4 டிசம்பர், 2010

வலி வடக்கில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட திருடர்கள்

வலி வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவர்கள் அந்தப் பகுதியில் தமது வீடுகளை பார்வையிடச்சென்ற பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

பன்னாலைப் பகுதியில் ஆட்கள் இல்லாத வீடுகளில் இருந்த கதவுகள் மற்றும் தளபாடங்களை திருடிக்கொண்டு இருந்தவேளையில் அந்தப் பகுதியால் தமது வீடுகளுக்கச் சென்ற மக்கள் இதனைக்கண்டு உரியவர்களை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

அந்த வீடுகளில் 7பேர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களில் நான்குபேரை மாத்திரமே பிடிக்க முடிந்ததாகவும் அப்பகுதி மக்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தொடர்ச்சியாக திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
மேலும் இங்கே தொடர்க...

யாழில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி

கொட்டும் மழையிலும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஆயுத முனையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தெல்லிப்பளை அளவெட்டியில் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் வந்த திருடர்கள் எட்டாம் கட்டை வீதியிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை திருடியுள்ளார்கள். பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் நகைகளும் களவாடப்பட்டுள்ளன.

இதேபோன்று அளவெட்டி பகுதியினூடாக இரவு வேளைகளில் பயணம் செய்வோர் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
மேலும் இங்கே தொடர்க...

மகன் இல்லாமல் பைத்தியமாக அலைகிறேன் - நல்லிணக்க ஆணைக்குழு முன் தாயார் சாட்சியம்

காணாமல் போன எனது மகன் இல்லாமல் நான் பைத்தியம் பிடித்தவளைப் போன்று அலைகின்றேன். எனவே நான் இறக்கும் முன்னர் எனது மகனைத் தேடித்தாருங்கள் என தியாகராஜா பரமேஸ்வரி நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் மன்றாடி நின்றார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுவருகின்றன. திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றைய அமர்வு அதன் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் நடைபெற்றது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர். அங்கு தியாகராஜா மகேஸ்வரி தொடர்ந்து சாட்சியமளிக்கையில், 'எனது கணவர் 15 வருடங்களுக்கு முன்னர் என்னைப் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் நான் எனது மகனை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். சொத்துக்களை விற்றேன்.

இந்நிலையில் மகன் நகைக்கடையில் வேலை செய்வதற்காக கொழும்புக்கு சென்றார். 2008 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 9ஆம் திகதி அவர் காணாமல் போனார். அன்று கொழும்பில் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக அறிந்தோம். எனது மகன் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கின்றோம்.

காணாமல்போன எனது மகனைக் காணாமல் நான் பைத்தியம் பிடித்தவளைப் போன்று அலைகிறேன். எனவே இறக்கும் முன்னர் எனது மகனைத் தேடித் தாருங்கள்' என மன்றாடிக்கேட்டுக்கொண்டார்
மேலும் இங்கே தொடர்க...

மன்னார் மாவட்டத்தில் அடை மழை: 31,000 பேர் பெரும் பாதிப்பு; வீடு இடிந்து விழுந்து மூவர் காயம்


மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக, 7 ஆயிரத்து 533 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளை தெரிவித்தார்.

வெள்ளநீர் தேங்கியிருக்கும் பகுதி களிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் தற்கொழுது முன்னெடுத்துள்ளோம். வெள்ளநீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக கால்வாய்களை உடைத்துப் பெருப்பிக்க நடவடிக்கை

எடுத்திருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தினகரனுக்குத் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்களுடன் தங்க வைத்திருப்பதுடன், அவர்களுக்கான சமைத்த உணவுகளையும் வழங்கி வருகின்றோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களைப் பொது இடங்களில் தங்கவைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்காக சில பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்குத் தொற்றுநோய்கள் ஏற்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது தொடர்பாகப் பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளேன்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில், அவ்வீட்டிலிருந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ளத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான உதவி களை வழங்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்லஸ் பிள்ளை மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க சபையிலிருந்து வெளியேற்றம்

பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க நேற்று சபாநாயகரினால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நேற்றுமுன்தினம் சபைக்குள் நடைபெற்ற அமளிதுமளி தொடர்பாக ஐ.தே.க. எம்.பி ஜயலத் ஜயவர்தனா தன்னிலை விளக்கமொன்றை சமர்ப்பித்து பேச ஆரம்பித்தார்.

அதனை குழப்பும் விதத்தில் லலித் திஸாநாயக்க சபையில் எழுந்து நின்று ஜயலத் ஜயவர்தனாவை நோக்கி கூச்சலிட்டார். அவருடன் ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பியும் எழுந்து நின்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பினார்.

இந்தச் சபையில் எந்தக் கட்சியாக இருப்பினும் உறுப்பினர் ஒருவருக்கு பேசும் உரிமை இருக்கிறது. அதனை குழப்ப எவரும் முயற்சிக்க வேண்டாம் என

கூறிய சபாநாயகர் லலித் திஸாநாயக்கவை அமரச் சொன்னார். எனினும் ஆசனத்தில் அவர் அமரவில்லை. இந்த நிலையில் சபாநாயகர் லலித் திஸாநாயக்காவை சபையிலிருந்து வெளியேறச் சொன்னார். நீங்கள் வெளியேற வில்லையானால் ஒருவாரத்துக்கு உங்களை சபைக்குள் வர அனுமதிக்க மாட்டேன் என்றார்.

இதன் போது லலித் திஸாநாயக்க சபையிலிருந்து வெளியேறினார். எனினும், ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. எழுந்து நின்று கொண்டேயிருந்தார். நீங்களும் ஆசனத்தில் அமருங்கள் என சபாநாயகர் அழுத்திக் கூறினார். இதனைத் தொடர்ந்து அஸ்வர் எம்.பி. ஆசனத்தில் அமர்ந்தார். எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

இதன் பின்னரே ஜயலத் ஜயவர்தனா தனது விளக்க உரையை நிகழ்த்தினார். ஜயலத் ஜயவர்தனாவின் உரை முடிவடைந்தவுடன் லலித் திஸாநாயக்க சபைக்குள் வந்தமர்ந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

முறிகண்டியில் இன்று மீள் குடியேற்றம்



முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மேலும் 357 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா மெனிக்பார்ம் முகாமில் தங்கவைக்கப்பட்டிரு ந்த 108 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் முறிகண்டிப் பகுதியில் இன்று மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரி. வேதநாயகன் தினகரனுக்குத் தெரிவித்தார்.

மெனிக்பார்ம் முகாமிலிருந்து நேற்று அழைத்துவரப்பட்ட இவர்கள், உரிய பதிவுகளின் பின்னர் மீள்குடியமர்த்தப்படுவர்
மேலும் இங்கே தொடர்க...

ஜயலத் எம்.பி. மீதான குற்றச்சாட்டு; தெரிவுக்குழு அமைக்க அரசு தயார் ஐ.தே.கவிடம் சம்மதம் கோருகிறார் அமைச்சர் தினேஷ்


கம்பஹா மாவட்ட ஐ.தே.க. எம்.பி ஜயலத் ஜயவர்தன மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது.

ஐ.தே.கவினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறதா என அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பினார். ஐ.தே.க.வும் இதற்கு ஆயத்தமாகவே இருக்கிறது எனினும் அமைக்கப்படுகின்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நியாயாதிக்கம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தன தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுபற்றி விளக்கமளித்தார். அதன்படி அவர்

குறிப்பிட்ட தினத்தில் லண்டனில் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இத்தாலிக்குச் சென்றார் அங்கு சரத் பொன்சேக்கா விவகாரம் தொடர்பாக பேசினார் என்பதை நாம் ஏற்றுக்கொள் கிறோம். அதேபோன்று பொதுநலவாய நாடுகளின் சங்கத்திலும் சரத் பொன்சேகா வைப் பற்றி பேசினோம்.

இதனை ஒப்புக்கொள்கிறேன். எனினும் ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் செல்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. ஜயலத் ஜயவர்தன மீதான குற்றச்சாட்டுக்கு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு விமானம் மூலமோ, ரயில் மூலமோ செல்லும்போதே கடவுச் சீட்டில் பதிவுகள் செய்யப்படும்.

நீங்கள் அந்தந்த நாடுகளுட னும் தொடர்புகொண்டு விசாரணைகளை நடத்துங்கள். வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பியாவது இந்த விசா ரணைகளை நடத்துங்கள். அவ்வாறில்லாமல் வெறுமனே ஒருவர் மீது குற்றம்சாட்டுவது முறையல்ல என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன டொக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. மீதான விசாரணைகளை நடத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்கிறோம். இதற்கு ஐ.தே.க. ஆயத்தமாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

முதலாவதாக இந்த விடயத்தை கடந்த முதலாம் திகதி ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையாக இந்த சபையில் கொண்டு வந்தார். அப்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்டு செயற்படுகிறோம் என்றும் ரணில் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜயலத் ஜயவர்தன தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது


எமது அரசியல் யாப்பை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிர மாணம் செய்த பின்னர் அதற்கு முரணாக செயற்படும் எவரையும் நாம் தப்பிக்கவிட மாட்டோம். இதேபோன்றே ஜயலத் ஜயவர்தன எம்.பி.யும் தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என ஆளும் கட்சி பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குண வர்தன கூறினார்.

எமது நாட் டையும், ஜனாதி பதியையும் பாதுகாப்பதற்காக நாம் பாராளுமன்றத்தை விட்டு வெளியே

செல்லவும் தயாராகவுள்ளோம் என்றும் அமைச்சர் தினேஷ் கூறினார். நேற்று முன்தினம் பாராளுமன்றத்தினுள் நடைபெற்ற அமளிதுமளி தொடர்பாகவும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாகவும் டொக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. தன்னிலை விளக்கி உரையாற்றினார். அவரது உரை நிறைவடைந் ததன் பின்னர் பேசும் போதே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அனுமதியுடன் ஜயலத் ஜயவர்தன உரையாற்றினார்.

சபாநாயகர் அவர்களே குறிப்பிட்ட தினத்தன்று சபைக்குள் நடந்த அனைத்தையும் பிரதான ஆசனத்தில் அமர்ந்தவாறு நேரில் கண்டிருப்பீர்கள் என்பதால் அன்றைய சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க விரும்பவில்லை.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். குறிப்பிட்ட தினத்தில் நான் லண்டனில் இருக்கவில்லை. நான் இத்தாலியில் இருந்தேன். அதற்கான சான்றுகளாக எனது கடவுச் சீட்டுகள், விமான பயணச்சீட்டுகளின் பிரதிகளையும் சபையில் சமர்ப்பிக்கிறேன் எனவும் ஜயலத் ஜயவர்தன தனதுரையில் குறிப்பிட்டார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பெயரைக் குறிப்பிட்டு ஜயலத் ஜயவர்தன எம்.பி. பேசியதால் நானும் பதலளிக்க வேண்டிய தேவை இருக்கிறது எனக் கூறியே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தினேஷ் மேலும் கூறுகையில், எமது அரசியலமைப்பை ஏற்று நாட்டின் இறைமை, ஜனநாயகத்தை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், அதற்கு எதிராக செயற்படும் எந்தவொரு உறுப்பினர்களுக்கும் அனுமதி வழங்க முடியாது.

ஜயலத் ஜயவர்தன எம்.பி. சில திகதிகளை குறிப்பிட்டுக் கூறி தான் செய்த குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அவருக்கு எதிராக விசேட பிரேரணையொன்றை கொண்டு வருவோம்.

நாட்டின் பாதுகாப்பு முக்கியம். அதற்காகவே நாம் குரல் கொடுக்கிறோம். அது கூடாது. வெளியேறு என நீங்கள் கூறினால் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறவும் தயார்.

வெளிநாடுகளுக்குச் சென்று புலிகளுடன் கலந்துரையாடுதல், பணம் பெறுதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அதைத் தைரியமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஆளுமையற்ற, தைரியமற்ற அரச விரோத தேசத்துரோகிகள் இங்கு இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்தக் காலத்தில் புலிகளுடன் கலந்துரையாடியதை இந்தச் சபையில் தைரியமாக கூறியிருக்கிறார்கள். நான் இவ்வாறு பேசியிருந்தால் தைரியமாக ஏற்றுக்கொண்டிருப்பேன்.

வி.ஐ.பி. கடவுச்சீட்டை பயன்படுத்திக் கொண்டு நாட்டுக்கு எதிராக துரோகமிழைக்க எவருக்கும் அனுமதிக்க முடியாது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

உள்நாட்டு, வெளிநாட்டு சதிகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்


நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை கண்டித்து நேற்று கொழும்பு புறக்கோட்டை மற்றும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் என்பவற்றுக்கு முன்பாகவும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளில் பெருந்திரளானோர் கலந்து கொண்டு “புலிகளின் சர்வதேச மட்ட சதியை தோற்கடி” “தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்காதே” “தாய்நாட்டை காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரணதண்டனை விதி” “சிங்கள புலிகளை தோற்கடிப்போம்” போன்ற கோஷங்களை எழுப்பினர். இலங்கைக்கு எதிரான பிரித்தானிய அணுகு முறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

அலவி தலைமையில் ஆர்ப்பாட்டம்

புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக மேல் மாகாண ஆளுநரும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி ஒருங்கிணைப்பாளருமான அலவி மெளலானாவின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பொது மக்கள், மதகுருமார், நடைபாதை வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆளுநர் அலவி மெளலானா,

ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக புலிகளுடன் தொடர்புடையவர்கள் மேற்கொண்ட இந்த சதிமுயற்சியின் மூலம் பசுத்தோல் போர்த்திய புலிகளின் முகமூடி கிழிந்துள்ளது.

இது ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும்.

நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு கூட்டத்தில் உரையாற்ற முடியாவிட்டால் ஜனநாயகம் எங்கு போய்விட்டது. இந்த சம்பவங்களுக்கு பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும்.

ஜனாதிபதிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமென்றால் அது முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பாதிப்பாகும். உழைக்கும் மக்களின் தலைவரான ஜனாதிபதி எந்த சவாலையும் தைரியமாக முகம் கொடுக்கக் கூடியவர்.

அவருக்காக நாம் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம். சகல மக்களும் தாய்நாட்டை பாதுகாக்க வீதியில் இறங்கிப் போராட வேண்டும். எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் புலிகளுக்கு உதவுவதினூடாக நாட்டை காட்டிக் கொடுத்துள்ளனர் என்றார்.

பிரித்தானிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை 11.00 மணிக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. அமைச்சர் விமல் வீரவங்க தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குமார், பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற போது பொலிஸார் வீதித் தடைகளையிட்டு அதனை தடுத்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகளை தகர்த்துக் கொண்டு முன்னேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு எதிரான பிரித்தானிய அணுகுமுறையை கண்டித்தும் உள்நாட்டு வெளிநாட்டு சதிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பெளத்தாலோக்க மாவத்தை மூடப்பட்டிருந்தது. இதனால் அப்பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது.

ஆர்ப்பாட்ட முடிவில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவங்ச; பிரிட்டிஷ் அரசு இவ்வாறானதொரு நிகழ்வை திட்டமிட்டே நடத்தியுள்ளது. பிரிட்டிஷ் அரசு இலங்கையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கும் அந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு பண்நெடுங்காலமாக ஆதரவு வழங்கி வந்துள்ள நாடாகும்.

இந்த உலகில் பயங்கரவாதத்தை ஒழித்துக் காட்டியதொரு தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவருக்கு பிரிட்டிஷ் நாடு வழங்கிய அகெளரவத்திற்கு அந்த அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்று கொண்டிருக்கும் காலத்தில் கூட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிக்கும் பல நாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வந்தபோதெல்லாம் இலங்கை அரசு உரிய முறையில் அவர்களுக்கு ராஜ மரியாதை அளித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கான இராஜதந்திர முறையைக் கையாண்டுள்ளது. அண்மையில் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகம் சென்றிருந்தார். அந்த நாடு அவருக்கு உரிய மரியாதையையும் அதி உச்ச கெளரவத்தையும் வழங்கி அதி உச்ச பட்டத்தையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் பல பயங்கரவாத இயக்கங்களுக்கு தடைவிதித்துள்ளது. அதில் விடுதலைப் புலிகளும் அடங்கும். ஆனால் புலிக் கொடிகளுடன் பிரிவினைவாதிகளுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந் நாடுகளின் ஆதரவில்தான் இலங்கையில் கொடிய பயங்கரவாதம் இந்த அளவுக்கு விருத்தி அடைந்திருந்தது.

பிரிட்டிஷ் அரசு இலங்கையை துண்டாடவும், உலகில் பயங்கரவாதத்துக்கும் அவர்களின் செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கும் அடைக்கலம் வழங்கும் நாடாகவே செயல்படுகின்றது.

இவர்களுடன் இலங்கையைக் காட்டிக் கொடுக்கும் சில ஐ.தே.க. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர், ஜயலத் ஜயவர்தன மற்றும் விக்கிரமபாகு ஆகியோரும் இலங்கையில் பிறந்து லண்டனில் வாழும் சில தேச துரோகிகளும் இணைந்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்


பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் அமர்ந்துள்ள நிலையில் சபையில் சகல உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்டதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் சபைக்குள் ஏற்பட்ட அமளி துமளியின்போது பாடசாலை மாணவர்கள் பார்வை யாளர் கலரியில் அமர்ந்திருந்தனர்.

மாணவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் கூறியபோதும் அமளிதுமளி தொடர்ந்தும் ஏற்பட்டது.

இந்த நிலையிலேயே பாடசாலை மாண வர்கள் வெளியேற்றப்பட்டனர். இச்சம் பவத்தை உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியே சபாநாயகர் நேற்றுக் காலை மேற்கண்ட அறிவுறுத்தல்களை விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு






பிரிட்டனுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நேற்று நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்கள் மகிழ்ச்சி நிறைந்த மகத்தான வரவேற்பை அளித்தனர்.

கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கூடியிருந்த பெருந்திரளான பொதுமக்களும், அமைச்சர்களும், ஆளுனர்களும், பிரதியமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அதிகாரிகளும் இணைந்து இந்த அமோக வரவேற்பை நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கினர்.

இதேநேரம் சர்வமதத் தலைவர்கள் மத அனுஷ்டானங்களை நடத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசியும் வழங்கினர். பிரிட்டனுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்ட ஜனாதிபதி ஸ்ரீ லங்கன் விமானத்தில் நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அதி விசேட விருந்தினர்கள் வருகை தரும் பகுதியில் குழுமியிருந்த பெருந்திரளான பொதுமக்களும் அமைச்சர்களும், ஆளுனர்களும், பிரதியமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுக்களின் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இணைந்து இந்த அமோக வரவேற்பை ஜனாதிபதிக்கு அளித்தனர்.

இங்கு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியின் வர்ணப் படங்களையும், தேசியக் கொடிகளையும் ஏந்தி அசைத்தவாறு “ஜனாதிபதிக்கு வெற்றி”, “ஜனாதிபதியே நீடூழி காலம் வாழ்க!” “ஜனாதிபதிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்” என மகிழ்ச்சி நிறைந்த கோஷங்களை எழுப்பினர். மக்களின் ஆரவாரமான மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மகிழ்ச்சியோடு மக்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்குப் பொன்னாடை போர்த்தியும் கெளரவமும் அளித்தனர்.

ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கும் இந்நிகழ்வில் அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம். பெளஸி, ஆறுமுகன் தொண்டமான், ரிஷாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, மஹிந்த அமரவீர,

ஜகத் புஷ்பகுமார, மேல் மாகாண ஆளுனர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் பிரித்தானிய அரச உயர் மட்டப் பிரதிநிதிகள் போன்றோர் சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான நற்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு ஆற்றியுள்ள சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கை சங்கத்தினர் ஜனாதிபதிக்கு விருது வழங்கி கெளரவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...