இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் திலக ரத்னேயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு அளிப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ராணுவ தளவாடங்களில் ஊழல்
இலங்கை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா, அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மேலும், அவருடைய மருமகன் தனுனா திலக ரத்னே மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.
திலக ரத்னேவுக்கு சொந்தமான நிறுவனம் மூலமாக ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, தலைமறைவாக இருக்கும் திலக ரத்னேவுக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், மீண்டும் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல்
மேலும், சர்வதேச போலீசின் உதவியையும் இலங்கை அரசு கேட்டுள்ளது. வெளிநாடுகளில் திலக ரத்னே பெயரில் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்யவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, தனுனா திலக ரத்னேயின் தயார் அசோகா திலக ரத்னே, இலங்கையில் இரண்டு வங்கிகளில் வைத்திருந்த பணத்தை சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒரு வங்கியில் இருந்து ரூ.21/2 கோடியும் மற்றொரு வங்கியில் இருந்து ரூ.11/2 கோடியும் கைப்பற்றப்பட்டன. அதே நேரத்தில், கொழும்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திலக ரத்னேவுக்கு எதிரான ராணுவ பேர ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந் தேதி அன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ரூ.10 லட்சம் பரிசு
அப்போது, `திலக ரத்னேயை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும்' என சி.ஐ.டி. தரப்பு சார்பாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், `இலங்கையில் தான் திலக ரத்னே இருக்கிறார். ரோமிங் செல்போனை பயன் படுத்திக் கொண்டு, வெளிநாட்டில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். எனவே, இலங்கை முழுவதும் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. மேலும், அவரை பிடித்து கொடுத்தாலோ அல்லது அவருடைய இருப்பிடம் குறித்து தகவல் அளித்தாலோ ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திலக ரத்னே பற்றி தகவல் கிடைத்தால் சி.ஐ.டி. துறைக்கு தெரிவிக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.