7 மே, 2011

ரொபர்ட் பிளேக் தமிழர்களுக்கு மீண்டும் தவறாக உபதேசம் செய்யக்கூடாது மனோ கணேசன்போர் முடிவடைந்தவுடன் உடனடியாகவே அரசாங்கம் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்ற பிரசாரத்தை அப்போதைய அமெரிக்க தூதர் ரொபர்ட் பிளேக் முன்னெடுத்தார். ஆனால் இன்று போர் முடிந்து இரண்டு வருடங்களாகி, இத்தனை அழிவுகளுக்கு பின்னரும்கூட தமிழ் மக்களால் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக் கூடக்காண முடியவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜமமு தலமையகத்தில் நடைபெற்ற வாராந்த கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் பிளேக் 13வது திருத்தச் சட்டம் பற்றியே உபதேசித்து வந்தார். 13வது திருத்தத்திற்கு அப்பால் அரசாங்கம் செல்லும் என்ற ஒரு தோற்றத்தையும் அவர் ஏற்படுத்தியிருந்தார்.அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது. இந்த நிலைப்பாட்டை சமாளிப்பதற்காகவே பிளேக் இத்தகைய கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால் இன்று இவ்வளவு அழிவுகளுக்கு பின்னரும்கூட இந்நாட்டில் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக்கூட தமிழ் பேசும் மக்களால் காண முடியவில்லை.போரின்போது ஐநா சபை பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதில் தீர்மானகரமாகச் செயலாற்றவில்லை என்பதை இன்று உலகம் அறிந்துகொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மூலம் இறுதி நேரத்தில் போரை நிறுத்துவது போன்ற சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை காலம் கடந்த செயலாகும். அவ்வேளையில் போர் நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தது. அது சாத்தியமாகி இருந்தாலும்கூட அதன் மூலம் வன்னி மக்களைப் பாதுகாத்திருக்க முடியாது. வேண்டுமென்றால், எஞ்சியிருந்த சில விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். பொது மக்களைப் பாதுகாப்பதற்கான காலம் அப்போது கடந்திருந்தது.போர் காலத்தில் நாங்கள் மக்கள் கண்காணிப்புக்குழுவை அமைத்து செயற்பட்டோம். விக்ரமபாகு, சிறிதுங்க ஆகியோருடன் இணைந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடாத்தினோம். அதன்போது அமெரிக்காவின் சுதந்திரக் காவலர் மனித உரிமை விருது எனக்கு அளிக்கப்பட்டது. அப்போது தூதுவராக இருந்த பிளேக் இதற்குக் காரணமாக இருந்தார். இந்த விருது எங்கள் செயற்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் இதன் பிறகுதான் எனக்கு பெருமளவில் அச்சுறுத்தல்கள் அதிகரித்தன.இவ்வேளையில் அமெரிக்கா யுத்தத்திற்கான நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கையை கடைபிடித்தது. ஆனாலும் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் தாங்கள் அக்கறைகொண்டுள்ளோம் என்று காட்டுவதற்காகவே இந்த விருது எனக்கு வழங்கப்பட்டதாக நான் தெரிந்துகொண்டேன். அதனால்தான் இந்த விருது வழங்கும் நிகழ்வை பகிரங்கமாக நடத்துவதற்கு நான் உடன்படவில்லை.போரினால் மரணமடைந்த அப்பாவி மக்களின் உயிர்களை மீண்டும் ஒருபோதும் மீட்டு கொண்டுவர முடியாது. எனவே போருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களுக்கு இன்று இலங்கைத் தமிழ் மக்கள்; குறித்த தார்மீக பொறுப்புணர்வு இருக்கின்றது. இவர்களுக்கு இன்று ஒரேயொரு சாத்தியமான வழி மட்டுமே இருக்கின்றது. அது தான் ஒரு நியாயமான அரசியல் தீர்வு என்பதாகும். இது தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கை அரசாங்கத்துடன் தீர்மானகரமான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.ஐக்கிய அமெரிக்காவுக்கான துணை ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக் தனது முன்னைய அரசியல் தீர்வு உபதேசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் இதுவாகும். இதை நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் தமிழர்களுக்கு ரொபர்ட் பிளேக்கும், அவரது அரசாங்கமும் உண்மைக்கு புறம்பான உபதேசங்களை செய்யக்கூடாது.
மேலும் இங்கே தொடர்க...

பின்லேடனின் ஐந்தாவது மனைவியை அமெரிக்காவிடம் ஒப்படைக்க பாக். மறுப்பு

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த வீட்டில் அவர் மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கமாண்டோ படையினரின் எதிபாராத திடீர் தாக்குதலில் பின்லேடன், அவர் மகன் காலித், ஒரு பெண், மற்றும் இரு உதவியாளர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், பின்லேடனின் ஐந்தாவது மனைவி அமய் உயிருடன் பிடிபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமய் மீது குண்டுகள் பாய்ந்து காயமடைந்ததாக கூறப்படுகிறது. பின்லேடனின் மனைவி அமய் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

ராவல் பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அமய் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராவல்பிண்டி மருத்துவமனையில் இருக்கும் அவரிடம், பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினர் பற்றிய தகவல்களை பெறுவதற்காக, விசாரணை நடத்த அமெரிக்கா விரும்புகிறது. அதனால், அமெரிக்காவிடம் அமய்யை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளது. அந்த கோரிக்கையை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத் தன்மையற்றவையாகும்: ஜகத் ஜய சூரிய

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்றதாக கூறி ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்துள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் அடிப்படைத் தன்மையற்றவையாகும்.

இத னை அப்போதைய வன்னிக் கட்டளைத் தள பதி என்ற வகையில் மிகவும் பொறுப்பு டனேயே கூறுகின்றேன் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜய சூரிய குறிப்பிட்டார். இலங்கைக்கு அபகீர் த்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற் படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால நடவடிக்கைளிலும் இராணுவம் நல்லொழுக்கத்துடனேயே செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு பாதுகாப்பு கட்டளை தலைமையகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்த இராணுத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அங்கு படையினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ முன் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனைகள் வழங்க நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இந்த நிபுணர் குழு தற்போது இலங்கையில் போர் குற்றங்களும் பாரிய மனித உரிமை மீறல்களும் நடைபெற்றுள்ளதாக கூறி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரதிகள் தற்போது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன.

இதனால் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டு கால பயங்கரவாதத்தை கையாண்டு வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தோம். இன்று நாட்டில் சமாதானம் பிறந்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையிலே இலங்கைக்கு எதிராக போர்க் குற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின் இறுதி காலப் பகுதியில் வன்னி கட்டளைத் தளபதியாக நான் செயற்பட்டேன். இங்கு நடந்த சம்பவங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது போர் குற்ற செயல்கள் இடம்பெறவில்லை.

பக்கச் சார்பான போலி ஆதாரங்களினால் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அடிப்படைத் தன்மையற்றது என்றே கூற வேண்டும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட இராணுவத்தை அவமதிக்கும் செயலாகவே நிபுணர் குழுவின் அறிக்கை காணப்படுகிறது.

எனவே இராணுவ வீரர்கள் மிகவும் பொறுப்புடனும் ஒழுக்கத்துடனும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். கடந்த வெள்ள அனர்த்தங்களின் போது பொது மக்களை மீட்டெடுத்து மிகவும் பொறுப்புணர்வுடன் நிவாரண பணிகளுக்கு உதவினீர்கள் இவ்வாறான சேவையை நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் அரசியல் கைதிகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுதியளித்துள்ளனர்.

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு நேற்று தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் 8 எம்.பி. க்கள் விஜயம் செய்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போதே எம்.பி.க்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,பா.அரியநேத்திரன், சட்டத்தரணி சுமந்திரன்,பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,ஸ்ரீதரன், சரவணபவன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.

சந்திப்பின்போது சகல சிறைச்சாலைக்குள்ளேயும் அவர்களினதும் அவர்களின் குடும்பங்களினதும் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு நலன்புரிச் சங்கத்தை ஒருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்ட போது, ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆராய்ந்த பிற்பாடு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பால் பதிலளிக்கப்பட்டது.

சகல அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைதிகள் கேட்டுக் கொண்டனர். அரசுடனான அரசியல் தீர்வு விடயமாகப் பேச்சை ஆரம்பித்த அன்றே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியதாகவும் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கெடுக்கப்படும் எனவும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுதியளித்தனர்.

அரசியல் கைதிகளை காரணமின்றி தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணி சுமந்திரன் உதவி செய்தல் வேண்டும் என கைதிகள் கேட்டுக் கொண்டனர். இதற்கு வேண்டிய உதவியை தான் செய்வதாக சட்டத்தரணி சுமந்திரன் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

சிறைச்சாலைக்கான விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி இது தொடர்பில் கூறியதாவது,

யுத்தம் முடிவடைந்ததும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டுமென நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு இதுவரையிலும் எமக்குப் பதில் கிடைக்கவில்லை.

கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, போகம்பரை ரஜ வீதி, மட்டக்களப்பு, திருகோணமலை,பதுளை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், வவுனியா, வெலிக்கடை என பல்வேறு சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் இளைஞர், யுவதிகள் மற்றும் 55, 60,70 வயது முதியவர்கள் வரை இருக்கின்றார்கள். இவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.

நேற்று காலை 9 மணியிலிருந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் புதிய மகசீன் சிறைச்சாலையின் தமிழ் அரசியல் கைதிகளையும் நாம் சந்தித்து பேசினோம். அவர்கள் தமது கவலைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமூக நலன் அமைப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிப்பதற்கான கோரிக்கை, கடிதம் மூலம் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் கால எல்லையை ஆறுமாதங்களினால் நீடிப்பதற்கு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் கால நீடிப்புக்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் உயர் அதிகாரி மேலும் குறிப்பிடுகையில்:

நல்லிணக்க ஆணைக்குழு கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களில் பெற்றுக்கொண்ட சாட்சியங்களை ஆய்வு செய்து வருகின்றது.

அத்துடன் இறுதி பரிந்துரைகளை தயாரிப்பதற்கான முதற்கட்ட வரைபும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதி நாம் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் மிகவும் அதிகளவான சாட்சியங்களை ஆய்வு செய்யவேண்டியுள்ளதால் மே மாதம் 15 ஆம் திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே நல்லணிக்க ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் ஆறுமாத காலத்தினால் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த புதன்கிழமை இது தொடர்பான கோரிக்கைக் கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கால எல்லை நீடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பு நகரில் பிரதான விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்ததுடன் வெளிமாவட்டங்களிலும் விசாரணை அமர்வுகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரசாங்கம் இனியாவது தவறுகளை ஏற்க வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல

அரசாங்கம் இனிமேலாவது செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு கவலையை வெளியிடுவதோடு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயாராக வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஐ.நா. வின் பிழையான அறிக்கைகளுக்கு பதிலாக தெளிவான பதிலை அரசா ங்கம் வழங்கி நாட்டின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம். பி மேலும் கருத்து தெரிவிக்கையில் ஐ.நா.வுடன் இணைந்து செயற்படுவோமென அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் ஐ. நா.வுடன் சுமுகமான ஒத்துழைப்பை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக முரண்பாடுகளுடன் விமர்சனங்களையே முன்னெடுக்கின்றது.

மேற்குலக நாடுகளுடனும் மோதல்களையே முன்னெடுக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும்.

நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் விதத்தில் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். ஐநா வின் பிழையான அறிக்கைக்கு உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தி அரசாங்கம் பதிலறிக்கையை கையளிக்க வேண்டும்.

இதன் மூலமே நாட்டுக்கு ஏற்பட்ட அபகீர்த்தியை போக்க முடியும். அன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இன வன்முறைகளை ஆராய நியமிக்கப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவில் வெள்ளையர்கள் கலந்து கொண்டு தாம் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டனர்.

அதே போன்று அரசாங்கம் இனிமேலாவது செய்த தவறுகளுக்காக கவலையை வெளியிட வேண்டும். யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்ற வேண்டும். காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும்.

அத்தொடு தமிழ் மக்களுக்கு நிலையான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும். இதன் போது தான் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும்.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே 1989 களில் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று வழிகாட்டினார். இன்று நாட்டுக்குள் ஜனநாயகம் நீதி, நியாயம் கிடைக்காததால் ஜனாதிபதி அன்று காட்டிய வழியை நாம் கடைப்பிடிக்கின்றோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் ஓய்வூதிய சட்டமூலத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம்

அரசியலமைப்பிற்கு முரண்படாவிட்டாலும் அரசாங்கம் முன் வைத்துள்ள தனியார் ஒய்வூதிய சட்ட மூலம் ஊழியர்களுக்கு முரணானதாகவே அமைகின்றது.

எனவே இந்த சட்ட மூலத்தை எதிர்த்து அடுத்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதியம் மீது குறிவைத்து அரசாங்கம் காய் நகர்த்தி வருகின்றது. இதனால் ஒட்டு மொத்த ஊழியர்களின் சாபமும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது விழுந்துள்ளது என்றும் அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கூறுகையில்:

தற்போதைய அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தினரை மிகவும் மோசமாக கண்டித்து வருகின்றது. பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழியர் உரிமைகளை சிதைத்து வருகின்றது. 2500 ரூபா சம்பள உயர்வு முதல் இன்னோரன்ன வாக்குறுதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊழியர்களுக்கு வழங்கினார். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

தற்போது அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வையோ நிவாரணத்தையோ வழங்காது ஊழியர் நம்பிக்கை நிதியத்தினை சூறையாடும் நோக்கில் சட்ட மூலத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது.

இச் சட்ட மூலத்தில் சேம இலாப நிதிக்கோ ஊழிய நம்பிக்கை நிதியத்திற்கோ எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. தனியார் ஒய்வூதிய சட்ட மூலத்தில் ஊழியர் நிதிகளுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்காதவாறே சரத்துக்கள் காணப்படுகின்றன.

எனவே இதுவரை காலமும் பாதுகாத்து வந்த ஊழியர் நம்பிக்கை நிதியங்களை மோசடி செய்ய அரசிற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தில் மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த விடாது போராட்டங்களை முன்னெடுப்போம்.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஊழியர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காமல் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் பாரிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...