31 ஜனவரி, 2011

கூட்டமைப்பு - அரசிற்கு இடையில் வியாழனன்று மற்றுமொரு சுற்று பேச்சு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருதரப்பிற்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கின் மனிதாபிமான, மீள்கட்டமைப்பு பணிகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட இனங்காணப்பட்ட விவகாரங்களுக்கு சீரான வகையில் தீர்வுகாண்பதற்காக இருத்தரப்பும் தொடர்ந்தும் நல்லிணக்கத்துன் பேச்சுக்களை முன்னெடுப்பது தீர்மானித்தது.

இந்த சுற்றுப்பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் குழுவின் செயலாளருமான சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

அச்சுவேலி விபத்தில் இளைஞன் பலி

அச்சுவேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றும் மோட்டர் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளைஞனே பலியாகியுள்ளார். படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளக்ஷிர். விபத்தில் சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த இராசதுரை ரஜீவன் (வயது 21 என்பவரே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இராசதுரை யசிந்தன் என்பவரே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

வடமராட்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வானும் வடமாரட்சியில் இருந்து நீர்வேலியை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கு இலக்கான இருவருக்கும் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க. வேட்பாளர் மீது பேருவளையில் தாக்குதல்


பேருவளை நகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஹசன் பாயிஸ் தாக்குதலுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் ஒருவருடைய உறவுக்காரரும் பேருவளை நகர சபை முன்னாள் மேயர் மர்ஜான் பளீல் என்பவரே தன்னை தாக்கியதாக ஹசன் பாயிஸ் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேருவளையில் இருந்த போது வாகனத்தில் வந்த முன்னாள் மேயர் இவரை சரமாரியாக தாக்கியுள்ளார். எனினும் அவருடன் வந்த மற்றவர்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்ட நபருடைய மகன் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதால் தாக்குதலுக்குள்ளான குறித்த நபரை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறப்பட்டதாம். அதனை மீறி செயற்பட்டதாலேயே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கியவர்கள் கூறிவிட்டுச் சென்றதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்த பேருவளை நகர சபையின் முன்னாள் மேயர் மர்ஜான் பளீல் எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருப்பின் அதற்கு முகம் கொடுப்பதற்கு நான் தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நகைச்சுவையானது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை நகைச்சுவையான செயற்பாடாகும். இது குறித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் ஒரு நகைச்சுவையாளர். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள வழக்கானது மிகப்பெரிய நகைச்சுவையாகும். எனவே அவ்வாறான நகைச்சுவை ஒன்று தொடர்பில் நாங்கள் குழப்பமடைய தேவையுமில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தமது உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளமைக்கு எதிராக அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்கள் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் முப்பது மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும், கோரப்பட்டுள்ளது.

கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில் : அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் ஒரு நகைச்சுவையாளர். அதனை அவ்வாறு குறிப்பிடலாம். எனவே அவரின் செயற்பாடுகள் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவோ குழப்பமடையவோ வேண்டிய அவசியம் இல்லை.

இதே வழக்கறிஞர் புரூஸ் பெய்ன் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஒரு ஆக்கத்தை எழுதினார். அந்த கட்டுரையில் வடக்கு கிழக்கில் தனிநாடு அமையவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார். அந்தளவுக்கு புலிகளுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டுவருகின்றார்.

அந்த வகையில் இவர் நீண்டகாலமாக புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுவந்தவர். இந்த வழக்கறிஞர் புலிகளுக்கு சார்பானவர் என்றும் ஒத்துழைப்பு வழங்குபவர் என்றும் சர்வதேச மட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.

எனவே இவ்வாறான புலிகளின் ஆதரவு செயற்பாட்டாளர் ஒருவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவோ குழப்பமடையவோ வேண்டிய தேவை இல்லை.

இவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு பதிலளித்து எமது காலத்தை வீணடிக்கவேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

இதேவேளை இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கையும் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் பந்துல ஜயசேகர ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அத். உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைவு பெ. வெங்காயம் 55/-, உ.கிழங்கு - 50/-


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ அல்லது தட்டுப்பாடு ஏற்படவோ இடமளிக்கப்பட மாட்டாது என்று கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிழங்கு, செத்தல் மிளகாய், சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. இவற்றின் விலை அதிகரித் தால் சதொச மூலம் இறக்கு மதி செய்து பாவனையாளர் களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் முட்டை, கிழங்கு, வெங்காயம், கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனையடுத்து அவற்றின் விலைகள் குறைந்தன என்று அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் 135 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் நேற்று (30) கிலோ 55 ரூபாவாகவும், 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 முதல் 50 ரூபாவுக்கும் 195 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பருப்பு 135 ரூபாவுக்கும் 290 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு 200 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்துள்ளதாக மொத்த வர்த்தக சங்கம் கூறுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வேண்டும்

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் முதலீடு செய்து
பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு பிரகாசிக்கும்

வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா

30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்நோக்கியிருந்த 30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது நேர்மையான, பாரபட்சமற்ற ஆளுமையின் மூலம் நீக்கி, இன்று நாட்டில் பூரண சமாதானத்தையும் அமைதியையும் மக்களிடையே ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, இன பேதமற்ற முறையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சி செய்யும் இன்னுமொரு பாரிய யுத்தத்தில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்களுக்குத் தங்களின் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய அரசாங்கம், பெரும்பான்மை மக்களின் சமயமாகிய பெளத்தத்திற்கு அளித்துள்ள அதே மதிப்பையும், கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் மற்ற மதங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அதுபோன்றே, சிங்கள மொழிக்கு அளிக்கப்படும் மதிப்பும், அந்தஸ்தும் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.

அரசாங்க சேவையில் தமிழ் கற்றறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், சிறுபான்மை மக்களுக்கு தமிழ் மொழி மூலம் அரசாங்கத்தின் நிர்வாக சேவையை பெற்றுக் கொடுப்பதில் சில சந்தர்ப்பங்களில் ஆளணி பற்றாக்குறை காரணமாக அசெளகரியமாக இருந்தாலும், வெகுவிரைவில் நாம் தமிழ் மொழியையும் கற்றறிந்தவர்களையே அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளும் புதிய கொள்கையை நிறைவேற்ற இருக்கிறோம் என்றும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வாழும் எங்கள் நாட்டின் புலம்பெயர்ந்த தமிழ் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்பி, இங்கு தங்கள் அமைதியான வாழ்க்கையை தொடர்ந்தும் மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் உழைக்கும் ஜனாதிபதி அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதியமைச்சர், இந்த கோரிக் கையை புலம்பெயர்ந்த மக்கள் நிறை வேற்றினால் இந்நாடு சுதந்திரம் பெறு வதற்கு முன்னர் இருந்த யுகத்திற்கு மீண்டும் மாறி, அனைத்து மக்களும் எவ்வித பேதமும் இன்றி, ஒருதாய் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழும் ஒரு யுகம் நிச்சயம் உருவாகும் என்று கூறினார்.

அரசாங்கம் சிங்கள மக்களுக்கு முன் னுரிமை வழங்கி சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் கொள்கையை என்றுமே கடைப் பிடிக்கப் போவதில்லை. இன்று நாட்டில் தோன்றியுள்ள அமைதியும், சமாதானமும், ஐக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார்.

இந்நாட்டு மக்கள் அனைவரும் எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக் காக தங்கள் முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கட்டியெழுப்பலாம் என்றும் நியோமல் பெரேரா சுட்டிக் காட்டினார்.

வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீடு செய்து, கைத்தொழில் மற்றும் பசுமைப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தினால், நாடு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் பிரகாசிப்பதை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சில தேசத்துரோக சக்திகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வந்த பொய்ப் பிரசாரங்களை நம்பி, பல வல்லரசுகள் எமது நாட்டை சந்தேகக் கண்ணோடு பார்த்து மறைமுகமாக பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் கொண்டுவந்த போதிலும், ஜனாதிபதி அவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல், நாட்டை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்து அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியதனால், வெளிநாட்டு வல்லர சுகள் இலங்கைக்கு எதிராக தாங்கள் கடைப்பிடித்து வந்த தவறான கொள்கைகளை கைவிட்டு, இன்று எமது அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று நீட்டிவரும் நேசக்கரத்தை எமது அரசாங்கம் வலுவாக பற்றி, உலக அரங்கில் இலங் கைக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த அபகீர்த்தியை இல்லாமல் செய்வதில் வெற்றி கண்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நியோமல் பெரேரா, எமது நாட்டிற்கு அச்சுறுத்தல் தோன்றியிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எங்களுக்கு முழுமனதுடன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வந்த, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நாம் என்றென்றும் நன்றியுணர் வுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வோம் என்றும் கூறினார்.

தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, நாட்டை சகல துறைகளிலும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் இந்த அரசா ங்கத்தின் கரங்களை இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள எமது நாட்டு பிரஜைகள் அனைவரும் வலுப்படுத்தி, பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவு செயலர் கொழும்பு வருகை ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


இந்திய வெளியுறவுச் செய லாளர் திருமதி நிருபமா ராவ் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார்.

நேற்றிரவு 7.30 மணியள வில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை வெளி விவகார அமைச்சின் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இன்றைய தினம் காலை இவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள துடன் அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கலைஞர் கரு ணாநிதியின் வேண்டு கோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வின் பிரதிநிதியாக திருமதி நிருபமா ராவ் இலங்கை வந்துள்ள தாக தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் அண்மைக் காலமாக எழுந்துள்ள நிலையில் இரு நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பதற்கான எல்லைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய சந்திப்புகளின் போது மீனவர்கள் தொடர்பான விட யங்களும் கலந்துரையாடப் படுமெனவும் தெரியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கிராம சேவகர்களின் சம்பளம் அதிகரிப்பு


கிராம சேவையாளர்களின் சேவை தரத்தை உயர்த்தி அவர்களது சம் பளத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளது.

கடந்த டிசம்பர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலதிக கொடுப்பனவுடன் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவிருப்ப தாகவும் இதன் மூலம் கிராம சேவகர்களுக்கு பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும் உள்நாட்டலு வல்கள் அமைச்சர் டபிள்யூ. டீ. ஜே. செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப இதுவரை கிராம சேவகர் என்று கூறப்பட்ட பதவி இனி ‘நிர்வாக கிராம சேவகர்’ என்று மாற்றப்படுவதுடன் அவர் களது மூன்றாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 870 ரூபா வாலும் இரண்டாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 1765 ரூபா வினாலும் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் 870 ரூபா வினாலும் சிரேஷ்ட தரத்தைச் சேர்ந் தவர்களின் சம்பளம் 365 ரூபா வாலும் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

கிராம சேவகர்களின் கடமை நேரம், பதவியின் பொறுப்புகள், ஆகியவற்றை கணக்கில் எடுத்து இந்த சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மன்மோகன்- கருணாநிதி இன்று டில்லியில் சந்திப்பு
தமிழக முதல்வர் மு. கருணாநிதி நேற்று புதுடில்லி சென்றடைந்தார். புதுடில்லியில் நடைபெறவிருக்கும் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற் பதற்காக புதுடில்லி சென்றிருக்கும் அவர், இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங்கை இன்று சந் தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள் ளார்.

இந்திய மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர் பில் மன்மோகன் சிங்குடனான சந்திப்பில் கலந்துரையாடவிருப்ப தாக தமிழக முதல்வர் தெரிவித் துள்ளார்.

அது மாத்திரமின்றி இந் திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் தமிழக முதல்வர் சந் திப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் ‘நனோ கார்’; மூன்றரை இலட்சத்துக்கு விற்பனை
இந்தியாவின் டாடா மோட்டார் நிறுவனம் உலகில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படும் முட்டையின் வடிவமைப்பைக் கொண்ட “நனோ கார்களை" தாய்லாந்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இவ்வாண்டின் முற்பகுதியில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இப்பொழுது “நனோ கார்கள்" மாதத்திற்கு 8000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. மும்பாயில் உள்ள இந்நிறுவனம் இன்று மாதமொன்றுக்கு 6000 முதல் 7 ஆயிரம் கார்களை விற்பனை செய்து வருகிறது.

டாடா மோட்டார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் கால் பீட்டர் போஸ்டல் இந்த கார்களை இலங்கையிலும் மாதாந்த அடிப்படையில் பணம் செலுத்தி வாங்கக்கூடிய வகையில் ஒழுங்குகள் செய்வதாக கூறினார்.

இந்த நிறுவனம் முதலாவது நனோ காரை 2009 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் சந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த நனோ கார் புதுடில்லியில் ஒரு இலட்சத்து 37,555 இந்திய ரூபாவிற்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டொலரில் இது 3 ஆயிரம் டொலர்களாகும்.

இலங்கையில் இந்த நனோ கார்கள் 3 இலசத்தி 36 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். இக்கம்பனி இந்தியாவில் தங்களது பல்வேறு தொழிற்சாலைகளில் 2 இலட்சத்து 50 ஆயிரம் கார்களை ஒரு வருடத்தில் தயாரித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...