இங்கிலாந்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக, லிபரல் ஜனநாயாக கட்சியுடன் கன்சர்வேடிவ் கட்சி நடத்தும் பேச்சுவார்த்தையில் இன்று முடிவு எட்டப்படுகிறது. புதிய அரசு, 25-ந் தேதிக்குள் பதவி ஏற்க உள்ளது.
தனிப்பெரும்பான்மை இல்லை
இங்கிலாந்தில் கடந்த வாரம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது, ஆட்சி செய்து வரும் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்தது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 258 இடங்களை மட்டுமே அந்த கட்சி பெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்தன.
எனினும், ஆட்சி அமைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதாது. அதே நேரத்தில் மூன்றாவது இடத்தை பிடித்த லிபரல் ஜனநாயக கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்தன. அந்த கட்சியின் ஆதரவோடுதான் புதிய அரசு அமைக்க முடியும். எனவே, அந்த கட்சியோடு கன்சர்வேடிவ் கட்சி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
வர்த்தகத்தில் மாற்றம்
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு கட்சிகள் சார்பிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. சில முக்கிய இலாகாக்களின் காபினெட் மந்திரி பதவியை லிபரல் கட்சி கேட்கிறது. அதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் தலைவர் நிக் கிளவுக்குடன் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டேவிட் கேமரூன் பேச்சு நடத்தினார்.
இதற்கிடையே, தற்போதைய பிரதமர் கார்டன் பிரவுனும், தொழிலாளர் கட்சி சார்பாக நிக் கிளவுக்குடன் பேச்சு நடத்தினார். இது போன்ற இழுபறியான நிலைமையால் இங்கிலாந்து வர்த்தகத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தை குறியீட்டு எண்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அரசியல் நெருக்கடி தீர வேண்டும் என நிதிச் சந்தை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இன்று இறுதி முடிவு
இதனால், கன்சர்வேடிவ் கட்சிக்கும் லிபரல் கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை, தற்போதைய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலிஸ்டைர் டார்லிங் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "பேச்சுவார்த்தைகள் நீடித்து வருவது நல்லதல்ல என்று கருதுகிறேன். லிபரல் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அறிந்தேன். இந்த பேச்சு வார்த்தையில், கூட்டணி உண்டா? இல்லையா? என்பது குறித்து இறுதி முடிவு காணப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
25-ந் தேதிக்குள்
தொங்கு பாராளுமன்றம் அமையும் என்பதை எதிர்பார்த்து தேர்தலுக்கு முன்பே சில புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மந்திரிசபை செயலாளர் குஸ் ஓ டொன்னல் சமர்ப்பித்து இருந்தார். அதன்படி, 25-ந் தேதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். அன்றைய தினம், புதிய பாராளுமன்றத்தில் இங்கிலாந்து ராணி உரையாற்றுவார்.
எனவே, முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து 25-ந் தேதிக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வருவது அவசியம். மேலும், புதிய வழிகாட்டு விதிகளின்படி, உடனடியாக மீண்டும் தேர்தல் நடத்துவதும் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...