விளங்குவது அதை அனுபவிக்கும் போதன்றி சுதந்திரம் இல்லாதுபோன சந்தர்ப்பத்திலாகும்.

வரலாற்றிலே இலங்கையர்களுக்கு சுதந்திரம் இல்லாதுபோன காலகட்டங்கள் இருந்து வந்துள்ளமை பற்றி கடந்த கால வரலாற்றிலே காணப்படுகின்றன. எனினும், அவற்றினை கட்டுப்படுத்து வதற்கான பலமிக்க யுக புருஷர்கள் மக்களிலிருந்தே உருவாகினர்.

சுதந்திரம் என்பதனை வார்த்தைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒரு காலத்தினையும் நாம் கடந்து வந்துள்ளோம். அந்த சுதந்திரம் தொலைந்து போயிருந்த கசப்பான காலகட்டத்திலே நாட்டு மக்களுக்கு எதிர்கால எதிர்பார்ப்பின்றி சுதந்திரத்தை வேண்டியவர்களாக வாழ வேண்டியேற்பட்டது.

எனினும், 30 வருடகாலம் அனுபவித்து வந்த பயங்கரமான கால கட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்கு தமது உயிரையும் அர்ப்பணித்த வீரர்கள் நாட்டிற்கு அரிதாக இருக்கவில்லை.

1948 ம் ஆண்டிலே பெற்றுக் கொண்ட சுதந்திரமானது 1972 ம் ஆண்டிலே மிகவும் பயன்வாய்ந்ததாக மாறியது. 2009 ஆம் ஆண்டிலே அது மேலும் பூரண சுதந்திரமாக நாட்டிலே வேரூன்றியது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகளின் மூலம் இது மேலும் பிரதிபலிக்கப்படுகின்றது. இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் இதன்போது தமது ஜனநாயக உரிமையினை சுதந்திரமாக வெளிப்படுத்தினர்.

பெற்றுக் கொண்ட அந்த சுதந்திரத்தை சுதந்திரமாக அனுபவிக்கும் அதே நேரம் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கு வதற்காக சுதந்திர தினத்தை நினைவுகூரும் அபிமானமிக்க தினத்திலே அனைவரும் தாய் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஒன்றிணைவர் என்பதே எனது எதிர் பார்ப்பாகும். இவ்வாறு பிரதமர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

சமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி சுதந்திர தினச் செய்தி

பூவேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தினதும், அபிவிருத்தியினதும் முழுமையான நன்மைகளைப் பெறவும் சமத்துவமான உரிமைகளை எல்லோரும் சமமாக அனுபவிக்கவும் கூடிய ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம்பூ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று கொண்டாடப்படும் இலங் கையின் 62வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வருடம் எமது நாட்டை விட்டும் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட் டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கொண்டாட்டம் என்றவகையிலும், எமது மக்கள் ஜனநாயகத்திற்கான தங்க ளது அர்ப்பணத்தை மிக உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியி ருக்கும் ஒரு சூழ்நிலையில் நடைபெறும் ஒரு கொண்டாட்டம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

அறுபத்தி இரண்டு வருடங் களுக்கு முன்னர் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரம் இப்போது மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவுள்ளது.

காரணம் எமது சுதந்திரத்தின் அரைவாசிக்காலப் பகுதியை ஆட்கொண்டு, எமது நாட்டின் இறைமைக் கும் ஆள்புல எல்லைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்துவந்த பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து நாம் முழுமையாக விடுதலை பெற்றுள்ளோம்.

சுதந்திர போராட்டத்தில் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிய நாட்டுப்பற்று டையவர்களை நாம் எவ்வளவு நன்றியுடன் நினைவு கூருகின்றோமோ அதேபோன்று பயங் கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த எமது வீரமிக்க படையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இன்னும் முழு நாட்டிலும் சுதந்திரத்தையும் சமாதானத்தையும் மீளக்கட்டியெழுப்பும் இந்த போராட்டத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் முழு அளவில் நன்றிகூறுவது பொருத்தமானதாகும்.

நாட்டுக்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய அதேவேளை பயங்கரவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியவர்களது நோக்கங்களுக்கு ஏற்றவகையில் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த வெளிச் சக்திகளை எதிர்த்து நிற்பதில் தமது தைரியத்தை வெளிப்படுத்தி நின்ற எல்லா மக்களுக்கும் குறிப்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் மேற்கொண்டு வந்த போராட்டத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு, எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் எமது நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு எல்லா வழிகளிலும் உதவிய எமது நட்புநாடுகளுக்கும் நாம் இச்சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது நாட்டில் சமாதானத்திற்கான புதியதோர் யுகத்தில் காலடி எடுத்துவைக்கும் நாம், எதிர்காலத்தின் சவால்களுக்கு முகங் கொடுக்க தயாராகவுள்ளோம்.

தேசிய நல்லிணக்க இலக்குகளுக்கும், நாட்டில் வாழும் எல்லா மக்கள் பிரிவினர்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், அதேபோன்று தேசங்களுக்கு மத்தியில் எமக்கான சரியான இடத்தை பெற்றுத்தரவல்ல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் நாம் சமமான முக்கியத்துவத்தை வழங்குவது அவசியமாகும்.

சமாதானத்தின் விளைவுகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மத்தியிலும்கூட கைவிடப்படாத அபிவிருத்தி அம்சங்களையும் மின்சார, சக்திவலு துறைகளில் ஆரம்பிக் கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களினூடாகவும் உட் கட்டமைப்பு அபிவிருத்திகளின் ஊடாகவும் ஏற்கெனவே காணக்கூடியதாகவுள்ளது.

நீங்கள் தற்போது எங்களுக்கு வழங்கியுள்ள பலமான இந்த மக்கள் ஆணை இலங்கை தேசம் எமது கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சமான மனித உரிமைகளுக்கு முன்னுரிமையளிக்கும் தேசமாகவும் எமது பிராந்தியத்தில் பொருளாதார கேந்திர நிலையமாகவும் திகழும் வகையில் புதியதோர் இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எமக்கு மிகுந்த பலத்தைத் தந்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதந்திர தின கொண்டாட்டத் தின்போது, ஆசியாவிலேயே மிகவும் பழைமைவாய்ந்த ஜனநாயக தேசம் என்றவகையில் எமது தேசம் பேணிப் பாதுகாத்துவரும் சமாதானம், சகிப்புத்தன்மை, பரஸ்பர நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் ஆகிய ஜனநாயக பாரம்பரியங்களுக்காக நாம் எம்மை மீளவும் அர்ப்பணிப்போம். இவ்வாறு ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்பெறவில்லை

ஆணையாளர் தயானந்த நேற்று அறிவிப்பு

*
அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
*
முடிவுகளை ரத்துச் செய்ய எவ்வித காரணமும் இல்லை
*
நீதிமன்று ஆணையிட்டால் மாத்திரமே வாக்குகள் மீள எண்ணப்படும்



ஜனாதிபதி தேர் தல் பெறுபேறு களில் எந்தவித மான முறை கேடுகளும் இடம் பெறவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தயா னந்த திசாநாயக்க தெரிவித்தார்.

வாக்கெடுப்பு மற்றும் பெறுபேறு களை வெளியிடல் போன்ற செயற் பாடுகளில் திருப்தி கொள்வதாகக் குறிப்பிட்ட ஆணையாளர், தேர்தல் மோசடி இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் அனைத்துவிதமான விமர்சனங்களையும் முற்றாக நிராகரிப்பதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்றுக் காலை (03) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகளில் தமக்கு எதுவிதமான சந்தேகமும் கிடையாதெனத் தெரிவித்த ஆணையாளர் திசாநாயக்க, அவ்வாறு சந்தேகம் உள்ள எவரும் பெறுபேறு வெளியான 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்திற்கு முறையிட முடியும். முறைகேடுகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும்.

அதன்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங் கும். அந்தத் தீர்ப்புக்கு ஏற்ப தேர்தல் செயலகம் செயற்படும். வாக்குகளை எண்ணி முடித்துப் பெறுபேறுகளை அறிவித்ததன் பின்னர், வாக்குச் சீட்டுகளை (சீல்) முத்திரையிட்டுக் கட்டி வைத்துள்ளோம்.

ஆறு மாதங்களுக்கு இதனைத் தொட முடியாது. எனினும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் மீள எண்ணுவதற்குத் தயார். நீதிமன்றத்தை முகங்கொடுப்பதற்குத் தயாராகவே உள்ளேன் என்றார்.

வடக்கில் வாக்களிப்பு குறையவில்லை

வடக்கில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு எனப் பலர் பிரசாரம் செய்வதில் உண்மை இல்லை. உண்மையில், இங்கு வாக்காளர் களாகப் பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ள பெருமளவானோர் ஐரோப் பிய நாடுகளில் வாழ்கிறார்கள்.

இடம் பெயர்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் வைத்திருக்க வேண்டுமென 1988இல் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிரகாரம்தான் புலம்பெயர்ந்த மக்களின் பெயர்களும் இன்னமும் பேணப்படுகின்றன.

இதற்குத் தேர்தல்கள் செயலகமோ, மாவட்ட அதிகாரிகளோ பொறுப்பில்லை. 2005ஆம் ஆண்டு 560,000 பேர் பதிவாகியிருந்ததுடன் 2008 இல் 720,000 பேர் பதிவாகியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிரஜாவு ரிமை பெற்றவர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட்டதுடன் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டன.

இதற்கேற்பவே வாக்காளர்கள் தொகை 720,000 ஆக அதிகரித்தது. வன்னியில் மக்கள் வாக்களிப்பதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம். அதனால், பஸ் போக்குவர த்தை ஏற்பாடு செய்வதில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு விட்டது. வேறு எந்தப் பிரச்சி னையும் இருக்கவில்லை. எல்லா இடங்களிலும் தேர்தலை நடத்தினோம். தேர்தல் தினத் துக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாகச் சிலர் செயற்பட்டுள்ளார்கள்.

பதாகை, சுவரொட்டிகளை காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்பட்ட தினங்களில் அவற்றை வைத்ததுடன் கூட்டங்களையும் நடத்தினர். இது தவிர எந்தப் பிரச்சினையும் இல் லாமல் மக்கள் வாக்களித்தார்கள். அதனை நன்கு ஆய்வு செய்த பின்னரே வாக்குகளை எண்ணுவதற்கு ஆயத்தமானோம்.

எண்ணுவதில் குளறுபடி இல்லை

எண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என சிலர் கூறியிருக்கிறார்கள். அது தவறு. யார் யார் வந்திருந்தார்கள், என்பதற்கான ஆவன ரீதியான சான்று உள்ளது. எண்ணும் நிலையங்களுக்கு வந்தவர்கள் கையொ ப்பமிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தேர்தல் தொகுதி, வாக்கெடுப்பு நிலையம், வாக் குப்பெட்டி என்பவற்றைப் பரிசோதித்த பின்பே எண்ணும் நடவடிக்கைகள் ஆரம் பமாகும். முடிவு அறிக்கைகள் 6 பிரதிகளாக எடுக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளியிடப்படும். வெளிப் படைத்தன்மையைப் பேணுவதற்கு என்னால் இயன்ற அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொண்டேன்.

நான் வீட்டுக் காவலில் என வதந்தி

26ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இந்த நாட்டில் இதற்கு முன் கேட்டிராத வதந்தி உலவத் தொடங்கியது. ஆணையாளர் வீட்டுக் காவலில்...! துப்பாக்கி முனையில் பெறுபேறுகளுக்குக் கையொப்பமிடுகிறார். என்றவர்கள் காலையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருக்கிறார் என்றும் பின்னர் விபத்தில் சிக்கி விட்டதாகவும் வதந்தி பரப்பப்பட்டது.

யார் என்ன தேவைக்காக இவ்வாறு வதந்தியைப் பரப்பினர்களோ தெரியவில்லை. வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு இடம்பெற்றதில்லை. தற்போதைய நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தப் பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். கரங்களால் எண்ணி முடித்ததன் பின்னர் தான் கணனிமயப்படுத்துவோம்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவினரே இதனை மேற்கொண்டனர். இதனைப் புரிந்து கொள்ளாத சில அரசியல்வாதிகள் எண்ணும் பணியைத் தனியார் நிறுவனம் மேற்கொண்டதாகக் கூறியிருக்கிறார்கள் மிகவும் நம்பிக்கையான முறையில் தான் எண்ணும் பணி நடந்திருக்கிறது.

சந்தேகமிருப்பின் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரிவைக் கேட்க முடியும். பேராசிரியர் ருவன் வீரசிங்கவின் பெயரையும் களங்கப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்த வரை எதுவிதமான சந்தேகமும் இன்றிப் பெறுபேறு வெளியிடப் பட்டுள்ளது.

27 ஆந் திகதி மாலை வரை 37 மணித்தியாலம் அலுவலகத்தில் பணி புந்திருக்கிறேன். இதற்கு முன்பு ஒருபோதும் தொடர்ச்சியாக இப்படிப் பணியாற்றி யதில்லை. ஆதலால் வதந்திகளைக் கேட்டு மிகவும் மனமுடைந் துள்ளேன். 27 ஆம் திகதி இரவு வீடு சென்ற போது என்னை விபத்துக்கு உள்ளாக்கி விட்டார்கள் வதந்தி மூலம். 35 வருட கால சேவையில் இப்படி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டது கிடையாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...
03.02.2010 தாயகக்குரல்


ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதுடன் இன்று அரசுக்கெதிரான ஆர்பாட்டங்களையும் நடத்தியுள்ளன. தேர்தல் முடிந்தபின்னர் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறையாக நடந்துள்ளதாக கூறியிருந்தார். இப்போது தேர்தல் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் ஒரேமாதிரியானதல்ல. கணனியை பயன்படுத்தி தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாக ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர். வாக்குச் சாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் மோசடிகள் நடைபெற்றதாக கூறிக்கொண்டு நாடுபூராவும் சேறுபூசுவதை விட்டுவிட்டு தேர்தல் மோசடிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் எதிர்கட்சிகள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று சட்டக் கல்லூரி விரிவுரையாளர் சட்டதரணி நிஹால் ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டவர் அல்லது பிரேரித்தவர் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக ஒரு மாதகாலத்துள் உயர்நீதிமன்றத்திற்கு முறைப்பாடு செய்வதன்மூலம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்கட்சிகள் வழக்கு தொடர இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ராஜபக்ஷ தனது முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். எனவே தனது இரண்டாவது பதவிக்காலம் எப்போழுது என்று அறிவதற்கு உயர்நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தாhர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 3வது திருத்தம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் இரண்டாவது பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதி தொடர்பான வழக்கை 2005ல் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்ததையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து சட்ட அறிஞர்கள் பலரும் பலவித கருத்தை வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி மகிந்தாவின் இரண்டாவது பதவிக்காலம் குறித்து ஆராய்ந்த உயர் நீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட குழு ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் 2010 நவம்பர் 19ம் திகதி ஆரம்பமாவதாகவும் நவம்பர் 19ம் திகதியில் இருந்து இரண்டு வாரத்துக்குள் ஜனாதிபதி சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பரபரப்பு ஓய்வதற்கு முன்னரே பொதுத் தேர்தல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கிவிட்டன. ஏப்ரல் மாதத்துடன் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைகிறது. எனவே ஏப்ரல் மாதம் முடிவதற்குமுன்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும்.

பொது தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தற்போதைய தேர்தல் முறையை மாற்ற தீர்மானித்திருந்தது. எதிர்கட்சிகள் ஒத்துழைத்தால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவந்து நடைமுறைப்படத்தலாம். அதற்காக எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் கோரியுள்ளது. ஒருவார காலத்திற்குள் எதிர்கட்சிகள் சாதகமான பதிலை தராவிட்டால் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை விரைவில் நடத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காது எனத் தெரிகிறது. இந்த தேர்தல் முறையில் கொண்டுவரப்படும் மாற்றத்திற்கு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் 5ம் திகதி கூடும் பாராளுமன்றமே இறுதியானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அன்றே பாராளுமன்றம் கலைக்கப்படாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைகளை பொதுத் தேர்தலுக்கு தயாராகும்படி கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகிவிட்டன. ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த கட்சிகளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சிஇ மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிஇ முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன யானைச் சின்னத்தில் கூட்டாக கேட்கலாம் என தெரிகிறது. வடக்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் கூட்டாக பங்குபற்றிய ஈ.பி.டி.பி. பொது தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. தாங்களும் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்வதாக கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாரிய வெற்றி என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என தம்மை பிரகடனப்படுத்திக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்து வடக்கு கிழக்கில் போட்டி போட்டு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியது.

தமிழர்களின் தேசியம்இ சுயநிர்ணயம்இ தன்னாட்சி என்பவற்றைப் பெறுவதற்கு தொடர்ந்தும் போராடுவது என்ற தீர்மானம் தமிழரசுக் கட்சியின் மகாநாடு என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் டிசெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர். அதன் பின்னரே சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக முடிவெடுத்ததாக அறிவித்தனர்.

தமிழ் மக்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பல வாக்குறுதிகளை வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்கும்படி தமிழ் மக்களை கேட்டிருந்தது. இருந்தபோதிலும் வடக்கில் 80 வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பில் கலந்து கொண்ட தமிழ் மக்களில் 30 வீதமானோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். தெற்கில் தேர்தல் மோசடிகள் என்ற குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் வடக்கில் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எழவில்லை. மக்கள் சுதந்திரமாக வாக்களித்த இந்த தேர்தலில் 80 வீதத்துக்கும் மேலான மக்கள் இவர்களை ஆதரிக்காததன் மூலம் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்பதை தமிழ் மக்கள் தெரிவித்துவிட்ட நிலையில் சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு மாபெரும் வெற்றி என்று கூறுவது விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதாகும்.
மேலும் இங்கே தொடர்க...