வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெரிந்ததே. இவ்வாறு இறந்தவர்களில் பலருடைய சடலங்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவோ, எரிக்கப்படவோ இல்லை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக கிரியைகளின் ஊடாக எதுவுமே செய்யப்படவில்லை. என்றும் இதனால் இறந்தவர்களின் குடும்ப உறவினர்கள் பெரிதும் மனம் நொந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மன அமைதிக்கும் இறந்தவர்களின் ஆத்ம சாத்திக்காகவுமே இவ்வாறாக சிவாலயங்களில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பூஜைகளும் நடத்துவற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலுமுள்ள முக்கிய சிவாலயத்தில் பிரதான ஆத்மசாந்திப் பூஜைகள் நடைபெறும் அதேவேளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏனைய சிறியதும் பெரியதுமான சிவாலயங்களிலும் இந்த பூஜைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஆடி அமாவாசை ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...